கண்ணுக்கு விருந்தளிக்கும் 2.0 : தொழில் நுட்பங்கள் மற்றும் சுவாரஸ்ய தகவல்கள்!
இந்தியாவில் வெளியாகியுள்ள காஸ்டிலியஸ்ட் திரைப்படமான 2.0 ரூ.543 கோடி செலவில் தயாராகியுள்ளது.
பலரும் எதிர்பார்த்திருந்த இயக்குனர் சங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அக்ஷய் குமார் நடித்த 2.0 படம் இன்று வெளியாகி மக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்துள்ளதுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. சங்கர் படம் என்றாலே பிரம்மாண்டம் நிறைந்ததாகவே இருக்கும் அதிலும் ரோபோக்கள் மற்றும் அறிவியல் சார்ந்த 3டி படம் என்றால் அதில் பிரம்மாண்டத்திற்கு குறைவு இருக்காது.
இப்படத்தின் பட்ஜெட், தொழில்நுட்பங்கள் மற்றும் சுவாரசிய தகவல்களை பார்ப்போம்.
பட்ஜெட் - வசூல்
லைகா தயாரிப்பில் வெளியான இப்படத்தின் மொத்த தயாரிப்பு மதிப்பு ரூ.543 கோடி என சொல்லப்படுகிறது. அதிக பட்ஜெட்டில் உருவான முதல் சர்வதேச இந்திய திரைப்படம் இது.
தொழில்நுட்ப ரீதியாக எந்த இடத்திலும் சரிவு ஏற்படக் கூடாது என்பதற்காக அதிக பட்ஜெட்டை பயன்படுத்தியுள்ளது இந்த தயாரிப்பு நிறுவனம். படத்தை வெளியிடுவதற்கு முன்னரே ரூ.180 கோடியை சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமம் மூலம் இப்படம் விற்பனை ஆகிவிட்டது.
உலக அளவில் 10,500க்கும் மேலான திரைகளில் படத்தை வெளியிட்டுள்ளனர்; அதில் இந்தியாவில் மட்டும் 6,600-6,800 திரைகள் ஆகும். இது 9000 திரைகளில் வெளிவந்து சாதனைபடைத்த பாகுபலி 2-வின் சாதனையை முறியடித்துவிட்டது. எல்லா மொழிகளிலும் சேர்த்து முதல் நாள் வசூல் ரூ.100 கோடி வரை இருக்கும் என படக்குழுவினர் எதிர்பார்த்து வருகின்றனர்.
2.0 பட தொழில்நுட்ப அம்சங்கள்
இந்திய ரசிகர்களுக்கு இப்படம் நிச்சயம் ஒரு விசுவல் ட்ரீட். ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளிக்கும் விதமாக அமைந்த இப்படத்தில் மொத்தம் 1300 VFX ஷாட்கள் உள்ளது. 2டி-ல் வெளியான எந்திரன் படத்திலே பல புது தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன. அதிலும் இப்பொழுது 3டி காட்சி மற்று 4டி சவுண்டில் வெளியாகியுள்ள 2.0வில் பயன்படுத்திய தொழில்நுட்பங்களைப் பற்றி பார்ப்போம்.
நேடிவ் 3டி
இப்படத்தின் முக்கிய அம்சம் படம் முழுவதும் 3டி தொழில்நுட்பம் கொண்டு இயக்கப்பட்டுள்ளது. அதாவது ஹாலிவுட் படங்கள் கூட 2டி முறையில் எடுத்த பின்னரே 3டி யாக மாற்றப்படும். நேரடியாக 3டி முறையில் எடுத்த படங்கள் மிகவும் குறைவு, அதாவது அவதார், டாய் ஸ்டோரி, ஐஸ் ஏஜ் போன்ற 3டி ஆங்கிலப் படங்கள் வரிசையில் இப்பொழுது 2.0. 2டியில் எடுத்து 3டி ஆக மாற்றுவதை விட நேரடியாக 3டி கேமிராவில் எடுத்ததால் காட்சிகளின் நுணுக்கம் மிக துல்லியமாக அமையும். காட்சிகள் அமைப்பு சிறப்பாக அமையும் என்றாலும் கூட இதில் VFXகளை இணைப்பது சற்று கடினம், இதுவே படத்தை வெளியிட தாமதமாக காரணமாக இருந்துள்ளது.
