பேபி கார்ன் விவசயாத்தை இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தி இன்று கோடியில் சம்பாதிக்கும் விவசாயி!
சிறிய விவசாயக் குடும்பத்தில் பிறந்து ஏழ்மையான சூழலில் வளர்ந்து இன்று விவசாயத்தின் மூலம் பேபி காரன் உற்பத்தியில் முதல் இடம் பிடித்ததோடு கோடி கணக்கில் சம்பாதிக்கிறார் ஹரியானாவைச் சேர்ந்த விவசாயி கன்வால் சிங் சாஹன்.
விவசாயத்தில் புதுமையை புகுட்டி பல இளைஞர்களுக்கு முன்னோடியாக இருக்கும் இவரை பாராட்டி மத்திய அரசு மரியாதைக்குரிய பத்மஸ்ரீ பட்டத்தை வழங்கியுள்ளது.
80 மற்றும் 90களில் பேபி காரன் என்பது பணத்தாலும் வசதியாலும் உயர்ந்தவர்கள் மட்டுமே சுவைக்கும் உணவாக இருந்தது. காரணம் பேபி கார்னை இந்தியாவில் உற்பத்தி செய்யாமல் தாய்லாந்து போன்ற வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ததேயாகும். இந்த போக்கை மாற்றி நம் நாட்டிலும் பேபி கார்னை அதிக புழக்கத்திற்கு எடுத்து வந்தவர் கன்வால் சிங் சாஹன். 90களில் உள்ள எல்லா விவசாயிகளைப் போல் நெல், கோதுமை என பயிரிடாமல் பேபி கார்னை தேர்ந்தெடுத்து வெற்றிக்கண்டவர் இவர்.
கன்வால் சிங்கின் விவசாயப் பயணம்..
ஹரியானா சொனிபெட்டில் உள்ள அடேர்னா கிராமத்தைச் சேர்ந்தவர் கனவால் சிங், தனக்கு 15 வயது இருக்கும்பொழுதே விவசாயம் செயத்துக்கொண்டிருந்த தனது தந்தை இறந்ததால் சிறு வயதிலே விவசாயம் செய்யத் துவங்கிவிட்டார் இவர். தனது குடும்பச் சூழலுக்காக விவசாயத்தையும் படிப்பையும் சமநிலை செய்துகொண்டு இன்று ஒரு வக்கீலாகவும் விவசாயியாகவும் உயர்ந்துள்ளார் இவர்.
இது குறித்து எக்கனாமிக் டைம்ஸிற்கு அவர் அளித்தப் பேட்டியில்,
“சிறு வயதில் விவசாயத்தை கையில் எடுத்தாலும் 1997ல் தான் கோதுமை மற்றும் நெல் விவசாயம் லாபம் அளிக்காது மாற்று வழி வேண்டும் என்று யோசித்தேன். அப்பொழுது தான் எனக்கு தெரிந்த ஒருவர் ஒரு ஏக்கர் கோதுமை நெலுக்கு 30,000 ரூபாய் கிடைத்தால் பேபி கார்னிக்கு 3 மடங்காக கிடைக்கும் என்றார்,” என நினைவுக்கூருகிறார் கன்வால் சிங்.
அப்பொழுது அந்தக்காலத்தில் பேபி கார்னை இந்தியாவில் எவரும் பயிரிடவில்லை. முதல் முதலாக கன்வால் இந்த விவசாயத்தை நம்பி இறங்கும்பொழுது கிராம மக்கள் மற்றும் மற்ற விவசாயிகள் இது தேவை இல்லாத வேலை இது லாபம் அளிக்காது என மட்டம் தட்டினர். இருப்பினும் தன்னை நம்பி மட்டுமே பேபி கார்ன் விவசாயத்தில் இறங்கிய இவர் வெற்றிக்கன்டுள்ளார்.
16 வருடம் கழித்து இன்று அவரது கிராமத்தில் மட்டும் 400 விவாசாயிகளுக்கு மேல் பேபி கார்னை பயிரிட்டு வருடத்திற்கு 4 கோடி வரை சம்பாதிகின்றனர் என குறிப்பிடுகிறார் கன்வால் சிங். இந்த விவசாயத்தின் முதலீடு மற்றும் வருவாய் பற்றி அவர் எக்கனாமிக் டைம்ஸிற்கு கூறுகையில்,
“ஒரு ஏக்கருக்கு 7000 ரூபாய் முதலீடு செய்தால் 30000 ரூபாய் வரை வருவாய் ஈட்டலாம். நெல் கோதுமை போல் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே அறுவடை செய்யும் சிக்கல் பேபி கார்னில் இல்லை. பேபி கார்னை வருடத்திற்கு 3 முறை அறுவடை செய்யலாம் என்பதனால் லாபம் அதிகம்,” என்கிறார்.
பேபி கார்னுடன் இணைந்து மஷ்ரூம், ஸ்வீட் கார்ன், தக்காளி மற்றும் இதர பயிர்களையும் அறுவடை செய்கிறார் இவர். அதன் பின் 2009 இல் பேபி கார்ன் விவசாயத்தை விரிவாக்க முயன்ற கன்வால், 3 ஆண்டு வரை கெட்டுப்போகாமல் இருக்க கேன் கார்னை அறிமுகப்படித்தினார். இப்பொழுது அறுவடை செய்யும் கார்ன்களை அப்படியே இங்கிலாந்து வரை ஏற்றுமதி செய்கிறார்.
நாள் ஒன்றுக்கு 5-10 டன் வரை பேபி கார்ன்கள் இவரது நிலத்தில் இருந்து அறுவடை செயப்படுகிறது அதிலிருந்து 2 டன்கள் பதப்படுத்தப்பட்ட கேன் கார்ன்கள் மற்றும் 1.5 ஃப்ரெஷ் கார்ன்களும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
“துவக்கத்தில் தாய்லாந்தில் இருந்து சிறந்த பேபி கார்ன் விதைகளை இறக்குமது செய்து பயன்படுத்தினாலும் இப்பொழுது நாங்களே சொந்தமாக உருவாக்கிக் கொள்கிறோம்” என்கிறார்.
விவசயாத்தில் இவரது புரட்சியை பாராட்டி பல மாநில பரிசுகளை வழங்கி இன்று தேசிய அளவிலும் அங்கீகாரத்தையும் பெற்று தந்துள்ளது.
“கிடைக்கும் கல்வியை பயன்படுத்தி இளைஞர்கள் விவசாயத்தில் ஈடுபட்டு புதுமைகளை புகுட்ட வேண்டும். இதுவே இந்திய உணவுத் துறையில் முன்னேற உதவும்” என முடிக்கிறார்.
கட்டுரையாளர்: மஹ்மூதா நௌஷின்