10 ஆயிரம் வாழைப்பழ விவசாயிகளுடன் பணியாற்றி ரூ.6 கோடி விற்றுமுதல் கண்ட அக்ரி ஸ்டார்ட் அப் ‘Greenikk’
திருவனந்தபுரத்தை மையமாக கொண்ட கிரீனிக், வாழை விவசாயிகளுக்கு உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் ஆதரவை அளிக்கும் செயலாக்க மையங்களை கொண்டுள்ளது.
கல்லூரி நண்பர்கள் ஃபாரீக் நவுஷத், பிரவீன் ஜேகப் வர்கீஸ் எப்போதுமே தொழில்முனைவில் ஆர்வம் கொண்டிருந்தனர்.
கல்லூரி நாட்களில், அவர்கள் 'இன்வெண்டோ டெக்னாலஜி சொல்யூஷன்ஸ்' எனும், இல்லத்தரசிகள் ஆன்லைனில் உணவு விற்பனை செய்ய வழிகாட்டும் நிறுவனத்தை துவக்கினர்.
பின்னர், 2016ல் ருவாண்டாவில் ’டெக்ஸியம் சொல்யூஷன்ஸ்’ எனும் மென்பொருள் நிறுவனத்தை துவக்கினர். 12 செயல்பாட்டில், நிறுவனம் 750,000 டாலர் மதிப்புள்ள டீல்களை பெற்றாலும், ஃபாரீக் மற்றும் பிரவீன் திருப்தி அடையவில்லை. அவர்கள், இந்தியாவில், இந்தியாவுக்கான நிறுவனத்தை துவக்க விரும்பினர்.
இதுவே ’கிரீனிக்’ (
) நிறுவனத்திற்கான அடித்தளமாக அமைந்தது. இதன் நிறுவனர்கள், 2019ல் இந்தியா திரும்பிய போது, நீடித்த வளர்ச்சிக்கு கொடுக்கப்படும் ஊக்கத்தை உணர்ந்தனர். இதன் காரணமாக வேளாண் துறையில் சேவையை உருவாக்கத் தீர்மானித்தனர்.திருவனந்தபுரத்தைச் சேர்ந்த Greenikk தற்போது, வாழை விவசாயிகளை மையமாக கொண்ட டிஜிட்டல் சூழலை உருவாக்கி வருகிறது. விவசாயிகளுக்கு, நிதி, விதைகள், பயிர் ஆலோசனை, காப்பீடு, பருவநிலை தகவல்கள் உள்ளிட்ட வேளாண் உள்ளீடு, உள்நாடு மற்றும் வெளிநாட்டில் உற்பத்தி, சந்தைப்படுத்தல் ஆகியவற்றை கொண்ட சந்தை தொடர்பு போன்ற சேவைகளை அளிக்கும் செயலாக்க மையங்கள் இந்த ஸ்டார்ட் அப் உருவாக்கியுள்ளது.
வாழை விவசாயிகள், பதப்படுத்தும் மையங்கள், மொத்த கொள்முதல் செய்பவர்கள், இழைகளை வாங்குபவர்கள் என வாழைப்பழ மதிப்பு சங்கிலியில் உள்ள அனைவரும் பயனடையும் வகையில் பிரச்சனைகளைத் தீர்ப்பதாக நிறுவனர்கள் கூறுகின்றனர். இந்த ஸ்டார்ட் அப் வாழைக் கழிவுகளை எடுத்துக்கொண்டு அதை உரம் மற்றும் வாழை இழைகளாக மாற்றுகிறது.
“துவக்கம் முதல் முடிவு வரை ஆதரவு அளிக்கும், வாழை மதிப்பு சங்கிலிக்கான முதல் புல்ஸ்டேக் மேடையாக விளங்குகிறோம். (நிதி/ காப்பீடு துவங்கி, சந்தைப்படுத்தல் மற்றும் கழிவில் இருந்து பயன்பெறுவது வரை). இது உண்மையில் வாழை மதிப்புச் சங்கிலியில் ஒவ்வொருவர் மதிப்பையும் உயர்த்தும்,” என்கிறார் ஃபாரீக்.
கேரளா, தமிழ்நாடு, கர்நாடாகா போன்ற நாட்டின் முக்கிய வாழை உற்பத்தி மாநிலங்களில் நிறுவனம் தற்போது தனது செயலாக்க மையங்களை அமைத்துள்ளது.
