'அனைவருக்கும் ஐஐடி' - அதிநவீன ஆய்வகங்களைப் பார்வையிட பொதுமக்களுக்கு ஐஐடி மெட்ராஸ் அழைப்பு!
ஐஐடி மெட்ராஸ், தனது அதிநவீன ஆராய்ச்சி மையங்கள், ஆய்வகங்கள் ஆகியவற்றை வரும் ஜனவரி 3, 4 ஆகிய தேதிகளில் பார்வையிட வருமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
ஐஐடி மெட்ராஸ், தனது அதிநவீன ஆராய்ச்சி மையங்கள், ஆய்வகங்கள் ஆகியவற்றை வரும் ஜனவரி 3, 4 ஆகிய தேதிகளில் பார்வையிட வருமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
ஐஐடி மெட்ராஸ்-ன் ‘அனைவருக்கும் ஐஐடிஎம்’ (IIT Madras for All) என்ற தொலைநோக்குப் பார்வையின் சிறப்பு முன்னெடுப்பாக கல்வி நிறுவனத் திறந்தவெளி அரங்கு 2025 நடத்தப்படுகிறது.
இதன் மூலம், இந்தியாவின் முதன்மையான கல்வி நிறுவனங்களில் ஒன்றின் அதிநவீன ஆராய்ச்சி, முன்னோடித் தொழில்நுட்பங்கள், துடிப்பான கல்விச் சூழலை பொதுமக்கள் நேரில் கண்டறியலாம். புத்தாக்க ஆராய்ச்சி, ஆய்வுத் திட்டங்கள், செயல்விளக்கங்கள் ஆகியவற்றை 60-க்கும் மேற்பட்ட அரங்குகளில் பார்வையிடலாம்.
நான்கு தேசிய ஆராய்ச்சி மையங்கள், 11 கல்வி நிறுவன ஆராய்ச்சி மையங்கள், 15 உயர் சிறப்பு மையங்களில் நடைபெற்று வரும் கண்டுபிடிப்புக்கான ஆராய்ச்சிகள், 90-க்கும் மேற்பட்ட ஆய்வங்களை பொதுமக்கள் வருகையின்போது நேரில் காண முடியும்.
ஐஐடி மெட்ராஸ்-ன் வருடாந்திர தொழில்நுட்பத் திருவிழாவான 'சாஸ்த்ரா' 2025 ஜனவரி 3-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை வழக்கம்போல் நான்கு பகல்- நான்கு இரவுகளாக நடைபெற உள்ளது. சாஸ்த்ரா-வின் முதல் இரண்டு நாட்கள் நடைபெறும் திறந்தவெளி அரங்கை, இணையதளம் வாயிலாக 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிடுவதுடன், 60,000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் நேரடியாகக் கண்டுகளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
“ஐஐடி மெட்ராஸ்-க்கு எல்லோரும் வருவதற்கு இது ஒரு பிரத்யேக வாய்ப்பு. ஐஐடி மெட்ராஸ்-ன் மேம்பட்ட ஆய்வகங்களை பொதுமக்களுக்கு காண்பிக்க இக்கல்வி நிறுவனம் முழு ஆதரவையும் அளிக்கிறது. இந்த அழகிய வளாகத்தை அனைவரும் பார்வையிடவும், எதிர்காலத்தில் தலைமை வகிக்கவிருக்கும் இளம் தலைமுறையினரை ஊக்குவிக்கவும் இது வாய்ப்பாக அமையும் என நம்புகிறேன்,” என்று இந்நிகழ்வு குறித்துப் பேசிய ஐஐடி மெட்ராஸ் டீன் (மாணவர்கள்) பேராசிரியர் சத்தியநாராயணன் என் கும்மாடி கூறினார்.
“ஐஐடி மெட்ராஸ் தொடக்கத்தில் இருந்தே அதிநவீன கற்பித்தலுடன் ஆராய்ச்சிக்கான ஆய்வகங்களை உருவாக்குவதில் சிறந்து விளங்குகிறது. ‘அனைவருக்கும் ஐஐடிஎம்’ (IITM for All) திட்டத்தின்கீழ், நடத்தப்படும் இந்நிகழ்வையொட்டி, இக்கல்வி நிறுவனத்தில் உள்ள 18 துறைகள் மற்றும் 45-க்கும் மேற்பட்ட உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சி மையங்களைப் பற்றிய நேரடி அனுபவத்தைப் பெறுவதுடன், இங்குள்ள அதிநவீன வசதிகள் குறித்து கண்டறியவும் வாய்ப்பாக அமையும்.
”ஐஐடி மெட்ராஸ்- சாஸ்த்ரா 2025-இன் வருடாந்திர தொழில்நுட்ப விழாவையொட்டி நடைபெறும் இந்த திறந்தவெளி நிகழ்வின்போது, ஆர்வமுள்ள பள்ளிக் குழந்தைகள், கல்லூரி மாணவர்கள், தொழில் வல்லுநர்கள், தொழில்நுட்ப ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைவரையும் எங்களது பசுமை வளாகத்தைப் பார்வையிட வருமாறு வரவேற்கிறோம்,” என்று ஐஐடி மெட்ராஸ் இணைப் பாடத்திட்ட ஆலோசகர் டாக்டர் முருகையன் அமிர்தலிங்கம் கூறியுள்ளார்.
இதற்கு பதிவு செய்வதற்கான கடைசி நாள் 25 டிசம்பர் 2024. விருப்பமுள்ளவர்கள் பின்வரும் இணைப்பைப் பயன்படுத்தி பதிவு செய்யலாம். - shaastra.org/open-house.
Edited by Induja Raghunathan