AI திறன்மேம்பாட்டு மையங்கள் பெங்களூருவைப் புறக்கணிப்பதா?- மோகன் தாஸ் பாய் கடும் சாடல்!
ஐஐடி டெல்லி மற்றும் எய்ம்ஸ் ஆகியவை ஹெல்த்கேருக்கும், ரோப்பாரில் உள்ள ஐஐடி, வேளாண்மைக்கும் ஐஐடி கான்பூர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நீட்டிப்பு நகரங்களுக்குமாக 3 செயற்கை நுண்ணறிவு திறன் மேம்பாட்டு மையங்கள் அறிவிக்கப்பட்டன.
சமீபத்தில் AI துறையில் இந்தியாவின் திறன்களை வலுப்படுத்த மூன்று AI சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் அமைக்கும் திட்டத்தை அறிவித்தார் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான். இதில், இந்தியாவின் தொழில்நுட்ப நகரம் என்று அழைக்கப்படும் பெங்களூரு இல்லை. இந்தப் புறக்கணிப்பை இன்போசிஸ் முன்னாள் போர்டு உறுப்பினர் மோகன் தாஸ் பாய் விமர்சித்துள்ளார்.
சுகாதாரம் அல்லது ஆரோக்கியம், வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் ரீதியாக நீடிக்கும் நகரங்கள் என்று கவனம் செலுத்தும் மூன்று செயற்கை நுண்ணறிவு (AI) சிறப்பு மையங்களை (CoE) நிறுவுவதாகக் கடந்த செவ்வாயன்று அறிவிக்கப்பட்டது.
அதாவது, ஐஐடி டெல்லி மற்றும் எய்ம்ஸ் ஆகியவை ஹெல்த்கேருக்கும், ரோப்பாரில் உள்ள ஐஐடி வேளாண்மைக்கும் ஐஐடி கான்பூர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நீட்டிப்பு நகரங்களுக்குமாக 3 செயற்கை நுண்ணறிவு திறன் மேம்பாட்டு மையங்கள் அறிவிக்கப்பட்டன.
இதை அறிவித்த கையோடு அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறும்போது,
“ஹெல்த்கேர், வேளாண்மை, நீடித்த நகரங்கள் ஆகியவற்றில் செயற்கை நுண்ணறிவுத் திறன் மேம்பாட்டு மையங்கள் சுகாதாரப் பரவல், உணவுப்பாதுகாப்பை வலுப்பெறச் செய்தல் மற்றும் நகர்ப்புறத்திற்குரிய குறிப்பிட்ட சுற்றுச்சூழல் சவால்கள் ஆகியவற்றிற்கான செயற்கை நுண்ணறிவு புதுமைகளை ஆராய்ந்து புகுத்தி ஜனநாயகப்படுத்துவதற்கான முயற்சியாகும்,” என்றார்.
இந்த திட்டங்கள் கிராமங்கள், நகரங்கள், நாட்டு மக்களின் ஆரோக்கியத்திற்கு எவ்வாறு ஒட்டுமொத்தமாக பயனளிக்கும் என்பதை டாக்டர் வேம்பு எடுத்துரைத்தார்.
அமைச்சரை கேள்வி கேட்ட மோகந்தாஸ் பாய்
இந்நிலையில், டெல்லி, ரோப்பார், கான்பூர் நகரங்களைத் தேர்வு செய்து விட்டு தொழில்நுட்ப நகரம் என்று பெயர் எடுத்த பெங்களூருவைப் புறக்கணிக்கலாமா என்று இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் போர்டு உறுப்பினர் மோகன் தாஸ் பாய் கேள்வி எழுப்பியுள்ளார்.
“அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களே பெங்களூரு, அதாவது, இந்தியாவின் தொழில்நுட்ப நகரத்தில் ஒன்றும் இல்லையா? நீங்களும் அஷ்வினி வைஷ்ணவும் ஏன் தகவல் தொழில்நுட்பத்துறையில் தென் மாநிலத்தை புறக்கணிக்கிறீர்கள்? பெங்களூரை புறக்கணிக்கிறீர்கள்? நாமும் பாரதத்தின் ஒரு பகுதி இல்லையா?" என்று பாய் அந்த பதிவில் கூறியுள்ளார்.
மோகன் தாஸ் பாய் எழுப்பிய கேள்வி மற்றும் விமர்சனங்களுக்கு ஜோஹோ கார்ப்பரேஷன் சி.இ.ஓ. ஸ்ரீதர் வேம்பு பதிலளிக்கையில் அரசின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்தார்.
“மூன்று செயற்கை நுண்ணறிவு திறன் மேம்பாட்டு மையங்களைத் தேர்வு செய்த கமிட்டியில் நானும் ஒருவன் என்பதால் பாய் கேள்விக்குப் பதில் அளிக்கக் கடமைப் பட்டுள்ளேன். தென் மாநிலப் பிரதிநிதித்துவம்தான் கமிட்டியில் அதிகம். நாங்கள் எல்லோருமே தனியார் துறையிலிருந்து வந்தவர்கள் யாரைத் தேர்வு செய்ய வேண்டும் என்று அரசு எங்களுக்கு சொல்லவில்லை.“
“ AI செண்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் குறித்த இந்த முடிவின் பொறுப்பு குழுவில் எங்களிடம் தான் இருந்தது. குறிப்பாக நான் இணைத் தலைவராக இருந்தேன். இதில் வடக்கு-தெற்கு அரசியலைப் புகுத்த வேண்டாம், என்று கேட்டுக் கொள்கிறேன்.“
ஐஐஎஸ்சி பெங்களூரு, ஐஐடி மெட்ராஸ், என்ஐடி காலிகட், ஐஐடி ஹைதராபாத் மற்றும் ஐஐடி மும்பை ஆகிய அனைத்தும் மிகவும் வலுவான செயற்கை நுண்ணறிவுத் திட்டங்களை முன்வைத்தன, ஆனால் நாங்கள் தேர்ந்தெடுத்தவை இறுதியில் தனித்து நிற்கின்றன. இந்த தீர்மானத்தில் குழு ஒருமனதாக முடிவெடுத்தது. நாங்கள் எங்கள் முடிவில் நிலையாக ஆதரித்து நிற்கிறோம், என்றார்.