பிளாஸ்டிக்கை எரிபொருளாக மறுசுழற்சி செய்யும் பேராசிரியர்!
மெக்கானிக்கல் என்ஜினியர் மற்றும் பேராசிரியரான சதீஷ்குமார் பைரோலிசிஸ் முறையில் பிளாஸ்டிக்கை எரிபொருளாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
எரிபொருள் விலை அதிகரித்து வருவதால் சாமானிய மக்கள் இதற்காக அதிகம் செலவிட நேர்கிறது. எனினும் நம்மில் பலர் இந்த பிரச்சனைக்கான தீர்வு குறித்து சிந்திப்பதில்லை.
அரசாங்கம் நாடு முழுவதும் பயோ எரிபொருளை ஊக்குவிக்கும் நிலையில், வாகனங்களில் பயணிக்கும் பலர் மின் வாகனங்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களைப் பயன்படுத்துவதன் மூலம் ஆகும் செலவுடன் ஒப்பிடுகையில் பாதியளவு மட்டுமே செலவிட நேரும்.
ஆனால் ஹைதராபாத்தைச் சேர்ந்த மெக்கானிக்கல் என்ஜினியரான 45 வயது சதீஷ்குமார் பிளாஸ்டிக்கை எரிபொருளாக மாற்றும் புதுமையான திட்டத்தை முன்வைத்துள்ளார். இன்று இந்த எரிபொருள் உள்ளூர் தொழிற்சாலைகளுக்கு லிட்டருக்கு 40 ரூபாய் என்கிற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
சதீஷ் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகத்துடன் தனது நிறுவனத்தைப் பதிவு செய்துள்ளார்.
பிளாஸ்டிக் பைரோலிசிஸ் முறையில் மூலக்கூறுகள் அதீத வெப்பநிலையில் உடைக்கப்படுகிறது. இதற்கு தண்ணீர் தேவையில்லை. இந்த செயல்முறையில் எந்தவித கழிவும் எஞ்சியிருக்காது.
சதீஷ் 2016-ம் ஆண்டு முதல் மறுசுழற்சி செய்ய முடியாத 50 டன் பிளாஸ்டிக்கை எரிபொருளாக மாற்றியுள்ளார். தற்சமயம் இவரது நிறுவனம் தினமும் 200 கிலோ பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்து 200 லிட்டர் பெட்ரோலை உற்பத்தி செய்கிறது. சதீஷ் நியூஸ்18 உடன் உரையாடுகையில்,
“இந்த செயல்முறையானது பிளாஸ்டிக்கை டீசல், விமான எரிபொருள் மற்றும் பெட்ரோலாக மறுசுழற்சி செய்ய உதவுகிறது. மறுசுழற்சி செய்யமுடியாத சுமார் 500 கிலோ பிளாஸ்டிக்கைக் கொண்டு 400 லிட்டர் எரிபொருள் தயாரிக்கமுடியும். இந்த செயல்முறை வெற்றிடத்தில் மேற்கொள்ளப்படுவதால் காற்று மாசுபடாது,” என்றார்.
பேராசிரியர் சதீஷ் குமார் முன்வைத்துள்ள இந்த திட்டத்திற்கு பாலிவினைல் க்ளோரைட் (PVC) மற்றும் பாலிஎத்திலின் டெரெப்டால்ட் (PET) தவிர மற்ற பிளாஸ்டிக் வகைகள் ஏற்றுக்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் இந்த எரிபொருளை வாகனங்களுக்கு பயன்படுத்துவது குறித்து சோதனை செய்யப்படவில்லை.
கட்டுரை: THINK CHANGE INDIA