சென்னை தெருக்களில் பிச்சை முதல் கேம்பிரிட்ஜ் பல்கலை. படிப்பு வரை: ஜெயவேலின் ஊக்கமிகு பயணம்!
ஒரு 22 வயது இளைஞர் கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் பட்டம் பெறுவது என்பது இன்றைய தினத்தில் பெரிய விஷயம் இல்லை, ஆனால் அந்த இளைஞர் பிளாட்பாரத்தில் வாழும் பிச்சைத்தொழிலில் ஈடுபட்டுவரும் ஒரு குடும்பத்தை சேர்ந்தவர் என்று தெரிந்தால் அது எல்லயில்லா சாதனை தானே...!
ஜெயவேல் என்ற அந்த இளைஞர் நெல்லூரை சேர்ந்தவர். 80களில் அவர்களின் குடும்ப விவசாய நிலம் விளைச்சல் இல்லாமல் நஷ்டத்தில் போனதால், சென்னைக்கு குடிபெயர்ந்தது அவரது குடும்பம். உறவினர்களோ, நண்பர்களோ இல்லாத இவர்கள், குடும்ப வறுமையின் காரணமாக சென்னை தெருக்களில் பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டனர்.
அந்த நாட்களை பற்றி நினைவுகூறும் ஜெயவேல்,
”நாங்கள் ரோட்டில் உள்ள ப்ளாட்பாரத்தில் தான் உறங்குவோம். மழை பெய்யத் தொடங்கினால், அருகில் பாதுகாப்பான இடம் தேடி அலைவோம்... சிலசமயம் கடைகளின் குடையின் கீழ் புகலிடம் அடைவோம். பலமுறை போலீஸ் எங்களை அங்கிருந்து விரட்டி அடித்துள்ளனர்..”
என்று இந்தியா டுடே இதழ் பேட்டியில் தெரிவித்துள்ளர். குடும்ப வருமானத்திற்காக ஜெயவேல் பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபட கட்டாயப்படுத்தப்பட்டார். அவர்களுடைய குடும்பம் பிச்சை எடுத்து வரும் வருமானத்தை நம்பி இருந்தாலும் அதில் முக்கால்வாசியை ஜெயவேலின் தாயார் குடித்து அழித்துவிடுவார் என்பது வறுத்தமான விஷயம்.
ஜெயவேல் குழந்தையாக இருந்தபோதே அவரது தந்தை இறந்ததால், அவரின் தாயார் குடிக்கு அடிமையாகி விட்டார். உடுத்த ஒரே ஒரு சட்டை மட்டுமே ஜெயவேலிடம் இருந்தது. அழுக்காகவே சுற்றித்திரிந்த ஜெயவேல், பிச்சை எடுத்து தன் நாட்களை கழித்தார். ஆனால் ஒரு நாள் அவரது வாழ்க்கையில் பெரிய திருப்பம் வரும் என்று அவர் நினைத்து கூட பார்த்ததில்லை.
உதவி கரங்கள் நீட்டிய தம்பதியினர்
முத்துராமன் மற்றும் அவரது மனைவி உமா, இருவரும் இணைந்து சேரியில் வாழும் குழந்தைகளின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். குறிப்பாக சென்னை நடைபாதையில் வாழும் குடும்பங்களின் குழந்தைகளுக்கு வாழ்வளிக்க திட்டமிட்டு பல செயல்களை இவர்கள் செய்துவருகின்றனர். ஒருமுறை நடைபாதையில் வீடியோ எடுக்க கீழ்பாக்கம் பகுதிக்கு சென்ற உமா மற்றும் முத்துராமன் ஏதேச்சையாக ஜெயவேலை சந்திக்க நேரிட்டது.
“எங்கள் மக்களுக்கு அவர்களை பிடிக்கவில்லை. அவர்களை தாக்க முயற்சித்தோம். உதவி என்ற பெயரில் பலர் எங்களை ஏமாற்றுவதால் இதுபோன்றோரை நாங்கள் எங்கள் இடத்தில் அனுமதிப்பதில்லை. எங்கள் பெயரை சொல்லி பலர் அரசிடம் நிதி திரட்டிவிட்டு எங்களுக்கு எதுவும் கொடுப்பதில்லை...”
