இந்தூர் ஏழை குழந்தைகளுக்கு ஓர் பொன்னான வாய்ப்பு!
குழந்தைகளின் கல்விக்காகப் பாடுபடும் தங்கப்பறவை
"எனக்கு அப்போது வயது 14. கணினி கற்க விரும்பினேன். ஆனால் என் (தனியாக) தாயால் அதற்குப் பணம் செலவிட முடியவில்லை. பல குடும்பங்கள் தமக்கு வேண்டியவற்றைப் பெற முடியாத கீழ்நிலையில் உள்ளன". அவர்களை நாம் மேல்நிலைக்குக் கொண்டு வரவேண்டும் என்பதை என் அனுபவம் எனக்குக் கற்றுக் கொடுத்தது. அதே நேரத்தில் சுவாமி விவேகானந்தார், காந்தியடிகள், பகத் சிங் ஆகியோர் குறித்த முதன்முறை வாசிப்பும், நாம் பொதுமக்களுக்காக உழைக்க வேண்டும் என்ற எண்ணத்தை என்னுள் விதைத்தது. பொருளாதார நெருக்கடியில் சிக்கிய என்னைப் போன்றவர்களின் கனவு நிறைவேறாமல் போய்விடக் கூடாது. அவர்களுக்கு உதவி புரிய வேண்டும் என்ற உறுதியை மேற் கொண்டேன். அந்த உறுதி தான் "தி கோல்டன் பேர்ட் ஃபவுண்டேஷன்" (The Golden Bird Foundation) என்ற அரசு சாரா அமைப்பைத் துவங்குவதற்கு இட்டுச் சென்றது. எமது அமைப்பு, இந்தியாவில் வறுமையில் உள்ள குழந்தைகளின் கல்விக்காகப் பாடுபடுகிறது.
ஒரு அனாதை இல்லத்திற்குச் சென்று பார்த்த போதுதான் இந்த அடிப்படையான எண்ணம் எனக்குள் உதயமானது. அனாதைகள் என்ற பெயரே, கேட்க விரும்பாத ஒன்றாக இருப்பதையும், அவர்களை நேருக்கு நேராகப் பார்க்கும் வரை அனாதை பற்றி நமக்குள் இருக்கும் கருத்துகள் உண்மையல்ல என்றும் முடிவிற்கு வந்தேன். தனிப்பட்ட முறையில் நான் அவர்களுக்கு உதவி செய்வதுடன் நின்று விடாமல் பெரிய அமைப்பை நிறுவி அதன் மூலமாக சமூகத்தில் படிக்க வசதியற்ற குழந்தைகளுக்கு விரிவான வாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும் என்று விரும்பினேன்.
தன்னலமில்லாத தொண்டு நிறுவனத்தைத் தொடங்கும் எனது லட்சியத்திற்கும் எனது யதார்த்த நிலைக்கும் இடையே மிகப்பெரிய சவால்கள் சுவராக இருந்ததை உணர்ந்தேன். தொண்டு நிறுவனம் துவக்க வேண்டும் என்று நான் நினைத்தபோது எனக்குப் பதினைந்து வயதே ஆகியிருந்தது. அந்த வயதில் அது மிகப்பெரிய விஷயம் என்று என் மனதில் உரைத்தது. தொண்டு நிறுவனத்தைச் சட்டப்படி துவக்குவதும் ஆவணப்படுத்துவதும் ஒரு கடினமான செயல் என்பதை முன்பே உணர்ந்திருந்தேன். என்னைச் சூழ்ந்திருந்த யாரும் எனது திட்டத்தை முழுமனதுடன் வரவேற்கவில்லை. ஆனால் இந்தத் தடைகள் எனது தீர்மானத்தில் எந்தச் சலனத்தையும் ஏற்படுத்த முடியவில்லை.
இரண்டாவது பிரச்சனை, தொண்டு நிறுவனம் துவக்குவதற்குத் தேவையான ஆரம்ப கட்ட நிதி. ஒரு தொண்டு நிறுவனத்தை ஆரம்பிப்பதற்குத் தேவையான பணத்தை முதலீடு செய்வதற்கு நான் வேலை செய்து சம்பாதிப்பவனாகவும் இல்லை. எனது குடும்பம், பணம் படைத்ததும் அல்ல. பதினைந்து வயதே ஆன பையன் எந்த வகையில் பணம் ஈட்ட முடியும்? வளைதள சேவை வழங்கும் டிகோனா தொழில் நிறுவனத்தில் வீட்டுக்கு வீடு சென்று விற்பனை செய்பவனாக வேலைக்குச் சேர்ந்தேன். அதுவொரு சிறிய வேலை. மக்களும் அதைப் பெரிதாக மதிக்கமாட்டார்கள். ஆனாலும் தொண்டு நிறுவனம் துவக்கும் எனது எண்ணத்தில் மாற்றம் இல்லை. சொல்லப்போனால் அந்த எண்ணத்தை நாளுக்கு நாள் வளர்த்து கொண்டுதான் வந்தேன்.
