அன்று +2 மாணவர்; இன்று Zoho-வில் சீனியர் லீட்: பார்த்திபன் பரமசிவனின் நம்பிக்கை வென்ற கதை!

பன்னிரண்டாம் வகுப்பு மட்டுமே படித்து, பள்ளியில் சராசரி மாணவனாக இருந்த பார்த்திபன் பரமசிவம், இன்று ஜோஹோவில் தனக்கு கீழ் சுமார் 120 பொறியாளர்களை வழி நடத்தும் சீனியர் ப்ராடக்ட் லீடாக உள்ளார். கிடைக்கும் வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டதே தனது வெற்றிக்கான சூத்திரம் என்கிறார் இவர்.

அன்று +2 மாணவர்; இன்று Zoho-வில் சீனியர் லீட்: பார்த்திபன் பரமசிவனின் நம்பிக்கை வென்ற கதை!

Tuesday April 12, 2022,

5 min Read

வாய்ப்புகள் கதவைத் தட்டும் போது அதனை சரியாகப் பயன்படுத்திக் கொள்கிறவர்கள் மட்டுமே வாழ்க்கையில் வெற்றியாளர்கள் ஆகிறார்கள். அதற்கு உதாரணமானவர்களில் ஒருவர் தான் சென்னையைச் சேர்ந்த பார்த்திபன் பரமசிவம்.

31 வயதில் பல இளைஞர்கள் இன்னமும் தங்களது எதிர்காலம் என்னவென்பதை அடையாளம் காண முடியாமல் குழப்பத்தில் உழன்று கொண்டிருக்கும் சூழலில், ஜோஹோ கார்ப்பரேஷனில் 15 வருட தொழில் அனுபவத்தோடு, தனக்கு கீழ் சுமார் 120 பொறியாளர்களை வழி நடத்தி வரும் சீனியர் லீடராக வலம் வருகிறார் இவர்.

31 வயதில் 15 வருட அனுபவமா எனக் கேட்பதற்கே ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா...

paramasivan

ஆம், பார்த்திபன், தனது பன்னிரண்டாம் வகுப்போடு கல்விக்கு குட் பை சொல்லி விட்டு, ஜோஹோ பள்ளியில் சேர்ந்த இவர், ஆறு மாதத்தில் அதே நிறுவனத்தில் வேலை வாய்ப்பையும் பெற்றார். இன்று அவருக்குக் கீழ் பல முன்னணி கல்வி நிறுவனங்களில், கல்லூரிகளில் படித்தவர்கள் ஜூனியர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.

“வேளச்சேரியில் ஒரு சராசரி கூட்டுக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன் நான். அப்பா பத்தாம் வகுப்பு மட்டுமே படித்து, ரூ.3000 சம்பளத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அம்மா குடும்பத்தலைவி. எனக்கு ஒரு அண்ணன். கூட்டுக் குடும்பம், குறைந்த வருமானம். பள்ளிக்கு சரியாக பீஸ்கூட கட்ட முடியாத நிலை. இதனால், பிரைமரியோடு மெட்ரிக் பள்ளிக்கு பைபை சொல்லி விட்டு, நானும் எனது அண்ணனும் அரசுப் பள்ளிக்கு மாற்றப்பட்டோம்.”

அப்பாவின் வருமானம் சாப்பாட்டிற்கே சரியாக இருந்ததால், எங்களால் சிறுவயது ஆசைகள் எதையும் நிறைவேற்ற முடியாத குடும்பச்சூழல். ஆசைப்பட்ட எதுவும் கிடைக்காது. பள்ளியில் சுற்றுலா செல்கிறார்கள் என்றால் அதற்குக்கூட வீட்டில் காசு கிடைக்காது.

"இப்படியான ஒரு குடும்பச் சூழலால் எங்களது எதிர்காலத்தை நாங்களே உருவாக்கிக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் எனக்கும் என் அண்ணனுக்கும் ஏற்பட்டது. அந்தச் சூழ்நிலையில்தான் Zoho-வால் எங்களது வாழ்க்கையில் பெரும் மாற்றம் ஏற்பட்டது,” என தன் ஆரம்பகால வாழ்க்கையைப் பற்றிக் கூறுகிறார் பார்த்திபன்.

