டயக்னோசிஸ் எனறு சொல்லப்படும் மருத்துவ முன் அறிதல் துறையில் நவீன தொழில்நுட்பக் கருவிகளுடன், சென்னையில் அடையாளமாகத் திகழும் ஒரு நிறுவனம் 'பாரத் ஸ்கேன்ஸ்.' இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் நோயாளிகள் இந்த மையத்துக்கு வருகிறார்கள் என்பது இதன் வளர்ச்சியைக் காட்டுகிறது.
இந்த நிறுவனம் இந்திய அளவில் மட்டுமல்ல, ஆசிய அளவிலும் பல நவீன கருவிகளை முதன் முதலில் பயன்படுத்திய நிறுவனம் என்கிற பெருமையைக் கொண்டது. சாதாரண குடிமகன் முதல் விவிஐபி வரை பாரத் ஸ்கேன்ஸ் என்கிற நிறுவனத்தை நம்பி மருத்துவ பரிசோதனைக்காக வருகிறார்கள். இந்த நம்பிக்கையை உருவாக்கியவர் டாக்டர் இம்மானுவேல்.
இவரது வெற்றிக்கு பின்னால் உள்ள உழைப்பு உத்வேகம் தரக்கூடிய ஒன்று.. இவருடனான ஒரு சந்திப்பு...
’’திருநெல்வேலி அருகே உள்ள புதுப்பட்டி என்கிற சின்ன கிராமத்திலிருந்து உருவான முதல் தலைமுறை பட்டதாரி. எங்களைப் போல கிராமத்து ஆட்களுக்கு பட்டப் படிப்பே குதிரைக் கொம்பாக இருக்கும்போது டாக்டர் படிப்பெல்லாம் நினைத்தே பார்க்க முடியாது".
ஒரு திருப்புமுனையில்தான் எனக்கு டாக்டர் படிப்பு என்கிற வாய்ப்பு அமைந்தது. அதை இப்போது நினைத்தாலும் ஆச்சரியமாக இருக்கிறது,’’ என்று தனது கடந்த காலத்தை நினைவு கூர்ந்தார்.
’’அம்மா அப்பா இருவரும் ஆசிரியர்களாக இருந்தனர். அந்த காலத்து ஆசிரியர்கள். ஓரளவு கல்வி பின்புலம் கொண்டவர்கள் என்பதால் பிள்ளைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்பதுதான் அவர்களுக்கும் கனவு. ஆனால் பிள்ளைகள் இந்த படிப்பு படித்தால் அவர்களது எதிர்காலம் இப்படி அமையும் என்கிற திட்டமெல்லாம் அவர்களுக்குத் தெரியாது. அவர்களுக்கு யோசனை சொல்லவும் யாரும் இல்லை. நல்லூர் பள்ளியில் படித்துவிட்டுய் பாளையங்கோட்டை செயிண்ட் சேவியர் கல்லூரியில் பிஎஸ்சி பிசிக்ஸ் சேர்ந்தேன்.
பிஎஸ்சி பாடத்தில் 89% மார்க் வாங்கினேன். அடுத்து என்ன படிக்கிறதுன்னு தெரியல. எம்எஸ்சி படிகிறதுதான் எனக்கு தெரிஞ்ச ஒரே வழி. அதுக்கு விண்ணப்பங்கள் வாங்கிகிட்டு இருந்த நேரத்துல பாளையங்கோட்டைல ஒரு நண்பர் வீட்டுக்கு போனேன். அவன் என்னைவிட மார்க் குறைவா எடுத்தவன். அவங்க அப்பா அவனுக்கு மெடிக்கல் காலேஜ் அப்ளிகேஷன் வாங்கி எழுதிகிட்டு இருந்தார்.
"என்னைவிட மார்க் குறைவா இருக்கிற என் பிரண்ட் அப்ளை பண்ணும்போது நான் ஏன் அப்ளை பண்ணக்கூடாதுன்னு தோணுச்சு. சொல்லப்போனா இப்படி ஒரு வழி இருப்பதே அப்பதான் எனக்குத் தெரியும். உடனே எங்க அப்பாகிட்ட எம்பிபிஎஸ் அப்ளிகேஷன் வாங்க பணம் கேட்டேன். முதலில் மறுத்தவர் எனது உற்சாகத்தைப் பார்த்ததும் பணம் கொடுத்தார். அங்கேயே விண்ணப்பிச்சேன். எனக்கு மெரிட்ல சென்னை மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைச்சது. இப்படித்தான் டாக்டர் படிக்கும் வாய்ப்பு அமைந்தது".
