வேளாண் பட்ஜெட் 2024: கூட்டுறவு பயிர்க்கடன் வழங்க ரூ.16,500 கோடி இலக்கு - விவசாயிகளுக்கு என்ன பலன்கள்?
2024-2025ம் நிதியாண்டிற்கான வேளாண் பட்ஜெட் இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 4வது முறையாக வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.
2024-2025ம் நிதியாண்டிற்கான 'வேளாண் பட்ஜெட்' இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 4வது முறையாக வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.
2021ம் ஆண்டு திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்தே வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தக்கல் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
கூட்டுறவு பயிர்க்கடன் வழங்க ரூ.16,500 கோடி இலக்கு; பயிர்க்கடன் வட்டி மானியத்திற்கு ரூ.700 கோடி ஒதுக்கீடு
இந்த பட்ஜெட்டில் எந்தெந்த திட்டங்கள் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ளன, திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி எவ்வளவு என விரிவாக பார்க்கலாம்...
மண் வளம் காக்க திட்டங்கள்:
- பசுந்தாள் உர உபயோகத்தினை விவசாயிகளிடையே ஊக்குவித்து மண்வளம் காக்கும் வகையில் 2 இலட்சம் ஏக்கரில் பசுந்தாள் உரம் பயிரிட 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
- மண்புழு உரம் தயாரித்து மண்வளத்தை மேம்படுத்திட ஒரு விவசாயிக்கு இரண்டு மண்புழு உரப்படுக்கைகள் வீதம் 10,000 விவசாயிகளுக்கு வழங்கிட 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். தொடர்ந்து மண்புழு உரம் தயாரிக்க ஏதுவாக, 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
- இரசாயன உரங்களின் பயன்பாட்டினைக் குறைத்து மண்ணின் வளம் காக்க, 6 கோடியே 27 இலட்சம் ரூபாய் மத்திய, மாநில அரசு நிதி ஒதுக்கீடு.
- 37,500 ஏக்கர் களர் நிலங்களைச் சீர்ப்படுத்த 7 கோடியே 50 இலட்சம் ரூபாயும், 37,500 ஏக்கர் அமில நிலங்களைச் சீர்ப்படுத்த 15 கோடி ரூபாயும் ஒதுக்கீடு.
துவரை, எள் விவசாயிகளுக்கு அசத்தல் அறிவிப்பு:
- அனைத்துப் பயறுவகைகளின் உற்பத்தியில் தன்னிறைவு பெறும் நோக்கத்தில், 2024-2025 ஆம் ஆண்டில் பயறு பெருக்குத் திட்டம் 4 இலட்சத்து 75 ஆயிரம் ஏக்கர் பரப்பில், 40 கோடியே 27 இலட்சம் ரூபாய் ஒன்றிய, மாநில நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.
- 2024-2025 ஆம் ஆண்டில் 50,000 ஏக்கர் பரப்பில், துவரையைத் தனிப் பயிராகவோ, வரப்புப் பயிராகவோ அல்லது ஊடுபயிராகவோ பயிரிட, 17 கோடியே 50 இலட்சம் ரூபாய் மாநில அரசு நிதி ஒதுக்கீடு.
- எண்ணெய்வித்துப் பயிர்களான நிலக்கடலை, எள், சூரியகாந்தி, சோயாமொச்சை, ஆமணக்கு ஆகிய பயிர்களின் சாகுபடியை சுமார் 2 இலட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பரவலாக்க, மத்திய மற்றும் மாநில அரசு நிதியில் இருந்து 45 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
வேளாண் பட்ஜெட் புதிய திட்டங்கள் என்னென்ன?
- மண் வளத்தை காக்கும் வகையில், “முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்” (CMMK MKS) என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 2024- 2025-ஆம் ஆண்டில், 22 இனங்களுடன் 206 கோடி ரூபாய் நிதியில் செயல்படுத்தப்படும்.
- “ஒரு கிராமம் ஒரு பயிர்" என்ற புதிய திட்டம் 15 ஆயிரத்து 280 வருவாய் கிராமங்களில் செயல்படுத்தப்படும்.
இதுகுறித்து அமைச்சர் கூறுகையில்,
“ஐந்து முதல் பத்து ஏக்கர் பரப்பில், நெல், சோளம், மக்காச்சோளம், கம்பு, குதிரைவாலி, கேழ்வரகு. துவரை, உளுந்து, பச்சைப்பயறு, நிலக்கடலை, எள், சூரியகாந்தி, பருத்தி, கரும்பு போன்ற முக்கியப் பயிர்களுக்கான நிலம் தயாரிப்பு, உயர் விளைச்சல் ரகங்களைப் பயன்படுத்துதல், விதை நேர்த்தி, விதைப்பு, ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை உட்பட்ட அனைத்துத் தொழில்நுட்பங்களுடன் செயல் விளக்கங்கள் அளிக்கப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்,” என்றார்.
