‘குடை முதல் வளையல் வரை திருக்குறள்’ - தமிழ் ஆசிரியை உமாராணியின் நூதன முயற்சி!
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கக் கோரி ஆரணி அருகே உள்ள அரசுப் பள்ளி தமிழ் ஆசிரியை வளையல், குடை உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களில் 1330 திருக்குறளை எழுதி சாதனை படைத்துள்ளார்.
திருக்குறளை தேசிய நூலக அறிவிக்கக் கோரி ஆரணி அருகே உள்ள அரசுப் பள்ளி தமிழ் ஆசிரியை வளையல், குடை உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களில் 1330 திருக்குறளை எழுதி சாதனை படைத்துள்ளார்.
யார் இந்த தமிழ் ஆசிரியை?
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் வி.ஏ.கே.நகர் பகுதியை சேர்ந்த கண்ணன்- உமாராணி தம்பதியிருக்கு பவித்ரா, ரோஜா என 2 மகள்கள் உள்ளனர். இதில் உமாராணி கடந்த 24 ஆண்டுகளாக அரசு பள்ளியில் தமிழ் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். தற்போது ஆரணி அருகே உள்ள எஸ்.வி.நகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியையாக பணியாற்றி வருகின்றார்.
மேலும், தமிழ் ஆசிரியை உமாராணிக்கு தமிழ் மீது அதிகளவில் பற்று கொண்டதால் கொரோனா காலத்தில் வீட்டில் ஓய்வு நேரத்தில் இருந்த போது கவிதை மற்றும்
நூல்களை எழுதியுள்ளார்.
திருக்குறளை வைத்து சாதனை:
தனியாத தமிழ் ஆர்வம் கொண்ட உமாராணி தற்போது திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கக் கோரி புதிய முயற்சியாக சோயா பீன்ஸ், அகல்விளக்கு, வளையல், கழுத்தில் அணியும் மணி, ரூபாய் நாணயம், குடைகள், தேசியக் கொடி உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களில் 1330 திருக்குறளை எழுதி சாதனை படைத்துள்ளார்.
இதனை ஆல் இண்டியா புக்ஸ் ஆப் ரெக்கார்டு மற்றும் வாழ்நாள் சாதனையாளர்
விருது அளித்து வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ் ஆசிரியை உமாராணி கூறுகையில்,
“மனிதன் நன்றாக வாழ்வதற்கான வாழ்வியல் கருத்துக்கள் திருக்குறளில் உள்ளது. அதனை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும், அது அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதற்காக இவ்வாறு திருக்குறளை எழுதி வருகிறேன். எனது மகள்கள் கொடுத்த ஊக்கமும், உற்சாகமும் தான் தனது திருக்குறள் பயணம் தொடரக் காரணமாக அமைந்தது,” என்கிறார்.
நல்லாசிரியர் உள்ளிட்ட இதுவரையில் 70க்கும் மேற்பட்ட விருதுகளை தமிழ் ஆசிரியை உமாராணி பெற்றுள்ளார். மேலும், தமிழ் பற்றால் பல சாதனைகளை புரிந்த தமிழ் ஆசிரியை உமாராணியை புதுச்சேரி ஆளுநர் தமிழசை சௌந்தராஜன் நேரில் அழைத்து கௌரவித்து
பாராட்டியுள்ளார்.
தமிழ் ஆசிரியை உமாராணியிடம் இருந்த தமிழ் பற்று தற்போது அவரது மாணவிகளையும் தமிழ் மீது கவனம் செலுத்த வைத்துள்ளது. தன்னிடம் படிக்கும் 20 மாணவிகளைக் கொண்டு புதிய முயற்சி ஒன்றினையும் மேற்கொண்டு வருகிறார்.
“எனது பணியை முன்மாதிரியாகக் கொண்டு 20 மாணவிகள் களத்தில் உள்ளனர். முருங்கைக்காய், மஞ்சள், வேதியியல் ஆய்வுக்கு பயன்படுத்தப்படும் டெஸ்ட் டியூப், ரிப்பன் போன்றவற்றில் 1,330 திருக்குறளை எழுதத் தொடங்கினர். அவர்களது வெற்றிப் பயணம், சாதனை பயணமாகத் தொடர்கிறது.”
ஆரணியில் பெண் தமிழ் ஆசிரியை திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கக் கோரி சாதனை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகளை உற்சாகபடுத்தியுள்ளதோடு, பாராட்டுக்களையும் குவித்து வருகிறது.
‘குழந்தைகள் குறள்களை வாழ்க்கையில் பயன்படுத்தனும்’ - திருக்குறள் சொன்னால் ரூ.5000 பரிசு தரும் பத்மநாபன் ஐயா!