வாழ்க்கையை மாற்றிய ஜோஹோ பயிற்சி

எப்படியும் தங்களால் மேற்படிப்புக்கு கல்லூரிக்கு செல்ல முடியாது என்பதை அந்த சிறுவயதிலேயே பார்த்திபனும், அவரது அண்ணனும் புரிந்து கொண்டனர். எனவே, மேலும் மேலும் பெற்றோருக்கு கல்விச் செலவு சுமையை ஏற்படுத்த அவர்கள் விரும்பவில்லை. தாங்களே ஏதேனும் பகுதிநேர வேலை பார்த்தோ அல்லது உதவித்தொகை பெற்றோ மேற்கொண்டு கல்வியைத் தொடர்வது என அவர்கள் முடிவு செய்தனர்.

“அப்படி தேடிக்கொண்டிருந்தபோதுதான், எங்களது பள்ளியில் ஜோஹோ-வில் இருந்து வந்து போட்டித்தேர்வு ஒன்றை நடத்தினார்கள். பெரும்பாலும் பள்ளிகளில் நடத்தப்படும் எந்த போட்டிகளிலும் நான் கலந்து கொள்ள மாட்டேன். அமைதியான மாணவன், சுமாராகத்தான் படிப்பேன். ஆனால் கணக்குப் பாடம் மட்டும் எனக்கு விருப்பமான ஒன்று.”

எங்கள் வீட்டில் படிப்பைப் பற்றி எதையும் கேட்க மாட்டார்கள். அதனாலேயே எதிர்காலத் திட்டம் எதுவும் இல்லை. ரெக்கார்ட் நோட் நன்றாக வரைவதால், நான் ஆர்க்கிடெக் ஆகலாம் என ஆசிரியர்கள் அறிவுரை கூறினார்கள். ஆனால் அதற்கு நன்றாக படிக்க வேண்டும், பீஸ் அதிகமாக இருக்கும் என்ற பயம் இருந்தது. எனவே அது நமக்கு செட் ஆகாது என முடிவு செய்தேன்.

அப்போதுதான், ’ஜோஹோ ஸ்கூல் ஸ்காலர்ஷிப் டெஸ்ட்’ வைத்தார்கள். ஏதாவது உதவி கிடைக்கும் என்பதாலேயே இந்த டெஸ்ட்டில் கலந்து கொண்டேன். பள்ளியிலேயே டாப்பராக வந்தேன். கம்யூட்டர் என்றாலே என்னவென்று தெரியாது. வீட்டிலும் கம்யூட்டர் கிடையாது. வீடியோ கேம் தவிர கம்யூட்டர் பற்றி ஒன்றுமே தெரியாது. ஆனால் கணக்கு மீது எனக்கு இருந்த ஆர்வம் தான் ஜோஹோ-வில் என்னைச் சேர வைத்தது. ஆனால் இங்கு வந்தபிறகு அந்த கணக்குதான் எனக்கு பெரிய பலமாகவே இருந்தது,” என்கிறார் பார்த்திபன்.

ஜோஹோ

பன்னிரண்டாம் வகுப்பு மட்டுமே முடித்திருந்த பார்த்திபனை ஜோஹோ பள்ளியில் சேர அவரது குடும்பமும், சுற்றமும் அவ்வளவு சுலபமாக சம்மதிக்கவில்லை. பள்ளிக்குப் பிறகு கல்லூரி சேர்ந்தால் மட்டுமே எதிர்காலத்தில் வேலை கிடைக்கும் என்ற சமூகத்தின் டிசைனை வாதமாக பார்த்திபன் முன்னிலையில் வைத்தனர் அவர்கள். ஆனால் அவர்களது அவநம்பிக்கைகளை உடைத்து, தனக்குக் கிடைத்த நல்வாய்ப்பாக ஜோஹோ பள்ளியில் பார்த்தார் பார்த்திபன்.