- அதிக நீர் தேவைப்படும் நெற்பயிருக்கு மாற்றாக, குறைந்த நீர்த் தேவையுடைய மாற்றுப்பயிர்களான சிறுதானியங்கள், பயறுவகைகள், எண்ணெய்வித்துப் பயிர்களை ஊக்குவிக்கும் வகையில், ஒரு இலட்சம் ஏக்கர் பரப்பளவில் மாற்றுப் பயிர் சாகுபடித் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
- விவசாயிகளின் நிலங்களில் தானியங்கி மின்னணு பாசன வசதிகள் ஏற்படுத்த மானியம் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் 12 ஆயிரம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் 25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கரும்பு விவசாயிகளுக்கு மானியம்:
- சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கும் விவசாயிகளுக்கு ஏற்கனவே டன் ஒன்றுக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு ஊக்கத்தொகையான 195 ரூபாய், டன் ஒன்றுக்கு 215 ரூபாயாக உயர்த்தப்படுகிறது.
“இத்திட்டத்தின் மூலம், சுமார் ஒரு இலட்சத்து 30 ஆயிரம் கரும்பு விவசாயிகள் பயன்பெறுவர். இதற்கென, 250 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்,” என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
- சர்க்கரைக் கட்டுமானத்தை உயர்த்தவும், பூச்சி, நோய் தாக்குதலுக்கு எதிர்ப்புடைய அதிக சர்க்கரைக் கட்டுமானம் தரக்கூடிய புதிய கரும்பு இரகங்களைக் கரும்பு விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கவும், “கரும்பு சாகுபடி மேம்பாட்டுத்திட்டத்திற்கு” 7 கோடியே 92 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு.
டிராகன் பழ விவசாயிகளுக்கு மானியம்:
வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய ஊட்டச்சத்து நிறைந்த அத்தி, கொடுக்காப்புளி, பெருநெல்லி, விளாம்பழம், இலந்தை, டிராகன் பழம் போன்ற பயிர்களை குறைவான தண்ணீரில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானியம் வழங்குவதற்காக 3 கோடியே 64 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தென்னை விவசாயம்:
- தென்னந்தோப்புகளில் வாழையும், நன்கு வளர்ந்த தென்னந்தோப்புகளில் ஜாதிக்காயும் ஊடுபயிராகப் பயிரிட, 5 கோடியே 70 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு.
- தென்னை மரங்களில் ஏற்படக்கூடிய ஒருங்கிணைந்த பூச்சி, நோய் மேலாண்மை உத்திகளை, விவசாயிகளுக்கு வழங்கிட, ஒரு கோடியே 15 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு.
- 10,000 ஏக்கரில் தென்னை சாகுபடி மேற்கொள்ள, 7 லட்சம் தரமான தென்னை நாற்றுக்கள் விநியோகம் செய்யப்படும்.
எந்தெந்த மாவட்டங்களுக்கு என்னென்ன திட்டம்?
- பெரம்பலூர், தூத்துக்குடி, கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், தருமபுரி, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இயற்கை வள மேம்பாட்டு பணிகளுக்காக ரூ.43 கோடி நிதி ஒதுக்கீடு.
- தருமபுரி, காஞ்சிபுரம், மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் விதை பரிசோதனை நிலையங்களுக்கு NABL தரச்சான்று வழங்கப்படும்.
- ஈரோடு கள்ளக்குறிச்சி தர்மபுரி மாவட்டங்களுக்கு 8 மஞ்சள் வேக வைக்கும் இயந்திரங்களும் 5 மஞ்சள் மெருகூட்டும் இயந்திரங்களும் ரூ. 2.12 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்.
- கன்னியாகுமரியில் சூரியத்தோட்டம், செங்கல்பட்டில் செம்பருத்தி நடவுச்செடிகள் உற்பத்தி மையம்.
- தஞ்சாவூர் மாவட்டத்தில் திருமலைச் சமுத்திரம் என்ற இடத்தில், 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மருதம் பூங்கா அமைக்கப்படும்.
- கன்னியாகுமரியில் உள்ள வேளிமலையில் முல்லைப் பூங்கா 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
- செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூரில், ஒரு கோடி ரூபாய் செலவில் செம்பருத்தி நடவுச்செடிகள் உற்பத்தி மையம் அமைக்கப்படும்.
- தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டம், நடுவக்குறிச்சி கிராமத்தில் நான்கு ஏக்கர் நிலப்பரப்பில் புதிய அரசுத் தோட்டக்கலைப் பண்ணை, ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
- திருவண்ணாமலை, தருமபுரி, விழுப்புரம், கடலூர், இராணிப்பேட்டை, திருவள்ளூர், தஞ்சாவூர் நாகப்பட்டினம், திருவாரூர், தேனி ஆகிய 10 மாவட்டங்களில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு, தானியங்களை உலர்த்துவதற்கான நடமாடும் உலர்த்திகள், 2 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வாங்கப்படும்.
