Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

‘இன்றைய தினம் சாதனைகளுக்கானது மட்டுமல்ல, முன்னேற்றத்துக்கானதும் கூட’ - அண்ணா பல்கலை பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி!

அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி 69 மாணவர்களுக்கு பதக்கம் வழங்கி கெளரவித்தார்.

‘இன்றைய தினம் சாதனைகளுக்கானது மட்டுமல்ல, முன்னேற்றத்துக்கானதும் கூட’  - அண்ணா பல்கலை பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி!

Friday July 29, 2022 , 5 min Read

தமிழ்நாட்டிற்கு இரண்டு நாள் சுற்றுப் பயணமாக வந்துள்ள பிரதமர் மோடி, நேற்று நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற '44வது செஸ்' ஒலிம்பியாட்’ போட்டியை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் வெள்ளை நிற வேட்டி, சட்டையுடன் சதுரங்க தீம் கொண்ட துண்டு அணிந்து பிரதமர் பங்கேற்றது சோசியல் மீடியாவில் வைரலானது.

பட்டமளிப்பு விழாவில் பிரதமர்:

இன்று தமிழகத்தின் முன்னணி உயர்கல்வி நிறுவனமான அண்ணா பல்கலைக்கழகத்தின் 42வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

Modi

இதற்காக இன்று காலை 9.55 மணிக்கு ஆளுநர் மாளிகையில் இருந்து பிரதமர் மோடி கார் மூலம் புறப்பட்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்குக்கு வந்தார். அவரை பல்கலைக்கழகத்தின் வேந்தரான கவர்னர் ஆர்.என்.ரவி வாசலில் நின்று வரவேற்றார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணைவேந்தர் வேல்ராஜ் ஆகியோரும் வரவேற்றனர்.

பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி தலைமை விருந்தினராக பங்கேற்பதால் அங்குள்ள அறைக்கு சென்று பட்டமளிப்பு விழாவுக்கான அங்கி அணிந்து வந்தார். அவருடன் கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆகியோரும் அங்கி அணிந்து வந்திருந்தனர்.

பட்டமளிப்பு விழா மேடைக்கு பிரதமர் மோடி, சரியாக காலை 10 மணிக்கு வந்ததும் விழா நிகழ்ச்சிகள் தொடங்கியது. விழாவுக்கு வந்த அனைவரையும் துணைவேந்தர் வேல்ராஜ் வரவேற்று பேசினார். இதைத் தொடர்ந்து கவர்னர் ஆர்.என்.ரவி தலைமையில் பட்டமளிப்பு விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பிரதமர் மோடி அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றதால் அதை சுற்றி உள்ள பகுதிகளில் 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

69 மாணவர்களுக்கு தங்க பதக்கம்:

Modi

பிரதமர் மோடி பங்கேற்ற அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில்,

பல்வேறு துறைகளில் ஆராய்ச்சி படிப்புகளில் முதலிடம் பெற்ற 69 மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி தங்கத்தால் ஆன பதக்கங்களை வழங்கினார். இதில் 31 பேர் அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள் ஆவார்கள்.

பிரதமர் மோடி உரை:

பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, முதலில், அண்ணா பல்கலைக்கழகத்தின் 42வது பட்டமளிப்பு விழாவில் இன்று பட்டம் பெறும் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Modi
“உங்கள் மனதில் உங்களுக்கான எதிர்காலத்தை நீங்கள் ஏற்கனவே கட்டியெழுப்பியிருப்பீர்கள். எனவே, இன்று சாதனைகளின் நாள் மட்டுமல்ல, ஆசைகளின் நாள். நமது இளைஞர்களின் கனவுகள் அனைத்தும் நனவாக வேண்டும் என்று வாழ்த்துகிறேன். அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத துணைப் பணியாளர்களுக்கும் இது ஒரு சிறப்பு நேரம். நாளைய தலைவர்களை உருவாக்கும் தேசத்தை கட்டியமைப்பவர்கள் நீங்கள். உங்கள் தியாகங்கள் உங்கள் குழந்தையின் சாதனைக்கு முக்கியமானவை,” என்றார்.

நீங்கள் தனித்துவமான காலங்களில் பட்டம் பெறுகிறீர்கள். சிலர் இதை உலகளாவிய நிச்சயமற்ற காலம் என்று அழைப்பார்கள். ஆனால், நான் அதை ஒரு சிறந்த வாய்ப்பு என்று கூறுவேன்.

