1கிலோ பிளாஸ்டிக் கழிவைக் கொடுத்தால், 5ரூபாய்க்கு உணவுப் பொட்டலம்!
இந்த திட்டத்தை அமல்படுத்தியுள்ள மாநில அரசு எது தெரியுமா?
இந்த ஆண்டு ஜூலை மாதம் சத்தீஸ்கர் பகுதியில் ஒரு கஃபே திறக்கப்பட்டது. இங்கு மக்கள் கொண்டு வரும் பிளாஸ்டிக் கழிவுகளுக்கு பதிலாக உணவு வழங்கப்படுகிறது. இதனால் ஊக்குவிக்கப்பட்டு ஒடிசாவிலும் சமீபத்தில் அதேபோன்ற முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. இங்கு ஒருவர் ஒரு கிலோ பிளாஸ்டிக் கழிவுகளைக் கொடுத்து அதற்கு பதிலாக 5 ரூபாய்க்கு உணவைப் பெற்றுக்கொள்ளலாம்.
மாநில அரசாங்கத்தின் ஆஹார் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படும் இந்த முயற்சியை ஒடிசாவின் கோராபுட் மாவட்டத்தில் உள்ள கோட்பேட் கவுன்சில் அறிமுகம் செய்துள்ளது.
புடவைகளுக்கும் கைத்தறி பொருட்களுக்கும் பிரபலமான கோராபுட் பகுதியில் தற்போது இந்த முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. பாலிதீன் பைகள், பிளாஸ்டிக் பாட்டில்கள், கப் போன்ற பொருட்களை குடியிருப்புவாசிகள் கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த அமைப்பின் முதன்மை அதிகாரி அலோக் சமந்தராய் ’தி இந்து’ உடனான உரையாடலில் தெரிவிக்கும்போது,
“பிளாஸ்டிக் கழிவுகளால் வடிகால்களில் அடைப்புகள் ஏற்படுகிறது. பறவைகள் பாதிக்கப்படுகின்றன. கால்நடைகள் கொல்லப்படுகிறது. மனிதர்களுக்கும் தீங்கு விளைவிக்கிறது. இந்த முயற்சி நம் சுற்றுச்சூழலையும் மனிதர்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பதற்கான ஒரு சிறு முன்னெடுப்பு,” என்றார்.
இந்த முயற்சி தொடங்கப்பட்ட முதல் நாளில் 10 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் பெறப்பட்டது. அதற்கு பதிலாக அவர்களிடம் 10 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது.
”மக்கள் இதில் ஆர்வம் காட்டுவதைப் பார்க்கும்போது இந்த நகரம் பாலிதீன் கழிவுகள் இல்லாத பகுதியாக மாறிவிடும் என்கிற நம்பிக்கை பிறக்கிறது,” என்றார் அலோக்.
நகரத்தை பிளாஸ்டிக் இல்லாத பகுதியாக மாற்றுவதற்கான முயற்சிகளில் ஒரு பகுதியாக பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கவேண்டியதன் அவசியம் குறித்து வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக என்டிடிவி செய்தி தெரிவிக்கிறது.
இந்த மாநிலத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை குறைக்கும் வகையில் மற்றொரு முயற்சியும் ஏற்கெனவே மேற்கொள்ளபட்டுள்ளது. கஞ்சம் மாவட்டத்தில் பால் ஏடிஎம் நிறுவப்பட்டது. இதன் மூலம் பிளாஸ்டிக்கைத் தவிர்த்துவிட்டு மக்கள் பாத்திரங்கள் எடுத்துவர ஊக்குவிக்கப்பட்டனர்.
சத்தீஸ்கரின் அம்பிகாபூரில் உள்ள ’கார்பேஜ் கஃபே’-வில் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்துக் கொடுத்தால் அதற்கு பதிலாக இலவசமாக உணவு வழங்கும் முயற்சி தொடங்கப்பட்டது. ஆதரவற்றோரும் குப்பை பொறுக்குபவர்களும் தங்களது உணவிற்காக ஒரு கிலோ பிளாஸ்டிக் கழிவுகளைக் கொடுத்தால் இங்கு இலவசமாக உணவைப் பெறலாம். அம்பிகாபூர் நாட்டின் இரண்டாவது தூய்மையான நகரம் என்கிற பெருமையைப் பெற்றுள்ளது.
மக்களிடமிருந்து சேகரிக்கப்படும் கழிவுகளைக் கொண்டு சாலைகள் அமைக்க நகராட்சி திட்டமிட்டுள்ளது. இந்த நகரில் இவ்வாறு பிளாஸ்டிக்கை மறுபயன்பாட்டிற்கு உட்படுத்துவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு எட்டு லட்சம் பிளாஸ்டிக் பைகளைக் கொண்டு சாலை அமைக்கப்பட்டுள்ளது.
கட்டுரை: THINK CHANGE INDIA