'எல்லாம் கனவு போல் உணர்கிறனே்...!' - கேன்ஸ் விருது பெற்ற படத்தில் நடித்த மலையாள நடிகை கனி குஸ்ருட்டி!
கேன்ஸ் திரைப்பட விழாவில் 'கிராண்ட் பிரி' விருதை வென்ற'All we imagine is Light' படத்தில் முக்கியப் பாத்திரத்தில் நடித்த நடிகை கனி குஸ்ருதி, திரைப்பட விழாவில் கிடைத்த அனுபவம் பற்றி யுவர்ஸ்டோரியிடம் எக்ஸ்க்ளூசிவ்வாக பகிர்ந்து கொண்டார்.
கேன்ஸ் திரைப்பட விழாவில் 'கிராண்ட் பிரிக்ஸ்' விருதை வென்ற 'All we imagine is Light' படத்தில் முக்கியப் பாத்திரத்தில் நடித்த நடிகை கனி குஸ்ருதி, திரைப்பட விழாவில் கிடைத்த அனுபவம் சர்ரியல் மற்றும் அபாரமானது, என்று வெளிப்படுத்தியுள்ளார்.
பிரான்ஸ் நாட்டின் கான் நகரில் கடந்த மே 15ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி வரை இனிதே நடைபெற்று முடிவடைந்தது கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா. இதில் எழுத்தாளரும் இயக்குநருமான பாயல் கபாடியாவின் முதல் முழுநீள திரைப்படமான 'ஆல் வீ இமேஜின் அஸ் லைட்' கேன்ஸின் இராண்டாவது உயரிய விருதான கிராண்ட் பிரிக்ஸ் விருதை வென்றது, 30 ஆண்டுகளில் கேன்ஸ் போட்டியில் கிராண்ட் பிரிக்ஸ் விருதை வென்ற முதல் இந்தியத் திரைப்படம் இதுவே.
மும்பையில் வசிக்கும் இரண்டு மலையாளி செவிலியர்களான பிரபா மற்றும் அனு ஆகியோரின் அழுத்தமான கதையே 'ஆல் வீ இமேஜின் அஸ் லைட்'. உறவுகளால் ஏமாற்றமடைந்த அவர்கள் கடற்கரை நகரத்திற்கு சாலைப் பயணத்தை மேற்கொள்கிறார்கள். பயணத்தின் போது அவர்கள் எதிர்கொள்ளும் ஒரு மாயக்காடு அவர்களது கனவினை நினைவாக்கும் இடமாக மாறுகிறது, அதுதான் கதையின் முக்கியப்புள்ளி.
கனி குஸ்ருதி, திவ்ய பிரபா உள்ளிட்ட பிரதான கதாபாத்திரங்களில் நடித்த இப்படமானது, கேன்ஸ் விழாவில் திரையிட்ட போது, படம் முடிந்தவுடன் பார்வையாளர்கள் எழுந்து நின்று 8 நிமிடங்களுக்கு தொடர்ந்து கைதட்டி வரவேற்பு கொடுத்தனர்.
"கனவு போல் இருக்கிறது. இவ்வளவு நீண்ட ஆரவாரத்தை நான் எதிர்பார்க்கவில்லை. திரைப்பட விழாவில் படம் திரையிட்ட அடுத்த நாளிலிருந்து மற்ற நாடுகளைச் சேர்ந்த மரியாதைக்குரிய மற்றும் அனுபவம் வாய்ந்த நடிகர்கள் என்னிடம் வந்து, என் நடிப்பில் உள்ள நுணுக்கங்களை அவர்கள் கவனித்ததாக சொன்னார்கள். அந்த கருத்துக்கள் மிகவும் மதிப்புமிக்கவை," என்று ஹெர்ஸ்டோரியிடம் பகிர்ந்தார் கனி.
யார் இந்த கனி...? கேன்ஸ் விழாவில் தர்பூசணிபழ வடிவக் கைப்பை எதற்கு?
கேரளாவைச் சேர்ந்த நடிகையும் மாடலுமான கனி குஸ்ருதி திடமான நாடகப் பின்னணியில் இருந்து திரைக்கு வந்தவர். பிரான்சில் உள்ள L'École Internationale de Theâtre Jacques Lecoq நாடகப்பள்ளியில் அவரது நாடகக் கல்வியை முடித்துள்ளார். நாடக தயாரிப்புகளான 'பகவதாஜ்ஜுகம்' மற்றும் 'லாஸ் இண்டாசிலும்' மற்றும் ஹெர்மனின் ஹெஸ்ஸியின் 'சித்தார்த்தா' கதைதழுவலிலான நாடகங்களிலிலும் நடித்துள்ளார்.
இந்தோ-போலந்து தயாரிப்பான 'பர்னிங் ஃப்ளவர்ஸ் - 7 ட்ரீம்ஸ் ஆஃப் எ வுமன்'-ல் நடித்துள்ளார். 2009ம் ஆண்டு வெளியாகிய 'கேரளா கஃபே' என்ற மலையாள ஆந்தாலஜி திரைப்படத்தில் நடித்த பிறகு திரையுலகில் கவனம் பெற்றார். தொடர்ந்து ஷிக்கர் மற்றும் காக்டெய்ல் போன்ற முக்கிய திரைப்படங்களில் நடித்தார். 'ஈஸ்வரன் சாக்ஷியாய்' என்ற மலையாள தொடரில் தெரசாவாக நடித்த பிறகு அவர் பிரபலமானார்.
