உள்ளூர் இளைஞர்கள் உலக அளவில் போட்டி போட ஆங்கிலப் புலமையை அதிகரிக்க உதவும் ஸ்டார்ட் அப் DREAMDAA!
சரளமாக ஆங்கிலம் பேசத் தெரியாது என்று தயங்கும் தமிழ்நாட்டு மாணவர்களின் தயக்கத்தை போக்கி நம்பிக்கையூட்டி வருகிறது சென்னையை சேர்ந்த ஸ்டார்ட் அப் DREAMDAA.
இன்றைய உலகமயமாக்கப்பட்ட மற்றும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட உலகில், தனிப்பட்ட மற்றும் தொழில் ரீதியாக வெற்றிபெற விரும்பும் தனிநபர்களுக்கு ஆங்கில மொழியின் முக்கியத்துவம் முன்னெப்போதையும் விட முக்கியமானது.
இணையத்தை பயன்படுத்துவதற்கு ஆங்கில மொழியில் சரளமாக வாசிப்பது அவசியம். சர்வதேச வணிகத்தில் தொழிலை பெருக்க ஆங்கிலத்தின் தேவை இருக்கிறது. இதன் விளைவாக, ஆங்கிலத்தில் திறம்பட, சேவை அளிக்கக்கூடியவர்கள் சந்தையில் முக்கியத்துவத்தைப் பெறுகிறார்கள்.
சிந்தனை, செயல் அறிவு, ஊக்கம் இருந்தாலும் தமிழ்நாட்டு இளைஞர்கள் தயங்கி பின்வாங்கும் இடமாக இருப்பது ஆங்கில மொழி. இங்கிலீஷில் சரளமாக பேச முடியாது என்கிற நம்பிக்கையின்மை அவர்களிடம் உள்ளது.
அதனை தகர்த்து உள்ளூர் இளைஞர்களை உலக அளவில் போட்டி போட வைக்கும் பணியை ஒரு தன்னார்வ சேவையாக செய்து கொண்டிருக்கிறது சென்னையைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் ’ட்ரீம்டா’ ((Dreamdaa). Dream tamilnadu-வின் முன்னெடுப்பாக ஐடியா பட்டறையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஸ்டார்ட் அப்பின் முக்கிய நோக்கம் தமிழ்நாட்டு மாணவர்களுக்கும் ஆங்கில மொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியை குறைக்கும் பாலமாக செயல்படுவதே ஆகும்.
இந்த ஸ்டார்ட் அப்பின் தலைமை செயல் அதிகாரியாக (CEO) செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் துடிப்பான பெண் தொழில்முனைவர் காவ்யா ராஜ். Dreamdaa-வின் நோக்கமே ஒரு சமுதாய மாற்றத்தை கொண்டு வருவதாகும்.
“ஒரு மாணவனின் ஆங்கிலப் புலமையை வளர்ப்பதென்பது அவனுடைய மனதில் இருக்கும் ஆங்கிலம் நமக்கு வராது என்கிற மாய இருளை மட்டும் அகற்றுவதல்ல, அந்த குடும்பத்தின் நிலையையும் அது மாற்றுகிறது,” என்கிறார் காவ்யா.
பெரும்பாலும் நகர்ப்புற மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேசுவதில் சிக்கல் இல்லை என்ற நிலையில் ஆங்கில மொழி என்றாலே தயங்குவது டயர் 2,3 நகர மாணவர்களே. கல்வியில் சிறந்து விளங்கினாலும் அவர்களால் கேம்பஸ் இன்டர்வியூவில் சிறப்பாக செயல்பட முடிவதில்லை.
”ஆங்கிலம் என்பது ஒரு மொழி அதையும் கற்றுக்கொண்டு நம்மால் சரளமாக பேச முடியும். வாய்ப்புகள் எல்லோருக்கும் சமமானது தான் என்கிற சமநிலையை உருவாக்கவே மாணவர்கள் மற்றும் ஆங்கில மொழி இடையேயான இடைவெளியை நிரப்பும் மிகப்பெரிய சவாலான நோக்கத்துடன் DreamDaa செயல்பட்டுக் கொண்டிருக்கிறது,” என்கிறார் காவ்யா.