துவக்கம்
2019ல் இந்தியாவில் ஒரு முறை பிளாஸ்டிக்கிற்குத் தடை விதிக்கப்பட்டது. இதுவே, பப்பாளி இலை காம்புகள் கொண்டு, பாணங்கள் பருகும் ஸ்டிராவை உருவாக்கும் எண்ணம் பிரவீனுக்கு உண்டானது. இதனையடுத்து, அவரும், ஃபரீக்கும் விஞ்ஞானி ஒருவருடன் இணைந்து, ஸ்டிராவை உருவாக்கி, ஐஐஎம் கொல்கத்தாவில் நடைபெற்ற டாடா சமூக தொழில்முனைவு சவால் போட்டியில் பங்கேற்றனர். 2020ல் நாட்டின் முன்னணி 3 சமூக ஸ்டார்ட் அப்’பாகவும் நிறுவனம் தேர்வானது.
2020 வரை நிறுவனம் பப்பாளி டீலர்களுடன் இணைந்து செயல்பட்டது. எனினும், பெருந்தொற்றும் காலத்தில், செலவு மற்றும் விருந்தோம்பல் துறை சுணக்கம் காரணமாக இந்த திட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டியிருந்தது.
இதனிடையே, இதன் வலைப்பின்னல் மூலமாக பழங்களை விற்பது தொடர்பான கோரிக்கை வந்து கொண்டிருந்தன. மத்திய அரசின் BIRAC உதவித்தொகை திட்டத்தில் இணைந்து பணியாற்றியதும் குழுவினருக்கு புதிய புரிதலை அளித்தது. இந்தத் திட்டத்தில், நுகர்வோருக்கு பொருட்களை வழங்கும் பி2சி மாதிரியை உருவாக்குவதற்காக விவசாயிகளுடன் இணைந்து செயல்பட்டது. இந்த மாதிரிக்காக, அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டாளரிடம் இருந்து நிதியும் கிடைத்தது.
பொருளாதாரம் திறந்துவிடப்பட்ட போது, Greenikk, பி2பி மாதிரியை வளர்ச்சிக்கான பாதையாகக் கருதியது.
“டிஜிட்டல் வர்த்தகராக இருப்பது தவிர, எங்களால் எந்த மதிப்பு கூட்டலையும் அளிக்க முடியவில்லை. எனவே, நிறுவனங்களாகிய நாங்கள், முதலில் ஒரு சில பயிர்களில் அல்லது ஒரு பயிரில் கவனம் செலுத்தி பின்னர் விரிவாக்கம் செய்தால் என்ன என யோசித்தோம்,” என்கிறார் ஃபாரீக். இதன் காரணமாக, அனைத்து பருவகால பயிரான வாழை மீது கவனம் செலுத்தினர்.
சவால்கள்
200 ஆண்டுகால பழம் மற்றும் காய்கறிகளுக்கான சப்ளை செயினை ஒருங்கிணைப்பது கொஞ்சம் கடினமான பணி என்கிறார். துவக்கத்தில் நிறுவனம், ஒரு சில பங்கேற்பாளர்களால் ஏமாற்றப்பட்டது. ஒரு நாள் ஒரு டிரக் வாழை காணாமல் போய், டீலரால் ஏமாற்றப்பட்டு ரூ.1.55 லட்சம் நஷ்டம் ஏற்பட்டத்தை நினைவு கூர்கிறார். ஃபாரீக்.
“விவசாயிகளை நேரடியாக அணுக வேண்டாம் என்று டீலர்களிடம் இருந்து எதிர்ப்பும், மிரட்டலும் வந்தன. பூஜ்ஜியம் ரொக்கம் காரணமாக இரண்டு முறை நிறுவனத்தை மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டோம். இதுவே, வாழை எனும் ஒற்றை பயிரை தேர்வு செய்யும் வகையில் மூன்று முறை வர்த்தக மாதிரியை மாற்ற வைத்தது,” என்கிறார் ஃபாரீக்.
டீலர்கள் மற்றும் அனைத்து பங்குதாரர்களுக்கும் அதிகாரம் அளிக்கும் தனித்துவமான மாதிரியை எங்கள் மேடை தற்போது கொண்டிருக்கிறது, என்கிறார்.
சூழலை உருவாக்குவது
சிப்ஸ் உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள், மொத்த விற்பனையாளர்களுக்கு இந்நிறுவனம் மொத்தமாக வாழைப்பழங்களை விற்பனை செய்கிறது. இன்னமும் லாபம் ஈட்டவில்லை என்றாலும், ஆய்வில் தீவிரமாக முதலீடு செய்வதாக ஃபாரீக் கூறுகிறார்.
10,000 விவசாயிகள் வலைப்பின்னலை கொண்டுள்ள கிரீனிக். 2022 நிதியாண்டில் 300 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. நடப்பு நிதியாண்டு முடிவில் ரூ.6 கோடி விற்றுமுதலை எதிர்நோக்குகிறது.
“அனைத்து பங்குதாரர்களும் அணுகக் கூடிய தொழில்நுட்ப மேடையாக எங்கள் சேவை அமைகிறது,” என்கிறார் ஃபாரீக்.