‘இன்றைய தினம் சாதனைகளுக்கானது மட்டுமல்ல, முன்னேற்றத்துக்கானதும் கூட...’ என்றார்.

COVID-19 தொற்றுநோய் ஒரு முன்னோடியில்லாத நிகழ்வாகும். இது ஒரு நூற்றாண்டுக்கு ஒருமுறை ஏற்பட்ட நெருக்கடியாகும், அதற்கான பயனர் கையேடு யாரிடமும் இல்லை. இது எல்லா நாடுகளையும் சோதித்தது.

உங்களுக்குத் தெரியும், துன்பங்கள் நாம் எதை உருவாக்குகிறோம் என்பதை வெளிப்படுத்துகின்றன. தெரியாதவர்களை இந்தியா தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டது, அதன் விஞ்ஞானிகள், சுகாதாரப் பணியாளர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் பொது மக்களுக்கு நன்றி. இதன் விளைவாக, இன்று, இந்தியாவின் ஒவ்வொரு துறையும் புதிய வாழ்வில் வெடித்துக் கொண்டிருக்கிறது.

ஸ்டார்ட் அப்களின் அசுர வளர்ச்சி:

தொழில், கண்டுபிடிப்பு, முதலீடுகள் அல்லது சர்வதேச வர்த்தகம் எதுவாக இருந்தாலும், இந்தியா முன்னணியில் உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவின் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி, கடந்த ஆண்டில், உலகின் இரண்டாவது பெரிய மொபைல் போன் உற்பத்தியாளராக உயர்ந்துள்ளதை சுட்டிக்காட்டிய பிரதமர், கடந்த 6 ஆண்டுகளில், அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட் அப்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.

“2016ல் வெறும் 470ல் இருந்து, இப்போது கிட்டத்தட்ட எழுபத்து மூவாயிரம்! தொழில்துறை மற்றும் கண்டுபிடிப்புகள் இருக்கும் போது, ​​முதலீடுகள் பின்தொடருகின்றன. கடந்த ஆண்டு, இந்தியா 83 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான அந்நிய நேரடி முதலீட்டைப் பெற்றது. தொற்றுநோய்க்குப் பின் எங்கள் ஸ்டார்ட்-அப்களும் சாதனை நிதியைப் பெற்றன. பொருட்கள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதியில் நமது நாடு அதிக அளவில் சாதனை படைத்துள்ளது,” எனத் தெரிவித்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை:

அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய கல்வி அமைச்சகம் அண்மையில் வெளியிட்ட தேசிய உயர்கல்வி நிறுவனங்களுக்கான N.I.R.F தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றிருக்கக்கூடிய நிறுவனங்களில் மிகப் பெருவாரியானவை தமிழ்நாட்டைச் சேர்ந்தவை என்பது அனைவருக்கும் தெரியும். இத்தகைய உயர்கல்வியில் மேன்மை பெற்ற தமிழ்நாட்டுக்கு வருகை தந்திருக்கக்கூடிய மாண்புமிகு பிரதமர் அவர்களை உங்கள் அனைவரின் சார்பில் நான் அன்புடன் வரவேற்கிறேன், என பேசினார்.

Stalin
“உங்களுக்குப் பட்டம் வழங்கும் விழாவுக்கு இந்திய நாட்டினுடைய பிரதமர் என்ற உயர்ந்த பொறுப்பில் இருக்கக்கூடிய மாண்புமிகு திரு. நரேந்திர மோடி அவர்கள் முதன்மை விருந்தினராக வருகை தந்துள்ளார். இது உங்களுக்கு கிடைத்திருக்கக்கூடிய மிகப்பெரிய பெருமை. 'நான் பட்டம் வாங்கும்போது பிரதமரே வந்திருந்தார்' என்று உங்களது எதிர்காலப் பிள்ளைச் செல்வங்களிடம் பெருமையுடன் சொல்லிக் கொள்ளலாம்! இத்தகைய பெருமைகளோடு எதிர்காலத்துக்குள் நீங்கள் நுழைகிறீர்கள். அறிவாற்றல்தான் அனைத்திலும் வலிமையானது என்பதை உணருங்கள்.”

மேலும், 2030-ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தில் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை வளர்க்க வேண்டும். அதிலும் உங்கள் பங்கு இருக்க வேண்டும் என பட்டம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்தார்.

