நிலங்களில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை தடுக்கும் மாணவர்கள் குழு!
இந்தக் குழு நான்கு மாதங்களில் 14,000 பிளாஸ்டிக் ரேப்பர்களை சேகரித்துள்ளது.
பிளாஸ்டிக் என்பது நீர், நிலம் ஆகிய பகுதிகள் முதல் நாம் அன்றாடம் உண்ணும் உணவு வரை எங்கும் நிறைந்துள்ளது. இதனால் ஏற்படும் ஆபத்துகளை மக்கள் உணர ஆரம்பித்துள்ளனர். அரசாங்கங்கள், கார்ப்பரேட்கள், நிறுவனங்கள், தனிநபர்கள் இதற்கான தீர்வுகாணும் முயற்சியில் பங்களித்து வருவதே இதற்கான சான்று.
இத்தகைய மாற்றத்தை ஏற்படுத்துவதில் இளம் தலைமுறையினர் தீவிரமாகப் பங்களிப்பது ஊக்கமளிக்கிறது. குருகிராமின் ஹெரிடேஜ் எக்ஸ்பீரியன்ஷல் லெர்னிங் ஸ்கூலில் (HXLS) ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் குழு ஒன்று பிளாஸ்டிக் ரேப்பர்கள் நிலங்களில் கொட்டப்படுவதைத் தடுப்பதற்காக தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
எஃப்எம்சிஜி துறையில் அதிகம் பயன்படுத்தப்படும் MLP எனப்படும் பல அடுக்குகள் கொண்ட பேக்கேஜிங் மறுசுழற்சிக்கு உட்படுத்த முடியாதவை. இவை மக்கும் தன்மை கொண்டதல்ல. மறுபயன்பாட்டிற்கும் உட்படுத்த முடியாது. இந்தக் கழிவுகள் நிலங்களில் கொட்டப்படுவதுடன் சாலைகளிலும் பொது இடங்களிலும் வீசப்படுகிறது.
ஆறாம் வகுப்பு மாணவர்கள் அடங்கிய குழு இத்தகைய பிளாஸ்டிக் ரேப்பர்களை சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு நான்கு மாதங்களில் 14,000 பிளாஸ்டிக் ரேப்பர்களை சேகரித்துள்ளது. இவர்கள் தங்களது பாடம் தொடர்புடைய ஒரு பிராஜெக்டிற்காக இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.
இந்தப் பள்ளி சஃபாய் வங்கியுடன் இணைந்து செயல்படுகிறது. இந்த வங்கி பல அடக்குகள் கொண்ட பேக்கேஜிங் உள்ளிட்ட அனைத்து பிளாஸ்டிக் கழிவுகளையும் பெற்றுக்கொண்டு சிமெண்ட் தொழிற்சாலை உலையில் எரித்துவிடுகிறது.
பள்ளி ஆசிரியரான எஸ் ராஜேஸ்வரி என்டிடிவி உடனான உரையாடலில் கூறும்போது,
”எங்களது பள்ளியில் அனுபவ ரீதியான கற்றல் முறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதில் அன்றாட வாழ்க்கை அனுபவங்கள் மூலம் கருத்துகள் மாணவர்கள் மனதில் பதியவைக்கப்படும்,” என்றார்.
இந்த முயற்சியின் ஆரம்பக்கட்டமாக சமூகத்தில் நிலவும் பிரச்சனை குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்படும்.
”இந்தப் பிரச்சனை குறித்து பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்து, தகவல்கள் சேகரித்து, நிபுணர்களுடன் கலந்துரையாடி, சாத்தியமுள்ள தீர்வுகளை ஆய்வு செய்வது மாணவர்களின் பொறுப்பு,” என்றார்.
நகரங்களில் உள்ள பள்ளிகளில் இருந்தும் மாணவர்களின் குடியிருப்பு சமூகத்திடமிருந்தும் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டது. இந்த செயல்முறையில் மாணவர்கள் சுவரொட்டிகள், வகுப்பறை விளக்கக்காட்சி ஆகியவற்றை ஏற்பாடு செய்தும் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிப்பதற்கான அட்டைபெட்டி வைத்தும் மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.
மாணவர்களில் ஒருவரான சுஹானி ரவி திவாரி கவுர் தனது குடும்பத்தையும் அருகில் வசிப்போரையும் இந்த முயற்சியில் இணைத்துக்கொண்டுள்ளார். இதன் மூலம் ஷிலாங் டைம்ஸ் ’ஆபரேஷன் க்ளீன்அப்’ முயற்சியில் பங்கேற்பதற்காக இவருக்கு மேகாலயா செல்வதற்கான அழைப்பு வந்துள்ளது.
சிஃப்தி கவுர் என்கிற மற்றொரு மாணவியும் தனது குடியிருப்புப் பகுதிக்கு இந்த முயற்சியைக் கொண்டு சேர்த்துள்ளார். ஒவ்வொரு டவரிலும் அட்டைப்பெட்டியை வைத்துள்ளார். இதில் பிளாஸ்டிக் கழிவுகளைப் போடுமாறு குடியிருப்புவாசிகளை ஊக்குவிப்பதாக City Spidey குறிப்பிட்டுள்ளது.
கட்டுரை: THINK CHANGE INDIA