'நான் உயிருடன் உள்ள வரை விளையாடி பதக்கங்கள் வெல்வேன்’ - 95 வயது ‘தடகள பாட்டி’
டெல்லியைச் சேர்ந்த 95 வயது பகவானி தேவி சமீபத்தில் போலாந்தில் நடைபெற்ற 9-வது உலக மாஸ்டர்ஸ் தடகள இன்டோர் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றுள்ளார்.
வயது முதிர்வால் உடலில் சுருக்கங்கள் தென்படுவது இயல்புதான். ஆனால், தள்ளாத வயதிலும் மனதில் ஒரு சிறு சுருக்கம்கூட ஏற்படாமல் சுறுசுறுப்புடன் தேனீக்கள் போல் வலம் வருபவர்களும் இருக்கிறார்கள். இவர்கள் நம்மை நிச்சயம் வியப்பில் ஆழ்த்திவிடுவார்கள். அதுமட்டுமா, நம்மை மேலும் உற்சாகப்படுத்திக்கொள்வதற்கான உத்வேகத்தையும் இவர்கள் கொடுக்கிறார்கள்.
அப்படி நமக்கு உத்வேகத்தை அள்ளிக்கொடுக்கிறார் டெல்லியைச் சேர்ந்த 95 வயது தடகள வீராங்கனை பகவானி தேவி.
சமீபத்தில் போலாந்தில் நடைபெற்ற 9-வது உலக மாஸ்டர்ஸ் தடகள இன்டோர் சாம்பியன்ஷிப்பில் பகவானி தேவி தங்கம் வென்றுள்ளார்.
கழுத்தில் பதக்கத்துடன் டெல்லி விமான நிலையத்தை வந்தடைந்த இவரை பொதுமக்களும் கேமராக்களும் ஒருசேர வரவேற்றன.
“நம் நாட்டிற்கு பெருமை சேர்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது,” என்று பகிர்ந்துகொண்டார்.
இந்த தடகள வீராங்கனை 60 மீட்டர் ஓட்டம், குண்டு எறிதல், வட்டு எறிதல் போன்ற போட்டிகளில் பங்கேற்று தங்கம் வென்றுள்ளார். கடந்த அண்டு 100 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்று தங்கம் வென்றிருந்தார்.
ஓட்டப்பந்தயத்தில் பதக்கங்களை வென்றுள்ள பகவானி தேவி-யின் வாழ்க்கை ஓட்டம் அத்தனை எளிதாக இருந்துவிடவில்லை.
ஆரம்பநாட்கள்
பகவானி தேவி ஹரியானாவில் உள்ள கெட்கா கிராமத்தில் 1928ம் ஆண்டு பிறந்தார். சிறு வயதிலேயே இவருக்கு விளையாட்டில் ஏகப்பட்ட ஆர்வம். கிராமத்தில் இருந்த சிறுமிகளுடன் உற்சாகமாக கபடி விளையாடுவார்.
முறையான கல்வி கற்கமுடியாமல், 12 வயதிலேயே விஜய் சிங் என்பவருடன் திருமணம் முடிந்தது. விஜய் சிங் டெல்லிக்கு அருகில் இருக்கும் மாலிக்பூர் கிராமத்தில் வசித்து வந்தார்.
பகவானி தேவிக்கு 18 வயதானபோது அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. சில மாதங்களிலேயே இந்தக் குழந்தை இறந்துபோனது. மூன்றாண்டுகளுக்குப் பிறகு ஒரு பெண் குழந்தை பிறந்தது.
30 வயதான சமயத்தில் அடுத்த குழந்தையை கருவில் சுமந்திருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த அசம்பாவிதம் நடந்தது. பகவானி தேவியின் கணவர் உயிரிழந்தார்.
உற்சாகத்துடன் துள்ளித் திரியவேண்டிய இளமைப் பருவம், நெருக்கமானவர்களை இழந்த சோகத்தை எதிர்கொள்ளவேண்டிய சூழலுக்கு தள்ளியது. இவற்றிலிருந்து மீண்டு வருவதற்குள் அடுத்த இழப்பு. அவரது மகளும் உயிரிழந்துவிட்டார்.
மகன் ஹவா சிங் தாகருடன் வசித்து வந்த பகவானி சிங்கிற்கு அவரது சகோதரி ஆதரவாக இருந்துள்ளார். மகனின் படிப்பிற்கும் உதவியிருக்கிறார். விவசாய நிலங்களில் நெடுநேரம் வேலை பார்த்து சம்பாதித்தார். இத்தனை கஷ்டங்களுடன் மகனைப் படிக்க வைத்ததற்கு பலன் கிடைத்தது. டெல்லி மாநகராட்சியில் அவரது மகனுக்கு கிளார்க் வேலை கிடைத்தது.
விளையாட்டின் மீது ஈடுபாடு
பகவானி சிங்கிற்கு சிறு வயதில் விளையாட்டில் ஆர்வம் இருந்தது என்றாலும் அதில் ஈடுபடுவதற்கான சூழல் அமையவில்லை. அப்படியானால் அவர் எப்போது விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினார் என்று கேட்கிறீர்களா? 94 வயதில்.
