'பேட்ட சிங்காரம்’ இத்தனை பெரிய சினிமா ஸ்டார் ஆன கதை!
சிறிய கிராமத்தில் பெரிய குடும்பத்தில் பிறந்து வறுமையை வென்று போராடி பாலிவுட் ஸ்டாரான நவாசுதீன் சித்திக்!
"நம்மின் பல கனவுகள் அசாத்தியமற்றதாக இருக்கும், பின் பொருத்தமற்றதாக தோன்றும், ஆனால் இறுதியில் நம் விருப்பத்தை விடாமல் தொடர்ந்தால், அது விரைவில் தவிர்க்க முடியாதது ஆகிவிடும்.” - க்ரிஸ்டோபர் ரீவ்
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள முசாஃபர்நகரில் உள்ள ஒரு சிறிய டவுன் புதானாவில் வாழ்ந்த ஒரு பையனின் கனவு அவன் மற்றும் அவனின் குடும்பம் நினைத்துக்கூட பார்க்க முடியாததாக இருந்தது. கல்வி அரிதாக இருந்த அந்த கிராமத்தில், அந்த சிறுவன் தனது ஆறு சகோதரர்கள் மற்றும் இரண்டு சகோதரிகளுடன் கிடைத்ததை வைத்துக் கொண்டு வாழ்ந்து வந்தான்.
சினிமாவில் காட்டுவது போல, அந்த கிராமத்தினர் நெல், கரும்பு மற்றும் துப்பாக்கி என்ற மூன்றை மட்டுமே பார்த்து வாழ்ந்தனர். துப்பாக்கி மற்றும் வன்முறையைக் கண்டு அந்த கிராம நடுத்தர மக்கள் பயத்தில் வாழ்ந்து வந்தனர். சிலர் பாதுகாப்பை கருதி அக்கிராமத்தை விட்டு வெளியேறி வேறு இடங்களுக்கு பிழைப்பு தேடி குடிபெயர்ந்தனர்.
அப்படி அக்கிராமத்தை விட்டு வெளியேறிய அந்த சிறுவனின் குடும்பம் ஓரளவிற்கு முன்னேறி, அவனை படிக்க வைத்தது. ஹரித்வார் பல்கலைகழகத்தில் பட்டம் பெற்று பரோடாவில் பெட்ரோ கெமிக்கல் நிறுவனத்தில் கெமிஸ்டாக பணியில் சேர்ந்தார். அங்கு பிடிக்காமல், டெல்லிக்கு சென்ற அந்த இளைஞன், பல இடங்களில் வாட்ச்மேனாக பணி புரிந்தான். அப்போது தனது கனவான நடிப்பை அறிந்து கொள்ள, சினிமா, ட்ராமா என தினமும் சென்று அதில் கலந்துகொள்ளவும் ஆரம்பித்தான்.
நடிப்பு ஆர்வம் அதிகரிக்க, தேசிய ட்ராமா பள்ளியில் சேர்ந்து 1996-ம் ஆண்டு வெற்றிகரமாக அதில் தேர்ச்சி அடைந்தான் அந்த இளைஞன். அன்று முதல் அந்த இளைஞனின் வாழ்வில் இறக்கங்களே இல்லை, சென்ற இடமெல்லாம் வாய்ப்புகள், வெற்றிகள்...
ஆம் அவர் வேறு யாரும் இல்லை இன்று பலரது மனதை கொள்ளையடித்து தன் நடிப்பால் வசீகரிக்கும் நவாசுதீன் சித்திக்-இன் வாழ்க்கை கதை இது!
நடிப்பில் பட்டம் பெற்ற பின், மும்பை பாலிவுட் நோக்கி பயணம் மேற்கொண்டார் நவாசுதீன். ஆனால் வாடகை கொடுத்து வீடு எடுத்து தங்க தன்னிடம் பணம் இல்லாமல் அவதிப்பட்டார். ஸ்டுடியோக்களின் படிகளை சளைக்காமல் ஏறினார். செட்-செட்டாக நாள் முழுதும் அலைந்து தனக்கு ஒரு சிறிய ரோல் கிடைக்காதா என கடுமையாக பாடுபட்டார். ஒரு முறை கூட்டத்தில் ஒருவனாக இருக்கும் ரோலில் கூட நடித்தார். ட்ராமா பள்ளியில் பயின்ற சீனியர் ஒருவரின் வீட்டில் தங்க அனுமதிக்கேட்டு, இரண்டு வேளை சமைத்தால் இடம் தருவதாக சொன்னதை ஏற்று அங்கே குடியேறினார் நவாஸ்.
