Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT
Advertise with us

கொல்கத்தா தெருவில் வசிக்கும் ஏழைக் குழந்தைகளின் ‘அன்னை தெரசா’

16 வயதில் காசநோய் பாதிப்பு கண்டறியப்படு ஏழு மாதங்கள் மட்டுமே உயிரோடு இருப்பார் என்று சொல்லப்பட்ட அரூப் நோயிலிருந்து மீண்டதுடன் இன்று 70 வயதில் என்ஜிஓ தொடங்கி ஏழை குழந்தைகளுக்கு உதவி வருகிறார்.

கொல்கத்தா தெருவில் வசிக்கும் ஏழைக் குழந்தைகளின் ‘அன்னை தெரசா’

Monday October 26, 2020 , 4 min Read

அரூப் சென்குப்தா கொல்கத்தாவைச் சேர்ந்தவர். இளம் வயதில் காசநோய் பாதிப்பு ஏற்பட்டு உயிர் பிழைக்க மாட்டார் என்று சொல்லப்பட்ட நிலையில் நோயிலிருந்து மீண்டெழுந்து இன்று சமூக சேவையில் ஈடுபட்டுள்ளார். ஏழை மக்களுக்கு உதவ என்ஜிஓ ஒன்றை நடத்தி வருகிறார்.


அரூப் சென்குப்தாவிற்கு 16 வயதிருக்கும். அவருக்கு காசநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இன்னும் ஏழு மாதங்கள் மட்டுமே உயிரோடு இருப்பார் என மருத்துவர்கள் நாள் குறித்துவிட்டனர்.


அந்த நாட்களில் காசநோய் மிகவும் கொடிய தொற்று நோயாகவே இருந்தது. சிகிச்சை வசதிகள் ஏதும் இல்லை. மக்களுக்கு தொற்று பரவும் என்கிற அச்சம் இருந்ததால் நோய் பாதித்தவரை ஒதுக்கிவிடுவார்கள்.

“இன்று கொரோனா வைரஸைக் கண்டு நாம் பயப்படுவது போன்றே அந்த நாட்களில் காசநோய் கண்டு மக்கள் அச்சப்படுவார்கள். நோய் தொற்று பரவிவிடும் என்கிற பயத்தில் நான் வசித்த பகுதியில் இருந்தவர்கள் என்னை வீட்டை விட்டே துரத்திவிட்டார்கள்,” என்று அரூப் சோஷியல்ஸ்டோரி இடம் தெரிவித்தார்.

அரூப் தனது அம்மாவுடன் தேவாலயத்தில் தஞ்சம் புகுந்தார். அன்னை தெரசா அந்த நாட்களில் 'சிஸ்டர் தெரசா’ என்றே அழைக்கப்பட்டார். தேவாலத்தில் இருந்தவர்கள் இவர்களை அன்னை தெரசாவிடம் அனுப்பிவைத்தனர். அந்த சமயத்தில் அன்னை தெரசா சாலையில் இருந்த தொழுநோயாளிகளை பராமரித்து வந்தார்.

“சிஸ்டர் தெரசா டார்ஜிலிங் பகுதியில் இருந்த ஒரு காசநோய் பராமரிப்பு மையத்துக்கு என்னை அனுப்பி வைத்தார். 18 பேர் ஒரே அறையில் தங்கினோம். தினமும் பலர் இறப்பதைக் கண்ணெதிரே பார்த்தேன். அதிர்ஷ்ட்டவசமாக நான் உயிர் பிழைத்தேன்,” என்றார்.
2

அன்னை தெரசாவின் சேவைக் கண்டு அரூப்பிற்கும் சமூக நலனில் பங்களிக்கவேண்டும் என்கிற உந்துதல் பிறந்தது. அரூப் அவரது கொள்கைகளையே பின்பற்றுகிறார். ஏழை மக்களுக்கு உதவும் நோக்கத்துடன் 'புதிய நம்பிக்கை’ என்கிற பொருள் கொண்ட 'Notun Jibon’ என்கிற என்ஜிஓ-வைத் தொடங்கினார். கொல்கத்தாவில் சாலைகளில் உள்ள குழந்தைகளுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்துகிறார்.


காசநோய் பாதிப்பில் இருந்து உயிர்பிழைத்தாலும்கூட இன்னமும் இவர் தூக்கமின்மை, நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (COPD) என உடலில் பல்வேறு பாதிப்புகளோடு போராடி வருகிறார்.

ஆரம்ப நாட்கள்

காசநோயில் இருந்து மீண்ட பின்னர் அரூப் கொல்கத்தா திரும்பினார். அன்னை தெரசாவுடன் சில காலம் தங்கினார். படிப்பையும் முடித்தார்.