“எங்களது எதிர்காலத்தை நினைத்து பெற்றோருக்கு பயம் அதிகமாக இருந்தது. உண்மையில் எங்களுக்கும் அந்த பயம் இருந்தது. ஆனால் எங்கள் மீது அவர்களுக்கு நம்பிக்கை இருந்தது. நாங்கள் எடுக்கும் முடிவு சரியானதாக இருக்கும் என அவர்கள் நம்பினார்கள். ஜோஹோ பள்ளியில் சேர்ந்த போது, அவர்கள் தொழில் அறிவோடு மாத உதவித்தொகையும் அளித்தனர். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் மாதம் ஆயிரம் ரூபாய் கிடைத்தது பெரிய விசயமாக இருந்தது.”

அப்பள்ளியில் நிலவிய சூழல் எனக்கு நம்பிக்கையை அதிகரித்தது. பெரிய கல்லூரியில் வேலை பார்த்த விரிவுரையாளர்கள், போன்ற பலர் ஜோஹோ பள்ளியில் ஆசிரியர்களாக இருந்தார்கள். யாருமே தான் ஒரு ஆசிரியர் என்ற மனப்பாங்குடன் இல்லாமல் கற்றுக் கொடுப்பதில் ஆர்வம் உள்ளவர்கள். அதுதான் எங்களது பலமே. இதனாலேயே தயக்கம் உடைந்து எல்லோரிடமும் சகஜமாக பழக என்னால் முடிந்தது,” என்கிறார்.

பள்ளியில் இருந்து வேலைவாய்ப்பு

ஜோஹோ பள்ளியில் சேர்ந்த ஆறு மாதத்தில் ஜோஹோ கார்ப்பரேஷனில் இருந்து நேர்காணல் நடத்தியுள்ளனர். அதில் முதல் ரவுண்டிலேயே தேர்வான பார்த்திபன், அங்கு முழுநேர ஊழியராகி மாதச்சம்பளம் பெறும் நிலைக்கு உயர்ந்ததும் தனது நம்பிக்கையின் எல்லை மேலும் விரிவடைந்ததாக கூறுகிறார் பார்த்திபன்.

“ஜோஹோவின் Manage Engine-இல் அப்படித்தான் நான் உள்ளே வந்தேன். முதலில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பற்றிய டூல் ஒன்றை செய்யச் சொன்னார்கள். பள்ளியில் கற்றுக் கொண்டதை புராஜெக்ட்டாக செய்யும் போது தடங்கல்கள் இருக்கத்தான் செய்தது. எனது மெண்டர் எனக்கு நன்றாக உதவி செய்தார். ஆனால் ஜோஹோவில் யாரிடமும் யாரும் ஆலோசனை செய்யலாம், உதவி கேட்கலாம். அவர்களது வேலை பாதிக்காதவாறு நாம் உதவிகள் கேட்கலாம். கிடைத்த சந்தர்ப்பத்தில் எல்லாம் எனக்குக் கிடைத்த வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டேன். மூன்று, நான்கு மாதங்களில் அந்த டூலை வெற்றிகரமாகச் செய்து முடித்தேன்.”

அடுத்ததாக ஒரு புராடெக்ட் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. டூலையும் வைத்திருந்தேன், புராடெக்ட்டும் செய்தேன். ஆக்டிவ் டைரக்டரி என்பது எங்களது டொமைன். இப்போது அது வெற்றிகரமான ஒன்றாக இயங்கி வருகிறது. ஒரு புராடெக்டில் ஆரம்பித்து, இப்போது ஆறு புராடெக்டுகளில் உள்ளேன். ஒரு புராடெக்ட் முடிய முடிய அடுத்தது வர ஆரம்பித்தது. எல்லாமே ஆரம்ப கட்டத்தில் இருந்து செய்வதால், இப்போது என் கைவசம் ஆறு புராடெக்டுகள் உள்ளன.

“20 வருடமாக உள்ள மேனேஜ் இஞ்சினில் நான் 15 வருடமாக உள்ளேன். இதில் ஆறு புராடெக்டுகள் செய்துள்ளேன்,” என்கிறார்.

தொழில் நிமித்தமாக நிறைய வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கிறார் பார்த்திபன். 12ம் வகுப்பு முடித்த மாணவர், அமெரிக்கா விசா பெற்று அங்கு சென்று வாடிக்கையாளரை நேரடியாகச் சந்தித்து பேச முடிகிறது என்றால், அது ஜோஹோ கொடுத்த அடித்தளம் தான் என்கிறார். 