அனிமேட்ரானிக்ஸ்
இந்த தொழிநுட்பக் கருவி, நிஜ கதாப்பாத்திரங்களை விர்சுவல் ரியாலிட்டி ஆக மாற்ற உதவும். அதாவது பெயருக்கு ஏற்றார் போல் மிருகம் போன்ற ஒரு இயந்திர மாதிரியை உருவாக்கி அதற்கு தோற்றம் மற்றும் அசைவுகளை தருவது. ஜூராசிக் பார்க் படத்தில் பிரத்தியேகமாக டைனாசர்களை உருவாக்க அதிகம் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் இது. அதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இப்படத்தில் வரும் பறவைகள் மற்றும் பிரம்மாண்ட உருவங்களுக்கு உயிர் கொடுக்கப்பட்டுள்ளது.
ப்ரீ-விசுவலைசேசன் (முன் காட்சிப்படுத்துதல்)
இந்த தொழில்நுட்பம் மூலம் காட்சிகளை படமாக்கும் முன்பே காட்சிகள் எவ்வாறு அமையும் என்பதை இதில் பார்க்கலாம். எங்கு கேமிரா வைத்தால் எவ்வாறு காட்சி அமைக்கலாம் என்பதை தெரிந்துக்கொள்ளாம். இதன் மூலம் காட்சிகளின் அமைப்பில் மாற்றங்களை படமெடுக்கும் முன்னேரே இயக்குனரால் செய்ய முடியும். இது எந்திரன் படித்தில் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் தான்.
வி கேம் (விர்சுவல் கேமிரா)
இந்த கேமிரா மூலம் ஒரு இடத்தில் இருந்துக்கொண்டே எங்கு கேமிரா வைத்தால் எந்த காட்சி வரும் என 3டி ஸ்பேசில் பார்த்துக் கொள்ளலாம். அவதார் படத்தில் பயன்படுத்தப்பட்ட ப்யூசின் கேமரா சிஸ்டம் என்ற செட்டப்பில்தான் 2.0-வும் படமாக்கப்பட்டுள்ளது.
ஸ்பைடர் கேம்
மேலிருந்து கீழும் இடமிருந்து வலமும் எளிமையாக நகர்த்தக்கூடிய இந்த கேமிராவை கிரிக்கெட் போட்டிகளில் நாம் அதிகம் பார்த்திருப்போம். மைதானத்திற்கு மேலே சுற்றிக்கொண்டிருக்கும் இந்த கேமிரா ஆட்டத்தின் நடுவே இருந்து நேரடியாக படமெடுக்கும். அதே கேமிரா இப்படத்தின் மைதான காட்சிகள் மற்றும் க்ளைமேக்ஸ் காட்சிகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
லிடார் ஸ்கேனிங்
படத்திற்காக போடப்பட்ட செட்டுகளை ஸ்கேன் செய்து லைட்டிங் மூலம் காட்சிகளை உருவகப்படுத்தி 3டி வடிவில் கொடுப்பதே லிடார் ஸ்கானிங் தொழில்நுட்பம் ஆகும்.
இப்படத்தில் பயன்படுத்தப்பட்ட முக்கிய தொழில்நுட்பங்கள் இவை. மேலும் இப்படத்திற்கு முக்கிய பங்கு வகிப்பது நடிகர்களின் மேக்-அப். சர்வதேச மேக்-அப் கலைஞர் சீன ஃபூட் தான் இப்படத்தின் மே-அப் கலைஞர். அக்ஷய் குமார் செயற்கை மேக்-அப் போட்டுக்கொள்ள குறைந்தது 6 மணி நேரம் ஆகியுள்ளது. அடுத்து இப்படத்தின் சாராம்சம் VFX, இப்படத்தின் VFX காட்சிகள் 25 VFX ஸ்டூடியோவில் உருவாக்கப்பட்டுள்ளது.
இவ்வளவு பிரம்மாண்டமாக பல தொழில் கலைஞர்களைக் கொண்டு உருவான 2.0 தயாரிப்பாளர்களின் விருப்பம் போல் சர்வதேச அளவில் வெற்றிபெற்று, ஹாலிவுட் ரேஞ்சில் வெளியான முதல் இந்திய படமாக பாராட்டப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தகவல் உதவி: பிஸ்னெஸ் டுடே