முதல் நம்பிக்கை
தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலானவர்களுக்கு ஆங்கிலம் படிக்கத் தெரியும், எழுதத் தெரியும். ஆனால், பிரச்னையே அவர்கள் அதனை புரியாமல் படிக்கின்றனர் என்பதே. இப்படி இருக்கையில் பழைய முறையில் புத்தகங்களை வைத்து வகுப்பு நடத்தும் முறை அவர்களுக்கு சலிப்பை தான் ஏற்படுத்தும் என்பதால் நவீன தொழில்நுட்பம் கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி கொடுக்கலாம் என்று முடிவு செய்தோம்.
2021ல் DreamDaa தொடங்கப்பட்டது, ஆனால், அந்த சமயம் கொரோனாவால் ஊரடங்கு போடப்பட்டதால் இவர்களால் சரியாக செயல்பட முடியவில்லை. எப்படி மாணவர்களை அணுகலாம் என்று தொடர்ந்து திட்டமிட்டு ஸ்காலர்ஷிப் பயிற்சி போல மாணவர்களுக்கு பயிற்சி அளித்துள்ளனர்.
“கடலூரில் ஒரு சிறப்பு முகாம் நடத்தி நாங்கள் பயிற்சி கொடுத்த மாணவர்கள் குறித்து பெற்றோர்களின் கருத்துகளை கேட்டோம். தங்களின் குழந்தைகள் மிக அற்புதமாக ஆங்கிலத்தில் மற்றவர்களுடன் உரையாடுவதையும், தொலைபேசியில் வங்கிச் சேவை உள்ளிட்டவற்றில் இருக்கும் ஐயங்களுக்கு ஆங்கிலத்தில் விளக்கங்களைப் பெறுவதையும் பார்த்து மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தனர். அப்போது தான் ஒரு ஸ்டார்ட் அப் மூலம் மற்றவர்களையும் வாழ்வில் ஜெயிக்க வைக்க முடியும் என்கிற மன நிம்மதி கிடைத்தது,” என்று சொல்கிறார் காவ்யா.
DreamDaa ஸ்டார்ட் அப் வருமானத்தை நோக்கமாகக் கொண்டதல்ல சேவை மனப்பான்மையுடனே செயல்படுகிறது. அதிக முதலீடுகள் இல்லை ஆனால் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க உயர் தொழில்நுட்பம், இணையதள பயன்பாடு என அதிகம் செலவு செய்ய வேண்டி இருந்தது. இந்தச் செலவை குறைக்க வேண்டும் அதே சமயம் அதிக அளவிலான மாணவர்களை எங்களின் நோக்கம் சென்றடைய வேண்டும் என்று எண்ணினோம்.
இதற்கான தீர்வாக 2022-23ல் நேரடியாக கல்லூரிக்கே சென்று மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் முறையை உருவாக்கினோம். முதன்முதலில் திருநெல்வேலி மற்றும் சேலத்தைச் சேர்ந்த தனியார் கல்லூரிகளில் செயல்படுத்தினோம்.
AI தொழில்நுட்பம் மூலம் பயிற்சி
முதலில் ஆன்லைனில் செயலி வடிவில் AI தொழில்நுட்பம் மூலம் ரோபோவுடன் மாணவர்கள் ஆங்கிலத்தில் பேசும் விதத்தில் எங்களின் பயிற்சியை தொடங்கினோம். ஏனெனில், ஆங்கிலம் பேசுவதில் மாணவர்களுக்கு இருக்கும் முதல் தடையே அவர்களிடம் இருக்கும் ஒரு வித கூச்சமே காரணம். இதுவே ஒரு ரோபோவுடன் பேசும் போது அந்த தயக்கம் மாணவர்களுக்கு இருக்காது என்று எண்ணினோம்.
ஆனால், நாளடைவில் ஆன்லைனில் AI மூலம் பயிற்சி அளிப்பதை அதிகமானோர் அறிமுகப்படுத்தினர். அதனால் ஆன்லைன் மட்டுமின்றி, ஆஃப்லைனிலும் கூட மாணவர்களையும் ஆங்கிலம் கற்றுக்கொள்ள வைப்பதற்கான முயற்சிகளை நாங்கள் எடுக்கத் தொடங்கினோம். மாணவர்களை ஒன்றாக ஒரு இடத்தில் வைத்து பயிற்சி அளிப்பது, அவர்களைத் தொடர்ந்து வகுப்புகளுக்கு வரவைப்பது அனைத்துமே சவாலாக இருந்தது, என்கிறார் காவ்யா.