“அன்னை தெரசாவுடன் தங்கியிருந்த நாட்கள் வாழ்க்கையின் மற்றொரு பக்கத்தை எனக்கு அறிமுகப்படுத்தியது. எப்போதும் சமூக சேவையில் தொடர்ந்து ஈடுபடவேண்டும் என்று அவர்தான் எனக்கு உந்துதலளித்தார்,” என்றார்.
3

அதேபோல் 2010ம் ஆண்டு குடும்பத்துடன் டெல்லி திரும்பிய அரூப் கட்டுமானப் பணியாளர்கள் பலர் குழந்தைகளுடன் வேலை நடக்கும் இடத்திற்கு அருகிலேயே தங்கியிருந்து கஷ்டப்படுவதைப் பார்த்தார். இவர்களுக்கு போர்வை, துணிகள் போன்றவற்றுடன் பணமும் கொடுத்து உதவத் தீர்மானித்தார்.

Notun Jibon – புதிய வாழ்க்கை - என்ஜிஓ

இந்தியா முழுவதும் உள்ள எத்தனையோ ஏழை மக்கள் சாலைகளிலும் மேம்பாலங்களுக்கு அடியிலும் படுத்துறங்குகிறார்கள். கடுமையான வானிலையில் திறந்தவெளியில் தங்கி அவதிப்படுகிறார்கள். குழந்தைகளின் நிலை மேலும் கவலையளிப்பதாகவே இருக்கிறது.

4
“குழந்தைகளுக்கு புத்தகங்கள், நோட்டுபுத்தகங்கள், புத்தகப்பை, ஸ்டேஷனரி, சீருடை போன்றவற்றை கொடுக்க தொடங்கினோம். சனிக்கிழமைகளில் நல்லொழுக்கம் சார்ந்த விஷயங்களையும் சுத்தமாக இருப்பது பற்றியும் கற்றுக்கொடுக்கிறோம்,” என்றார் அரூப்.

Notun Jibon என்கிற இவரது என்ஜிஓ-வில் நலிந்த பிரிவைச் சேர்ந்தவர்கள், முன்னர் பாலியல் தொழிலாளிகளாக இருந்தவர்கள் என மொத்தம் எட்டு பேர் குழுவாக செயல்படுகின்றனர். ஒவ்வொருவரும் குழந்தைகளுக்கு பாடம் எடுப்பது, நிதி திரட்டுவது என பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள்.


இந்த என்ஜிஓ-வின் முக்கிய உறுப்பினர் ஜும்கி பேனர்ஜி. குடும்ப வன்முறை காரணமாக கணவரைப் பிரிந்து குழந்தைகளுடன் கஷ்டப்பட்ட ஜும்கியை கண்ட அரூப்பும் அவரது மனைவி தாலியாவும் ஜும்கிக்கு உதவினார்கள். தற்போது ஜும்கி என்ஜிஓ-வின் செயலாளராக உள்ளார்.

Sahoj Path – எளிமையான வழி - பள்ளி

367 குழந்தைகள் அரூப்பின் என்ஜிஓ-வில் இருக்கிறார்கள். இவர்களது பெற்றோர்கள் அனைவருமே நிரந்தர வருவாய் எதுவும் இல்லாமல் கஷ்டப்படுபவர்கள். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் சூழலில் இவர்கள் இல்லாததால் பாடம் சொல்லிக்கொடுக்கும்படி அரூப்பிடம் கேட்டார்கள்.


அதற்கிணங்க இந்தக் குழந்தைகளுக்காக அரூப் பள்ளி ஒன்றைத் திறக்க விரும்பினார்.

5
“நாங்கள் காவல் நிலையம் சென்று காவல் நிலைய பொறுப்பு அதிகாரியிடம் பேசினோம். என்ஜிஓ மூலம் இந்தக் குழந்தைகளுக்கு உதவ விரும்புகிறோம் என்று கூறினோம். அவர் கிளப்புடன்கூடிய சிகப்பு விளக்கு பகுதி ஒன்றிற்கு செல்லுமாறு அறிவுறுத்தினார். அங்குள்ள குழந்தைகளுக்கு உதவி தேவைப்படுவதை அறிந்துகொண்டு அந்தப் பகுதியிலேயே பள்ளி தொடங்கினோம்,” என்றார் அரூப்.

பாலியல் தொழிலாளர்கள் மற்றும் பிச்சை எடுப்பவர்களின் குழந்தைகளே இங்கு படிக்கின்றனர். 3 முதல் 12 வயது வரையுள்ள 40 மாணவர்கள் படிக்கின்றனர்.