இத்தனை போராட்டங்களுக்கு பின், 1999-ல் ஆமிர் கானின் சர்ஃபரோஷ் என்ற திரைப்படத்தில் தீவிரவாதி வேடத்தில் முதன்முதலில் நடித்தார் நவாசுதீன். அடுத்த சில அண்டுகளுக்கு சிறு ரோல்களில் நடித்து பிழைப்பை ஓட்டினார். ஆனால் இவரது வறுமை பெரிய அளவில் போகவில்லை. சில காலம் தொலைக்காட்சி சீரியலில் நடித்தார். சில குறும்படங்களிலும் நடிகலானார். அப்படி நடித்துக் கொண்டிருந்தபோது தான் ‘ப்ளாக் ஃப்ரைடே’ என்ற அனுராக் கஷ்யப்பின் படத்தில் வாய்ப்பு கிட்டியது நவாசுக்கு. இது அவருக்கு கிடைத்த மிகப்பெரிய ப்ரேக்.
அதே போல் பதங் என்ற படத்தில் நவாஸ் நடித்த முதன்மை கதாப்பாத்திரம் இவருக்கு பெயரை பெற்று தந்தது. அந்த திரைப்படம் பெர்லின் பிலிம் பெஸ்டிவல் மற்றும் ட்ரைபெகா பிலிம் பெஸ்டிவலுக்கு சென்றது குறிப்பிடத்தக்கது. இதையும் தாண்டி ‘பீப்லி லைவ்’ என்ற படத்தில் நவாஸ் நடித்த பத்திரிகையாளர் கதாப்பாத்திரம் இவருக்கு ஒரு சிறந்த அங்கீகாரத்தை பெற்றுத்தந்தது.
2012 ஆம் ஆண்டு நவாசுதீனுக்கு ஒரு சிறந்த ஆண்டு எனலாம். கஹானி, காங்க்ஸ் ஆப் வசேபூர் என்று இவர் நடித்த எல்லாப் படங்களுக்கு பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்தது. அப்போதே நவாசுதீன் சித்திக் மக்களால் பெருமளவு அறியப்பட்டார். இவரது நடிப்புத்திறமையும் பலரால் பாராட்டப்பட்டது. அப்போது தொடங்கிய வெற்றிப் பயணம் தலாஷ், பத்லாபூர், லன்ச்பாக்ஸ், கிக், பஜ்ரங்கி பைஜான், ராயிஸ் என்று எல்லாமே சூப்பர் ஹிட் படங்கள். அண்மையில் ஆஸ்காருக்கு தேர்வான லயன் படத்திலும் இவர் நடித்துள்ளார்.
டிஎன்ஏ-வின் பேட்டியில் குறிப்பிட்ட நவாசுதீன்,
“என் குடும்பம் மற்றும் நண்பர்கள் என்னை பார்த்து- ’இவன் எப்படி ஹீரோ ஆவான்?’ என்றெல்லாம் ஏளனம் செய்தனர். ஆனால் இன்று அவர்கள் சொன்னது தவறு என்று நிரூபித்ததில் பெருமிதம் கொள்கிறேன். இப்போது ஊருக்கு போனால், ‘ஓ இவன் சாதித்து காட்டிவிட்டான்...’ என்று பூரிக்கின்றனர். நான் இதை சாத்தியமாக்கினேன்,” என்றார்.
எப்போதாவது தோல்வியை நினைத்து கனவை கைவிட நினைத்ததுண்டா என்று நவாசிடம் கேட்டதற்கு,
“பலமுறை நான் நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறேன், எதுவுமே நடக்கவில்லை என்று யோசித்திருக்கிறேன். ஆனால் என்னால் இதை விட்டு போகமுடியவில்லை. அங்கே போனால் என்ன செய்வேன்? நடிப்பு என்ற கனவிலே என் வாழ்க்கையை அர்ப்பணித்து வாழ்ந்த எனக்கு வேறு எதுவும் தெரியாது. ‘இவன் பெரிசா நடிக்கரேனு போய்ட்டு இப்போ ஒண்ணும் இல்லாம திரும்ப வந்துட்டானு’ என்று என் நண்பர்கள் என்னை கேலி செய்வார்களே என்று நினைத்து இங்கேயே தொடர்ந்து போராடினேன்.”
கூட்டத்தில் பின்னாடி நின்று கவனிக்கப்படாத ரோலில் நடித்த நவாஸ் இன்று வெற்றிவாகை சூடி உலகம் முழுதும் சுற்றிக்கொண்டிருக்கிறார். கேன்ஸ் பிலிம் பெஸ்டிவல் போன்ற பல பிரபல விழாக்களில் சிறப்பு கெஸ்டாக கலந்து கொள்கிறார். பன்முக நடிப்புத்திறன் கொண்ட நடிகராக இன்று பாலிவுட் இவரை போற்றி பாடுகிறது. இருப்பினும் கடும் போராட்டங்களை தாண்டி விடாமுயற்சியாக கனவை துரத்திய நவாசுதீன் சித்திக்கின் கதை மற்றொமொரு ஊக்கமிகு கதை என்பதில் ஐயமில்லை.