கொரோனா தாக்கத்தை BookMyShow திறம்பட சமாளித்தது எப்படி? - TechSparks-இல் ஆஷிஷ் ஹேம்ரஜனி!
டெக்ஸ்பார்க்ஸ் 2021 நிகழ்வில் பொழுதுபோக்குத் துறை விரைவில் மீண்டெழும் என்று நம்பிக்கை தெரிவித்தார் புக்மைஷோ நிறுவனர் மற்றும் சிஇஓ ஆஷிஷ் ஹேம்ரஜனி.
ஆஷிஷ் ஹேம்ரஜனி; பிக்ட்ரீ எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனர் மற்றும் சிஇஓ. BookMyShow இந்நிறுவனத்திற்குச் சொந்தமானது. டெக்ஸ்பார்க்ஸ் 2021 நிகழ்வில் யுவர்ஸ்டோரி நிறுவனர் மற்றும் சிஇஓ ஷ்ரத்தா ஷர்மாவுடன் உரையாடிய ஆஷிஷ் ஹேம்ரஜனி 20 ஆண்டுகளுக்குப் பிறகு தனக்குள் இருந்த ஆபரேடரை கொரோனா பெருந்தொற்று வெளிக்கொண்டு வந்திருப்பதாகத் தெரிவித்தார். சில முக்கியத் தீர்மானங்களை எடுக்க வைத்திருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
பெருந்தொற்று பரவல் பொழுதுபோக்கு மற்றும் நேரலை நிகழ்ச்சிகள் துறையில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை சமாளிக்க இந்நிறுவனம் ஊழியர்களின் சம்பளத்தை குறைப்பது, குழுவின் அளவைக் குறைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
”நான் என்னைப் பற்றி மட்டும் பேசவில்லை. இந்தத் துறை சார்பாக பேசுகிறேன். எங்கள் துறையே முதலில் மூடப்பட்டு இறுதியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது,” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனால் புக்மைஷோ அதன் வணிக மாதிரியை மறுஆய்வு செய்யவேண்டியிருந்தது. வருவாய் ஈட்டுவதற்கான மாற்று வழிமுறைகளை ஆராய்ந்தது.
2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம், ஒருமுறை பார்ப்பதற்கு கட்டணம் செலுத்தும் வீடியோ ஆன் டிமாண்ட் (TVOD) சேவையை அறிமுகப்படுத்தியது. இந்த சேவையின் மூலம் வாடிக்கையாளர்கள் தாங்கள் பார்க்க விரும்பும் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் கட்டணம் செலுத்திப் பார்க்க முடியும்.
உலகளவில் சந்தை வாய்ப்புகள் உருவாகியிருக்கும் நிலையில் ’புக்மைஷோ’வின் முக்கிய செயல்பாடுகளில் இந்தக் கூடுதல் சேவை பலனளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
காலத்திற்கேற்ற மாற்றம்
புக்மைஷோ நிறுவனம் வருவாய் ஈட்டுவதிலும் வளர்ச்சியடைவதிலும் நேரலை நிகழ்ச்சிகள் தொடர்ந்து முக்கியப் பங்கு வகிக்கும் என்பதை ஆஷிஷ் அழுத்தமாகப் பதிவு செய்தார்.
உலகளவில் காணப்படும் போக்கை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது 2022-24 ஆண்டுகளில் வணிகத்திற்கான தேவை அதிகமிருக்கும் என்கிற எதிர்பார்ப்பு இருப்பதாகத் தெரிவித்தார்.
இதை உறுதிப்படுத்தும் வகையில் பிரிட்டிஷ் ராக் பாண்ட் Coldplay நிகழ்ச்சிக்காக லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் சியாட்டில் பகுதிக்குப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
TVOD சேவைகளை வணிகத்தில் இணைத்திருப்பதால் ப்ரீமியம் வாடிக்கையாளர்களின் தொகுப்பு பற்றிய தரவுகள் மூலமாகவும் வருவாய் ஈட்ட புக்மைஷோ திட்டமிட்டு வருகிறது.
"எங்கள் வாடிக்கையாளர்கள் கட்டணம் செலுத்தும் முறை, திரைப்படங்களின் தேர்வு உள்ளிட்ட மற்ற தரவுகள் எங்களிடம் உள்ளது. 80-90 மில்லியன் வாடிக்கையாளர்கள் இருக்கும் நிலையில் தரவுகளைக் கொண்டு வருவாய் ஈட்டும் முயற்சி புக்மைஷோவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது,” என்கிறார்.
பெருந்தொற்று சூழலில் வணிகம் தக்கவைக்கப்பட்டது
பெருந்தொற்று சூழலை சமாளிக்க ’புக்மைஷோ’ நிறுவனம் ஊதிய குறைப்பு, ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்தக் கடினமான சூழலில் பங்குதாரர்கள், ஊழியர்கள் என அனைவரின் நலனிற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது என்கிறார் ஆஷிஷ்.
”நிறுவனத்தின் செலவுகளைக் குறைத்து, நீண்டகால நலனைக் கருத்தில் கொண்டு தீர்மானங்கள் எடுக்கவேண்டியிருந்தது,” என்கிறார் ஆஷிஷ்.
பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட ஊழியர்களுக்கு அடுத்த ஓராண்டிற்கான மருத்துவக் காப்பீட்டை நிறுவனம் வழங்கியுள்ளது என்கிறார்.
அதுமட்டுமின்றி இந்த ஊழிர்களுக்கு மாற்று வேலைக்கான ஏற்பாட்டுகளிலும் மனிதவளப் பிரிவில் உதவி செய்யப்பட்டது. புக்மைஷோ நிறுவனம் BookMySmile மூலம் கொரோனா பராமரிப்பிலும் உதவியது.
கடினமான சூழல்களை திறம்பட எதிர்கொண்ட இந்தத் தொழில்முனைவர் Apple TV+ series, Ted Lasso போன்ற நிகழ்ச்சிகளைப் பார்த்து பயனுள்ள படிப்பினைகளைக் கற்கவேண்டும் என மற்ற தொழில்முனைவோர்களுக்கு அறிவுறுத்துகிறார். கடினமான சூழல்களே திறமையான நிறுவனங்களை வெளிச்சத்திற்குக் கொன்டு வரும் என்கிறார் ஆஷிஷ்.
ஆங்கில கட்டுரையாளர்: பாயல் கங்குலி | தமிழில்: ஸ்ரீவித்யா