ரூ.5 கோடி நிதி திரட்டிய சென்னை 'Chai Waale’ - நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் முதலீடு!
சென்னையைச்சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான ’சாய் வாலே’, புதிய சுற்று நிதியை விரிவாக்கம் உள்ளிட்ட திட்டங்களுக்காக பயன்படுத்திக்கொள்ள உள்ளது.
சென்னையைச் சேர்ந்த தேநீர் பிராண்டான ’சாய் வாலே’ ’Chai Waale' ஏஞ்சல் முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.5 கோடி நிதி திரட்டியுள்ளதாக அறிவித்துள்ளது. பிரபல திரைப்பட நடிகை நயன்தாரா உள்ளிட்டோர் இந்த சுற்றில் முதலீடு செய்துள்ளனர்.
2018ல் விதுர் மகேஸ்வரியால் துவக்கப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனமான ’சாய்வாலே’ (Chai Waale) நகரில் 20 இடங்களில் இதே பெயரில் நவீன தேநீர் கடைகளை நடத்தி வருகிறது.
விரைவு சேவை ரெஸ்டாரண்ட் வகை சேவையை வழங்கி வரும் சாய் வாலே, பல வகையான தேநீர்களுடன், சாண்ட்விச், நூடுல்ஸ், போஹா உள்ளிட்ட உணவு வகைகளையும் வழங்குகிறது. அண்மையில் நிறுவனம் சூப் மற்றும் மேலும் பல வகை சாண்ட்விச் உள்ளிட்டவற்றையும் வழங்கத் துவங்கியுள்ளது.
![சாய்](https://images.yourstory.com/cs/18/a52e212008d911e9bb473d9d98ed1e05/VidurChaiWaaleReleasePhoto-1627796833363.jpg?fm=png&auto=format&w=800)
இந்நிலையில் நிறுவனம், ரூ.5 கோடி நிதி திரட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த நிதிச்சுற்றில், ஏற்கனவே உள்ள முதலீட்டாளர்கள் மற்றும் புதிய முதலீட்டாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
சுனில் சேத்தியா, சுனில் குமார் சங்வி, மனிஷ் மார்டியா (UNI-M Network ) ஆகிய முதலீட்டாளர்களுடன் பிரபல திரைப்பட நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் முதலீட்டில் பங்கேற்றுள்ளனர்.
மேலும், Kart LLP உள்ளிட்ட தனியார் நிறுவனங்களும் இதில் பங்கேற்றன.
நகரில் விரிவாக்கம் மேற்கொள்ள இந்த நிதியை பயன்படுத்திக்கொள்ள இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. கூட்டம் அதிகம் திரளும் மால்களில் புதிய மையங்களை அமைக்கவும் திட்டமிட்டுள்ளது.
“முதலீட்டாளர்களின் ஆதரவுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். பிராண்ட் மீது நம்பிக்கை வைத்துள்ள தற்போதைய முதலீட்டாளர்களுக்கு கூடுதல் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்,” என நிறுவனர் விதுர் மகேஸ்வரி கூறியுள்ளார்.
இந்த நிதியின் 80 சதவீதம், மையங்களின் விரிவாக்கத்திற்கு பயன்படுத்தப்படும். அடுத்த ஆண்டிற்குள் 35 விற்பனை மையங்களைக் கொண்டிருக்கத் திட்டமிட்டுள்ளோம். எஞ்சிய நிதி மார்க்கெட்டிங் உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தப்படும், என்று அவர் கூறியுள்ளார்.