Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

மாதவிடாய் சுகாதாரத்தை ஊக்குவிக்க பேட்களின் அணிவரிசை...

சென்னை நிறுவனம் மற்றும் மகப்பேறு மருத்துவர்களின் உதவியோடு 10,105 சானிட்டரி பேட்களை கொண்டு 1,078 மீட்டர் பேட்களை வரிசைப்படுத்தி கின்னஸ் உலக சாதனை!

மாதவிடாய் சுகாதாரத்தை ஊக்குவிக்க பேட்களின் அணிவரிசை...

Thursday February 07, 2019 , 2 min Read

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் காலத்தின் போது சுகாதாரத்தை எப்படி பேணி காக்க வேண்டும் என பல விழிப்புணர்வுகள் பிரச்சாரம் இங்கு நடந்துக்கொண்டு தான் இருக்கிறது. இருப்பினும் சில நகரங்கள் மற்றும் பல கிராமப்புறங்களில் வசிப்போரிடையில் இன்னும் மாதவிடாய் ஆரோக்கியம் பற்றிய போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை.

இந்நிலையில் இந்திய மெடிக்கல் காங்கிரஸ் மாதவிடாய் சுகாதாரத்தை வலியுறுத்த, சானிட்டரி பேட்களை நீண்ட வரிசையில் அடுக்கி கின்னஸ் உலக சாதனையை மேற்கொண்டுள்ளனர்.

62வது மகப்பேறியல் மற்றும் பெண்ணியியல் அனைத்து இந்திய காங்கிரஸ் கூட்டத்தின் போது,

சென்னையைச் சேர்ந்த ‘ayzh’ எனும் சேனிட்டரி பேட் தயாரிக்கும் நிறுவனம்; 500 மகப்பேறு மருத்துவர்களின் உதவியோடு, 10,105 சானிட்டரி பேட்களை கொண்டு 1,078 மீட்டர் (3,537 அடி) வரிசையை உருவாக்கியுள்ளனர். ஏழரை மணி நேரத்திற்குள் இத்தனை பேட்களையும் வரிசைப்படுத்தியதற்காக கின்னஸ் உலக சாதனைப் பட்டியலில் இடமும் கிடைத்துள்ளது.

பெங்களூரில் அரங்கேறிய இந்த சாதனையில் 1,078 மீட்டர் வரிசையின் இடையே கருப்பை போன்ற வடிவத்தையும் பேட்களை கொண்டு உருவாக்கியுள்ளனர். அதன் கீழ் "Nothing's more cuterus than your uterus" என்ற வாசகத்தையும் எழுதியுள்ளனர்.

“மாதவிடாயின் போது பெண்கள் தங்களது சுகாதாரத்தை காக்க நிச்சயம் சானிட்டரி பேட்கள் தேவை. பெண்கள் இதைப் பயன்படுத்தவில்லை என்றால் சிறுநீரக தொற்றுகள் போன்ற பல தொற்று நோய்கள் ஏற்படும்,”

என்று AFPக்கு அளித்தப் பேட்டியில் இந்த கின்னஸ் சாதனைக்கான காரணத்தை விளக்கியுள்ளார் மகப்பேறு மருத்துவர் கீதா பிரமோத்.

இந்த கின்னஸ் சாதனைக்கு ஊரக பெண்கள் உதவியோடு ‘கன்யா’ என்ற பெயரில் சானிட்டரி பேட்கள் தயாரிக்கும் ’ayzh' நிறுவனம் தங்களின் பேட்களை பயன்படுத்தியுள்ளனர். கின்னஸ் சாதனை முடிந்தப் பின் அனைத்து சானிட்டரி பேட்களையும் இந்திரா பிரியதர்ஷினி பெண்கள் உயர்நிலைப் பள்ளி; RSPAVK உயர்நிலைப் பள்ளி; கோகுல் வித்யா கேந்திரா பள்ளி மற்றும் முஹம்பிகா பள்ளி குழந்தைகளுக்கு இலவசமாக வழங்கியுள்ளனர்.

மேலும் மாதவிடாய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த #gowithconfidence என்னும் ஹேஷ்டேக் பிரச்சாரத்தை இணையதளத்தில் துவங்கியுள்ளது இந்நிறுவனம். பாதுகாப்பான மாதவிடாய்,  சுகாதார மேலாண்மை, உயர் தரமான விலை குறைந்த பேட்கள் பெற இப்பிரச்சாரம் வலியுறுத்துகிறது.

கட்டுரையாளர்: மஹ்மூதா நௌஷின்