ஆனால் உமா இவர்களிடம் பேசியபின்னர் அவர் மீது அங்குள்ளோர்க்கு நம்பிக்கை வந்தது. ஜெயவேலின் குடும்பமும் அவர் உண்மையில் தங்களுக்கு உதவ நினைப்பதை புரிந்து கொண்டனர்.
அங்குள்ளவர்களின் ஜெயவேல் தனித்து நின்று, உற்சாகமான, ஊக்கமளிக்கக்கூடிய பையனாக உமா மற்றும் முத்துராமனுக்கு தெரிந்தனர். அவனின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு பிறந்தது. அவர்களுடைய ’சுயம் சாரிடபிள் ட்ரஸ்ட்’ மூலம் ஜெயவேலுக்கு உதவிகள் செய்ய முடிவெடுத்தனர். ஒரு முறையான கல்வியை ஜெயவேலுக்கு வழங்குவதே அவனது முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்று தீர்கமாக நம்பினர்.
”நான் பள்ளிக்கு செல்ல தொடங்கியதும், அங்குள்ள எல்லாருக்கும் என்னையும் என் குடும்பத்தை பற்றியும் தெரிந்திருந்தது. பள்ளிக்கு அருகில் இருந்த நடைபாதையில் தான் நான் வாழ்ந்துவந்தேன், ஆனால் அதைப்பற்றி நான் கவலைப்பட்டதில்லை. ஆரம்பத்தில் படிக்க எனக்கு வெறுப்பாக இருந்தது, ஆனால் கல்வி ஒருவரது வாழ்க்கையை மாற்றவல்லது என்பதை புரிந்துகொண்ட பின் என் எண்ணத்தை மாற்றிக்கொண்டு படிக்க ஆரம்பித்தேன்,” என்கிறார் ஜெயவேல்.
பன்னிரண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்களுடன் ஜெயவேல் தேர்ச்சி அடைந்தார். மேற்படிப்பிற்கு கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தின் நுழைவு தேர்வை எழுதிய ஜெயவேல், அங்கு ‘கார் தொழில்நுட்ப பொறியியல்’ படிப்பில் சேர தேர்வானார். இதற்கு இவருக்கு சில நல்லுள்ளங்கள் இலவச லோன் கொடுத்து உதவினர். யுகே’வில் உள்ள வேல்சில் ‘க்லெண்ட்வெர் பல்கலைகழகத்தில்’ ரேஸ் கார்களின் செயல்திறன் அதிகரிப்பது குறித்து படித்தார். இதனை தொடர்ந்து தற்போது, மேற்படிப்பிற்கு இத்தாலி செல்ல உள்ளார் ஜெயவேல்.
லண்டன் செல்ல 17 லட்சம் கடனுதவி அளித்த சுயம் ட்ரஸ்ட், தற்போது இத்தாலி செல்ல 8 லட்ச ரூபாய் நிதியை திரட்ட உமா மற்றும் முத்துராமன் முயற்சித்து வருகின்றனர்.
“பல இடங்களிலும் நிதிக்காக அலைகிறோம். பலர் எங்களை அவமானப்படுத்துகின்றனர், ஒரு சிலரே உதவ முன்வருகின்றனர். ஆனால் விடாமுயற்சியாக எப்படியும் நிதியை திரட்டி ஜெயவேலை இத்தாலிக்கு அனுப்புவோம்,” என்கின்றனர்.
ஜெயவேலின் அம்மா இன்னமும் டி.நகர் நடைபாதையில் வசித்து வருகிறார். ஜெயவேல் நல்ல நிலைக்கு வந்தபின் அவனுடைய தம்பி, தங்கைகளை பார்த்துக்கொள்வான் என்று நம்பிக்கை உள்ளது என்று கூறுகிறார்.
இத்தனை இடர்பாடுகளை தாண்டி மேற்படிப்புக்கு செல்ல காத்திருக்கும் ஜெயவேலுக்கு வேண்டிய நிதி விரைவில் கிடைக்க வேண்டுகிறோம். படிப்பை முடித்து திரும்பியவுடன், தன் வாழ்வை மாற்றிய உமா மற்றும் முத்துராமன் மற்றும் அவர்களின் ட்ரஸ்டுக்கு உதவிகள் புரிந்து தன்னை போன்றோரின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த முடிவெடுத்துள்ளார் இந்த நம்பிக்கை நாயகன்.
உதவிக்கரம் நீட்ட நினைப்பவர்கள் தொடர்பு கொள்ள: Suyam Charitable Trust