வாழைப்பழ உற்பத்தி பகுதிகளில் அமையும் பெளதீக செயலாக்க மையங்கள், விவசாயிகளுக்கு அனைத்து வேளாண் சேவைகளையும் வழங்கும். டிஜிட்டல் மேடை அனைத்து பங்குதாரர்களையும் இணைத்து, நிதி மற்றும் இதர வசதிகளை அவர்கள் பெற வழி வகுக்கும்.
“வாழைப்பழத்தில் இருந்து, சிப்ஸ், வாழைப்பழத்தூள், வாழைப்பழ ஒயின் போன்ற அதிக மதிப்பு உள்ள பொருட்களையும் கொண்டிருப்போம். அதே நேரத்தில் வாழைக் கழிவுகள் வாழை இழை, கைவினைப்பொருட்கள் மற்றும் ஜவுளி தயாரிக்கப் பயன்படும்,” என்கிறார்.
கிரீனிக் நிறுவனம் தற்போது, ’விமலா வெல்பேர்’ எனும் மேடை மூலம் தனது பொருட்களை விற்பனை செய்கிறது. எதிர்காலத்தில் அமேசான் போன்ற இ-காமர்ஸ் மேடைகளில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.
12 பேர் கொண்டு குழுவை பெற்றுள்ள இந்த ஸ்டார்ட் அப், பியாண்ட் ஸ்னேக்ஸ் (ஷார்க்டேங்க் நிதியுதவி பெற்றது), டியாரா புட்ஸ், செட்டா புட்ஸ் மும்பை, கோழிகோடன்ஸ், விமலா வெல்பேர் செண்டர் உள்ளிட்ட வாடிக்கையாளர்களை பெற்றுள்லது. Vegrow, INi farms, மற்றும் தேசாய் பார்ம்ஸ் போன்ற நிறுவனங்களுடன் போட்டியிடுகிறது.
சந்தை
இந்தியா 1300 வேளான் நுட்ப நிறுவனங்களைப் பெற்றுள்ளது. வேளாண் நுட்ப நிதி பெறுவதில் உலகில் மூன்றாவது பெரிய நாடாக உள்ளது என பைன் & கம்பெனி தெரிவிக்கிறது. ஈஒய் அறிக்கைபடி, 2025ல், சந்தை இணைப்பு மற்றும் சப்ளை செயின் 12 பில்லியன் டாலரை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அண்மையில், Greenikk ரூ.5.04 கோடியை விதைக்கு முந்தைய சுற்று நிதியாக திரட்டியது. 9 யூனிகார்ன் வென்ச்சர்ஸ், கேரளாவைச்சேர்ந்த தேவதை குழுமம் ஸ்மார்ட் ஸ்பார்க் வென்சர்ஸ் தலைமையிலான சுற்றில் மொருஷியசைச் சேர்ந்த மாஸ்டர்மைண்ட் கேபிடல் வெசனர்ஸ் தலைவர் மனீஷ் மோடி, ரேஷமண்டி தலைவர்கள் சவுரப் அகர்வால், மயங்க் திவாரி மற்றும் ஜீன் இன்போ இயகுனர் குழுவில் அங்கம் வகிக்கும் அர்ஜுன் பிள்ளை ஆகியோர் பங்கேற்றனர்.
எதிர்காலத் திட்டம்
தமிழ்நாட்டின் தேனி மற்றும் மேட்டுப்பாளையத்தில் மாதிரி பண்ணையை அமைக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இங்கு நவீன வாழை பயிரிடும் முறை மேற்கொள்ளப்பட உள்ளது. இப்பகுதி விவசாயிகளுக்கான மாதிரியாக இது விளங்கும் என்கிறார் ஃபாரீக்.
கொச்சி, தேனி ஆகிய பகுதிகளில் கைவினைஞர்கள் மையங்களை அமைக்கவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இங்கு வாழை இழைகள் மதிப்பு கூட்ட பொருட்களாக உருவாக்கப்படும்.
வாழைப்பழம் தொடர்பான விவசாயிகள் தொடர்பு திட்டம், சந்தைப்படுத்தல் சேவைகள், ஆலோசனை வழங்க, தமிழ்நாட்டில் நிறுவனம் இரண்டு வேளாண் உள்ளீடு மையங்கள் மற்றும் சேகரிப்பு மையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது.
அடுத்த 15 மாதங்களில் 50,000 விவசாயிகளை சென்றடைந்து, தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் செயலாக்க மையங்களை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக ஃபாரீக் கூறுகிறார்.
ஆங்கிலத்தில்: ஐஸ்வர்யா லட்சுமி | தமிழில்: சைபர் சிம்மன்
வேளாண் கழிவுகளை விவசாயிகளிடம் நேரடியாக வாங்குவதாக கோவை ‘Buyofuel’ அறிவிப்பு!
Edited by Induja Raghunathan