படித்து முடித்ததும் இங்கேயே எனக்கான வாய்ப்புகளும் அமைந்தது. தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் பிற மருத்துவமனைகளில் நேரம் காலம் பார்க்காமல் உழைத்தேன். பின்தங்கிய பகுதியிலிருந்து இந்த அளவுக்கு வந்திருக்கிறோம். இன்னும் நல்ல பெயரோடு அடுத்த கட்டத்துக்கு செல்ல வேண்டும் என்கிற வேகம் என்னை இயக்கியது.
இதற்கடுத்து சென்னை சூளைமேட்டில் சிறிய அளவில் கிளினிக் தொடங்கினேன். பிறகு மருத்துவமனையாக மாற்றினேன். மாலை 5 மணிக்கு மருத்துவமனை வந்தால் அடுத்த நாள் மதியம்தான் வீடு திரும்ப முடியும். அவ்வளவு கூட்டம் இருக்கும். மக்களிடம் நல்ல டாக்டர் ராசியானவர் என்று பெயர் எடுத்ததால் காத்திருந்து பார்த்துச் செல்வார்கள். அப்படித்தான் டயாக்னோஸிஸ் தொழில் நுட்பத்திலும் கவனம் செலுத்தினேன்.
பொதுவாக எவ்வளவு பெரிய மருத்துவராக இருந்தாலும் நோய்க்கான மூலத்தை அறிந்தால்தான் சிறப்பான மருத்துவத்தை அளிக்க முடியும். அந்த நோயை முழுமையாக குணப்படுத்த முடியும். இதை அறிந்து கொள்வதற்குத்தான் பரிசோதனைக் கூடங்கள் இருக்கின்றன. பரிசோதனைக் கூடங்கள் நாம் அறிந்ததுதான். ரத்தம், சிறுநீர், சளி, மலம் விந்து போன்றவற்றை சோதனை செய்து கொடுப்பார்கள். மருத்துவமனை அளவிலேயே சோதனை செய்து கொள்வதும் உண்டு. இதற்கென்ற சோதனைக் கூடங்கள் தனியாகவும் இருந்தன. ஆனால் சிறிய அளவிலேயே இருந்ததை கவனித்தேன்.
நோய்க்கான மூலக்கூறுகளை அறிதல் துறை மேலும் வளர வளரத் தொடங்கிய நேரம். குறிப்பாக சென்னையில் மருத்துவத் துறையின் வேகம் அதிகமாக இருந்தது. வெளிநாடுகளிலிருந்தும் மக்கள் சென்னைக்கு மருத்துவம் பார்க்க வரத் தொடங்கிய நேரம். சென்னையிலோ சிறிய அளவிலான பரிசோதனைக்கூடங்களில் பழைய தொழில் நுட்பங்கள்தான் இருந்தது. மருத்துவத் துறை மேலும் துல்லியமான ஆய்வு முடிவுகளை எதிர்பார்த்தது. இந்த நேரத்தில் எதார்த்தமாக எனக்கு ஒரு வெளிநாட்டு பத்திரிக்கை கையில் கிடைத்தது.
"டயக்னோசிஸ் துறையில் பல முயற்சிகளை மேற்கொள்ள அந்த பத்திரிகைதான் எனக்கு உத்வேகம் கொடுத்தது. வெளிநாடுகளில் மேற்கொள்ளும் பரிசோதனைத் தரத்துக்கு நம்மாலும் கொடுக்க முடியும் என நம்பிக்கை அப்போதே பிறந்தது".
உடல் நல பரிசோதனை முறைகளில் ஆரம்ப காலத்தில் எக்ஸ்ரே, இசிஜி போன்ற சாதனங்களே இருந்தன. இவற்றின் மூலம் உடலில் நோயாளி கூறும் பாதிக்கப்பட்ட இடங்களை மட்டுமே படம்பிடித்து சிகிச்சை நடக்கும். இதர இடங்களில் நோய்க்கான பாதிப்புகள் இருந்தால் அதை மீண்டும் சோதனை செய்ய வேண்டும்.
தொழில்நுட்ப வளர்ச்சியில் எக்ஸ்ரே, இசிஜி போன்ற தொழில்நுட்பங்கள் வளர்ந்திருந்தன. இப்போது போல சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ, நியூக்ளியர் ஸ்கேன் போன்ற துல்லியமான படம் பிடிக்கும் முறைகள் இல்லை. நவீன தொழில்நுட்பங்கள் மூலம் நோய்க்கான மூலம் என்ன என்பதை துல்லியமாக அறிந்து கொள்ள முடியும். இதனால் மருத்துவர்கள் விரைவாகவும் துல்லியமாகவும் சிகிச்சை மேற்கொள்ள முடியும். எனவே சென்னையில் மருத்துவத் துறையின் வளர்ச்சிக்கு ஏற்ப மருத்துவ ஆய்வுகள் துறையும் வளரும் வாய்ப்புகள் உள்ளது என்பதை அறிந்தேன்.