கல்லூரியிலேயே ஒரு ஆங்கில லேப் அமைத்தோம், அங்கு வந்து ஒவ்வொரு மாணவனும் கட்டாயம் 60 நிமிடங்கள் செலவிட வேண்டும். மாணவர்கள் ஓராண்டுக்கு ஆங்கில மொழித்திறன் வளர்ச்சிக்கான பாடத்தைப் படிக்க வேண்டும் மொத்தமாக 120 மணி நேரம் செயலி மூலம் படிக்க வேண்டும்.
Beginners, Intermediate, Advanced என ஒவ்வொருவரின் ஆங்கிலத் திறனுக்கு ஏற்ப பாடங்களும், பயிற்சிகளும் உள்ளன. தவறான உச்சரிப்பை திருத்துவது, குறைவான மதிப்பெண் பெற்றால், திரும்ப படிக்க வைப்பது என எல்லாவற்றையும் ஆப் செய்கிறது. இதில் கூடுதலாக தமிழிலேயே UI இருப்பதனால் கிராமப்புற மாணவர்களுக்கு உதவியாக இருக்கிறது.
நினைத்தது வேறு நடந்தது வேறு
மாணவர்களை நேர்காணலில் ஆங்கிலத்தில் சரளமாக பேச வைத்துவிட வேண்டும் என்பது மட்டுமே என்னுடைய நோக்கமாக இருந்தது. என்னுடைய புரிதலும் அந்த அளவில் தான் இருந்தது, ஆனால், மாணவர்களோ சரளமாகப் பேசுவதைத் தாண்டி தங்களால் இப்போது ஆங்கிலத்தை நன்கு புரிந்து கொள்ள முடிவதால் பாடங்கள் எளிதாகிவிட்டது என்று கூறுகின்றனர்.
“புரிந்த பாடத்தை தங்களுக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் தானே சுயமாக எழுத முடிகிறது என்று சொன்னது என்னை ஆச்சரியப்படுத்தியது. நான் நினைத்தது ஒன்று ஆனால் நடந்தது அதைவிட சிறப்பான விஷயம். ஒரு மாணவன் ஆங்கிலத்தில் பேசி வேலை வாங்க முடியாவிட்டாலும் சுயமாக ஒரு ஸ்டார்ட் அப்போ அல்லது குடும்பத்தின் தொழிலை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லவோ ஒருவரை அணுகும் போதோ அது குறித்த புத்தகங்களைப் படிக்கும் போதோ இன்று கற்கும் ஆங்கில அறிவு மிகப்பெரும் உறுதுணையாக இருக்கும், உண்மையில் இதுவே வளர்ச்சி என்று நான் கருதுகிறேன்,” எனச் சொல்கிறார் காவ்யா.
DreamDaa மூலம் வருமானம் இல்லை ஒரு வகையில் தன்னார்வ தொண்டு நிறுவனம் போலத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். எனினும், அதிக கட்டணமின்றி மாணவர்கள் பயன்பெறக்கூடிய அளவில் கட்டணம் நிர்ணயித்துள்ளோம். அந்தக் கட்டணத்தை கல்லூரிகள் கட்டிவிடுகின்றன. முதலில் தயக்கத்துடன் எங்களுடன் கைகோர்த்த 2 கல்லூரிகள் மெல்ல மெல்ல மாணவர்களின் திறன் வளர்ச்சியில் மாற்றம் ஏற்பட்டதைப் பார்த்து மாணவர் சேர்ககைக்கு வலு சேர்க்கும் ஒரு விஷயமாக DREAMDAA சேவையை பார்க்கத் தொடங்கினர்.
பயிற்சிகளை அளித்து மாணவர்கள் ஆங்கிலத்தில் பேசுவதை பதிவு செய்து சமூக ஊடகங்களில் பதிவிடுவது, கருத்தரங்கங்கள் நடத்துவது என்று மாணவர்களின் ஆங்கிலத் திறனை வெளிஉலகிற்கு காட்டினோம். 8 மாத காலத்திற்குள் 2000 மாணவர்களுக்கு பயிற்சி அளித்து அவர்களின் நம்பிக்கையை வளர்த்திருக்கிறோம். . ஒரு மாணவருக்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் வரை கட்டணமாக கல்லூரியிடம் இருந்து வசூலித்தே இந்த ஸ்டார்ட் அப் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
நிச்சயமாக இந்த ஆண்டில் சுமார் 20 கல்லூரிகளிலாவது DREAMDAA செயல்படும் அதற்கான முதலீட்டை திரட்டுவதற்கான வாய்ப்பை இயக்குனர்கள் குழு ஆராய்ந்து வருவதாக காவ்யா பகிர்ந்தார்.
