கோவை உட்பட 11 நகரங்களில் 20ஆயிரம் பேருக்கு தற்காலிக வேலைவாய்ப்பு: அமேசான் அறிவிப்பு!
அமேசான் இந்தியா ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரியும் விதத்தில் இந்தப் பணி வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.
முன்னணி மின்வணிக சந்தைப்பகுதியான அமேசான் இந்தியா அதன் வாடிக்கையாளர் சேவை மையத்திற்காக 20,000 தற்காலிக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
இதில் பெரும்பாலானவை வீட்டிலிருந்தே பணிபுரியும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய வேலை வாய்ப்புகள் ஹைதராபாத், புனே, கோவை, நொய்டா, கொல்கத்தா, ஜெய்ப்பூர், சண்டிகர், மங்களூரு, இந்தூர், போபால், லக்னோ போன்ற நகரங்களில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த பணியிடங்களுக்கான கல்வித் தகுதியாக 12-ம் வகுப்பு முடித்திருக்கவேண்டும் என்றும் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகள் தெரிந்திருக்கவேண்டும் என்றும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த ஊழியர்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்திசெய்ய வேண்டும். இ-மெயில், சாட், சமூக வலைதளங்கள், போன் போன்றவற்றின் உதவியுடன் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தேவைகளை அறிந்து உதவவேண்டும்.
2025-ம் ஆண்டில் அமேசான் நிறுவனம் தொழில்நுட்பம், கட்டமைப்பு, லாஜிஸ்டிக்ஸ் போன்றவற்றில் தொடர்ந்து முதலீடு செய்து இந்தியாவில் ஒரு மில்லியன் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கத் திட்டமிட்டிருப்பதாக இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிவித்திருந்தது.
இந்த வேலை வாய்ப்புகள் தகவல் தொழில்நுட்பம், திறன் மேம்பாடு, உள்ளடக்கம் உருவாக்குதல், சில்லறை வர்த்தகம், லாஜிஸ்டிக்ஸ், உற்பத்தி என பல்வேறு துறைகளில் உருவாக்கப்படும் என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
“வாடிக்கையாளர்களின் தேவை அதிகரிப்பதைத் தொடர்ந்து வாடிக்கையாளர் சேவை மையங்கள் முழுவதும் அதிக நபர்களை பணியிலமர்த்தி வருகிறோம். அடுத்த ஆறு மாதங்களில் வாடிக்கையாளர் அதிகளவில் இணைந்திருப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்,” என்றார் அமேசான் இந்தியா வாடிக்கையாளர் சேவை இயக்குநர் அக்ஷய் பிரபு.
பணியிலமர்த்தப்படும் ஊழியர்கள் அமேசான் அலுவலகங்களில் இருந்தோ அல்லது தங்களது வீடுகள் இருந்தோ பணிபுரியலாம். தற்போது தற்காலிகமாக பணியிலமர்த்தப்பட்டாலும் ஊழியர்களின் திறன் மற்றும் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு நிரந்தர ஊழியர்களாக மாற்றப்படுவார்கள் என்றும் அமேசான் தெரிவித்துள்ளது.
“தற்போதுள்ள நெருக்கடியான சூழலில் இந்தப் பணி வாய்ப்புகள் உறுதியான வேலையையும் வாழ்வாதாரத்தையும் வழங்கும்,” என்று அக்ஷய் குறிப்பிட்டார்.