தேசிய தரவசை பட்டியலில் தமிழ்நாடு கல்வி நிறுவனங்கள்:

அண்ணா பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவை முன்னிட்டு, உயர் கல்வி நிறுவனங்களின் தேசிய தரவரிசை பட்டியலில் தமிழ்நாட்டில் எத்தனை கல்வி நிறுவனங்கள் உள்ளது என்ற பட்டியலும் வெளியிடப்பட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

  • ஒட்டு மொத்த உயர்கல்வி முதல் 100 கல்வி நிறுவனங்களில் தமிழ்நாட்டில் உள்ளவை - 18

  • தலை சிறந்த பல்கலைக் கழகங்கள் முதல் 100-ல் தமிழ்நாட்டில் உள்ளவை-21

  • தலை சிறந்த கல்லூரிகள் முதல் 100-ல் தமிழ்நாட்டில் உள்ளவை-32

  • தலை சிறந்த ஆராய்ச்சி நிறுவனங்கள் முதல் 100-ல் தமிழ்நாட்டில் உள்ளவை-10

  • தலை சிறந்த பொறியியல் கல்லூரிகள் முதல் 200-ல் தமிழ்நாட்டில் உள்ளவை-35

  • தலை சிறந்த மேலாண்ம கல்வி நிறுவனங்கள் முதல் 100-ல் தமிழ்நாட்டில் உள்ளவை-11

  • மருத்துவக் கல்வி நிறுவனங்கள் முதல் 100-ல் தமிழ்நாட்டில் உள்ளவை-8

  • பல் மருத்துவக் கல்வி நிறுவனங்கள் முதல் 40-ல் தமிழ்நாட்டில் உள்ளவை-9

  • சட்டக் கல்லூரிகள் முதல் 30-ல் தமிழ்நாட்டில் உள்ளவை-2

  • கட்டிடக் கலை கல்லூரிகள் முதல் 30-ல் தமிழ்நாட்டில் உள்ளவை-6

திடீரென பல்கலைக்கழகத்தை சுற்றி பார்த்த பிரதமர்:

அண்ணா பல்கலைகழகத்தில் பட்டமளிப்பு விழா முடிந்ததும் , பிரதமர், பல்வேறு அறைகளில் அமர்ந்து இருந்த மாணவர்களையும், ஆசிரியர்களையும் திடீரென்று பார்ப்பதற்குச் சென்றார்.

அரங்கத்தில் இருந்து காரில் ஏறி கிண்டி பொறியியல் கல்லூரி முகப்பு பகுதிக்கு வந்த பிரதமர், அங்கிருந்து இறங்கி, பல்வேறு அறைகளில் இருந்த மாணவர்களை பார்த்து கைகளை அசைத்து வாழ்த்துக்களை தெரிவித்து உற்சாக மூட்டினார். பிரதமர் தங்களது பகுதிக்கு வருவார் என தெரியாமல் இருந்த மாணவர்களுக்கு, இது இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியது .

Stalin

மேலும், ஒருசில வகுப்பறைகளை பிரதமர் பார்வையிட்டு இருக்கிறார். இதன் பிறகு, இறங்கிய இடத்திற்கே பிரதமர் மீண்டும் வருவார் என நினைத்து, காரை, பாதுகாப்பு அதிகாரிகள் தயாராக நிறுத்தி வைத்திருந்தனர். ஆனால் நடந்தே மீண்டும் விழா நடந்த அரங்கத்தின் முன் பகுதிக்கு பிரதமர் சென்றுவிட்டார்.

இதை தாமதமாக அறிந்த பாதுகாப்பு அதிகாரிகள், மீண்டும் பிரதமரின் காரை எடுத்துக்கொண்டு விழா நடந்த அரங்கத்தின் முன் பகுதிக்குச் சென்றனர். இதனால் என்ன நடக்கிறது எனத் தெரியாமல் பல்கலைக்கழக வளாகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

முதலமைச்சர் முன்கூட்டியே புறப்பட்டு விமான நிலையம் சென்ற நிலையில், பிரதமர் மாணவர்களை சந்தித்து அளவளாவி இருப்பது மாணவர்கள் மத்தியிலும், ஆசிரியர்கள் மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

சென்னையில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி தனி விமானம் மூலமாக டெல்லி திரும்பினார். சர்வதேச சதுரங்கப் போட்டி தொடக்க விழா மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் 42ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பின்னர் அகமதாபாத் செல்லும் பிரதமர் மோடிக்கு, சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைவுப் பரிசாக சதுரங்கப் பலகையை வழங்கி வழியனுப்பி வைத்தார்.