விவசாயி டு வாடிக்கையாளர் நேரடி விற்பனை - ஆண்டுக்கு ரூ.25 கோடி வருவாய் ஈட்டும் இ-சந்தை வெற்றிக்கதை!

விவசாயிகளிடம் இருந்து விளைபொருட்களை கொள்முதல் செய்து ஓட்டல்கள், ரெஸ்டாரன்ட்டுகளிடம் விற்பனை செய்யும் திருச்சியை சேர்ந்த ஸ்டார்ட் அப் ஈ-சந்தை ஆண்டுக்கு ரூ. 25 கோடி வரை வருவாய் ஈட்டி வருகிறது.

விவசாயி டு வாடிக்கையாளர் நேரடி விற்பனை - ஆண்டுக்கு ரூ.25 கோடி வருவாய் ஈட்டும் இ-சந்தை வெற்றிக்கதை!

Monday October 30, 2023,

7 min Read

விளைவிப்பவன் ஒருவன் பலனை அனுபவிப்பன் வேறொருவன் என்பது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ விவசாயிக்கு நன்றாகவே பொருந்தும். வைகறை துயில் எழுந்து காடு கழனியை பழுது பார்த்து பருவம் பார்த்து விதைவிதைத்து விளைபொருள்களை வீடுகொண்டு சேர்க்கும் வரை விவசாயி படும் துன்பம் சொல்லானாதது. ஆனால், அத்தனை கடின உழைப்பை செலுத்தியவருக்கு சொர்ப்ப லாபமே சென்றடைகிறது.

விளைபொருட்களை சந்தைப்படுத்தும் வழி தெரியாததால் இடையில் வரும் இடைத்தரகர்கள் ஏகபோக லாபம் பார்க்கின்றனர். பொருளை வாங்கும் வாடிக்கையாளர் கொடுக்கும் விலையில் பெரும்பகுதி இடைத்தரகர்களுக்கே சென்றடைகிறது.

சமுதாயத்தின் முதுகெலும்பாக இருக்கும் விவசாயியை காக்கும் விதத்தில் தன்னுடைய தொழில்முனைவு இருக்க வேண்டும் என்று தன்னுடைய பாதையையும் அதனை நோக்கி அமைத்தவர் திருச்சியைச் சேர்ந்த சொல்லின்செல்வன்.

தஞ்சாவூரில் பிறந்தவர், திருச்சியில் பட்டம் பயின்ற பின்னர் தொழில்முனைவை பெரம்பலூரில் தொடங்கியுள்ளார். சக்சஸ் தொழில்முனைவராக மட்டுமின்றி, உத்வேகப் பேச்சாளராகவும் ஓய்வின்றி செயல்படும் இ-சந்தை நிறுவனரும் செயல் இயக்குனருமான சொல்லின் செல்வன், தான் தொழில்முனைவராக உருவானது எப்படி என்று நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

chollin selvan

“எங்கள் குடும்பம் நடுத்த வர்க்கமே, ஒரு சாதாரண பொறியியல் கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்றேன். தொழில்முனைவராக வேண்டும் என்பது சிறு வயதில் இருந்தே எனக்குள் இருந்த ஆசை. பள்ளி படிக்கும் காலத்தில் இருந்தே மொபைல் போன் பழுது நீக்கம், லேப்டாப் சர்வீஸ் என்று தொடங்கி கல்லூரி படித்துக் கொண்டிருந்த காலத்தில் பங்குச்சந்தை வர்த்தகம் என்று பகுதி நேரமாக ஏதேனும் ஒரு தொழிலை செய்து கொண்டே வந்தேன்.

2010ம் ஆண்டில் மெக்கானிக்கல் என்ஜினியரிங் படித்து முடித்தேன், அதன் பின்னர், ஓராண்டு வெவ்வேறு தொழில்முனைவை முயற்சித்துப் பார்த்தேன், ஆனால் அது கைகொடுக்கவில்லை என்பதால் நிறுவனங்களில் பணியாற்றி அனுபவம் பெறலாம் என்கிற சிந்தனையில், செட்டிநாடு சிமெண்ட்ஸ் போன்ற பெருநிறுவனங்களில் திட்டப் பொறியாளராகப் பணியாற்றினேன். வெவ்வேறு நிறுவனங்களில் பணியாற்றி பணியில் சிறப்பாக செயல்பட்டதன் விளைவாக அயல்நாடுகளில் அதிக சம்பளத்தில் வேலை கிடைத்தது.

