பிளாஸ்டிக் கொடுத்தால் அரிசி இலவசம்: ஆந்திர இளைஞர் குழுவின் புதுமையான யோசனை!
மக்கள் சேகரிக்கும் பிளாஸ்டிக் பொருட்களின் அளவிற்கு இணையாக அரிசியை விநியோகிக்கிறது ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த ’மன பெட்டபுரம்’ இளைஞர் குழு.
ஊட்டச்சத்து குறைபாடு, கழிவு மேலாண்மை ஆகிய இரண்டும் நம் நாட்டில் காணப்படும் முக்கியப் பிரச்சனைகள். பெட்டபுரத்தைச் சேர்ந்த அரசு சாரா நிறுவனம் ஒன்று இந்த இரண்டு பிரச்சனைகளுக்கும் பண்டமாற்று முறை மூலம் தீர்வு காண்கிறது. இந்தியாவில் 194.6 மில்லியன் பேருக்கு ஊட்டச்சத்து குறைபாடுகள் இருப்பதாகவும் அன்றாடம் சுமார் 3,000 பேர் பட்டினி மற்றும் அது தொடர்புடைய நோய்கள் காரணமாக உயிரிழப்பதாகவும் உணவு மற்றும் வேளாண் அமைப்பு 2015-ம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளது.
இந்தியாவில் 25 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் உற்பத்தியாகிறது. இதில் வெறும் ஒன்பது சதவீதம் மட்டுமே மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படுகிறது. இந்த இரு பிரச்சனைகள் குறித்தும் கிழக்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த ’மன பெட்டபுரம்’ இளைஞர் குழு உறுப்பினர்கள் தீவிரமாக ஆலோசித்தனர். இவர்கள் ’பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக அரிசி’ என்கிற பிரச்சாரத்தின் மூலம் ஊட்டச்சத்து குறைபாடு, பிளாஸ்டிக் கழிவுகள் ஆகிய இரண்டு பிரச்சனைகளையும் திறம்பட கையாள்கின்றனர்.
இந்த ஆண்டு மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதி இந்த பிரச்சாரத்தை இவர்கள் அறிமுகப்படுத்தினர். இக்குழு ஏற்கனவே 300 கிலோ பிளாஸ்டிக்கை சேகரித்து 200 கிலோ அரிசியை விநியோகித்துள்ளது. பிரச்சாரம் தொடங்கப்பட்ட இரண்டு நாட்களில் 150 கிலோ பிளாஸ்டிக் சேகரிக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தை உருவாக்கியவர் நரேஷ் பெடிரெட்டி. இவர் மனிதவள பிரிவில் எம்பிஏ முடித்துள்ளார். இந்தியாவை பிளாஸ்டிக் இல்லாத பகுதியாக மாற்றவும் பட்டினியை எதிர்த்துப் போராடவும் விரும்பினார்.
”நாங்கள் இரண்டு முக்கிய நோக்கங்களைக் கொண்டுள்ளோம். மக்கள் பிளாஸ்டிக்கினால் தயாரிக்கப்பட்ட பொருட்களைத் தவிர்க்க ஊக்குவிக்கவேண்டும். பட்டினியை எதிர்த்துப் போராடவேண்டும். இந்த இரண்டு நோக்கங்களும் நிறைவேற ’பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக அரிசி’ என்கிற எங்களது பிரச்சாரம் உதவுகிறது,” என்று ’நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ்’ உடனான உரையாடலில் நரேஷ் தெரிவித்துள்ளார்.
மக்கள் சேகரிக்கும் பிளாஸ்டிக் பொருட்களின் அதே அளவிற்கு இணையாக அரிசியை கொடுக்கும் எண்ணம் முந்திரி வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள நரேஷிற்கு உதித்தது. மன பெட்டபுரம் ஒரு கிலோ அரிசியை 25 ரூபாய் என்கிற விலையில் மொத்தமாக ஆலையில் இருந்து நேரடியாக வாங்குகிறது. அவர்களிடம் கொண்டு சேர்க்கப்படும் பிளாஸ்டிக்கிற்கு பதிலாக அரிசி விநியோகிக்கப்படுகிறது.
சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் துப்புரவு பணியாளர்களிடம் கொடுக்கப்படுகிறது. அவர்கள் அவற்றை ஆந்திரப்பிரதேசத்தின் பெட்டபுரம் பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவங்களுக்குச் சொந்தமான மறுசுழற்சி ஆலைகளில் ஒப்படைக்கின்றனர். ’தி லாஜிக்கல் இண்டியன்’ உடனான உரையாடலில் நரேஷ் கூறும்போது,
“பிளாஸ்டிக் பொருட்களை, குறிப்பாக ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டு வரும் நபர்களுக்கு அந்த அளவிற்கு இணையாக அதே அளவில் அரிசி வழங்கப்படும் என்று அக்டோபர் 2-ம் தேதிக்கு முன்பே அறிவித்திருந்தோம்,” என்றார்.
மன பெட்டபுரம் நெட்வொர்க்கில் 20,000 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி மற்ற இந்திய மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் குடிபெயர்ந்த நபர்களும் அடங்குவர்.
இக்குழுவில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் என்பதால் வாரநாட்களில் பணிபுரிந்தவாறே வாரத்திற்கு ஒருமுறை இந்த பிரச்சாரத்தை ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளனர். அருகிலிருக்கும் அரசு மறுசுழற்சி மையம் விஜயவாடாவில் இருப்பதால் தற்போது பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்வதில் சவால்களைச் சந்தித்து வருகின்றனர். பெட்டபுரம் பகுதியில் ஒரு மையத்தைத் தொடங்க அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார் நரேஷ்.
”நாங்கள் பிரச்சாரத்தைத் தொடர்ந்து மேற்கொள்வோம். ஆனால் எங்களில் பெரும்பாலானோர் அலுவலகம் செல்லவேண்டியிருப்பதால் பண்ட மாற்று நடவடிக்கைகளை ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் ஏற்பாடு செய்ய உள்ளோம்,” என்று ’நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ்’ உடனான உரையாடலில் நரேஷ் குறிப்பிட்டுள்ளார்.
கட்டுரை: THINK CHANGE INDIA