குடும்பச் சொத்து ரூ.67,841 கோடி - அஸ்வின் டானி கட்டிய கோட்டைக்குப் பின்னால் ‘Asian Paints’
இந்தியாவிலேயே பெயின்ட் சாம்ராஜ்ஜியம் நிறுவிய அஸ்வின் டானியின் ‘ஏஷியன் பெயின்ட்ஸ்’ வெற்றிக்குப் மகத்தான தொழில் பயணம் இருக்கிறது.
மும்பையில் அக்டோபர் 24, 1942-ஆம் ஆண்டு பிறந்தவர்தான் அஸ்வின் டானி. இவர்தான் பிற்பாடு இன்று பிரபலமாகத் திகழும், நம் வீடுகளையும் கட்டடங்களையும் பல வண்ணங்களில் ஜொலிக்கச் செய்யும் ஏஷியன் பெயின்ட்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரும் இயக்குநருமாவார். செப்டம்பர் 28, 2023- அன்று அஸ்வின் டானியை காலன் அழைத்துச் சென்றது ஏஷியன் பெயின்ட்ஸ் குடும்பத்துக்கு ஒரு பெரிய துக்க தினமாகும்.
ஆனால், அஸ்வின் டானி விட்டுச் சென்ற வாழ்வியல் மதிப்பீடுகளான பிறருக்கு உதவி செய்தல், நற்செயல்கள், முழுமையான கற்றல், கல்வியறிவு மற்றும் விளையாட்டு முதலிய நல்வாழ்வை ஊக்குவித்தல் ஆகிய மாற்றத்தக்க செயல்கள் மூலம் தனிநபர்கள் மற்றும் சமூகங்களை மேம்படுத்துதல் போன்ற சமூக நல ஊழியங்களை டானியின் குடும்பத்தினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
அஸ்வின் டானியின் முழுப்பெயர் அஸ்வின் சூரியகாந்த் டானி ஆகும். ஒரு வேதியியலாளராக இருந்து இந்தியாவின் மாபெரும் பெயின்ட் நிறுவன சாம்ராஜ்ஜியத்தை கட்டியெழுப்பும் வரை, அஸ்வின் டானியின் பயணம் கடின உழைப்பு, அர்ப்பணிப்பின் சக்திக்கு சான்றாகும்.
அஸ்வின் டானியின் தொழில் வாழ்க்கையும் பயணமும்!
டெட்ராய்ட்டில் கெமிஸ்ட் ஆக பணியாற்றினார் அஸ்வின் டானி. 1968-ஆம் ஆண்டில், அஸ்வின் டானி தனது குடும்ப வணிகமான ஏசியன் பெயின்ட்ஸில் ஒரு மூத்த நிர்வாகியாக சேர முடிவெடுத்தார். பல ஆண்டுகளாக, அவர் கடினமாக உழைத்ததன் மூலம் 1997-ஆம் ஆண்டில், அவர் தரவரிசை ஏணியில் ஏறி ஏசியன் பெயின்ட்ஸின் துணைத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரானார்.
ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் துறையை வளர்த்தெடுக்கும் முகமாக நிறுவனத்தின் அந்தத் துறையின் இயக்குனராகப் பொறுப்பேற்றபோது அஸ்வின் டானி ஆராய்ச்சியில் அதிக முதலீடு செய்தார். அதனால் நிறுவனம் புதிய உயரங்களை எட்டியது. இவரது புதியன புகுத்தல் மூளை மற்றும் உழைப்பினால் தற்போது ஏஷியன் பெயின்ட்ஸ் இந்தியாவின் மிகப் பெரிய பெயின்ட் நிறுவனங்களில் ஒன்றாகவும், ஆசியாவில் மூன்றாவது பெரிய நிறுவனமாகவும், உலகளவில் ஒன்பதாவது பெரிய நிறுவனமாகவும் திகழ்கிறது.
அஸ்வின் டானி 1966ல் மும்பை பல்கலைக்கழகத்தில் வேதியியல் பட்டப்படிப்பு படித்தார். பின்னர், அமெரிக்கா சென்று அக்ரான் பல்கலைக்கழகத்தில் வேதியியல் பொறியியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். அஸ்வின் டானி - இனா டானி தம்பதியினருக்கு 3 வாரிசுகள் உள்ளனர். மகன் மாலவ் டானி ஏஷியன் பெயின்ட்ஸ் இயக்குநர்கள் வாரிய உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுமைகளின் புதல்வன்!