ஆனாலும் வெளிநாட்டிற்கு சென்று பணியாற்றத் தொடங்கினால் என்னுடைய சிறு வயது கனவான தொழில்முனைவு என்னாகும் என்கிற அச்சம் எழவே, அந்தப் பணியை விட்டுவிட்டு மீண்டும் தொழில்முனைவில் கவனம் செலுத்தத் தயாரானேன், என்று தன்னுடைய தொடக்க கால அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.

22 வயதில் முதல் ஸ்டார்ட் அப்

பெரம்பலூரில் அந்த சமயத்தில் மாவட்ட ஆட்சியராக இருந்தவர் தாரெஸ் அஹமது. என்னுடைய தொழில்முனைவுக்கான வழிகாட்டியாகவும் அவர் இருந்து வந்தார், அவருடைய இலக்கு விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்பதே, அதுவே என்னுடைய தொழில்முனைவுக்கான இலக்காகவும் மாறியது.

"என்னுடைய 22வது வயதில் முதன்முதலில் சோளத்தை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக்கும் தயாரிப்பைத் தொடங்கினேன். 15 ரூபாய் சோளம் 25 ரூபாய் மாட்டுத்தீவனம் என்கிற குறுகிய வட்டத்தில் முடிவதால் விவசாயிக்கு 20 ரூபாய் மட்டுமே லாபம் கிடைக்கும். இந்த நிலையை மாற்றி சோளத்தை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக்கி ரூ.300க்கு விற்கலாம் என்கிற முயற்சியில் இறங்கினோம். ரூ.3 கோடி மதிப்பில் தொடங்கப்பட்ட அந்தத் திட்டமானது 2 ஆண்டுகள் போராடிக் கடந்தது.”

பெருநிறுவனங்களான லேஸ், கோக்க கோலா போன்றவற்றுடன் எங்களுடைய தயாரிப்பு போட்டிபோட முடியவில்லை. அதனால் வேறு என்ன செய்யலாம் என்று தொடர்ந்து ஆராய்ந்துகொண்டே இருந்தோம்.

பட்டதாரியான என்னுடைய மனைவி மகாலட்சுமியும் தொழில்முனைவில் இணை நிறுவனராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். கார்னியான்ஸ் (Cornions) என்கிற பெயரில் தொடங்கப்பட்ட எங்கள் நிறுவனத்தின் சார்பில் அந்தப் பகுதியில் அதிகம் கிடைத்த சோளத்தை வைத்து ஏற்கனவே ஒரு முயற்சி செய்தாகிவிட்டது, அடுத்ததாக சின்ன வெங்காயத்தின் விலை அதிகமாக இருப்பதால் அதை வைத்து ஏதேனும் தொழிலை முயற்சிக்கலாம் என்று சின்ன வெங்காயத்தை உரித்து பேக் செய்து ரெஸ்டாரன்ட்டுகளுக்கு விநியோகம் செய்யத் தொடங்கினோம்.

துவளாமல் அடுத்த முயற்சியில் கண்டெடுத்த E-Sandhai

Cornions மூலம் முதல் ஆண்டில் ரூ.1 கோடி, அடுத்த ஆண்டு ரூ.2 கோடி வருவாய் என்று தொழில் வளர்ச்சி கண்டது. ஆனால், ஒரே ஒரு பொருள் குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே விநியோகம் என்கிற ரீதியில் செயல்பட்டுக் கொண்டிருந்தோம். 60 பேர் எங்களின் கீழ் பணிபுரிந்தனர், நல்ல வளர்ச்சி இருக்கும் இந்த ஸ்டார்ட் அப்பை எப்படி மேம்படுத்தலாம் என்று தொடர்ந்து சிந்தித்துக் கொண்டே இருந்தோம்.

என்னைப் போலவே சிந்தனை கொண்ட வெவ்வேறு நிறுவனத்தில் பணிபுரிந்த நண்பர்கள் ஸ்ரீதரன், நிரஞ்சன் உள்ளிட்டோர் என்னுடன் இணைந்து பயணிக்கத் தொடங்கினர்.

“ஒரு பொருள் உற்பத்தியாளருக்கும் வாடிக்கையாளருக்கும் அதிக லாபத்தைத் தர வேண்டும், ஆனால் சந்தையில் இடைத்தரகர்கள் மட்டுமே அதிக லாபத்தை அனுபவிக்கின்றனர். இந்த நிலையை மாற்ற வேண்டும் என்கிற நோக்கத்தில் தொடங்கப்பட்டதே இ-சந்தை (E Sandhai).”

