'பாத்ரூம் கழுவினேன், மெக்கானிக் வேலை பார்த்தேன்’ - நடிகர் அப்பாஸ் சினிமாவில் வீழ்ச்சிக்குப் பின் என்ன ஆனார்?
ஒரே படத்தில் உச்சம் தொட்ட நடிகர் அப்பாஸ் தனது திரைத்துறை வீழ்ச்சிக்குப் பின் பல இன்னல்களைக் கடந்து தன் வாழ்க்கையை மீட்டெடுத்து முன்னுதாரணமாகத் திகழ்கிறார்.
தமிழில் 90-களின் இறுதியில் இளம் ரசிகர்களின் கனவு நாயகனாக வலம் வந்தவர் நடிகர் அப்பாஸ். ஒருபக்கம் பெண் ரசிகர்கள் அதிகம்; இன்னொரு பக்கம் நண்பர்களைக் கலாய்ப்பதற்கு ‘மனசுல பெரிய அப்பாஸ்னு நினைப்பு’ என்று அனிச்சையாக மேற்கோள் காட்டும் ஆண் ரசிகர்கள். அந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்திய நடிகர் அப்பாஸின் திரையுலக வாழ்க்கை கொடுத்த அனுபவம் மிகவும் மோசமானதுதான்.
மேற்கு வங்கத்தைப் பூர்விமாகக் கொண்ட கலைப் பின்னணி கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர் அப்பாஸ். தாத்தா ஃபரூக் மிஸ்ரா ஒரு நடிகர். அவரது குடும்ப உறவினர்தான் பிரபல நடிகர் ஃபெரோஸ் கான். பெங்களூருவில் கல்லூரிக் காலத்தில் மாடலிங்கில் நுழைந்த அப்பாஸ், இயக்குநர் கதிரின் ஆடிஷனில் 1996-ல் கலந்துகொண்டு ‘காதல் தேசம்’ படத்தின் ஹீரோ ஆனார்.
அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆக, தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் மட்டுமின்றி, பாலிவுட்டிலும் கவனம் பெற்று, ஒரே படத்தில் தேச அளவில் சினிமா ரசிகர்களால் அறியப்பட்டவர் ஆனார். தொடர்ச்சியாக படங்கள் புக் ஆக, பிஸி ஷெட்யூல் காரணமாக ‘ஜீன்ஸ்’, காதலுக்கு மரியாதை’ போன்ற வெற்றிப் படங்களைத் தவறவிட்டார்.
எனினும், அந்தக் காலக்கட்டத்தில் விஐபி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஜாலி, ஆசை தம்பி, படையப்பா, ஹேராம், மின்னலே, ஆனந்தம், பம்மல் கே சம்பந்தம், குரு என் ஆளு போன்ற படங்கள் மூலம் தன் இருப்பை இயன்றவரை நிலைநாட்டினார்.
அப்பாஸ் - எழுச்சியும் வீழ்ச்சியும்
தமிழ் சினிமாத் துறையில் அப்பாஸின் அணுகுமுறையைக் கண்டு தயாரிப்பாளர்கள் பலரும் வியந்ததுண்டு. முதல் பட வெற்றிக்குப் பிறகு, அடுத்தடுத்து வரிசைகட்டி 18 படங்களுக்கு அட்வான்ஸ் கொடுத்துவிட்டனர்.
பின்னர், சில ஃப்ளாப்களின் எதிரொலியால் பல படங்கள் கையைவிட்டு நழுவ, அந்த 18 படங்களில் தான் நடிக்காத 16 படங்களுக்கு அட்வான்ஸை திருப்பித் தந்திருக்கிறார் அப்பாஸ். ஒரு நடிகருக்கு கொடுத்த அட்வான்ஸ் திரும்ப கிடைப்பது என்பது கோலிவுட்டில் அரிதினும் அரிது என்று சொல்வார்கள்.
அப்படிப்பட்ட அப்பாஸுக்கு தமிழ் சினிமா ரிட்டர்ன் செய்தது எல்லாமே தோல்விகளும் ஏமாற்றங்களும்தான். சரியான திட்டமிடல் இல்லாதது, திரைத்துறையின் அரசியலை எதிர்கொள்ள முடியாதது மற்றும் சில சொந்தக் காரணங்களுக்காக திரைத்துறைக்கு மட்டுமின்றி இந்தியாவுக்கே தற்காலிக விடை கொடுத்துவிட்டு குடும்பத்துடன் வெளிநாட்டில் செட்டில் ஆனார் அப்பாஸ். இது குறித்து ‘தி ஃபெடரல்’ தளத்துக்கு அவர் அளித்த பேட்டி ஒன்றில் இருந்து...
“திரைத்துறையில் எனக்கு பெரிய அடி கிடைத்தது. மீண்டெழ முடியாத நிலைக்கு என் ஈகோவும் ஒரு காரணம். ஆனால், குடும்பத்தையும் பிள்ளைகளையும் கவனிக்க எதுவும் தடையாக இருக்கக் கூடாது என்பதால், என்னை நானே புதுப்பித்துக் கொள்ளவும், புதிதும் இயல்பானதுமான வாழ்க்கையைத் தொடங்கவே இந்தியாவில் இருந்த எல்லா சொத்துகளையும் விற்றுவிட்டு குடும்பத்தோடு கிளம்பினேன்.”
முதலில் இங்கிலாந்தில் செட்டில் ஆகலாம் என்பதுதான் அப்பாஸின் யோசனை. பிறகு, ஒருமுறை நியூஸிலாந்துக்கு உறவினர் வீட்டு நிகழ்ச்சி ஒன்றுக்காக சென்றுள்ளார். அந்த நாட்டின் சூழல் மிகவும் பிடித்துப் போகவே ஆக்லாந்தை தேர்ந்தெடுத்தார்.
