பயணிகளுக்கு சேவை செய்யும் ரோபோக்கள்: சென்னை ஏர்போர்ட்டில் அறிமுகம்!
சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கு சேவை செய்வதற்காக இரண்டு ரோபோக்களை சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
இந்தியாவில் மும்பை, டெல்லிக்கு அடுத்தபடியாக உள்ள முக்கிய விமான நிலையமாக சென்னை அண்ணா பன்னாட்டு விமான நிலையம் உள்ளது. இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். எனவே, அவர்களின் வசதிக்காக விமான சேவைகளைத் தெரிந்து கொள்ளும் வகையில் புதிய வசதியை ஏற்பாடு செய்துள்ளது சென்னை விமான நிலையம்.
இதற்காக இரண்டு ரோபோக்கள் சோதனை முறையில் சென்னை விமான நிலையத்தில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. இந்த 2 ரோபோக்களும் பெங்களூருவில் இருந்து வாடகை அடிப்படையில் சென்னை கொண்டு வரப்பட்டுள்ளது.
விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு பாதுகாப்பு சோதனை, விமான டிக்கெட் பரிசோதனை, உடைமைகள் சோதனை செய்யும் இடங்கள், விமான நிலையம் உள்ளே சென்றதும் விமானங்கள் குறித்த தகவல்கள் போன்றவை குறித்த சந்தேகங்களைத் தீர்ப்பதற்கு இந்த ரோபோக்கள் உதவி செய்யும்.
முன்னதாக இதற்கென விமான சேவை மையம் செயல்பட்டது. ஆனால், அங்கு ஒரே இடத்தில் பயணிகள் குழுமும் சிரமம் இருந்ததால், அதற்கு மாற்றாக இந்த ரோபோ சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த இரண்டு ரோபோக்களும் 3 மாதங்கள் சோதனை அடிப்படையில் சென்னை விமான நிலையத்தில் சேவை புரியும். இந்த சோதனை முயற்சியின் வெற்றியைப் பொறுத்து இந்த சேவையை நிரந்தரப்படுத்துவது குறித்து முடிவு செய்யப்படும்.
நேற்று சுதந்திர தினவிழா என்பதால் இந்த இரண்டு ரோபோக்களும் விமான நிலையம் வந்த பயணிகளுக்கு சுதந்திர தினவிழா வாழ்த்து தெரிவித்து, இனிப்புகள் வழங்கியது. சென்னை விமான நிலைய ஆணையக இயக்குனர் சந்திரமவுலி தலைமையிலான அதிகாரிகள் இந்த சேவையைத் தொடங்கி வைத்தனர். ரோபோக்களின் சேவையைக் காண நேற்று மாணவ-மாணவிகள், குழந்தைகள் ஆகியோர் அதிகளவில் விமான நிலையம் வந்திருந்தனர்.
அவர்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள் தெரிவித்தது அந்த ரோபோக்கள். இதனால் மகிழ்ச்சி அடைந்த பயணிகள் மற்றும் குழந்தைகள் பதிலுக்கு தங்கள் வாழ்த்துக்களை ரோபோக்களுக்குத் தெரிவித்தனர்.
இது குறித்து சென்னை விமான நிலைய ஆணையக இயக்குனர் சந்திரமவுலி செய்தியாளர்களிடம் கூறுகையில்,
“தற்போது அந்த ரோபோக்களில் பயணிகளின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் விமானத்தில் செல்ல எந்த கவுண்ட்டருக்கு செல்லவேண்டும். விமான நேரங்கள், பாதுகாப்பு சோதனை, விமான டிக்கெட் பரிசோதனை நடைபெறும் இடங்கள் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்யும் பணி நடைபெறுகிறது. இன்னும் 3 நாட்களில் அந்த பணிகள் முடிவடைந்து விடும். அதன்பிறகு ரோபோக்கள் சோதனை அடிப்படையில் பயன்படுத்தப்படும்.
இந்த ரோபோக்களுக்கு பயணிகள் மத்தியில் உள்ள வரவேற்பு மற்றும் அதன் செயல்பாடுகளை பொறுத்து சென்னை உள்நாடு மற்றும் பன்னாட்டு விமான நிலையங்களில் பயணிகளுக்கு சேவை செய்ய இவை நிரந்தரமாக பயன்படுத்தப்படும்.
”இந்திய விமான நிலைய ஆணையகத்தின் கீழ் செயல்படும் விமான நிலையங்களில் முதல் முறையாக சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கு சேவை செய்ய ரோபோக்கள் பயன்படுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது” என்றார்.
மனித உருவத்தில் உள்ள இந்த ரோபோக்களை பயணிகள் ஆர்வமுடன் பார்த்துச் செல்கின்றனர். இந்த இரண்டு ரோபோக்களில் ஒன்று வருகைப் பிரிவிலும், மற்றொன்று புறப்பாடு பிரிவிலும் செயல்படுகிறது. மக்களின் மொழி வழக்கிற்கு ஏற்ப இந்த ரோபோக்களும் பதில் தரும் என்பது இதன் சிறப்பு ஆகும். அதோடு ஓரிடத்தில் நில்லாமல், தன்னிச்சையாக நகர்ந்து செல்லும் திறன் கொண்டவை இந்த ரோபோக்கள்.
பயணிகளை வரவேற்பது, அவர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பது போன்ற சேவைகளைத் தற்போது இந்த ரோபோக்கள் வழங்குகின்றன. சிலர் ரோபோக்களோடு பேசும் ஆர்வத்திலேயே தாங்களாகச் சென்று ஏதாவது கேள்விகளைக் கேட்டு ரோபோவிடம் பேசி மகிழ்கின்றனர்.