விவசாயப் பொருட்களின் விநியோகம், தேவைக்கு இடையே உள்ள பொருட்கள் வீணாவதையும் இடைத்தரகர்கள் மக்கள் மீதே சுமத்துகின்றனர். அவர்கள் கொடுத்து வாங்கும் பொருளின் உண்மையான விலை விவசாயிக்கு சென்று சேர்வதில்லை. இதற்குத் தீர்வாக ஒரு தொழில் திட்டத்தை உருவாக்க வேண்டும் என்கிற எண்ணத்தை நோக்கி தீவிரமாக செயலாற்றிக் கொண்டிருந்தோம் என்கிறார் சொல்லின் செல்வன்.

ஈ சந்தை

இ-சந்தை குழுவினர் - சொல்லின் செல்வன், மகாலட்சுமி, ஸ்ரீதரன் மற்றும் நிரஞ்சன்

விவாசயிக்கு லாபம்

2020ல் மீண்டும் ஒரு B2C ஸ்டார்ட் அப் தொடங்கினோம். வேறொரு நிறுவனத்துடன் இணைந்து தொடங்கிய அந்த ஸ்டார்ட் அப்பில் எங்களுடன் இணைந்திருந்த பிரபல நிறுவனம் ஒன்று முன்அறிவிப்பின்றி சேவையை நிறுத்தியதால் எங்களுக்கு சுமார் ரூ.20 லட்சம் நஷ்டம் ஏற்பட்டது. எனினும், இந்தக் குழுவின் திறமை முடங்கிப் போய்விடக் கூடாது என்பதில் மட்டும் உறுதியாக இருந்தோம்.

’கார்னியான்ஸ்’ என்கிற பெயரை ’இ-சந்தை பிரைவேட் லிமிடெட்’ நிறுவனமாக்கி செயல்படத் தொடங்கியது. இதன் நிறுவனர் மற்றும் செயல்தலைவராக நானும், இணை நிறுவனர்களாக என்னுடைய மனைவி மகாலட்சுமி, நண்பர்கள் ஸ்ரீதரன், நிரஞ்சன் ஆகியோரும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

விவசாயிகளிடம் இருந்து ஒரு விளைபொருள் வாடிக்கையாளரை சென்றடைய குறைந்தபட்சம் 5 இடைத்தரகர்களைக் கடந்து செல்கிறது, அந்த இடைத்தரகர்களைக் குறைத்து நேரடியாக விவசாயி டூ வாடிக்கையாளர் இடையில் இ-சந்தை என்கிற ஒற்றைத் தளம் மட்டுமே அவர்களை இணைப்பதற்கான பாலம் என்கிற முறையில் செயல்படத் தொடங்கினோம்.

”ஊட்டி, தருமபுரி, கிருஷ்ணகிரி தொடங்கி தரமான விளைபொருட்களைக் கொடுக்கும் விவசாயிகளை தேடிச்சென்று அவர்களிடம் நியாயமான விலைக்கு காய்கறிகளை கொள்முதல் செய்து சரியான விலையில் வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் இந்த முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் முதல் ஆண்டிலேயே ரூ.3 கோடி வருவாயை ஈட்ட முடிந்தது,” என்கிறார் சொல்லின்செல்வன்.

என்ன மாறுபாடு?

3 ஆண்டுகள் கழித்து இப்போது தான் வென்சர் கேபிடல் மற்றும் ஏஞ்சல் முதலீட்டை நாடி இருக்கிறோம். தமிழ்நாட்டின் வளர்ந்து வரும் தொழில் என்னும் முறையில் முதல் ஈக்விட்டி முதலீட்டை பெற்றது இ-சந்தை பிரைவேட் லிமிடெட். நேட்டிவ் லீட்ஸ், சென்னை ஏஞ்சல்ஸ், தமிழ்நாடு உள்கட்டமைப்பு நிதி போன்றோர் சுமார் 5 கோடி முதலீடு செய்திருந்தார்கள்.