தொழில்முனைவு குறித்த ஆலோசனைகளை வழங்கும் பிரபல ஆலோசகர் சுரேஷ் சம்பந்தம், பில்லிங் பேரடைஸ் நிறுவனர் சிவக்குமார் சடையப்பன் உள்ளிட்டோர் Dreamdaa-வின் இயக்குனர்களாகவும் வழிகாட்டிகளாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
யார் இந்த காவ்யா?
என்னுடைய தொழில்முனைவு பயணம் என்பது ஒரு ஏணிப்படியைப் போலத் தான். நான் திருச்சியில் பிறந்து வளர்ந்தேன், அப்பா தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தில் (TADCO) பொறியாளராகப் பணியாற்றியதால் பணிமாறுதல்கள் இருந்து கொண்டே இருக்கும். அதனால் நானும் அரசுப் பள்ளியில் தான் மாறி மாறி படித்தேன்.
எங்களுடைய குடும்பத்தில் எல்லோருமே பொறியியல் பட்டதாரிகள் என்பதால் நானும் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் பி.டெக் படித்தேன். 2010ல் கல்லூரிப் பட்டப்படிப்பை முடித்த உடனேயே கல்லூரி நேர்காணலின்போதே பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. பெங்களூரு, மைசூரு என ஐந்து ஆண்டுகள் இன்போசிஸ் நிறுவனத்தில் Product engineerஆக பணியாற்றினேன். Testing பணிக்கு அவ்வளவு வரவேற்பு இல்லாத காலத்திலேயே எனக்கு நல்ல பணி வாய்ப்பு கொடுத்தனர்.
நான் பணியாற்றியது ஒரு வங்கி சார்ந்த மென்பொருள் என்பதால் மிகவும் பிடித்துப் பணியாற்றினேன். ஒரு கட்டத்தில் ஒரே வேலையை திரும்பத் திரும்ப செய்வதைப் போலத் தோன்றியது. பணி நேரம் போக எஞ்சிய நேரத்தில் ஏதேனும் செய்வதற்கான வாய்ப்பும் இருந்தது.
பொதுவாகவே பெண் என்பதால் அழகு சார்ந்த விஷயங்களை அறிந்து கொள்வதில் ஒரு ஆர்வம் இருந்தது. அதன் பின்னர், தமிழ்ப் பெண்களுக்கென்று பிரத்யேகமாக எந்த பேஷன் தகவலுமே இல்லை என்பதால் அவர்களை மையமாக வைத்து என்னுடைய blog-களில் எழதத் தொடங்கினேன், என்று தன்னைப் பற்றி கூறுகிறார் காவ்யா.
எதிர்பாராமல் தொழில்முனைவர் ஆன காவ்யா
இதன் தொடர்ச்சியாக TBG (tamil brides guide) என்று மணப்பெண்களுக்காகவே பிரத்யேகமாக சேலை முதல் அலங்காரம் வரை அனைத்துத் தகவல்களையும் எழுதி வந்தேன். எனக்கு இருந்த தகவல் தொழில்நுட்ப அறிவை வைத்து நானே போஸ்டர்கள் தயாரித்து பதிவிட்டுவந்தேன்.
“இளம் வயது பெண்களிடம் என்னுடைய blog அதிக கவனத்தை ஈர்த்தது. நாளடைவில் அதையே ஒரு சேவையாக வழங்கத் தொடங்கினேன். மணப்பெண்களுக்குத் தேவையான நவீன நகைகள், மேக்அப் தொடங்கி சகல ஏற்பாடுகளை செய்து கொடுக்கத் தொடங்கினேன். அதன் பின்னர் நிறைய workshop நடத்துவது என்று blogல் தொடங்கியது businessஆக ஆரோக்கியமான வளர்ச்சியை கொண்டிருந்தது.”