எனது கனவு நிறுவனத்திற்குப் பொருத்தமான ஆதரவு வழங்கக் கூடிய சரியான நபர்களுடன் தொடர்புகளை வளர்த்துக் கொண்டேன். அது மிகவும் நெருக்கடியான காலகட்டம் தான். எனது தொண்டு நிறுவனத்தைப் பதிவு செய்வதற்கு உதவி செய்யத் தயாராக இருந்த டெல்லி வழக்கறிஞர் ஒருவருடன் எனக்குத் தொடர்பு ஏற்பட்டது. அந்த வழக்கறிஞரைச் சந்திக்க வேண்டிய இடத்திற்கு நான் போவதும் அங்கு தங்குவதற்குமான செலவுகளை சமாளிப்பது மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் எனது சொந்த நகரமான இந்தூருக்குத் திரும்பி வந்த பிறகு எனக்கு உதவக் கூடியவர்களை ஓரளவு என்னால் கண்டுபிடித்துக் கொள்ள முடிந்தது.
இரண்டாண்டுகள் நீடித்த கடுமையான போராட்டத்திற்குப் பிறகு தொண்டு நிறுவனத்தை ஏட்டளவில் துவங்கி அதன் முதல் நடவடிக்கையை ஆரம்பித்தேன்.
- குழந்தைகளுக்கு இலவசக் கணினிப் பயிற்சி வழங்கும் கணினி கல்வித் திட்டத்தை "பரம்" (Param) வெற்றிகரமாக நடத்தினோம்.
- பெண்களை வலிமை மிக்கவர்களாக ஆக்கும் எங்களது "ஆர்யா" (AARYAA) திட்டத்தின் மூலம் பெண்கள் ஆடை தயாரிக்கவும் அவற்றை விற்பதற்கு விற்பனைக் கண்காட்சி நடத்தவும் உதவிகள் செய்தோம். அதன் மூலமாக பெண்களின் வேலையில் முன்னேற்றம் காண முடிந்தது.
- கண் பாதுகாப்பிற்கும், ரத்த தானம் செய்வதற்கும் பல்வேறு முகாம்களை நடத்தினோம். அது அவர்கள் பெற முடியாத மருத்துவ சேவையைப் பெறுவதற்கு உதவிகரமாக அமைந்தது.
- எங்களது திட்டங்களில் மிகவும் விஷேசமானது "சைக்ளோத்தான்" எனும் சைக்கிள் பேரணியாகும். சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை உருவாக்க நடத்திய சைக்கிள் பேரணி மகத்தான வெற்றி பெற்றது.
கோட்பாட்டை எளிமையாக்கிக் கொள்ளுதலே எங்களது பலம். உருவாக்கத்தை எளிமையாக வைத்துக் கொண்டு குறிப்பிட்ட இலக்கை நோக்கிய நிகழ்வுகளை அர்ப்பணிப்புடன் மிகுந்த அக்கறையுடன் நடத்தி வந்தோம். அதன் வாயிலாகத் தரமான விளைவுகளைக் காண முடிந்தது. எங்கள் முயற்சி நல்ல விளைவுகளை ஏற்படுத்த வேண்டும் என்பதால் நாங்கள் நடத்தும் நிகழ்ச்சிகள், இயக்கங்களின் போது அளிக்கப்படும் நன்கொடை மற்றும் நிதியை ஏற்றுக் கொள்வதில்லை. மிகப் பிரபலமான நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளிடமிருந்து வரும் தயாரிப்புகளை எங்களது தொண்டு நிறுவனத்தின் மூலமாக விற்பனை செய்கிறோம். ஏனென்றால் நாங்கள் அவர்களுக்கு உதவி செய்வது மட்டுமல்லாமல் முடிந்த அளவு சிறப்பான சேவையும் அவர்களுக்கு அளிக்கிறோம். எங்களது தொண்டு நிறுவனத்திற்கு எதைப் பெற விரும்புகிறோமோ அவற்றை திருப்பி அளிக்கவே நாங்கள் முயற்சிக்கிறோம்.
படங்கள் உதவி – thegoldenbirdfoundation.org
இந்தக் கட்டுரையை எழுதியவர் - ஆகாஷ் மிஸ்ரா. தி கோல்டன் ஃபவுண்டேஷன் அமைப்பின் நிறுவனர்.
(இந்தக் கட்டுரையின் நோக்கமும் வெளிப்பாடும் ஆசிரியருடையது. அவை your story இன் கருத்துக்களைப் பிரதிபலிப்பவை அல்ல)