ஏஷியன் பெயின்ட்ஸ் வளர்ச்சியில் அஸ்வின் டானி புகுத்திய புதுமைகள் பெரும் பங்கு வகித்தன. உதாரணமாக இவர்தான் கணினிகளை நிறுவனத்தில் புகுத்தினார். இதுவே, புதுப்புது பெயின்ட் டிசைன்களை உருவாக்க உதவியது.
1997ல் டானி ஆசியன் பெயின்ட்ஸின் துணைத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராகப் பொறுப்பேற்றபோது ஏஷியன் பெயின்ட்ஸ் உலகளாவிய நிறுவனமாக விரிவாக்கம் பெற்றது. தனது வெற்றி குறித்து அஸ்வின் டானியே ஒருமுறை கூறியது:
“55 ஆண்டுகளுக்கு நான் சாப்பிட்டது, குடித்தது, கனவு கண்டது எல்லாமுமே பெயின்ட்தான். அஸ்வின் டானி பெயின்ட் சாம்ராஜ்ஜிய நிறுவனர் மட்டுமல்ல; அவர் ஒரு தொலைநோக்கு பார்வையாளர், முன்னோடி. சமூக நலன் செயல்பாடுகளில் பிரதானமாக கவனம் செலுத்தினார். பெயின்ட் வர்த்தகம் மட்டுமின்றி சமூக நல செயல்பாடுகள் மூலம் தொழில், சமூகம் இரண்டிலும் அழியாத முத்திரையை பதித்தார்.”
இன்று அஸ்வின் டானியின் நிகர சொத்து மதிப்பு 8 பில்லியன் டாலராக உள்ளது என்கிறது ஃபோர்ப்ஸ். மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில், ஏசியன் பெயின்ட்ஸ் $4.1 பில்லியன் வருவாய் ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 19 சதவீதம் அதிகரித்துள்ளது என்று அறிக்கை கூறுகிறது. ஒட்டுமொத்தமாக, அஸ்வின் டானி குடும்பத்தின் சொத்து 67,841.77 கோடி என்கிறது ஃபோர்ப்ஸ்.
ஏன் முக்கியத்துவம்?
அஸ்வின் டானி என்னும் அசாதாரண நபர் 2023 செப்டம்பரில் உலகை விட்டுச் சென்ற தருணத்தில் அவரது வாழ்க்கையையும் சாதனைகளையும் நாம் கொண்டாட வேண்டியுள்ளது.
பெயின்ட்களின் வரலாற்றில் கேன்வாசில் அஸ்வின் டானியின் தனித்த முத்திரை ஒரு கலைஞனின் படைப்புகளுக்கு ஒப்பாகும். விடா முயற்சி மற்றும் தொலைநோக்கு இருந்தால் கனவுகளை நிஜமாக்க முடியும் என்பதற்கும், வர்த்தக நலன் மட்டுமல்லாமல் சமூக நலனும் முக்கியம் என்று கருதியதற்கும் அஸ்வின் டானி ஒரு தனித்துவ உதாரணமாக வாழ்ந்தார் என்றால் மிகையாகாது.
இன்று இவரது வம்சாவளியினர் டானி விட்டுச் சென்ற சமூக நல ஊழியங்களத் தொடர்ந்து செய்து வருகின்றனர். இவர்கள் டானி அறக்கட்டளையை நிறுவியுள்ளனர். இதன் மூலம் தனிமனிதர்களுக்கு அதிகாரம் அளித்தல் சமூகங்களை மாற்றியமைக்கும் செயல்களில் ஈடுபடுதல், ஒரு தன்னிறைவான சமுதாயத்தை உருவாக்குதல் முழுமையான கற்றலை வழங்குதல், நல்வாழ்வை ஊக்குவித்தல், குறிப்பாக உடல் கல்வியறிவு மற்றும் விளையாட்டுத் துறைகள் மற்றும் சிறந்த வாழ்வாதாரத்திற்கான அணுகல் போன்ற நற்காரியங்களைச் செய்து வருகின்றனர்.
மற்றவர்களின் முகத்தில் புன்னகையைப் பார்ப்பதையே லட்சியமாகக் கொண்டு டானி குடும்பத்தினர் இன்றும் வாழ்ந்து வருகின்றனர் என்றால், அதற்கு அடித்தளம் அமைத்தவர் அஸ்வின் டானி என்னும் மாபெரும் மனிதர் என்பதை மறக்கலாகாது.
1 ரூபாய் மிட்டாய் டு ரூ.1,300 கோடி சாம்ராஜ்ஜியம் - இது ‘கோபால் ஸ்நாக்ஸ்’ வெற்றிக் கதை!
Edited by Induja Raghunathan