இந்நிலையில், கனிகுஸ்ருதி கேன்ஸ் விழாவில் சிவப்பு கம்பளத்தின் மீது தர்பூசணி வடிவமைப்பிலான ஒரு கிளட்ச்சை எடுத்துச் சென்றார். தர்பூசணி துண்டு பாலஸ்தீன எதிர்ப்பின் சின்னமாகும்.
"ஒரு தனிநபராக, சில நேரங்களில் பல எண்ணங்களைப் பகிர்ந்துகொள்கிறேன். சில பிரச்சினைகளில் எப்படி ஒரு நிலைப்பாட்டை எடுப்பது என்பதைச் செயல்படுத்துகிறேன். ஒரே நேரத்தில் அடுத்தடுத்து தீவிர நிகழ்வுகள் நிகழும் உலகில் நாம் வாழ்கிறோம். இது நல்ல நேரம் அல்ல," என்றார் அவர்.
"நாங்கள் படத்தை ஒரு சுயாதீனமான மற்றும் சிறிய பட்ஜெட் படமாக எடுக்கத் தொடங்கினோம். எல்லோரும் அதை உருவாக்க மிகவும் கடினமாக உழைத்துள்ளனர். கிராண்ட் பிரி பிரிவில் பரிந்துரைக்கப்பட்டு, அங்கு சென்று கேன்ஸில் வெற்றி பெறுவது மிகவும் சர்ரியலாக உணர்கிறோம்..." என்ற கனி, கபாடியா மற்றும் படத்தின் தயாரிப்பில் ஈடுபட்ட அனைவரையும் பாராட்டினார்.
"எனது நடிப்பு பயணத்தில் இத்திரைப்படம் எனது சிறந்த அனுபவங்களில் ஒன்றாகும். படத்தின் படப்பிடிப்பின் போது, நாங்கள் அனைவரும் சமமான இடத்தில் இருந்தோம். மற்றவர்களை விட சற்று பெரிய நடிகர்களும் படத்தில் இருந்தனர். ஆனால், நாங்கள் அனைவரும் ஒரே மாதிரியான புரிதல் மற்றும் உடன்பாட்டுடன், படத்தினை சிறப்பாக்க முயற்சித்தோம்.
"முதன் முதலில் ஸ்கிரிப்டைப் படித்தபோது, கவிதையாக உணர்ந்தேன். கதையம்சம் என்னை ஆழமாகத் தொட்டது. அது ஒரு அதீத உணர்வையும் கொடுத்தது. இறுதியாக படத்தைப் பார்த்தபோது, அது ஸ்கிரிப்ட்டுடன் மிக நெருக்கமாக இருந்ததில் மகிழ்ச்சியடைந்தேன்," என்று கூறினார் கனி.
நாடகப் பின்னணியிலிருந்து வந்த அவருக்கு, திரைத்துறையில் விருப்பமற்ற கதைகளை நிராகரித்து, சரியான தேர்வினை தேர்ந்தெடுக்க அவரது நாடக அனுபவங்கள் உறுதுணையாக இருப்பதாக தெரிவித்தார்.
"நாடகப் பின்புலம் எந்தவொரு சவாலுக்கும் அல்லது சூழ்நிலைக்கும் என்னை அடித்தளமாகவும் மற்றும் மாற்றியமைக்கவும் உதவியது. நாடக நடிகர்கள் என்ற முறையில், எந்தவிதச் சவாலும், சூழ்நிலையும் எங்களை வீழ்த்த அனுமதிக்க மாட்டோம்," என்றார்.
மலையாள சினிமாவிற்கு மீண்டும் வருவதைப் பற்றி கேட்டபோது, கனி சிரித்துக்கொண்டே, தொழில்துறையில் கதாபாத்திர தேர்விற்கான ஆடிஷன் வாய்ப்புகள் அதிகம் இருக்க விரும்புவதாகக் கூறினார். இரண்டு மலையாள வெப் தொடர்கள், ஒரு மலையாள படம், ஒரு இந்தி படம் மற்றும் ஒரு வெப் சீரிஸ் மற்றும் ஒரு தமிழ் படத்திலும் நடித்து கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
இதற்கு முன்பு 1983ஆம் ஆண்டு மிருணள் சென் இயக்கிய 'கரிஜ்' திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் ஜூரி விருது வென்றது குறிப்பிடத்தக்கது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு கான் விழாவில் பிரதான பிரிவில் போட்டியிட்டு விருது வென்ற திரைப்பட குழுவினருக்கு பாராட்டுகளும்! வாழ்த்துகளும்!
தமிழில்: ஜெயஸ்ரீ
கேன்ஸ் விழாவில் 'சிறந்த நடிகை விருதை வென்ற முதல் இந்திய நடிகர்' - வரலாறு படைத்த அனசுயா சென்குப்தா!