Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

24 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்த நீதி: 55 வயதில் அரசு ஆசிரியராகும் ஆந்திர பிச்சைக்காரர்!

ஆந்திராவில் சாப்பாட்டிற்கே வழியில்லாமல் யாசகம் கேட்டு வாழ்ந்து வரும் 55 வயது நபருக்கு, நீதி மன்ற உத்தரவால் அரசு ஆசிரியர் பணி கிடைத்துள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

24 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்த நீதி: 55 வயதில் அரசு ஆசிரியராகும் ஆந்திர பிச்சைக்காரர்!

Thursday June 23, 2022 , 3 min Read

அதிர்ஷ்டம் திடீரென கதவைத் தட்டினால், வாழ்க்கை ஒரே நாளில்கூட மாறி விடும் என்பதற்கு உதாரணமாய் ஆந்திராவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. வேலை இல்லாமல், சாப்பாட்டுக்கே பணம் இல்லாமல் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்த நபர், 24 ஆண்டுகளுக்குப் பிறகு நீதிமன்ற உத்தரவு மூலம் ஆசிரியர் ஆகி இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம், பட்டபட்டினம் மந்தல் பகுதியிலுள்ள சீடி கிராமத்தைச் சேர்ந்தவர் கேதாரேஸ்வர் ராவ் (55). கைத்தறி நெசவாளர் குடும்பத்தில் பிறந்த இவர், ஆசிரியர் ஆகும் கனவில் பி.எட் படித்து முடித்தார். அதனைத் தொடர்ந்து, கடந்த 1994ம் ஆண்டு டிஎஸ்சி (DSC- District Selection Committee) தேர்வை எழுதியுள்ளார். நூலிழையில் அதில் ஆசிரியர் பணியைத் தவற விட்டர் கேதாரேஸ்வர், மனம் தளராமல் மீண்டும் 1998ம் ஆண்டு அதே தேர்வை எழுதியுள்ளார்.

andhra teacher

அவரது கடின உழைப்பிற்கு பலனாக அம்முறை ஆசிரியர் தேர்வில் இவர் தேர்ச்சி பெற்றார். ஆசிரியர் ஆகி விடுவோம் என்ற கனவோடு இருந்தவருக்கு மீண்டும் ஏமாற்றமே மிஞ்சியது. அந்த ஆண்டு ஆசிரியர் தேர்வில் முறைகேடு நடந்ததாக, சிலர் நீதிமன்றத்தை நாடினர். இதனால், அந்த ஆண்டு தேர்வானவர்கள் யாரும் அரசு பள்ளி ஆசிரியர் ஆக முடியவில்லை.

இந்த வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்ததால், வேறு வேலைக்குச் செல்ல முடியாமல், சைக்கிளில் ஊர் ஊராகச் சென்று கைத்தறி துணிகளை விற்கத் தொடங்கினார் கேதாரேஸ்வர் ராவ் . ஆனால், எதிர்பார்த்த வருமானம் அதில் கிடைக்கவில்லை. தொடர்ந்து ஏழ்மையில் வாடியதால், அவரால் நல்ல ஆடைகளைக்கூட அணியமுடியவில்லை.

ஆடைகளை விற்பவரே முறையாக ஆடை அணியாமல், அழுக்குத் துணியுடன் சுற்றினால், அவரிடம் மற்றவர்கள் எப்படி துணி வாங்குவார்கள். இதனால் தொடர்ந்து கேதாரேஸ்வர் ராவால் ஆடை வியாபாரத்தை மேற்கொள்ள இயலவில்லை.

இதற்கிடையே, கேதாரேஸ்வர் ராவின் பெற்றோரும் இறந்து விட, உடன் பிறந்தவர்களும் அவரைக் கைவிட்டனர். இதனால் ஆதரவுக்கு யாரும் இல்லாமல் தனிமரமானார் அவர். என்றாவது ஒருநாள் தான் ஆசிரியர் ஆவேன் என்ற நம்பிக்கை அவரிடம் இருந்தபோதும், அந்த நம்பிக்கையை மட்டும் நம்பி யாரும் அவருக்கு பெண் தரவும் முன்வரவில்லை. இதனால் தான் வசித்து வந்த பாழடைந்த வீட்டைத் தவிர வேறு எதுவும் இல்லாமல் கஷ்ட ஜீவனம் நடத்தி வந்தார் கேதாரேஸ்வர் ராவ்.