ஏற்கனவே எங்கள் நிறுவனம் 25 கோடி வருவாயை எட்டி விட்டது. 1500 விவசாயிகள் சுமார் 3000 வாடிக்கையாளர்கள் வாழ்வில் நேர்மறை தாக்கத்தை உருவாக்கி இருக்கிறது இ-சந்தை என்று மகிழ்கிறார் சொல்லின்செல்வன்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் மட்டுமின்றி வெளிமாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளிடம் இருந்து விளைபொருட்களை கொள்முதல் செய்து வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்கிறோம். நியாயமான விலையில் பொருட்களை விற்பனை செய்ய வேண்டுமெனில் விவசாயியை நேரடியாகச் சென்று தொடர்பு கொண்டால் மட்டுமே அது சாத்தியமாகும். ”

”மார்க்கெட்டில் இருந்து இ-சந்தை எப்படி மாறுபடுகிறது என்றால், மார்க்கெட் பொருட்களின் விலையானது அன்றைய தினத்தின் காலையில் தான் முடிவு செய்யப்படுகிறது. ஆனால், இ-சந்தையில் நாங்கள் பொருட்களுக்கு MRP நிர்ணயம் செய்கிறோம். விவசாயியிடம் வாங்கும் போது இருக்கின்ற விலையோடு பொருட்களைக் கொண்டு வந்து தருவதற்கான செலவை சேர்த்து ஒரு விலையை நிர்ணயம் செய்கிறோம். சந்தையில் விலை மாறிக்கொண்டே இருக்கும் எங்களிடம் முந்தைய நாள் நிர்ணயம் செய்யப்படும் விலையில் எந்த மாற்றமும் இருக்காது,” என்கிறார்.
ஈ சந்தை

அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுடன் இ-சந்தை குழுவினர்

2024ன் இலக்கு ரூ.150 கோடி

வெளிப்படைத்தன்மையுடன் பொருள் எந்த விவசாயியிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது என்பதைக் கூட வாடிக்கையாளர்களிடம் பகிர்ந்து கொள்கிறோம். இது மட்டுமின்றி இந்தியாவிலேயே யாரும் செய்யாத ஒன்றை நாங்கள் செய்தோம்.

தக்காளி விலை ரூ.5 ஆக இருந்த போது 2 டன்களை தனியார் குடோனில் உறைநிலையில் வைத்திருந்தோம். ரெஸ்டாரன்ட்டுகள் மற்றும் ஓட்டல்களில் பயன்படுத்தக்கூடிய அந்த வகை தக்காளிகளை 3 மாதங்களுக்கு பதப்படுத்தி வைப்பதற்கு ஆன செலவு ரூ.15 மட்டுமே ஆனால் தக்காளி விலை வரலாறு காணாத உயர்வு கண்ட போது அவற்றை கிலோ ஒன்றிற்கு ரூ.50 என்கிற விலையில் விற்றோம்.

“திருச்சியை சுற்றி 75 கி.மீட்டர்களைக் கொண்ட பகுதிகளை உள்ளடக்கி 5 மாவட்டங்களில் மட்டுமே தற்போது செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். குறைவான இடங்களில் எங்களது சேவை இருந்தாலும் எங்களால் ரூ.24 கோடி வருவாய் ஈட்ட முடிகிறது, அடுத்த நிதியாண்டிற்குள் அதனை ரூ.150 கோடி வருவாய் ஆக்க வேண்டும் என்பதே எங்களின் இலக்கு,” என்கிறார் சொல்லின் செல்வன்.

வெற்றிக்கான காரணம்

நாள் ஒன்றிற்கு 25 டன் பொருட்களை இ-சந்தை விநியோம் செய்கிறது. அவற்றில் 95 சதவிகிதம் காய்கறிகள் 4 சதவிகிதம் பழங்கங்கள் ஒரு சதவிகிதம் மளிகைப் பொருட்கள். B2B முறையில் ஓட்டல்கள், ரெஸ்டாரன்ட்டுகள், மளிகைக் கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள், நிறுவனங்களுக்கு மட்டுமே விநியோகம் செய்கிறோம்.

விவசாயிகளுக்கு நாங்கள் 10 சதவிகிதம் கூடுதல் லாபத்தை கொடுக்கிறோம், அதுமட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யும் காய்களை திருச்சியிலேயே விளைவிக்கும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறோம். 20 ஆயிரம் சதுரஅடியில் திருச்சி மண்ணச்சநல்லூரில் இருக்கும் குடோனில் பொருட்கள் சேமிக்கப்பட்டு அங்கிருந்து வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.

காலையில் பொருட்கள் தேவை விவசாயிகளிடம் கொடுக்கப்படும் 12 மணி அளவில் விலை நிர்ணயம் செய்த பின்னர் வாடிக்கையாளர்களிடம் விலை விவரம் பகிரப்பட்டு பொருள் கொள்முதலுக்கான ஆர்டர் தொடங்கும் இரவு 8 மணிக்குப் பிறகு ஆர்டர் செய்ய முடியாது என்பதால் அடுத்த நாளுக்குத் தேவையான பொருட்கள் விவரம் முந்தைய நாளே தெரியவந்துவிடும்.

