Prime, Zee5, MxPlayer-ல் நீங்க பார்க்கக்கூடிய 8 தமிழ் வெப் சீரிஸ்!
கொரோனாவை வெல்ல சமூகத்திலிருந்து விலகி வீட்டிலேயே இருக்கும் நிலையில், அமேசான் ப்ரைம், ஜீ, எம்எக்ஸ் பிளேயரில் கொட்டிக் கிடக்கும் தமிழ் வெப் சீரிஸ்-ல் இவற்றை பார்க்கலாம்.
கொரோனாவை வெல்வதற்கு மிகச் சிறந்த - மிக எளிதான வழிகளில் ஒன்று, சமூகத்திலிருந்து சற்றே விலகி வீட்டிலேயே இருப்பதுதான்.
வீட்டிலிருந்தபடியே வேலைகள் செய்யத் தொடங்கிவிட்டோம். நம் அன்றாட வாழ்க்கையில் சினிமாவுக்குச் செல்வது, மாலுக்குப் போவது, பூங்காவிற்குப் போவது என பற்பலப் பொழுதுபோக்குகள் இடம்பெற்றிருக்கும்.
ஆனால், இந்த 'ஸ்டே ஹோம்' சீசனில் பொழுதுபோக்கும் வீட்டில் இருந்தபடியே என்பதை ஏற்றுத்தான் ஆகவேண்டும். குழந்தைகளுடன் வீட்டுக்குள் விளையாடுவது, நல்ல புத்தகங்கள் வாசிப்பது போன்ற ஆரோக்கியமான பழக்கங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தும் பொழுதுபோக்க நேரம் எஞ்சியிருந்தால் என்ன செய்யலாம்?
இதோ இருக்கவே இருக்கிறது ஓ.டி.டி ப்ளாட்ஃபார்ம்ஸ். இதில், இப்போது தமிழ் வெப் சீரிஸுகள் தடம்பதிக்க ஆரம்பித்துள்ளன.
இப்போதைக்கு கவனத்துக்குரிய 8 வெப் சீரிஸின் அறிமுகம் இதோ உங்களுக்காக...
டாப்லெஸ்
ட்ரெய்லரிலேயே மிகுந்த கவனம் ஈர்த்த தமிழ் வெப்சீரிஸ் 'டாப்லெஸ்'. அந்தப் பெயின்டிங்ல என்னதான் இருக்குன்னு ஆர்வத்தை அடக்க முடியாத தூண்டுதலைக் கொடுத்தது அந்த ட்ரெய்லர். 'ஆரண்ய காண்டம்', 'ஜிகர்தண்டா', ஜோக்கர்' மூலம் நடிப்பாற்றலையும் தனித்துவத்தையும் வெளிப்படுத்திய குரு சோமசுந்தரம் நடித்துள்ள முதல் வெப்சீரிஸ் இது.
'டாப்லெஸ்'ஸும் தேடல் நோக்கிய பயணம்தான். ஒரு பெயின்ட்டிங் தேடப்படுகிறது. தேடுவோர்தான் விதவிதமான ஆள்கள். இந்தத் தேடல் த்ரில்லரும் காமெடியும் ட்விஸ்டுகளும் நிறைந்தவைதான். எனினும் பெண்கள், திருட்டு, கேங்ஸ்டர்கள், தாதாக்கள் என பலரையும் டீல் செய்கிறது. குறிப்பாக, ஆண்களின் அபத்தங்களை ஆங்காங்கே தூவிச் செல்கிறது. எந்த எதிர்பார்ப்புமின்றி இந்த சீரிஸ் பார்க்க வருவோரும் எங்கேஜிங்காக இருக்கலாம்.
டாப்லெஸ் (Topless) | இயக்கம்: தினேஷ் மோகன் | ZEE5
கண்ணாமூச்சி
காணாமல்போன தன் ஐந்து வயது பெண் குழந்தையைத் தேடும் சிங்கிள் மதர் ஒருவரின் தேடல்தான் களம். ஐஷுவுக்கு என்ன ஆச்சு? அவளைத் தேடும் அவளது அம்மா ப்ரியாவுக்குதான் என்ன ஆச்சு? - இப்படி பல கேள்விகளுடன் அலையவைக்கும் திரைக்கதை.