சாப்பாட்டுச் செலவுக்காக பழைய பேப்பர்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை பொறுக்கி, அதை விற்று வந்தார். அதற்கும் வாய்ப்பில்லாத நாட்களில், பிச்சை எடுத்தும் பிழைப்பை நடத்தியுள்ளார். கிழிந்த அழுக்கு ஆடையுடன் சுற்றி வந்த அவரை, அந்த கிராமத்தார் அனைவரும் மாஸ்டர் என்றே அழைத்து கிண்டல் செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில், 1998ம் ஆண்டு அரசு ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்கள் அனைவருக்கும் அரசு ஆசிரியர் பணி நியமனம் வழங்குமாறு சமீபத்தில் நீதிமன்றம் உத்தரவு வழங்கியது. இதனால் கேதாரேஸ்வர் ராவுக்கும் பணி நியமன உத்தரவு வீடு தேடி வந்தது. இதனால் மகிழ்ச்சி அடைந்தார் அவர். அந்த ஒரே நாளில் அவரது வாழ்க்கை மாறி விட்டது.

அதுவரை அவரை யாசகம் கேட்பவராக கிண்டல் செய்து வந்த மக்களுக்கு, அவர் மீது ஆசிரியர் என்ற மரியாதை வந்து விட்டது. கிராமத்தார் அனைவரும் சேர்ந்து கேதாரேஸ்வர் ராவுக்கு, அவரது ஆசிரியப் பணிக்கு உதவும் வகையில் புதிய செல்போன் ஒன்றை வாங்கி பரிசளித்துள்ளனர்.

beggar

அதேபோல், பல நாட்கள் அவர் யாசகம் கேட்டு திரிந்த ஒரு தெருவில் வசித்து வரும் வியாபாரி ஒருவர், கேதாரேஸ்வர் ராவுக்கு புதிய சட்டைகள், ஜீன்ஸ் பேண்டுகளையும் வாங்கிக் கொடுத்து பாராட்டியுள்ளார்.

மேலும் பணிக்கு செல்வதற்கு ஏதுவாக கேதாரேஸ்வருக்கு தேவையான செறுப்பு, ஷூ போன்ற பொருட்களையும் வாங்கிக் கொடுத்துள்ள கிராம மக்கள், கேக் வெட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். 

கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை, யாசகம் கேட்பவராக மற்றவர்களால் ஒதுக்கப்பட்டு வாழ்ந்து வந்த கேதாரேஸ்வர் ராவ், இன்று ‘மாஸ்டர்.. மாஸ்டர்..’ என எல்லாராலும் மரியாதையாக அழைக்கப்படுகிறார்.

நல்லவேளையாக அவரது கல்வி சான்றிதழ்களை, வறுமை சாப்பிட்டுவிடவில்லை. எனவே, அரசு தரும் பணியை ஏற்றுக் கொண்டு மாணவர்களுக்கு பாடம் நடத்த ஆர்வமுடன் இருக்கிறார் கேதாரேஸ்வர் ராவ். முடியைத் திருத்தி, நல்ல நேர்த்தியான ஆடைகளை அணிந்து, இப்போதே ஆசிரியர் என்ற மிடுக்குடன் தன்னம்பிக்கை நடைபோடத் தொடங்கி விட்ட அவர்,

‘தன் 24 வருட நம்பிக்கை வீண் போகவில்லை...’ என மகிழ்ச்சியுடன் கூறுகிறார்.

அந்தக் கிராமத்தைச் சேர்ந்த சிலர் இவரது வாழ்க்கையை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட, இப்போது அந்தக் கிராமத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதுமே பிரபலமாகி விட்டார் கேதாரேஸ்வர் ராவ் மாஸ்டர்.

பணி ஓய்வு பெறும் வயதை அடைவதற்கு இன்னமும் சில ஆண்டுகளே உள்ள நிலையில் அவருக்கு அரசுப்பணி கிடைத்திருக்கும் தகவல் சமூகவலைதளங்களில் வைரலாகி இருக்கிறது.