கட்டுமானப் பணியை விட்டு விலகி விலங்குகளைப் பராமரிக்க காப்பகம் நடத்தி வரும் நபர்!
ஐம்பத்தி ஏழு வயதான ட்செரிங் டோர்ஜி கைவிடப்பட்ட விலங்குகளையும் இறைச்சிக்காக கொல்லப்படும் விலங்குகளையும் பாதுகாக்கிறார். கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்த ட்செரிங் டோர்ஜி விலங்குகள் பாதுகாவலராக மாறிய பயணம் குறித்து Reach Ladakh உடன் பகிர்ந்துகொள்கையில்,
”நான் பாஸ்கோ கிராமத்தில் வாகனத்திற்காக காத்திருந்தபோது சில மினி ட்ரக்குகள் விலங்குகளை ஏற்றிக்கொண்டு செல்வதைப் பார்த்தேன். அருகில் இருந்த கடைக்காரரிடம் விசாரித்தபோது அந்த விலங்குகளை இறைச்சிக்காக கொல்வதற்கு கார்கிலுக்கு எடுத்து செல்வதாகத் தெரிவித்தத்தைக் கேட்டு அதிர்ந்துபோனேன். தினமும் 8 முதல் 12 மினி ட்ரக்குகள் விலங்குகளை ஏற்றிச் செல்லும் என்றார்.
அவர் மேலும் கூறுகையில்,
”அந்த விலங்குகளை எப்படி காப்பாற்றலாம் என யோசித்தேன். விலங்குகளை பராமரிக்குமாறு மக்களிடம் ஆலோசனை வழங்கவோ வற்புறுத்தவோ முடியாது. உயிரினங்கள் மீது நாம் கருணையுடன் நடந்துகொள்ளவேண்டும்,” என்றார்.
எனவே 2013-ம் ஆண்டு டோர்ஜி தனது பணியை விட்டு விலகி லடாக் அருகே இருக்கும் தரு என்கிற அவரது கிராமத்தில் விலங்குகள் காப்பகத்தைத் துவங்கினார். தற்போது இங்கு ஆடுகள், மாடுகள், கழுதைகள், கலப்பின மாடுகள் என எழுபதுக்கும் மேற்பட்ட விலங்குகள் உள்ளன.
கோடைக்காலங்களில் விலங்குகள் மேயும் பகுதிகளுக்கு டோர்ஜி விலங்குகளை அழைத்துச் செல்வார் என ’ஸ்டேட் டைம்ஸ்’ குறிப்பிடுகிறது. விலங்குகள் மீது இவர் கருணை காட்டுவதைக் கண்ட கிராம மக்கள் இவரது கோரிக்கைப்படி விலங்குகளுக்கு இருப்பிடம் கட்ட ஒரு சிறு பகுதியை நன்கொடையாக வழங்கினார்கள்.
அருகாமையில் இருந்த கிராமம் ஒன்றில் கலப்பின மாடு ஒன்றை இறைச்சிக்காக கிராமவாசி ஒருவர் விற்பனை செய்ய இருந்தார். அதைக் கண்ட டோர்ஜி உடனடியாக அவரைத் தடுத்து அந்த விலங்கை வாங்கி காப்பத்தில் கொண்டு சேர்த்த சம்பவத்தை நினைவுகூர்ந்தார்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு லைகர், பாஸ்கோ, ஸ்பிடுக், ஆல்சி, கோக்லம்சார், மார்ட்செலாங் போன்ற அருகிலிருந்த கிராமத்தைச் சேர்ந்தவர்களும் விலங்குகளை இவரது காப்பகத்திற்கு கொண்டு வரத் துவங்கினார். விலங்குகள் மீது அன்பு காட்டுவது குறித்து டார்ஜே குறிப்பிடுகையில்,
”எங்களது முன்னோர்கள் ஏழைகளாக இருந்தபோதும் விலங்குகளை சிறப்பாக பராமரித்தனர். இன்று லடாக் பல விதங்களில் வளர்ச்சியடைந்துள்ளது. எனவே மக்கள் விலங்குகளை பராமரிக்க முயற்சி எடுக்கவேண்டும்,: என்றார்.
தனது கிராமத்தைச் சேர்ந்தவர்கள் உதவினாலும் சில சிக்கல்களை சந்திப்பதாக டோர்ஜி தெரிவித்தார். அவர் கூறுகையில், ”சில சமயம் மக்கள் கட்டாயப்படுத்தி அவர்களது விலங்குகளை காப்பகத்தில் விட்டுச் செல்கின்றனர். அவர்களிடம் என்னால் மறுப்பு தெரிவிக்க முடியவில்லை,” என்றார்.
எனினும் காப்பகத்தை பராமரிப்பது மிகப்பெரிய சவாலாக இருப்பதாக டோர்ஜி தெரிவித்தார். இந்த பிரச்சனையை சமாளிக்க அவரது கிராமத்தினர் அவருடன் இணைந்துகொண்டனர். கடந்த ஆண்டு 'Taru Gayphel Tsogspa Animal Welfare Society’ உருவாக்கப்பட்டது. தற்போது இந்த சங்கத்தில் 15 உறுப்பினர்கள் உள்ளனர்.
விலங்குகளின் காப்பகத்தைப் பராமரிப்பதில் டோர்ஜி நிதி சார்ந்த சவால்களையும் சந்தித்து வருகிறார்.
கடந்த ஆண்டு ஒரு ஊழியரை நியமிக்கவேண்டியிருந்தது. அவர் பராமரிப்புப் பணிகளை கவனித்துக் கொள்வதால் அவருக்கு டோர்ஜி தனது சொந்த செலவில் இருந்து 12,000 ரூபாய் கொடுக்கவேண்டிய சூழல் உள்ளது. எனவே வருங்காலத்தில் விலங்குகளை பராமரிப்பதற்காக ஒரு விலங்கிற்கு 5,000 ரூபாய் வீதம் கட்டணம் வசூலிக்க திட்டமிட்டுள்ளார். Reach Ladakh உடனான உரையாடலில் டார்ஜே தெரிவிக்கையில்,
விலங்குகளைக் கொடுமைப்படுத்துவதைப் பார்ப்பது கவலையளிக்கிறது. சாலையில் திரியும் விலங்குகள் செல்வதற்கு இடமில்லை. லே பகுதியைச் சுற்றியுள்ள இடங்களில் யாரும் விலங்குகளை வளர்ப்பதில்லை. பல கழுதைகளும் எருதுகளும் பராமரிப்பின்றி விடப்பட்டுள்ளது. விலங்குகளை பராமரிக்க விருப்பம் இருப்பவர்கள் வரவேற்கப்படுகின்றனர். அத்துடன் மக்கள் நன்கொடையும் விலங்குகளுக்கு உணவும் வழங்கலாம்,” என்றார்.
கட்டுரை : THINK CHANGE INDIA