- பண்ருட்டியில் பலா மதிப்புக்கூட்டுதலுக்கான மையம். 16 கோடியே 13 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒன்றிய, மாநில அரசு நிதியில் ஏற்படுத்தப்படும்.
- பெரம்பலூர் மாவட்டத்தில் சிறுதானியங்களுக்கான தொழில்நுட்ப வணிக மேம்பாட்டு மையம் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ளது.
- தஞ்சாவூரில் வேளாண் விளை பொருட்கள் கழிவுகளிலிருந்து ஏற்றுமதி சந்தை வாய்ப்புள்ள மூலக்கூறுகளைப் பிரித்தெடுப்பதற்கான கட்டமைப்புகள் உருவாக்கப்படும்.
- ஊட்டி ரோஜா பூங்காவில் 100 புதிய இரக ரோஜா வகைகள் நடவு செய்யப்படும்.
- கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, வேலூர் ஆகிய இடங்களில் ஏற்றுமதி தரப் பரிசோதனை செய்து சான்றிதழ் வழங்குவதற்கான ஆய்வகங்களும், உணவுப்பரிசோதனை மையங்களும் அமைக்கப்படவுள்ளது.
புவிசார் குறியீடு:
சத்தியமங்கலம் செவ்வாழை, கொல்லிமலை மிளகு, மீனம்பூர் சீரக சம்பா, ஐயம்பாளையம் நெட்டைத் தென்னை, உரிகம்புளி, புவனகிரி மிதிபாகற்காய், செஞ்சோளம், திருநெல்வேலி அவுரி, ஓடைப்பட்டி விதையில்லா திராட்சை, செங்காந்தள் விதை ஆகிய 10 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற 30 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு.
மீன், ஆடு, மாடு, கோழி வளர்ப்பு:
- ஆடு, மாடு, கோழி, மீன் வளர்ப்புக்கு முதலீட்டு கடனுக்கான, வட்டி மானியத்திற்கு ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு.
- பசுந்தீவன ஊடுபயிர் செய்து, பால் உற்பத்தியை உயர்த்த 5,000 ஏக்கர் பரப்பிற்கு ரூ.2 கோடி மானியம்.
- மீன் வளர்ப்போரின் வருவாயை உயர்த்துவதுடன், உள்நாட்டு மீன் உற்பத்தியும் அதிகரித்திட புதிதாக நன்னீர் மீன் வளர்ப்பு குளங்கள் அமைப்பதற்கு, இடுபொருள் மானியம் மீன் தீவன ஆலை போன்ற திட்டங்களுக்காக ரூ.4.60 கோடி மானியம்.
பிற முக்கிய அறிவிப்புகள்:
- 10 நடமாடும் நெல் உலர்த்தும் இயந்திரங்களை மானியத்தில் வழங்க ரூ.90 லட்சம் நிதி ஒதுக்கீடு.
- புதிய வேளாண் இயந்திரங்கள் கொள்முதலுக்காக ரூ.28.82 கோடி நிதி ஒதுக்கீடு.
- விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் ஆபத்து இல்லாமல் பயிர்களை காக்கும் நோக்கில் விவசாயிகளுக்கு 75 ஆயிரம் மீட்டர் நீளத்திற்கு சூரிய சக்தி மின் வேலைகள் அமைக்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு.
- பாரம்பரிய காய்கறி ரகங்களை மீட்டெடுத்து, அந்த ரகங்களை ஊக்குவிக்கவும் பரப்பு விரிவாக்கம் செய்ய ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு.
- முந்திரி சாகுபடி பரப்பை அதிகரித்து உற்பத்தியை உயர்த்திட, இயற்கை இடுபொருள் செயல் விளக்கம் அமைக்க ரூ.3.36 கோடி நிதி ஒதுக்கீடு.
- மரவள்ளிக்கிழங்கில் மாவு பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த ரூ.1 கோடி ஒதுக்கீடு.
- பேரிச்சையில் பரப்பு விரிவாக்கம் செய்ய ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கீடு.
- நிரந்தர பந்தல் அமைத்து பந்தல் காய்கறிகளை பயிரிடுவதற்காக ரூ.9.40 கோடி நிதிஒதுக்கீடு.
- பாரம்பரிய மருத்துவம் அதிகரித்துள்ளதால், மூலிகை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு உதவும் வகையில் ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு
தமிழ்நாடு பட்ஜெட் 2024 - இளைஞர்கள், மகளிர் நலனிற்கு பட்ஜெட்டில் என்ன அறிவிப்புகள்?