‘கவனமாக இருங்கள்...' - அமெரிக்கா செல்லும் இந்திய மாணவர்களுக்கு இந்திரா நூயி கொடுத்த அட்வைஸ்!
மேற்படிப்பிற்காக அமெரிக்கா செல்லும் இந்திய மாணவர்களுக்கு பெப்சிகோவின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி இந்திரா நூயி பல முக்கிய ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
மேற்படிப்பிற்காக அமெரிக்கா செல்லும் இந்திய மாணவர்களுக்கு பெப்சிகோவின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி இந்திரா நூயி பல முக்கிய ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
அமெரிக்காவில் உள்ள இந்திய மாணவர்கள் போதைப்பொருள் மற்றும் மது பழக்கத்திற்கு ஆளாக வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார். தேவையில்லாத ரிஸ்க் எடுக்காமல் கவனமாக இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
கவனமாக இருங்கள்:
பெப்சி நிறுவனத்தின் முன்னாள் சிஇஓவான இந்திரா நூயி வெளியிட்டுள்ள 10 நிமிட உரையாடல் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகம் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா வரும் இந்திய மாணவர்கள் துரதிர்ஷ்டவசமாக போதைப்பொருள் சம்பந்தமான பிரச்சனைகளில் சிக்கிக்கொள்வதாக பல செய்திகளைப் படித்திருக்கிறேன். எனவே, பாதுகாப்பாக இருக்க உள்ளூர் சட்டத்தை மதித்து நடந்து கொள்ளுங்கள். இரவில் இருட்டாக உள்ள இடங்களுக்குத் தனியாக செல்ல வேண்டாம்.
“போதை மருந்து பழக்கத்திற்கு ஆளாக வேண்டாம், அளவுக்கு அதிமாக குடிக்க வேண்டாம். அப்படி செய்வதால்தான் பெரும் பிரச்சினையாகிறது. அமெரிக்காவிற்கு படிக்க வரும் மாணவர்கள் தங்கள் பல்கலைக்கழகம் மற்றும் படிப்பை கவனமாக தேர்வு செய்ய வேண்டும், அமெரிக்கா போன்ற நாட்டில் உயர்கல்வி படிப்பது வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்,” என்று பேசியுள்ளார்.
நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருங்கள்:
நீங்கள் அமெரிக்கா வந்த பிறகு, முதல் சில மாதங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என இந்திரா நூயி எச்சரித்துள்ளார்.
“நீங்கள் யாரை நண்பர்களாக தேர்வு செய்கிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள். புதிய பழக்கவழக்கங்கள் மற்றும் கலாச்சார மாற்றங்களை இங்கே சந்திப்பீர்கள் என்பதில் தவறில்லை. கிடைத்த சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்யாதீர்கள்.”
போதை மருந்துகளால் ஆபத்து:
இந்திரா நூயி, இந்திய மாணவர்கள் போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாவது குறித்தும் பேசியுள்ளார்.
"போதைப்பழக்கத்திற்கு அடிமையாவது மிகவும் கொடுமையானது. நான் மீண்டும் சொல்கிறேன், அது ஆபத்தானது. தயவு செய்து இது போன்ற ஆபத்தான மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடாதீர்கள். வேடிக்கைக்காகக் கூட அவற்றை அணுகாதீர்கள். குறிப்பாக சட்டவிரோத செயல்களில் ஈடுபட வேண்டாம். அமெரிக்காவில் உள்ள சட்டங்களைப் புரிந்து கொள்ளுங்கள். சட்டங்களை கடைபிடியுங்கள்,” என இந்திய இளைஞர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.
மேற்படிப்பிற்காக அமெரிக்கா செல்லும் மாணவர்களுக்காக இந்திரா நூயி கூறியுள்ள அறிவுரைகள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.