“இரவே பொருட்கள் குடோனுக்கு வந்து சேர்ந்த பின்னர், அவற்றை பேக் செய்யும் முறை தொடங்கும். பேக்கிங் முடிந்து வாடிக்கையாளர்களுக்கு பொருட்கள் அதிகாலை 4 மணிக்கெல்லாம் சென்று சேர்ந்துவிடும். மார்க்கெட்டில் அப்போது தான் பொருட்களின் வரவே இருக்கும் நிலையில் நாங்கள் அதிகாலையிலேயே பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு கொண்டு சேர்ப்பதில் காட்டும் வேகமே எங்களின் ஸ்டார்ட் அப் வெற்றிக்கான காரணம்.”

டெல்டா மாவட்டங்களில் தற்போது இ-சந்தை செயல்பட்டு வரும் நிலையில், அடுத்த கட்டமாக கோவை, மதுரை, கன்னியாகுமரி, விழுப்புரத்தில் விரிவாக்கம் செய்ய உள்ளோம். என்னுடைய அப்பா அரசுத் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தார், அவர் எப்போதும் சொல்வது நம்மால் நினைப்பதை நம்முடைய வேலையில் செய்ய முடியவில்லை என்பார்.

ஈசந்தை

இ-சந்தை குழுவினர்

தொழில்முனைவில் நாம் நினைத்ததை செய்யலாம், சமுதாயத்திற்கு நாம் செய்ய நினைப்பதை சுதந்திரமாக செய்ய முடியும். அதுமட்டுமின்றி நான் சிறு வயது முதலே ஒரு விஷயத்தைப் பார்த்தால் அதன் தயாரிப்பு, செலவு போன்றவற்றை சிந்தித்துக் கொண்டே இருப்பேன்.

“எனக்கு எந்தவித பொருளாதார பின்புலமும் இல்லை, சுமார் 3 கோடி ரூபாய் அளவிற்கு கடனில் தள்ளப்பட்டாலும் நான் பின்வாங்கவில்லை. என்னுடைய மனைவி மற்றும் குடும்பத்தினர் ஆதரவு இருந்ததால் மீண்டும் துணிவோடு தொழில்முனைவில் பயணிக்கத் தொடங்கி 2022ல் தமிழ்நாடு மாநில அரசின் சிறந்த தொழில்முனைவருக்கான விருதைப் பெற்றேன். 2018ல் சிறந்த அக்ரிடெக் விருதையும் பெற்றிருக்கிறேன் என்று வீழ்ச்சியில் இருந்து தான் வளர்ச்சி பெற்றதை விவரிக்கிறார் இவர்.”

பொறுமை இருந்தால் வெல்லலாம்

2015-16ல் எங்களிடம் பணியாற்றியவர்கள் இப்போது வரை சுமார் 100 பேர் எங்கள் குழுவில் உள்ளனர். குழுவாக இணைந்து இ-சந்தையை நாங்கள் வெற்றியடையச் செய்திருக்கிறோம் என்று சொல்லலாம். ஒவ்வொரு விவசாயியும் அவர்கள் விளைவிக்கும் பொருளை என்ன விலைக்கு விற்கலாம் என்பதை முன்கூட்டியே அறியும் AIML என்கிற தொழில்நுட்பத்தை நாங்கள் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.

விவசாயி விளைவிக்கும் விளைபொருளின் அளவு நமக்கு முன்கூட்டியே தெரியாததால் நம்மால் தேவை பற்றாக்குறைக்கு ஏற்ப விநியோகம் செய்ய முடியவில்லை. இதற்கான தீர்வை நாங்கள் உருவாக்கி வருகிறோம் எதிர்காலத்தில் இதன் பயன்பாடு மிகவும் வீரியமானதாக இருக்கும்.

வளர்ச்சியோ வீழ்ச்சியோ எதுவாக இருந்தாலும் எந்த நேரத்திலுமே தொழில்முனைவை கைவிடும் எண்ணம் இருந்தது இல்லை. தொழில்முனைவராக வேண்டும் என்றால் பணத்தை விட அவர்கள் முதலீடு செய்ய வேண்டியது நேரத்தை மட்டுமே, முழுநேரமாக முழுமுயற்சியுடன் பொறுமையோடு செயல்பட வேண்டும் Patience is the oxygen of entrepreneurship அப்போது தான் வெற்றி காண முடியும் என்று தான் பயின்ற அனுபவத்தை மற்ற தொழில்முனைவர்களுக்காக அறிவுறுத்துகிறார் சொல்லின் செல்வன்.