“நியூஸிலாந்தின் ஆக்லாந்தில் வந்து செட்டில் ஆகி ஏழெட்டு வருடம் ஆகிவிட்டது. இங்கு வந்தபோது சின்னச் சின்னதாக பல வேலைகளைச் செய்த அனுபவமும் உண்டு. முதலில் ஒரு பெட்ரோல் பங்க்கில் 10 நாட்கள் பணிபுரிந்தேன். அங்கு கழிவறையை தூய்மை செய்யும் பணியையும் செய்தேன்.
அந்தப் பணியை குறைத்து மதிப்பிடவில்லை. இந்த உலகில் எல்லா வேலையுமே மேன்மையானதுதான். எனினும், எனக்கான வேலையை தேடும்போது பைக் மெக்கானிக் பணி கிடைத்ததால் பெட்ரோல் பங்க் பணியை விட்டேன். முறைப்படி மெக்கானிக் பயிலவில்லை என்றாலும் எனக்கு பைக்குகள் மீது இருந்து ஆர்வத்தால் ஒரு நல்ல மெக்கானிக்காக விரைந்து திறமையை வளர்த்துக்கொண்டேன்.
"அதன்பின், கார்ப்பரேட் உலகுக்கு நுழைந்தேன். கால் சென்ட்டரில் பணி. படிப்படியாக முன்னேறி இப்போது குவாலிட்டி அனலைசராக உள்ளேன்,,,” என்று அப்பாஸ் விவரித்துள்ளார்.
யார் நண்பர்கள்?
நியூஸிலாந்தில் செட்டில் ஆனாலும்கூட, அப்பாஸ் சினிமாவுக்கு முழுமையாக முழுக்குப் போட்டுவிடவில்லை. இப்போதைக்கு தமிழ்த் திரைப்படங்களை அவ்வப்போது பார்ப்பதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளார். ஜெயம் ரவி முதல் குஷ்பு வரை திரைத்துறை நண்பர்கள் பலரிடமும் தொடர்பில் இருக்கிறார்.
கார்ப்பரேட் பணியில் தனக்கு கிரியேட்டிவாக பணியாற்றும் வாய்ப்பு இல்லை என்ற வருத்தம் இருந்தாலும், தன்னைப் புதுப்பித்துக்கொள்ள இந்தப் புது வாழ்க்கை பேருதவியாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அப்பாஸ், வாழ்க்கையைப் பற்றி மட்டுமின்றி தொழில் ரீதியாகவும் முதிர்ச்சி அடைந்துவிட்டதாகவும், தன்னை முழுமையாகத் தயார்படுத்திக் கொண்டு மீண்டும் திரைத்துறைக்குத் திரும்ப வாய்ப்புள்ளதாகவும் நம்பிக்கையுடன் ‘ஹிண்ட்ஸ்’ கொடுத்துள்ளார்.
எல்லா துறைகளையும் போலவே திரைத் துறையிலும் உள்ளரசியல் அதிகம் உண்டு. இளம் வயதில் அதை எதிர்கொள்ளும் ஆற்றல் இல்லாததாலும் சறுக்கல் ஏற்பட்டதை பகிரங்கமாக ஒப்புக்கொள்ளும் அப்பாஸ் இப்போது உடல் ரீதியிலும், உளவியல் ரீதியிலும் தன்னை முழுமையாக தயார்படுத்தி வருவதாக புது உத்வேகத்துடன் குறிப்பிட்டுள்ளதையும் கவனிக்க முடிகிறது.
வாழ்க்கைப் பாடங்கள்
திரைத்துறையில் எழுச்சியும் வீழ்ச்சியும் கண்ட நடிகர் அப்பாஸ், சில கசப்பான அனுபவங்களால் தான் நம்பியவர்களின் உண்மையான முகத்தை அறிந்துகொண்ட அனுபவத்தில் சொன்ன பல விஷயங்களில் முக்கியமான ஒன்று...
“நீங்கள் எப்போதுமே பள்ளி, கல்லூரி காலம் தொட்டு பழகி வரும் நண்பர்களை மட்டுமே நெருக்கத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். தொழில் ஏற்றம் கண்ட பின் வருகின்ற புதிய நண்பர்களை சற்று தூரத்தில் வைப்பதே நல்லது.”
அதேநேரத்தில், “எல்லா துறைகளிலுமே கறுப்பு ஆடுகள் இருக்கத்தான் செய்வார்கள். அதற்காக ஒட்டுமொத்த துறையையும் குறைகூற முடியாது. அப்படித்தான் இந்த சினிமா துறையும்.
"உண்மையில் தமிழ் சினிமா துறை மிகவும் அழகானது. இங்கேதான் நான் நிறைய கற்றுக்கொண்டேன். ஏற்ற இறக்கங்கள் எதிலும் இருக்கத்தான் செய்யும். புதிய விடியல் நோக்கி மீண்டெழுவதுதான் முக்கியம்,” என்றார் நம்பிக்கையுடன்.
ஆம், எந்த ஒரு துறையிலும் உச்சம் எட்டுவதைக் காட்டிலும், எட்டிய வெற்றிகளைத் தக்கவைத்துக்கொள்ள நம்மை எப்போதும் அப்டேட்டாக வைத்துக்கொள்ள வேண்டும். இப்படி பல வாழ்க்கைப் பாடங்களை நமக்குத் தரும் அப்பாஸ் நிச்சயம் தனது இரண்டாவது இன்னிங்ஸில் களம் காண்பார்; அதில் வெற்றிக்கொடி நாட்டுவார் என நம்பலாம்.
தகவல் உதவி: Indiatimes
Edited by Induja Raghunathan