திட்டமிட்டு நான் தொழில்முனைவர் ஆகவில்லை, ஓராண்டு ஐடி பணி, tgb என இரண்டையுமே சமன் செய்து செயல்பட்டுக் கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் எனக்கும் திருமணம் ஆனதால் ஐடி வேலையை விட வேண்டிய சூழ்நிலை இருந்தது. இதனால் முழுநேரமாக tgbஐ கையில் எடுத்து செயல்படத் தொடங்கினேன். இப்படித்தான் நான் எதிர்பாராத விதமாக தொழில்முனைவரானேன்.
பிசினஸில் பிசியான இருந்த சமயத்தில் ஐஐஎம் பெங்களூரில் பெண் தொழில்முனைவோர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சியை எனக்கு ஸ்கார்லர்ஷிப்புடன் கொடுத்தனர். சுயமாக தொழில் தொடங்கி வெற்றி கண்ட பெண் என்கிற வரையறையில் எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது.
“6 மாதங்கள் அந்த பயிற்சியை முடித்தேன், அந்த சமயத்தில் தொழிலை மேலும் வெற்றிகரமாக நடத்துவதற்கு நிதி தேவைப்பட்டது. சுயமுதலீடு செய்யும் அளவிற்கான சேமிப்பு என்னிடம் இல்லை. முதலீட்டிற்காக ஸ்டார்ட் அப் தமிழ்நாடு சிஇஓ சிவராஜா, மூத்த ஆலோசகர் சுரேஷ் சம்பந்தம் உள்ளிட்டவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.”
தேடி வந்த வாய்ப்பு
6 மாதத்திற்கு பிறகு தொழில் ஆலோசகர் சுரேஷ் சம்பந்தம், ஒரு ஸ்டார்ட் அப்பில் சிஇஓவாக செயல்பட பெண் தொழில்முனைவர்கள் தேவைப்படுவதால் என்னால் அந்த பொறுப்பில் செயல்பட முடியுமா என்று கேட்டிருந்தார். அப்படி வந்த வாய்ப்பு தான் DREAMDAA. கொரோனா காலத்தில் TBGஐ செயல்படுத்த முடியாததால் ஒரு பிரேக்கிற்கு பிறகு மீண்டும் பணியாற்றப் போகிறேன் என்கிற மகிழ்ச்சியோடு இந்த ஸ்டார்ட் அப்பில் செயல்படத் தொடங்கினேன்.
என்னுடைய சொந்த தொழிலான TBGஐ நடத்துவதைவிட இந்த திட்டத்தில் எனக்கு பலரின் ஆதரவு இருந்ததால் இலக்கை அடைவது சிரமமாகத் தெரியவில்லை. ஐடிபணியில் இருந்தது Professionalism தந்தது, tbg நடத்தியது ஒரு தொழில்முனைவராக மக்களை அணுகுவது, வேலை நிமித்தமான அழுத்தங்களை கையாள்வது போன்றவற்றை கற்றுக் கொண்டேன்.
இவையெல்லாம் DREAMDAAவுடன் நான் சிரமமின்றி பயணிப்பதற்கான வாய்ப்புகளைத் தந்தது. கஷ்டங்கள் அதிகமாக இருக்கும் அதையும் தாண்டி அதைச் செய்ய முடியும் என்கிற நம்பிக்கையை அனுபவமும் வயதும் எனக்குத் தந்தது. என்னுடைய குடும்பத்திலேயே நான் தான் முதல் தொழில்முனைவர், என்னுடைய இலக்கை நோக்கி பயணிக்க பெற்றோர், கணவர் மற்றும் குடும்பத்தினர் உறுதுணையாக இருப்பதாலேயே என்னால் தொடர்ந்து பயணிக்க முடிகிறது.
“தொழில்முனைவராகும் பயணம் மிகவும் கடினமானது, அந்த பயணம் பற்றி தெரிந்துவிட்டால் யாரும் அதில் துணிந்து இறங்க மாட்டார்கள். ஆனால் கஷ்டங்களைக் கடந்தால் அடையக் கூடிய இலக்கு என்கிற இறுதி இடம் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் தரும்,” என்று தனது அனுபவத்தை சொல்கிறார் காவ்யாராஜ்.
ஹோம் மேக்கர் டு கேமர் - 44 வயதில் பிஜிஎம்ஐ விளையாடி வருமானம் ஈட்டும் பெண் கேமிங் யூடியூப்பர்!