Chess Olympiad- பிரம்மாண்டமாக தொடங்கிய செஸ் ஒலிம்பியாட்: முழு தொகுப்பு இதோ!

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான தொடக்க விழா குறித்த முழு தொகுப்பு இதோ...
0 CLAPS
0

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான தொடக்க விழா குறித்த முழு தொகுப்பு இதோ...

செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா:

சென்னை 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் உள்ள போர் பாயிண்ட் நட்சத்திர விடுதியில் நடக்க உள்ளது. இன்று முதல் ஆகஸ்டு மாதம் 10ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டிக்காக விரிவான ஏற்பாடுகள் தமிழக அரசால் செய்யப்பட்டுள்ளன.

இதற்கான தொடக்க விழா இன்று சென்னை நேரு உள்நாட்டு அரங்கில் நடைபெற்றது.

செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைப்பதற்காக அகமதாபாத்திலிருந்து தனி விமானம் மூலம், மாலை 4.45 மணிக்கு சென்னை வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி.

சென்னை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை அமைச்சர் துரைமுருகன், எம்பி தயாநிதிமாறன், டிஆர்.பாலு, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரியா, தலைமை செயலாளர் இறையன்பு, போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு உள்ளிட்டோர் வரவேற்றனர்.

வரவேற்பு முடிந்ததும், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம், அடையார் விமான தளத்துக்கு சென்றார் மோடி. அதன் பின்னர், அங்கிருந்து கார் மூலம், நேரு உள் விளையாட்டு அரங்கத்திற்கு சென்றார். அரங்கத்திற்கு வந்த பிரதமர் மோடியை வரவேற்க வழி நெடுகிலும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் செய்யப்பட்டன.

இதில், தமிழகத்தின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என் ரவி மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நடிகர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கார்த்தி, இயக்குநர் விக்னேஷ் சிவன், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட திரையுலகினரும் பங்கேற்றனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் பட்டு வேட்டி சட்டையுடனும், பிரதமர் மோடி வேட்டி, சட்டையுடன் சதுரங்க பலகையை பிரதிபலிக்கும் வகையிலான துண்டுடனும் இன்றைய விழாவில் பங்கேற்றார்.

சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்:

மத்திய-மாநில உளவு பிரிவு போலீசார், உள்ளூர் போலீஸ் அதிகாரிகள், ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு படை என 22 ஆயிரம் போலீசாரைக் கொண்டு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது. இரு நாட்களும் சென்னையில் டிரோன்கள், ஹைட்ரஜன் பலூன்கள் போன்றவை பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பிரதமர் மோடி பயணிக்க உள்ள வழித்தடங்களில் உள்ள உயரமான கட்டிடங்களிலும் போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

இன்று நண்பகல் முதல் இரவு 9 மணி வரை ராஜா முத்தையா சாலை, ஈ.வே.ரா பெரியார் சாலை, அண்ணாசாலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதால், இந்த சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சி நடைபெறும் நேரு உள் விளையாட்டு அரங்கம் சாலையில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. இன்று காலை முதல் உணவகங்கள், பேக்கரி, செல்போன், காவல் துறை விற்பனை கடைகள், பேன்ஸ் ஸ்டோர் உள்ளிட்ட அனைத்து வணிக நிறுவனங்களும் இன்று காலை முதல் விடுமுறை விடப்பட்டுள்ளது.

பிரம்மாண்ட கலைநிகழ்ச்சிகள்:

நேரு உள் விளையாட்டு அரங்கில் முதற்கட்டமாக தேசிய கீதம் மற்றும் தமிழ் தாய் வாழ்த்துடன் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான கலை நிகழ்ச்சிகள் தொடங்கின.

சர்வதேச வீரர்களின் அணிவகுப்பில் வீரர்களுக்கு முன்னதாக மாவட்ட அளவில் செஸ் போட்டிகளில் வென்ற அரசுப்பள்ளி மாணவர்கள் நாடுகளின் பெயர் கொண்ட பதாகைகளை தாங்கிச் சென்றனர்.

முதற்கட்டமாக மாமல்லபுரம், செஸ் ஒலிம்பியாட் அடையாளச் சின்னத்தை பிரதிபலிக்கும் குதிரை சின்னமான ‘தம்பி’ மற்றும் செஸ் போட்டி நடக்கும் அரங்கம், பிரதமர் மோடியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட உருவங்கள் மணற்சிற்பம் மூலம் வரையப்பட்டன.

இதனையடுத்து, செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் தமிழ்நாடு வரலாறு தொடர்பான நிகழ்ச்சி இடம்பெற்றது. இதில் நடிகர் கமல்ஹாசன் குரல் கொடுத்த நிகழ்த்துக்கலை நடைபெற்றது. இதில் முப்பரிமாண வடிவில் காட்சிகள் விவரிக்கப்பட்டன.

