அமேசான் டெலிவரி பாய் டூ கிரிக்கெட்டர்: ஸ்காட்லாந்து 'ஹீரோ' கிறிஸ் கிரீவ்ஸ்!
இங்கிலாந்து வீரரால் கிரிக்கெட் வீரராக உருவெடுத்த கிரீவ்ஸ்!
உலகக்கோப்பை டி20 போட்டிகள் கவனம் பெறத் தொடங்கி இருக்கின்றன. இப்போது சூப்பர் 12ல் இடம்பெற போகும் அணிகளின் தகுதி போட்டிகள் நடந்து வருகிறது. இதில் சிறிய அணிகள் விளையாடி வருகின்றன. மொத்தம் 8 அணிகள் கொண்ட சிறிய அணியில் கவனம் ஈர்த்து வருகிறது ஸ்காட்லாந்து.
இரண்டு வெற்றிகளைப் பெற்று பட்டியலில் முன்னிலை வகித்து வரும் ஸ்காட்லாந்து, வங்கதேசத்துக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தது. இந்த ஒரு போட்டியின் மூலமாக ஸ்காட்லாந்து மக்கள் மத்தியில் வலம்வந்தவர் 28 பந்தில் 45 ரன்கள் எடுத்த ஆல் ரவுண்டர் கிறிஸ் கிரீவ்ஸ்.
இந்த ரன்கள் அடித்ததற்காக மட்டும் அவரை அந்நாட்டு மக்கள் ஹீரோவாக கொண்டாடவில்லை. அவரின் உத்வேகம் அளிக்கக் கூடிய வாழ்க்கை கதைக்காகவும் தான்.
ஏனென்றால், கிரிக்கெட்டராக வருவதற்கு முன்பு அமேசானில் டெலிவரி பாய் ஆக வேலை செய்தவர் கிரீவ்ஸ். 31 வயதான அவர் ஒரு எளிய பின்னணியிலிருந்து வந்தவர். உலகக்கோப்பை ஆட்டத்தில் விளையாட வேண்டும் என்பதை கனவாகக் கொண்டு உழைத்தவர் தற்போது அதனை நனவாக்கி இருக்கிறார்.
கிரீவ்ஸ் ஞாயிற்றுக்கிழமை அல் அமரேட் கிரிக்கெட் மைதானத்தில் வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் 7வது இடத்தில் பேட்டிங் செய்ய வந்து, 4 பவுன்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 45 ரன்கள் எடுத்த ஆட்டத்தை மாற்றினார்.
இதேபோல், தனது சக வீரர் பிராட்லி வீலுடன் இணைந்து வங்கதேச பேட்டிங் லைன் அப்பை 134 ஆகக் கட்டுப்படுத்த உதவியவர், தான் வீசிய 3 ஓவர்களில் 2/19 என்று சிறப்பாக செயல்பட்டார்.
ஸ்காட்லாந்து கேப்டன் கோட்சர், தனது சக வீரர் கிரீவ்ஸ் எப்படி கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தினார் என்பதை வெளிப்படுத்தி பேசியிருக்கிறார்.
“கிரீவ்ஸை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இந்த நிலையை அடைய அவர் உண்மையில் நிறைய தியாகம் செய்துள்ளார். அமேசானில் டெலிவரி பாய் ஆக வேலை செய்து கொண்டிருந்தார். இப்போது தனது உழைப்பால், பிளேயர் ஆஃப் தி மேட்ச் ஆக உயர்ந்துள்ளார்.”
இந்த உண்மையை வெளியில் சொன்னதற்காக அவரை பாராட்டுவாரா என்பது தெரியவில்லை. ஆனால் கிரீவ்ஸ் போன்றோரின் செயல்திறனைப் பார்க்கும்போது பெருமையாக இருக்கிறது. இவர் போன்றவர்கள் அதிகம் அறியப்படாதவர்கள். அவர் இன்று இருக்கும் இடத்தை அடைய பல தியாகங்களைச் செய்ய வேண்டியிருந்தது, என்றுள்ளார்.
டெலிவரி பாய் டூ கிரிக்கெட்டர்!
கிறிஸ் கிரீவ்ஸ் இம்மாதம் தான் சர்வதேச கிரிக்கெட் வீரராக அறிமுகமாகி இருக்கிறார். ஒருமுறை வாண்டரர்ஸ் பகுதியில் நடந்த வலை பயிற்சியின்போது இங்கிலாந்தின் முன்னாள் விக்கெட் கீப்பர் மேட் ப்ரையரை சந்தித்திருக்கிறார். அவரிடம் பேசும் வாய்ப்பு கிடைக்க, அப்போது,
“அவர் பிரிட்டிஷ் பாஸ்போர்ட் வைத்திருப்பதாகவும், தொழில்முறை கிரிக்கெட்டை இங்கிலாந்து அணியில் இணைந்து விளையாட விரும்புவதாகவும்," சாதாரணமாகக் கூறியுள்ளார்.
அப்போது கிரீவ்ஸிடம் இங்கிலாந்து வீரர் மேட் ப்ரையர் தனது மின்னஞ்சல் ஐடியை கொடுக்கும்படி கேட்க, அதற்கு தனது தாயின் மின்னஞ்சல் முகவரியை பகிர்ந்து கொண்டுள்ளார்.
மின்னஞ்சல் முகவரியை கொடுக்கும்போது மேட் ப்ரையரிடம் இருந்து பதில் வராது என்று தான் நினைத்துள்ளார். ஆனால், எதிர்பாராத விதமாக அவரிடம் இருந்து மெயில் வந்துள்ளது. இறுதியில் மேட் ப்ரையர் தான் டர்ஹாமின் அகாடமியில் சேரவும், ஸ்காட்லாந்து கிரிக்கெட் வீரராக நாட்டிற்காக விளையாடும் கனவை நனவாக்கவும் உதவி இருக்கிறார்.
தொகுப்பு: மலையரசு