இனி, அமேசானில் பகுதி நேரமாக பார்சல்கள் டெலிவரி செய்து நீங்கள் சம்பாதிக்கலாம்!
இல்லத்தரசிகள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பகுதி நேர பணியை எதிர்பார்ப்பவர்களை இலக்காகக் கொண்டு Amazon Flex இதை அறிமுகம் செய்துள்ளது.
இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் இந்தியா, பகுதி நேர டெலிவரி மூலம் கூடுதல் வருவாய் ஈட்டுவதற்கான, ’அமேசான் பிளக்ஸ்’ எனும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இல்லத்தலைவிகள், செக்யூரிட்டி பணியாளர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் பகுதி நேர பணியை எதிர்நோக்குபவர்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் மூலம் மணிக்கு ரூ.120 முதல் ரூ.140 வரை சம்பாதிக்கலாம்.
கடந்த 2 வாரமாக முன்னோட்டம் பார்க்கப்பட்ட இந்தத் திட்டம், பெங்களூரு, மும்பை மற்றும் தில்லி ஆகிய நகரங்களில் முதல் கட்டமாக அறிமுகம் ஆகிறது.
பொதுமக்கள் பகுதி நேர டெலிவரி மேற்கொண்டு வருமான ஈட்டும் அமேசான் பிளக்ஸ் திட்டம், அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்பெயின் உள்ளிட்ட ஆறு நாடுகளில் ஏற்கனவே செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் அமேசான்; ஆறு ஆண்டுகளாக செயல்பட்டு வந்தாலும் தற்போது தான் இந்தத் திட்டத்தை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
இந்திய சந்தையின் பிரத்யேகத் தேவையை கருத்தில் கொண்டு, இந்த வசதி தாமதமாக அறிமுகம் ஆவதாக, அமேசான் நிறுவன ஆசிய செயல்பாடுகள் துணைத்தலைவர் அகில் சக்சேனா கூறுகிறார்.
“இந்திய சந்தையில் பொருட்களை வாடிக்கையாளர்கள் கையில் கொடுக்க வேண்டியிருக்கிறது. (மேற்கத்திய சந்தையில் வாயில் பொருட்களை வைத்து விட்டுச் செல்லலாம்). கேஷ் ஆன் டெலிவரி என்றால், டெலிவரி செய்பவர் மிச்சச் சில்லரை கொடுக்க வேண்டியிருக்கும். ரொக்கம் சார்ந்த பிரச்சனைகளைத் தவிர்க்க, அமேசான் பே வாலெட்டில் நேரடியாக மிச்சத் தொகை செலுத்தப்படும்,” என்று விளக்கம் தருகிறார் அகில்.
சரி, அமேசான் பிளெக்ஸ் சேவையில் இணைவது எப்படி?
- முதலில் அமேசான் பிளெக்ஸ் செயலியை டவுண்லோடு செய்து, செயல்பட விரும்பும் பகுதி மற்றும் நேரத்தை குறிப்பிட்டு டெலிவரி பார்ட்னராக பதிவு செய்து கொள்ள வேண்டும்.
- இந்த திட்டம், ’ஒயுட் குட்ஸ்’ ரக பொருட்களுக்கு மட்டும் பொருந்தாது. பேக்பேக்கில் கொண்டு செல்லக்கூடிய பொருட்கள் மட்டுமே இதில் இடம்பெறும் என்கிறார் அகில். ஆக, மின்னணு பொருட்கள், புத்தகங்கள், ஆடைகள் போன்றவற்றை டெலிவரி செய்யலாம்.
இந்தத் திட்டத்தில் இணையும் பகுதிநேர பார்ட்னர்களுக்கு, தினமும் நான்கு மணி நேர ஸ்லாட் ஒதுக்கப்படும். டெலிவரி நிலையங்களில் இருந்து பொருட்களை பெற்றுக் கொண்டு, பின்னர் நேரம் முடிந்தவுடன், டெலிவரி செய்யப்படாத பொருட்கள் மற்றும் ரொக்கத்தை ஒப்படைக்க வேண்டும்.
டெலிவரி பார்ட்னர்களுக்கு, ஒவ்வொரு புதன் கிழமையும், வங்கி ஆன்லைன் டிரான்ஸ்பர் மூலம் பணம் அளிக்கப்படும். இவர்களுக்கு ரூ.5 லட்சம் காப்பீடும் அளிக்கப்படும்.
இந்த முறை செயல்படும் விதம் பற்றி விளக்கம் அளிக்கும் வீடியோக்கள் தவிர, வகுப்பறை பயிற்சியும் அளிக்கப்படும். பயனாளிகள் தங்களைப்பற்றிய தகவல்களை அளித்து பதிவு செய்து கொள்ள வேண்டும்.
ஆக, ஸ்விக்கி, ஜோமேட்டோ மற்றும் உபெர் மட்டும் அல்ல இனி அமேசான் பிளக்ஸ் மூலமும் பகுதிநேர வருமானம் சம்பாதிக்கலாம்.
ஆங்கில கட்டுரையாளர்: ஆதிரா நாயர் | தமிழில் : சைபர்சிம்மன்