கமல் ஹாசன் குரலில், ’கல்தோண்றா மண் தோன்றா காலத்தே வாளோடு தோன்றிய மூத்தகுடி என்ற வாசகத்துடன்’ தமிழர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே விவசாயம் முதல் கடல் கடந்து வணிகம் செய்தது வரை பல்வேறு தமிழர்களின் பாரம்பரியங்கள் விளக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து லிடியன் நாதஸ்வரத்தின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. முதலில் கண்ணைக் கட்டிக்கொண்டு பியானோ வாசித்த லிடியன், அதன் பின்னர், இரண்டு கைகளிலும் ஒரே நேரத்தில் இரண்டு பியானோக்களை வாசித்து அசத்தினார். ஒரு கையில் ஹாரி பாட்டர் மற்றும் மற்றொரு கையில் மிஷன் இம்பாசிபிள் ஆகிய பாடல்களை லிடியன் ஒரே நேரத்தில் வாசித்தார். இதனை வெளிநாட்டு வீரர்கள் உட்பட அனைவரும் ஆச்சர்யத்துடன் கேட்டு மகிழ்ந்தனர்.

தமிழர்களின் கலையை பறைசாற்றும் விதமாக தெருக்கூத்து, கரகாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனையடுத்து உலக அளவில் ட்ரெண்டான ‘எஞ்ஜாய் எஞ்சாமி’ பாடலை திதீ பாட நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

செஸ் ஒலிம்பியாட் விழாவில் பிரதமர் மோடிக்கு நினைவுப் பரிசாக கடற்கரை கோயில் வெண்கல சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இறுதியாக உலக செஸ் சாம்பியன் விஸ்வநாத் ஆனந்த் செஸ் ஒலிம்பியாட் ஜோதியை மேடைக்கு கொண்டு வந்து பிரதமர் மோடி மற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியோரிடம் ஒப்படைத்தார். இதையடுத்து, பிரக்ஞானந்தா செஸ் ஒலிம்பியாட் ஜோதியை எடுத்துச் சென்று நிகழ்ச்சியைத் தொடங்கினார்.

பிரதமருக்கு பிடித்த விளையாட்டு குறித்து முதல்வர் பேச்சு:

செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் மோடியும், முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி பட்டு, வேட்டி சட்டையில் பங்கேற்றது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,

“பிரதமர் மோடிக்கு சதுரங்க ஆட்டம் மிக பிடித்தமானது என அனைவருக்கும் தெரியும். இந்த நாள் இந்தியாவுக்கே பெருமை தரும் நாள், சர்வதேச அளவில் தமிழ்நாடு கவனம் பெற்றிருக்கிறது. சர்வதேச போட்டி ஏற்பாடுகளைச் செய்ய குறைந்தது 18 மாதங்கள் ஆகும் நிலையில், 4 மாதங்களில் தமிழ்நாடு ஏற்பாடு செய்ததுள்ளது. கீழடியைப் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை, அங்கு நடந்த அகழாய்வில் 2 வகையான சுடு மண்ணாலான ஆட்டக்காய்கள் கிடைத்துள்ளது. இதுபோன்ற காய்கள் சதுரங்க ஆட்டத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது,” எனத் தெரிவித்தார்.

2018ம் ஆண்டு மிகச் சிறிய வயதில் கிராண்ட்மாஸ்டராக புகழ்பெற்றவர் பிரக்ஞானந்தா; இந்தியாவில் உள்ள 75 கிராண்ட்மாஸ்டர்களில் 26 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவித்தார்.

கொரோனா தொற்று ஏற்பட்டதால் பிரதமரை நேரில் சந்தித்து அழைப்பு விடுக்கமுடியவில்லை. இதை நான் தொலைபேசியில் தெரிவித்தபோது பிரதமர் தான் கண்டிப்பாக கலந்து கொளவதாக பெருந்தன்மையுடன் தெரிவித்தார் எனக்கூறினார்.

திருக்குறளை மேற்கொள் காட்டிய பிரதமர்:

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில், ‘Good Evening Chennai.. வணக்கம்’ என்று பிரதமர் மோடி உரையைத் தொடங்கியதை அடுத்து அரங்கமே அதிர கைத்தட்டல் எழுப்பப்பட்டது.

”இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு,” என்ற திருக்குறளை மேற்கொள் காட்டி பேசினார். செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான எற்பாடுகளை தமிழ்நாடு குறுகிய காலத்தில் மிகச் சிறப்பாக செய்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்தார்.

“அற்புதமான அறிவாளிகளையும் ஆழமான கலாச்சாரத்தையும் கொண்டது தமிழக மண். தமிழகத்திற்கும் சதுரங்கத்திற்கும் நீண்ட தொடர்பு உள்ளது. தமிழகத்தில் பல கோவில்கள் பல விளையாட்டுப்போட்டிகளை குறிப்பதாக உள்ளன. தமிழகம் வலிமையான கலாச்சார பெருமைகளைக் கொண்டது, என்றார்.

பல கிராண்ட் மாஸ்டர்களைக் கொண்டுள்ளது தமிழகத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுவதன் மூலம் சென்னை, மாமல்லபுரத்தின் சுற்றுலா வளர்ச்சியடையும். 75வது சுதந்திர தின விழா நடைபெறும் நேரத்தில் செஸ் ஒலிம்பியாட் இந்தியாவில் நடைபெறுவது பெருமைமிக்கது. ’அதிதி தேவோ பவ’ என்று பல்லாண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் பெருமையுடன் சொல்லப்பட்டுள்ளது. விருந்தோம்பல் பற்றி திருக்குறளில் சிறப்பித்து கூறப்பட்டுள்ளது. நாம் அனைவருமே வெற்றி பெறுபவர்கள், எதிர்கால வெற்றியாளர்கள். அனைவரும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்,” எனத் தெரிவித்தார் மோடி.

Latest

Updates from around the world