இதற்காக விரிவான பரிசோதனை மையத்தை 1995ல் அசோக் நகரில் 'பாரத் ஸ்கேன்ஸ்' என்கிற பெயரில் சிறிய இடத்தில் தொடங்கினேன். அதன் பிறகு அண்ணா நகர், கிண்டி, ராயப்பேட்டை என சென்னையில் நான்கு இடங்களிலும் திருவெல்வேலியிலும் பாரத் ஸ்கேன் மையங்களை தொடங்கினேன்.
’மருத்துவப் பரிசோதனை துறையில் சர்வதேச தரம்’. இதுதான் எனது இலக்கு. இங்கு இல்லாத சாதனங்களே இல்லை என்பதை உருவாக்கினேன். மருத்துவ பரிசோதனையில் ஒரு புதிய முறை வருகிறது என்றால் அதை உடனடியாக சென்னைக்குக் கொண்டு வந்து விடுவேன். இன்று இந்திய அளவில் மட்டுமல்ல, ஆசிய அளவில் மிகச் சிறந்த பரிசோதனைகூடங்களில் ஒன்றாக பாரத் ஸ்கேன்ஸ் இருக்கிறது'.
இப்படியான அதி நவீன தொழில்நுட்பங்களால் நோயின் தன்மை குறித்து மிக துல்லியமாக தகவல்களை தெரிந்து கொள்ள முடிவதால் இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து இந்த மையத்துக்கு வருகிறார்கள்.
உடலின் உள் பகுதிகளை படம் பிடிக்கும் எக்ஸ்ரே , இதயத்தை சோதனை செய்யும் இசிஜி, சிடி ஸ்கேன், பல விதமான எக்கோ (ECHO), நவீன எம்ஆர்ஐ, அல்ட்ரா, சோனாகிராம், ஆன்ஜியோகிராம் போன்ற நவீன புற மற்றும் உள் கதிர்வீச்சு கருவிகளும், பிம்ப தொழில்நுட்பங்களையும் முதன் முதலில் சென்னைக்குக் கொண்டுவந்த பெறுமை இம்மானுவேலைச் சாரும்.
தற்போது 'அக்யூரிட் ஸ்டோக் இமெஜிங்' என்கிற புதிய தொழில் நுட்பத்தை கொண்டுவந்துள்ளோம். பக்கவாத பாதிப்பை உடனே கண்டுபிடித்து ஒரு மணி நேரத்தில் குணப்படுத்திவிடும் அளவுக்கு பரிசோதனை கருவி வந்துவிட்டது. ரீனல் டோனர் ஆன்சியோ என்கிற புதிய தொழில் நுட்பம் ஆசிய அளவில் எந்த பரிசோதனைக் கூடத்திலும் இல்லை. ஹார்ட் அட்டாக் வருமா வராதா என்பதை 4.8 செகன்டில் கண்டுபிடித்துவிட முடியும். அதுபோல pet CT என்கிற தொழில்நுட்பத்தில் கேன்சர் கட்டியா இல்லையா என்பதை உடனடியாக தெரிந்து கொள்ள முடியும்.
இப்படி நோய்களின் அடிப்படைக் காரணங்களையும், தற்போதைய நிலைமையும், அதன் தீவிர தன்மையும் கண்டறிவதில் பாரத் ஸ்கேன் மக்களிடமும் , டாக்டர்களிடமும் மிகுந்த நம்பிக்கையை பெற்றுள்ளது. இதற்குக் காரணம் துல்லியம் மற்றும் தரமான சேவை என்றுதான் நினைக்கிறேன். பெரிய பெரிய விவிஐபி க்கள் வரும் அதே நேரத்தில் சாமானிய மக்களும் வரும் வகையில்தான் எங்களது கட்டணங்கள் உள்ளது.
நவீன பரிசோதனைகள் தகுந்த விலையில் கிடைக்க வேண்டும் என்பதுதான் எனது இலக்கு. இதற்கடுத்து இதே நோக்கத்தோடு அடுத்த இரண்டு ஆண்டுகளில் நவீன மருத்துவமனை தொடங்கும் முயற்சியிலும் உள்ளேன். இதற்கு அக்யூரிட் கேர் ஹாஸ்பிடல் என்றுதான் பெயர் சூட்ட உள்ளேன் என்றார்.
தென் தமிழகத்தின் குக்கிராமத்திலிருந்து தட்டுத்தடுமாறி நகரம் வந்து பல உயிர்களை காப்பாற்றும் ஆற்றல் பெறுவது சாதாரண வளர்ச்சியல்ல. மருத்துவராக மட்டுமல்லாமல் ஒரு சிறந்த தொழில்முனைவராகவும் இன்று சாதித்துள்ள டாக்டர்.இம்மானுவேலின் வளர்ச்சி அசாதாரண உழைப்புக்கு சான்றாக விளங்குகிறது.