சைக்கலாஜிக்கல் த்ரில்லிங் அனுபவத்தைத் தர முயற்சிக்கும் கண்ணாமூச்சி ஆட்டம்தான், தமிழில் சமீபத்தில் வெளிவந்துள்ள 'கண்ணாமூச்சி' வெப்சீரிஸ். நடிகை பூர்ணாதான் ப்ரொட்டாகனிஸ்ட். தோற்றமும் நடிப்பும் கச்சிதமாக இருக்கிறது.
சில தேடல்கள் ஆச்சரியங்கள் தரலாம்; சில தேடல்கள் ஏமாற்றத்தைத் தரலாம்; ஆனாலும், தேடலுக்கு ஏதோ ஒரு பலன் உண்டு. இது, த்ரில்லர் அனுபவத் தேடலுடன் 'கண்ணாமூச்சி'யை நாடுவோருக்கும் பொருந்தக் கூடும்.
கண்ணாமூச்சி (Kannamoochi) | இயக்கம்: Avinaash Hariharan | ZEE5
குயின்
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு அல்ல... ஆனால், அவர் வாழ்க்கை வரலாற்றை ஒட்டிய புனைவுதான் 'குயின்' சீரிஸ் என்பது சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பது இல்லை. தமிழ்ச் சூழலில் ரொம்பவே பிரபலமான வெப் சீரிஸ் இதுதான். வெப் சீரிஸ் என்றாலே கொலை - குற்றம் - செக்ஸ் - த்ரில்லர் - ஹாரர் வகையறாக்கள்தான் மலிந்துள்ளன. இதற்கான டிமாண்டும் அதிகம்தான். இந்த ட்ரெண்டின் போக்கை தமிழிலும் காணலாம். அதிலிருந்து சற்றே விலகி, புருவத்தை உயர்த்திய மிகச் சில வெப் சீரிஸில் குயினும் ஒன்று.
நம்மில் பலருக்கும் தெரிந்தவற்றை தவிர்த்துவிட்டு, பள்ளி மாணவி முதல் அரசியலுக்கு அடியெடுத்து வரையிலான கதையைக் குயின் சீசன் 1-ல் காட்சிப்படுத்தியிருப்பது சிறப்பு. கெளதம் மேனன் - பிரசாந்த் முருகேசன் இயக்கத்தில் ரம்யா கிருஷ்ணன், இந்திரஜித், அஞ்சனா, அனிகா, வம்சி கிருஷ்ணா ஆகியோரின் நடிப்பும் வலுகூட்டியிருக்கும். நமக்கு நன்கு தெரிந்த ஒருவரின் வாழ்க்கையின் ஆரம்ப அத்தியாயங்களை புனைவாகப் பார்க்கும் நல்ல திரை அனுபவம் நிச்சயம் கிடைக்கக் கூடும்.
குயின் (Queen) | இயக்கம்: கெளதம் மேனன் - பிரசாந்த் முருகேசன் | MX Player
ஆட்டோ சங்கர்
தமிழகத்தில் தூக்கிலிடப்பட்ட குற்றவாளி ஆட்டோ சங்கர். 80ஸ், 90ஸ் கிட்ஸ்களுக்கு இந்த நிழலுலக ரவுடி மிகவும் பரிச்சயம். ஆனால், 2கே கிட்ஸ்களுக்கு அவ்வளவாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. விஜயகாந்த் நடித்த 'புலன் விசாரணை' படத்தில் வரும் ஆனந்தராஜ் கதாபாத்திரம் ஓரளவு ஆட்டோ சங்கரை பிரதிபலிக்கும். முழுக்க முழுக்க ஆட்டோ சங்கரை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள தமிழ் வெப்சீரிஸ்தான் 'ஆட்டோ சங்கர்'.