மதிய வேளையில் பள்ளி தொடங்குகிறது. ஒரு மணி நேரம் உடற்பயிற்சி. அதன் பிறகு பாலும் வாழைப்பழம் கொடுக்கப்படுகிறது. முதல் இரண்டு வகுப்புகள் வீட்டுப்பாடம் எழுதுவார்கள்; படிப்பார்கள். மூன்றாவது வகுப்பில் கலை, கைவினை, இசை, நடனம் போன்றவை இடம்பெற்றிருக்கும்.


ஒவ்வொரு ஆண்டும் கிரிஸ்துமஸ் தினத்தன்று அரூப் தவறாமல் சாண்டா கிளாஸ் வேடமிட்டு குழந்தைகளுக்கு பரிசளிக்கிறார். அரூப்பின் மனைவி இறந்த பின்னரும் குழந்தைகளை மகிழ்விக்க இதைத் தொடர்ந்து செய்து வருகிறார்.

பெருந்தொற்று மற்றும் பேரிடர்கால உதவிகள்

கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது முதல் அரூப் தனது குழுவுடன் இணைந்து அத்தியாவசிய பொருட்களை மக்களுக்கு கொடுக்கத் தொடங்கினார். மூன்று கிலோ அரிசி, இரண்டு கிலோ உருளைக்கிழங்கு, அரை லிட்டர் கடுகு எண்ணெய், அரை கிலோ பருப்பு ஆகியவை கொண்ட பாக்கெட்டுகளை இவர்கள் விநியோகித்தனர்.

6
“கடைகள் மூடப்பட்டபோது அனைவருக்கும் பொருட்களைக் கொடுப்பது கடினமாக இருந்தது. கடைகள் திறக்கப்பட்டது முதல் 40 குழந்தைகளுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் தொடர்ந்து அத்தியாவசியப் பொருட்களை கொடுத்து வருகிறோம்,” என்றார் அரூப்.

இதுதவிர மாதத்திற்கு ஒருமுறை சிகப்பு விளக்கு பகுதிக்கு சென்று கிட்டத்தட்ட 400 பாலியல் தொழிலாளிகளுக்கு உதவி வருகிறார்.


மேற்கு வங்கத்தில், குறிப்பாக சுந்தார்பன்ஸ் பகுதிகளில் ஆம்பன் புயல் கடும் சேதத்தை ஏற்படுத்தியபோது அரூப் மற்றும் குழுவினர் உதவியுள்ளனர்.

“தீவுகளில் உள்ள மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை கொடுத்தோம். மூன்று கிராமங்களை தத்தெடுத்துக்கொண்டு மாதத்திற்கு குறைந்தது 400 பாக்கெட்டுகள் கொடுக்கப்படுவதை உறுதிசெய்தோம்,” என்றார்.

கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு நடவடிக்கைகள் மூலம் என்ஜிஓ-விற்கு உதவி கிடைக்கிறது என்றாலும் மொத்த நிதியில் பெரும் பகுதி குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நலம்விரும்பிகள் மூலமாகவே கிடைக்கிறது.

வருங்காலத் திட்டம்

அரூப்பின் நண்பர் ஒருவர் மூலம் 20,000 டாலர் நன்கொடை கிடைப்பதால் கிராமத்தில் பராமரிப்பு மையம், பள்ளி, பண்ணை ஆகியவற்றைக் கொண்ட ஆசிரமம் ஒன்றை திறக்க அரூப் திட்டமிட்டுள்ளார்.


பரமாரிப்பு மையம் ஆதரவற்றோர்களின் தங்குமிடமாக இருக்கும். வளாகத்திலேயே தங்கி படிக்கும் வகையில் பள்ளி அமைக்கப்படும். சிகப்பு விளக்கு பகுதியைச் சேர்ந்த 100 மாணவர்கள் இங்கு அனுமதிக்கப்பட்டு அவர்களது வாழ்க்கை மேம்படுத்தப்படும்.

தற்சார்புடன் செயல்படும் வகையில் மீதமுள்ள இடம் பண்ணை அமைக்கப் பயன்படுத்தப்படும்.

“இதுவே எனது கனவு. பெருந்தொற்று சூழல் சரியானதும் இந்தக் கனவை நனவாக்குவதில் மும்முரமாக செயல்படுவேன்,” என்கிறார் அரூப்.

ஆங்கில கட்டுரையாளர்: அஞ்சு அன் மேத்யூ | தமிழில்: ஸ்ரீவித்யா