கடந்த ஆண்டு அவரது பேரன் விகாஸ் தாகர்தான் அவரை விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபட வைத்திருக்கிறார். அவர் ஒரு பாரா தடகள வீரர். கேல் ரத்னா விருது பெற்றிருக்கிறார்.
“நான் விருது வாங்கிக்கொண்டு வீடு திரும்பும்போது என் பாட்டி அதை ஆசையாகத் தொட்டுப்பார்ப்பார். விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு விருதுகளை வெல்லவேண்டும் என்கிற ஆர்வத்தை அவரது கண்களில் பார்த்திருக்கிறேன்,” என்கிறார் விகாஸ்.
விகாஸ் தனது பாட்டியை விளையாட்டுப் போட்டுகளில் ஈடுபடுத்த விரும்பினாலும் அவரது வயதையும் உடல்நிலையையும் நினைத்து கவலைப்பட்டார். பகவானி தேவிக்கு 2007-ம் ஆண்டு பைபாஸ் சர்ஜரி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், துணிந்து பாட்டி விளையாட ஊக்குவிக்கவேண்டும் என்று விகாஸ் முடிவு செய்தார். முதலில் வட்டு எறிதல் விளையாட்டிற்கான வட்டை பாட்டியின் கையில் கொடுத்து எறியச் சொன்னார். பகவானி தேவி சற்றும் சிரமப்படாமல் 3.75 மீட்டர் தூரத்தில் எறிந்தார். ஆச்சரியம் விலகாத கண்களுடன் இதைப் பார்த்தார் விகாஸ்.
பகவானி தேவிக்கு பயிற்சியளித்து எப்பாடுபட்டாவது இந்தியா சார்பாக விளையாட ஏற்பாடு செய்யவேண்டும் என்று முடிவு செய்தார் விகாஸ். பகவானி தேவிக்கு ஆர்வம் இருந்தபோதும் அடிப்படை விதிகளையும் நுட்பங்களையும் புரியவப்பது சவாலாக இருந்ததாக சுட்டிக்காட்டுகிறார் விகாஸ்.
வெற்றி வசப்பட்டது
94 வயதான பகவானி தேவிக்கு விளையாட்டில் பயிற்சி எடுத்துக்கொள்வது அத்தனை எளிதான செயலாக இருக்கவில்லை.
“தசைகள் பலவீனமாக இருக்கின்றன. இதனால் கடுமையாக பயிற்சி முறைகளை பின்பற்ற முடியவில்லை. தினமும் 3-4 கிலோமீட்டர் வரை நடைபயிற்சி மேற்கொள்கிறார். பைபாஸ் சர்ஜரி செய்திருப்பதால் அதிக கொழுப்பு இல்லாத, வீட்டில் சமைத்த உணவுகளையே சாப்பிடுகிறார்,” என விகாஸ் விவரித்தார்.
சில மாதப் பயிற்சிக்கு பிறகு 2022-ம் ஆண்டு நடைபெற்ற டெல்லி மாநில மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் மூன்று தங்கப் பதக்கங்கள் வென்றார். அதன் பிறகு, 42-வது தேசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் மேலும் மூன்று தங்க பதக்கங்கள் வென்றார்.
90-94 வயதினருக்காக ஃபின்லாந்தில் நடைபெற்ற ’உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றார். இது குடும்பத்தினருக்கு மகிழ்ச்சி என்றாலும் அத்தனை தூரம் பயணிக்கவேண்டுமே என்கிற கவலையும் எழாமல் இல்லை.
“நான் வாழ்ந்து முடித்துவிட்டேன். எனக்கு மரணத்தை நினைத்து பயமில்லை. எனக்கு ஏதாவது நேர்ந்துவிட்டால் என் சொந்த நாட்டிற்கு என்னை திரும்ப கொண்டு வந்துவிடுங்கள். நான் நிச்சயம் அங்கு சென்று போட்டியில் பங்கேற்று நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன்,” என்று குடும்பத்தினரிடம் தெரிவித்திருக்கிறார் பகவானி தேவி.
அவரது ஆர்வத்தையும் உற்சாகத்தையும் கண்டு ஒருபுறம் மக்கள் பாராட்டினாலும் சிலர் அவரை வயதை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பியுள்ளனர். இந்தக் கேள்விகளையும் எதிர்மறை சிந்தனைகளையும் புறம்தள்ளியிருக்கும் பகவானி தேவி மேலும் உற்சாகத்துடன் தொடர்ந்து முன்நோக்கி ஓடுகிறார்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற உள்ள ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளுக்காக ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கிறார். அடுத்த ஆண்டு ஸ்வீடன் நாட்டில் நடைபெற இருக்கும் உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்க திட்டமிட்டிருக்கிறார் இந்த 94 வயது இளம்பெண்.
ஆங்கில கட்டுரையாளர்: சிம்ரன் ஷர்மா
‘முதுமையிலும் தனியாத கல்வி தாகம்’ - 87 வயதில் 2வது முதுகலை பட்டம் பெற்ற வரதா சண்முகநாதன்!