“நான் எப்படி வளர்ந்தேனோ அதே போலத்தான் எனக்குக் கீழே இருப்பவர்களையும் வளர்த்துவிட நினைப்பேன். எனக்குக் கிடைத்த வாய்ப்புகளை எப்போதுமே நான் தவற விட்டது கிடையாது. எனது டீமில் உள்ளவர்களுக்கு நான் எப்போதுமே கூறும் அறிவுரை இதுதான். வாழ்க்கையில் வாய்ப்புகள் எப்போதாவதுதான் நமக்கு கிடைக்கும். அப்போது அதனைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் அந்த வாய்ப்புக்காக நமக்கு பின்னே ஆயிரம் பேர் காத்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் அதனைச் சரியாக பயன்படுத்தி, நம்மைத் தாண்டி முன்னேறி போய்க் கொண்டே இருப்பார்கள்.”
parthiban

வாழ்க்கையில் ஏற்றம் பெற பார்த்திபன் சொல்லும் வழிகள்

எடுத்தவுடனேயே நோ சொல்லிப் பழகாதீர்கள். அந்த வாய்ப்பைப் பயன்படுத்த முயற்சி செய்யுங்கள். அதில் தோல்வி அடைந்தால் பரவாயில்லை. ஆனால் முயற்சியே செய்து பார்க்காமல் இருக்காதீர்கள்.

“எப்போதுமே எனக்குக் கிடைத்த வாய்ப்புகளை நான் தவற விட்டதே இல்லை. அதனால்தான் இன்று இந்த நிலைக்கு உயர்ந்திருக்கிறேன்,” என தன் வெற்றிக்கான சூத்திரத்தை பகிர்கிறார் பார்த்திபன்.

பார்த்திபனின் கீழே தற்போது 120க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் உள்ளனர். இதில் குறிப்பிடத்தக்க விசயம் என்னவென்றால், அவருடன் பள்ளியில் படித்து, அதனைத் தொடர்ந்து சிறந்த கல்லூரிக்குச் சென்று பட்டப்படிப்பு முடித்த அவரது நண்பர்களே இப்போது அவரது குழுவில் பணிபுரிகின்றனர்.

“எனது கடின உழைப்பும் எனது உயர்வுக்கான மற்றொரு முக்கியக் காரணம். ஒரு வேலையை ஆரம்பித்து விட்டால் நேரமே பார்க்க மாட்டேன். இரவு பகல் பார்க்காமல் உழைக்கிறேன். ஒவ்வொரு விசயத்திலும் புதுப்புது விசயங்களைக் கற்றுக் கொள்கிறேன்,” என்கிறார் பார்த்திபன்.

எந்தப் பள்ளியில் அதிர்ந்துகூட பேசியதில்லையோ, அதே பள்ளியில் அடுத்த ஆண்டே காலை பிரேயரில் சென்று மாணவர்கள் மத்தியில் பேசி அசத்தியுள்ளார் பார்த்திபன். ஆசிரியர்களே அவரைப் பார்த்து ஆச்சர்யப்பட்டுப் போனதாக பார்த்திபன் கூறுகிறார். இப்போது அவரை முன்னுதாரணமாக வைத்து அவரது பள்ளி மாணவர்கள் பலர் ஜோஹோ-வில் சேர ஆர்வம் காட்டுகின்றனராம்.

“ஆங்கில வழிக் கல்வியில், அதிக கட்டணம் கட்டி படித்தால் மட்டுமே வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு செல்ல முடியும் என்ற பிம்பம் உடைய வேண்டும். நம்மைச் சுற்றி நிறைய பிரச்சினைகள் இருக்கிறது. அதற்குத் தீர்வுகள் கண்டுபிடிக்கும் ப்ராஜெக்ட்களை மாணவர்களை செய்ய வையுங்கள். பிராக்டிகலாக வாழ கற்றுக் கொடுங்கள். சுயமாக சிந்திக்கும் திறனை வளர்க்க வேண்டும். அப்படி செய்தால் சுலபமாக ஐடி துறையில் சாதிக்க முடியும்,” இதுதான் பள்ளி மாணவர்களுக்கு பார்த்திபன் தரும் அறிவுரை ஆகும்.