க்ரைம் த்ரில்லர் வகை வெப் சீரிஸ்களுக்கே உருவான பக்கா மெட்டீரியல்தான் இந்த ஆட்டோ சங்கர் நிஜக் கதாபாத்திரம். ஆட்டோ சங்கரின் வாழ்க்கை வரலாற்றைத் துல்லியமாக அறிந்தவர்களுக்கு வேண்டுமானால், இந்த வெப் சீரிஸ் கொஞ்சம் அதிருப்தியைத் தரலாம். ஆனால், வெப் சீரிஸ் பார்க்கும் பழக்கத்தைத் தொடங்கும் வழக்கமான சினிமா ரசிகர்கள், இந்த சிரீஸிலிருந்தே தங்களது வேட்டையைத் தொடங்கலாம். அந்த அளவுக்கு நல்ல எங்கேஜிங்கான மேக்கிங். ரங்கா இயக்கத்தில் அப்பானி சரத் தன் உடல்மொழியாலும் நடிப்பாற்றலாலும் ஆட்டோ சங்கரை தூக்கிப் பிடித்திருப்பார்.
ஆட்டோ சங்கர் (Auto Shankar) | இயக்கம்: ரங்கா | ZEE5
இரு துருவம்
"த்ரில்லருக்கும் திருக்குறளுக்கும் என்ன சார் சம்பந்தம்?"
- பிகில் பாணியில் கதறினாலும் தப்பில்லை. ஆனால், சம்பந்தப்படுத்தியிருக்கிறார்கள் 'இரு துருவம்' என்னும் தமிழ் வெப் சீரிஸில். தன் மனைவியைத் தேடும் இறுக்கமான போலீஸ் அதிகாரி... கோரத்தனம் காட்டி கொலைகள் செய்யும் சைக்கோபாத்... இவ்விரு துருவமும்தான் கதையும் திரைக்கதையும். நந்தாவும் அபிராமியும் லீட் கேரக்டர்ஸ். சைக்கோபாத் கில்லராக செபஸ்டின் ஆன்டனி நடித்திருக்கிறார்.
திருக்குறள்களைப் பயன்படுத்தி சைக்கோ த்ரில்லர் திரைக்கதை அமைத்திருப்பது சுவாரசியமானது. விறுவிறு திரைக்கதையும், அடர்த்தியான சஸ்பென்ஸும் நிச்சயம் செம்ம அனுபவம் தரலாம். சைக்கோபாத் - க்ரைம் - த்ரில்லர்களைத் தாண்டி, ரத்தம் தெறிக்கவிடுப்பவதை பார்ப்பதற்கு கொஞ்சம் கடினமான மனம் தேவை.
போலீஸுக்கும் சைக்கோவுக்கும் இடையே நடக்கும் பரமபத விளையாட்டு நிச்சயம் வியப்பூட்டும். அடுத்த சீசனுக்கு நம்மைத் தயார் செய்யும் அளவுக்கு இந்த சீசனில் சிறப்புச் செய்திருக்கிறார் இயக்குநர் எம்.குமரன். தமிழில் பரித்துரைக்கத்தக்க வெப் சீரிஸ்களில் இரு துருவத்துக்கு நிச்சயம் இடம் உண்டு.
இரு துருவம் (Iru Dhuruvam) | எம்.குமரன் | MX Player
ஃபிங்கர்டிப்
ரத்தமும் சதையுமாக வெப் சீரிஸ்களில் க்ரைம் த்ரில்லர்களைப் பார்த்துப் பார்த்து சற்றே சலித்துப்போனவர்களுக்கு ஆறுதல்களில் ஒன்று... ஃபின்கர்டிப். ஆனாலும், இதுகூட குற்றம் சார்ந்ததுதான். ஆனாலும் எமோஷன்களை உள்ளடக்கிய டெக்னோ குற்றங்கள்தான் மையம். தமிழில் டெக்னாலஜி குற்றங்களை மையப்படுத்திய வெவ்வேறு கதைகளைச் சொல்லும் ஆந்த்தாலஜி வகை வெப் சீரிஸ்தான் 'ஃபிங்கர்டிப்'.
