Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

'23 வயதில் ஆண்டுக்கு ரூ.4.2 கோடி வருமானம்' - டிவிட்டர் பதிவால் சர்ச்சையில் சிக்கிய இளம் தொழிலதிபர்!

பல இரவுகள் விழித்திருந்து, பார்ட்டிகளுக்குக்கூடச் செல்லாமல் உழைத்ததன் விளைவாக, ஆண்டொன்றுக்கு ரூ. 4.20 கோடி சம்பாதிப்பதாக எக்ஸ் தளத்தில் 23 வயது தொழிலதிபர் ஒருவர் வெளியிட்ட பதிவு பல்வேறு விவாவதங்களை ஏற்படுத்தியுள்ளது.

'23 வயதில் ஆண்டுக்கு ரூ.4.2 கோடி வருமானம்' - டிவிட்டர் பதிவால் சர்ச்சையில் சிக்கிய இளம் தொழிலதிபர்!

Monday October 28, 2024 , 2 min Read

மாறி வரும் வாழ்க்கைச் சூழலால், ஒவ்வொருவருமே அவர்களது நிலைக்கு ஏற்ப பொருளாதாரப் பிரச்சினைகளில் சிக்கிக் கொண்டுதான் வாழ்ந்து வருகின்றனர். அவரவர்க்கான பணத்தேவைதான் வேறுபடுகிறதே தவிர, எல்லோருமே ஏதோ ஒரு தேவைக்காக பணத்தைத் தேடித் தான் ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.

இதனாலேயே நம்மில் பலருக்கு வேலைப்பளு, மன அழுத்தம் எனப் பல்வேறு பிரச்சினைகள். இந்தப் பிரச்சினைகளில் இருந்து எப்படித் தப்பிப்பது என யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில், 23 வயது இளம் தொழிலதிபர் ஒருவர் தனது வெற்றிக் கதையை மற்றவர்களுடன் பகிரப் போய், தேவையில்லாமல் நெட்டிசன்களின் கண்டனங்களுக்கு ஆளாகி வருகிறார்.

kushal arora

யார் அந்த தொழிலதிபர்?

டெல்லியைச் சேர்ந்த குஷால் அரோராதான் அந்த இளம் தொழிலதிபர். 23 வயதான அவர் மார்க்கெட்டிங் தொடர்பான தொழிலை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். ஆண்டிற்கு $500,000 (தோராயமாக ரூ. 4,20,35,350) சம்பாதிப்பதாக அவரே தனது சமூகவலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், இந்த வெற்றி சுலபமாகக் கிடைத்துவிடவில்லை என்றும், அதற்காக தான் செய்த தியாகங்கள் குறித்தும் அவர் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

“எனக்கு 23 வயது, ஆண்டுக்கு $5,00,000 சம்பாதிக்கிறேன். என் வயது மாணவர்கள் பார்ட்டிகளுக்குச் சென்று, மகிழ்ச்சியாகக் கொண்டாடிக் கொண்டிருந்தபோது, ​​​நான் தூக்கமில்லாத இரவுகளில் வேலை செய்து கொண்டிருந்தேன். இதனால், வேலை-வாழ்க்கையின் சமநிலையை இழந்து சமூக நிகழ்வுகளைத் தவறவிட்டு, தோல்விகள்/நிராகரித்தலை எதிர்கொண்டேன். ஆனாலும் நான் அதைத் தேர்ந்தெடுத்தேன். நீங்கள் உங்கள் கனவு வாழ்க்கையை உருவாக்குகிறீர்களா?”என்ற கேள்வியுடன் அந்தப் பதிவை அரோரா முடித்திருந்தார்.

தனது இந்தப் பதிவைப் பார்த்து இளைஞர்கள் உத்வேகம் அடைவார்கள் என அவர் எண்ணிக் கொண்டிருக்க, அதற்கு மாறான எதிர் விளைவை ஏற்படுத்தியுள்ளது அவரது பதிவு.

குவியும் கண்டனங்கள்

அரோராவின் இந்தப் பதிவைப் படித்த பலர், ‘அவர் மறைமுகமாக இளைஞர்கள் மீது, இளைய தலைமுறையினர் மீது தேவையற்ற அழுத்தத்தை உருவாக்குவதாக’ சாடியுள்ளனர்.

"நீங்கள் உங்கள் வாழ்க்கையை வாழ்ந்தீர்கள், அவர்கள் தங்களுடைய வாழ்க்கையை வாழ்கிறார்கள். எல்லோரும் இவ்வளவு சம்பாதிக்க வேண்டும் என்று கனவு காண்பதில்லை, அதை ஒரு ஆடம்பரமான காட்சியாக மாற்றுவதை நிறுத்துங்கள். நீங்கள் கடினமாக உழைத்தீர்கள், உங்களுக்குப் பணம் கிடைத்தது. அதனுடன் வாழுங்கள். இளைய தலைமுறை இவ்வளவு சம்பாதிக்கவில்லை என அந்த அழுத்தத்தை உருவாக்குவதை நிறுத்துங்கள்," என ஒருவர் காட்டமாக கமெண்ட் செய்துள்ளார்.
work stress

மற்றொருவரோ, "நான் அந்த வயதில் பார்ட்டியில் இருந்தேன். இப்போது நீங்கள் சொன்னதை விட அதிகமாக சம்பாதிக்கிறேன். நான் சொல்ல விரும்புவது இதுதான், உங்களுக்காக நீங்கள் வேலை செய்தால், அதை அனைவரும் செய்ய வேண்டும் என்று அர்த்தமல்ல. இந்தியாவுக்காக விளையாடுவதற்கான வாய்ப்பைப் பெறுவதற்காக லட்சக்கணக்கான வீரர்கள் தங்கள் வாழ்க்கையை கிரிக்கெட்டிற்கு அர்ப்பணிக்கிறார்கள். ஆனால் அவர்களில் 11 பேர் மட்டுமே தகுதி பெற்றுள்ளனர்,” என யதார்த்தத்தை விளக்கி இருக்கிறார்.

இன்னொருவரோ, "நீங்கள் முன்கூட்டியே சம்பாதிப்பது நல்லதுதான். ஆனால், நீங்கள் மற்ற விஷயங்களைப் புரிந்து கொள்ள வேண்டும். தியானம் செய்வதற்கும் வாழ்க்கையைப் பற்றி அறிந்து கொள்வதற்கும் சிறிது நேரம் ஒதுக்குங்கள்," எனத் தெரிவித்துள்ளார்.

எனது இலக்கு

இப்படிப்பட்ட காட்டமான பதிவுகளைப் பார்த்து கொஞ்சமும் வருத்தப்படாமல், தன் பதிவுக்கான விளக்கத்தை மற்றொரு பதிவாக வெளியிட்டுள்ளார் அரோரா.

அதில், “எனக்கு 19 வயதாக இருந்தபோது எனது பெற்றோர் ஓய்வு பெற்று விட்டனர். எனவே, அப்போதிருந்தே எனது தொழில் பயணத்தை ஆரம்பித்து விட்டேன். எனது இந்தப் பதிவு, இளைஞர்களுக்கு ஏதேனும் அழுத்தத்தை ஏற்படுத்தினால், அவர்கள் எனது உள்ளடக்கத்தை மகிழ்ச்சியுடன் முடக்கலாம். ஆனால் எனது இலக்கு ஊக்கத்தைத் தேடும் இளைஞர்கள்தான்,” எனத் தெரிவித்துள்ளார்.