பூமி அழிந்து கொண்டிருந்தால், பணத்தால் என்ன பயன்? - நிதின் காமத் கேள்வி
‘நாம் வாழும் பூமி அழிந்து கொண்டிருந்தால், நம்முடைய ஆரோக்கியம் பாழாகி கொண்டிருந்தால், பணத்தால் என்ன பயன்?’ என்று ஜெரோதா நிறுவனர் நிதின் காமத் கேள்வி எழுப்பியுள்ளார்.
“நாம் வாழும் பூமி அழிந்து கொண்டிருந்தால், நம்முடைய ஆரோக்கியம் பாழாகி கொண்டிருந்தால், பணத்தால் என்ன பயன்?” என்று ஜெரோதா நிறுவனர் நிதின் காமத் கேள்வி எழுப்பியுள்ளார்.
நிதி நுட்ப நிறுவனமான ஜெரோதா நிறுவனர் நிதின் காமத், தனது ரெயின் மேட்டர் நிறுவனம் மூலம், காலநிலை மாற்ற நுட்பம், நீடித்த வளர்ச்சி மற்றும் சுகாதார நலன் ஸ்டார்ட் அப்களில் முதலீடு செய்து வருகிறார்.
கடந்த ஆண்டு மட்டும் அவர், ரெயின்மேட்டர் மூலம் 47 ஸ்டார்ட் அப்களில் முதலீடு செய்துள்ளார். பூமி நலன் காக்கும் ஸ்டார்ட் அப்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார்.
இந்நிலையில், ‘லிங்க்டுஇன்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றில், “நாம் வாழும் பூமி அழிந்து கொண்டிருந்தால், நம்முடைய ஆரோக்கியம் பாழாகி கொண்டிருந்தால், பணத்தால் என்ன பயன்?” நிதின் காமத் கேள்வி எழுப்பியுள்ளார்.
“ரெயின்மேட்டர் நிறுவனம் எந்த நிபந்தனையும் விதிப்பதில்லை, இயக்குநர் குழுவில் இடம் கேட்பதில்லை. வழிகாட்டுதலோடு பொருமையான நிதி அளிக்கிறோம். ஸ்டார்ட் அப்கள் வளர்ச்சி அடைய உதவுகிறோம்” என்றும் அவர் கூறியுள்ளார்.
ரெயின்மேட்டர் நிறுவனம் தற்போது காலநிலை மாற்ற நுட்பத்தில் ரூ.120 கோடி முதலீடு செய்துள்ளது. சுகாதார நலன் சார்ந்த 16 நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது. நிதி நுட்பத்தில் ரூ.70 கோடி அளவில் முதலீடு செய்துள்ளது.
2016-ல் துவக்கப்பட்டது முதல் ரெயின்மேட்டர் 100-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப்களில் ரூ.700 கோடி அளவு முதலீடு செய்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் ரூ.500 கோடி அளவு முதலீடு செய்துள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் மேலும் ரூ.1,000 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
கிரெட் (Cred ) , காப்பீடு ஸ்டார்ட் அப் டிட்டோ, நிதி நுட்ப நிறுவனம் சிம்பிள்கேஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Edited by Induja Raghunathan