ஒவ்வொரு கதையும் மற்றொரு கதையுடன் பின்னப்பட்டு, டெக்னோ குற்றங்களுடன் கூடிய துரோகம், காமம், பழிவாங்கல், கோபம் என பல உணர்வுகளை உள்ளடக்கியது. அக்ஷரா ஹாசன், சுனைனா, காயத்ரி, மதுசூதனன் முதலானோர் கச்சிதமாக தங்களது பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள். ஸ்மார்ட்போன்கள் - சமூக வலைதளங்கள் சூழ்ந்த தற்கால மனித வாழ்க்கையின் இருட்டுப் பக்கங்களைச் சொல்லி உஷார்படுத்தும் வகையில் மிக முக்கிய இடம்பிடிக்கிறது ஃபிங்கர்டிப். தமிழில் சிறந்த வெப் சீரிஸில் இதுவும் ஒன்று. எனவே தவறவிடக்கூடாது.
ஃபிங்கர்டிப் (Fingertip) | இயக்கம்: எஸ்.ஷிவாகர் | ZEE5
வெள்ள ராஜா
தமிழில் சென்னையை மையமாகக் கொண்ட கேங்ஸ்டர், க்ரைம் வகைப் படங்களில் ஹிட்டானவற்றை அப்படியே ஒரு மிக்ஸியில் போட்டு அறைத்து, புத்தம்புது பாத்திரத்தில் ஊற்றிக் கொடுத்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இருக்கிறது 'வெள்ள ராஜா' வெப் சீரிஸ். பாபி சிம்ஹா அடியெடுத்துவைத்த வெப் சீரிஸ் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது உண்மைதான். ஆனால், பலருக்கும் புதிதாக எதுவும் இல்லையே என்ற ஏமாற்றம் ஏற்பட்டதை மறுக்க முடியாது.
எனினும், வெப் சீரிஸ் பார்க்கத் தொடங்குவோருக்கும், அதிகளவில் மாஃபியா பின்னணி படங்களைப் பார்க்காதோருக்கும் இது நல்லதொரு தொடக்கம்தான். குறிப்பாக, டெக்னிக்கலாகவும் பின்னணி இசையிலும் மிகவும் ஸ்ட்ராங்கான தமிழ் வெப் சீரிஸ். பெரிதாக எதிர்பார்ப்பு இல்லாதோரின் எங்கேஜிங் செய்யக் கூடிய வகையில்தான் இருக்கும். இது, அமேஸான் ப்ரைமின் நேரடி முதல் தமிழ் வெப் சீரிஸ் என்பதும் கவனத்துக்குரியது.
வெள்ள ராஜா (Vella Raja) | இயக்கம்: குகன் சென்னியப்பன் | Amazon Prime Video
கள்ளச்சிரிப்பு
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரித்த முதல் வெப் சீரிஸ் 'கள்ளச்சிரிப்பு'. தமிழ் படைப்புலகில் சில விஷயங்களைத் தொடுவதே பெரிய விஷயமாக இருக்கும். அப்படியான ஒன்றுதான் கள்ளச்சிரிப்பும். இந்த வெப் சீரிஸ் சொல்லும் கதையும், காட்டும் கதைக்களமும், வலம் வரும் கதாபாத்திரங்களும் புதிய பாய்ச்சல்தான். த்ரில்லர் என்றாலும் நம் சமூகம் - குடும்ப அமைப்புகளில் பேசத் தயங்கும் விஷயங்களை சிறப்பாக டீல் செய்கிறது.
அம்ருதாவின் பாத்திரைப் படைப்பு வேற லெவல். அவரது பங்களிப்பும் நடிப்பாற்றலும், தமிழ் சினிமா ஏன் இவரை இன்னும் சரியாகப் பயன்படுத்தவில்லை என்ற கேள்வியை எழுப்பலாம். அவருக்காகவே இந்த மொத்த சீசனையும் பார்க்கலாம் என்று சொல்லும் ரசிகர்களும் உண்டு. இந்தத் தொகுப்பின் கடைசியில் இடம்பெற்றிந்தாலும், கள்ளச்சிரிப்பில் இருந்தே உங்கள் வெப் சீரிஸ் வேட்டையாட்டத்தைத் தொடங்கினாலும் தகும்.
கள்ளச்சிரிப்பு (Kallachirippu) | இயக்கம்: ரோஹித் நந்தகுமார் | ZEE5
உங்களுக்கு விருப்பமான வெப் சீரிஸ்களை கமெண்ட் பகுதியில் பதிந்து, நம் வாசகர் வட்டத்துக்கு துணைபுரியலாமே..!
- ப்ரியன்