இணைய 'கடைவீதி’ மூலம் தாய்மார்கள் வணிகம் செய்ய மேடையை அமைத்துத் தந்த இளம் தாய்!
தொழில் ரீதியாக பல கனவில் இருக்கும் பெண்களுக்கு பிரசவம் மற்றும் குழந்தை வளர்ப்பு தங்கள் வேலைக்கு சிறிய இடைவெளியாக அமைகிறது. இதனால் வீட்டில் அதிக நேரம் செலவழிக்கக் கூடிய சூழ்நிலை உருவாகிறது. இந்த சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி தொழில்முனைவராய் தாய்மார்கள் மாற ஒரு மேடையை உருவாக்கிக் கொடுத்துள்ளார் சென்னையைச் சேர்ந்த சங்கீதா அருணாசலம்.
கடைவீதி என்னும் இ-காமர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் இவர். சி.ஏ படிப்பை முடித்த இவர், தான் கர்பமாக வீட்டில் இருந்த நேரத்தில் குழந்தை வளர்ப்புப் பற்றி தெரிந்துக்கொள்ள தன் நண்பர்களுடன் சேர்ந்து துவங்கிய முகநூல் பக்கம், பின்னர் வீட்டில் இருந்தே சிறுதொழில் புரியவும், பொருட்களை விற்கவும் கடைவீதி (Kadaiveedhi) என்ற பிரத்யேக விற்பனை தள முகநூல் பக்கத்துக்கு வழிவகுத்தது.
“தாய்மை அடைந்த என் நெருங்கிய நண்பர்களுடன் ஒரு முகநூல் குழுவை உருவாக்கி குழந்தை வளர்ப்பு மற்றும் சந்தேகங்களை தீர்க்கும் பல தகவல்களை பரிமாறிக்கொண்டோம். நாளடைவில் அது சுயதொழிலுக்கு வழி செய்யும் என நினைக்கவில்லை...”
என பகிர்ந்தார் சங்கீதா. சிறு குழுவாக தொடங்கிய இந்த பக்கம் தெரிந்தவர்கள், அவரவர்கள் நண்பர்களை இணைக்க தற்பொழுது 32,000 தாய்மார்கள் கொண்ட குழுவாக வளர்ந்துள்ளது.
கடைவீதியின் தொடக்கம்:
“பிரசவத்திற்கு பிறகு வேலைக்கு செல்ல முடியாமல் குழுவில் இருந்த சில பெண்கள் வீட்டில் இருந்து சிறு தொழில் செய்யத் தொடங்கினர். அவர்கள் தாய்மை குறித்த முகநூல் பக்கத்தில் தங்கள் பொருட்களை விற்கத் துவங்கினர்...”
ஆனால் இந்த பதிவுகள் இந்த பக்கத்தின் நோக்கத்தில் இருந்து தவறியதால் பொருட்களை விற்பதற்கும் வாங்குவதற்கும் பிரத்யேகமாக மற்றொரு குழுவை துவங்கினார் சங்கீதா. ஏற்கனவே இருக்கும் குழுவினர்கள் மட்டுமே இதில் இணைந்து வியாபாரம் செய்ய இது வழிவகுத்தது. மேலும் சங்கீதா தலைமை எடுத்து இதில் எந்தவித மோசடியும் நடை பெறாமல் பார்த்துக்கொண்டார்.
“இந்த குழு மூலம் நல்ல வியாபாரம் நடக்க, இதை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் முயற்சியாக மைலாப்பூரில் 15 பெண்கள் மட்டும் இணைந்து இரண்டு நாட்களுக்கு ஓர் கண்காட்சி நடத்தினோம்...”
ஒருவருக்கு ஆயிரம் ரூபாய் முன்பதிவு என ஒரு சிறு முயற்சியாக தொடங்கிய இந்த கண்காட்சியில் இரண்டே நாளில் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை விற்பனை செய்து உள்ளனர் இந்த இளம் தாய்கள். துணிகள், உணவுகள், அணிகலன்கள் என பலவற்றை விற்றனர்.
“ஆனால் இந்த இரண்டு நாளிலும் குழந்தைகளை எங்க விடுவது என்ற சிரமம் தாய்மார்களுக்கு இருந்தது. எனவே அதை சரி செய்ய கடைவீதி முகநூல் பக்கத்தை 2015-ல் துவங்கினேன்.”
முதல் கண்காட்சி பெரும் வெற்றியை தர அதை விரிவுப்படுத்த விரும்பியது கடைவீதி குழு. அதன் பின் இரண்டாவது கண்காட்சியை நடத்தினர். அதனை தொடர்ந்து 2017-ல் 40 கடைகளைக் கொண்டு மூன்றாவது கண்காட்சியை நிறுவி கடைவீதி இணையதளத்தை வெளியிட்டார் சங்கீதா.
கடைவீதியின் வளர்ச்சி:
அம்மாக்கள் மட்டும் தங்கள் பொருட்களை விற்கக்கூடிய பிரத்தியேகமான இணயம் கடைவீதி.
“எங்கள் தளத்தில் பொருளை விற்க ஒரு வருடத்திற்கு முன்பதிவு தொகையை செலுத்த வேண்டும். மேலும் விற்பனையில் நான் 12 சதவீதம் எடுத்துக்கொள்ள மீதம் விற்பனையாளர்களுக்கு சென்று விடும்...”
பணம் செலுத்துதல், பொருட்களை வாடிக்கையாளர்களிடம் சேர்த்தல் என சகலத்தையும் சங்கீதா பார்த்துக்கொள்கிறார். இதற்குத் தேவையான தொழில்நுட்பத்தை சங்கீதாவின் நண்பர் ஜெயந்தர் பார்த்துக்கொள்கிறார். வாடிக்கையாளர்களின் கேள்விகள் மற்றும் சந்தேகங்களை தீர்க்க பிரேத்தியேக ஆப்-ஐயும் நிறுவியுள்ளனர். விற்பனையாளர்கள் இதன் மூலம் வாடிக்கையாளர்களின் சந்தேகங்களை நேரடியாக தீர்க்கலாம்.
அது மட்டுமின்றி தற்பொழுது பிரபல உணவு நிறுவனமான அடையார் ஆனந்த பவனின் உணவுகளும் இவர்களின் இணயத்தில் பட்டியல் இடப்பட்டுள்ளது.
“புதிதாக எங்கள் இணையத்தில் சேர விரும்பும் தாய்மார்களுக்கு எஸ்.பி.ஐ வங்கி மூலம் கடன் உதவி பெரும் வசதியை நாங்கள் ஏற்படுத்தித் தருகிறோம். மேலும் வணிகம் நடத்தத் தேவையான வழிமுறைகளையும் நாங்கள் எடுத்துரைக்கிறோம்,” என்கிறார் சங்கீதா.
இணையம் மூலம் இந்த பெற்றோர்கள் வணிகம் செய்தாலும் அவ்வப்போது கண்காட்சி நடத்துவதையும் நிறுத்துவதில்லை. இந்த மாதமும் கண்காட்சி ஒன்றை நடத்துகிறார் சங்கீதா. இன்னும் பல ஹோம்ப்ரூனர்களை உருவாக்கத் தயாராக உள்ளது கடைவீதி.
வலைதள முகவரி: Kadaiveedhi