அடித்தட்டு மகளிரை தொழில் முனைவர்களாக சொந்தக் காலில் நிற்க வைக்கும் அறக்கட்டளை!
சமுதாயத்தில் பின்தங்கிய படிப்பறிவில்லாத பெண்களுக்கு சுயதொழில் செய்து தொழில்முனைவராகும் வாய்ப்பை இலவச பயிற்சி மூலம் வழங்கி வருகிறது சென்னையை சேர்ந்த அட்ஸ்வா அறக்கட்டளை.
இரண்டு கைகளில் பத்து வேலைகளை ஒரே நேரத்தில் செய்து முடிக்கும் சாதுரியக்காரர்கள் பெண்கள். பெண்களின் சக்தியை உணர்த்து தானோ என்னவோ அவர்களை வீட்டிலேயே முடக்கி வைத்திருந்தனர் முன்னோர்கள். ஆனால் 2019ல் பெண்கள் தாங்கள் யார் தங்களின் சக்தி என்பதை வெளிப்படுத்தி வருகின்றனர். படித்த பெண்கள் மட்டுமின்றி படிப்பறிவில்லாதவர்களும் கூட வீட்டு வேலைகளோடு வாழ்க்கை முடிந்துவிட்டது என்று விட்டத்தை பார்த்திருக்காமல் தங்களால் இயன்ற பணியை செய்து பொருளாதார சுதந்திரம் உள்ளவர்களாக விளங்குகின்றனர்.
பெண்கள் வேலைக்காக பிறரை சார்ந்து இருக்காமல் தற்சார்பு தொழிலை செய்து மற்றவர்களுக்கு வேலைகொடுப்பவர்களாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சென்னை புறநகர் பகுதியான செங்குன்றத்தில் இயங்கி வரும் அட்ஸ்வா (ATSWA – Annai Teresa social welfare Association) இலவச தொழில்முனைவு பயிற்சியை வழங்கி வருகிறது.
சமூக நலப்பணியில் ஆர்வம் கொண்ட செல்லத்துரை அட்ஸ்வா அறக்கட்டளையை நிறுவி இதன் மூலம் வசதியில்லாத மாணவர்களுக்கு இலவசk கல்வி, ஆதரவற்ற குழந்தைகளுக்கான காப்பகம் என பல பணிகளை செய்து வருகிறார். இவரது சமூகப் பணியில் மற்றொரு மைல்கல் பெண்களின் முன்னேற்றத்திற்கான பயிற்சி வகுப்புகள்.
3 மாதத்திற்கு ஒரு முறை 40 பெண்களுக்கு அவர்களுக்கு விருப்பமான தொழில்முனைவுp பயிற்சி அளித்து சொந்தக் காலில் நிற்பதற்கான நம்பிக்கையை ஏற்படுத்தி வருவதாக மகிழ்ச்சியோடு கூறுகிறார் அட்ஸ்வா அறக்கட்டளை தலைவர் செல்லத்துரை.
2019, ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. அந்த வகையில் ஹோட்டல்களில் பயன்படுத்தி வந்த பிளாஸ்டிக் தாள்களுக்கு கடிவாளம் போடப்பட்டதால் இதற்கு மாற்றாக ஒரு முறை சாப்பிட்டு விட்டு தட்டை தூக்கிப் போட்டாலும் இயற்கைக்கு ஊறு ஏற்படுத்தாத பாக்கு மட்டை தட்டுகளுக்கு கிராக்கி அதிகரித்துள்ளது.
செங்குன்றத்தில் செயல்பட்டு வரும் எங்கள் பயிற்சி மையத்தில் பெண்களுக்கு பாக்கு மட்டையில் இருந்து தட்டு, டம்ளர், கிண்ணம் என 6 வகையான பொருட்களை உற்பத்தி செய்ய கற்றுக் கொடுக்கிறோம். இந்த வகை பொருட்களுக்கான மவுசு கூடிக்கொண்டே வருவதால் பெண்களுக்கு நல்ல வருமானம் ஈட்டக் கூடிய தொழில் இது.
மேலும் ஆண்களின் துணையின்றி பெண் தனித்து இந்த தொழிலை செய்யலாம். வயது வித்தியாசமின்றி அனைத்து வயது பெண்களும் இதனை செய்ய முடியும் என்பது கூடுதல் சிறப்பான விஷயம்.
அட்ஸ்வாவில் 3 மாத பயிற்சி முடித்த பின்னர் தட்டு தயாரிப்புக்கான மெஷின் வாங்குவதற்கு அரசின் மானியம் பெற பரிந்துரைப்பதோடு, மூலப்பொருட்கள் எங்கிருந்து கிடைக்கும் உற்பத்தி செய்த பாக்குமட்டை பொருட்களை எங்கே விற்பனை செய்ய வேண்டும் என்பது வரை அனைத்தையுமே அட்ஸ்வா செய்து கொடுத்து விடும் என்கிறார் செல்லத்துரை.
பாக்குமட்டையில் இருந்து பொருட்களை தயாரிக்க அதிக நேரம் தேவைப்படும் அதிக வேலைப்பளூ இருக்கும் என்றெல்லாம் கவலைப்படத் தேவையில்லை. குறுகிய காலத்தில் அசால்ட்டாக 100 தட்டு வரை தயாரிக்கலாம் என்கிறார் செல்லத்துரை.
பாக்குமட்டையை தண்ணீரில் ஊறவைத்து பிறகு தட்டு தயாரிக்கும் இயந்திரத்தில் வைக்க வேண்டும். இயந்திரத்தில் உள்ள மின்சார உதவியுடன் பாக்கு மட்டை வெப்பமாகி அதில் பொருத்தப்பட்டுள்ள வடிவத்திற்கு ஏற்ப வடிவம் பெறுகிறது. ஹோட்டல்களில் இவ்வகை தட்டுகளுக்கு தட்டுப்பாடு இருப்பதால் வருமானத்திற்கு குறைவு இருக்காது. அதே போன்று சுபநிகழ்ச்சி காலங்களில் தட்டுப்பாட்டிற்கு ஏற்ப பாக்குமட்டை பொருட்களை உற்பத்தி செய்தால் அதிக லாபம் பெற முடியும் என்கிறார்.
பாக்கு மட்டை தயாரிப்பு தட்டுகளைப் போல பெண்களுக்கு நாப்கின் தயாரிப்புக்கான பயிற்சியையும் அட்ஸ்வா அறக்கட்டளை வழங்குகிறது. இலவச தொழில்முனைவு பயிற்சிகள் மட்டுமின்றி பெண்களுக்கு தொழிற்கல்வி பயிற்சிகளான நர்சிங், டிரைவிங் உள்ளிட்ட பயிற்சிகளை வழங்கி அவர்களை நல்ல நிறுவனத்தில் பணியிலும் அமர்த்தி வருகிறது இந்த அமைப்பு.
குறைந்தபட்சம் 3000 பெண்களுக்காவது சுய வேலைவாய்ப்பு அளித்து அந்தப் பெண்கள் மூலம் அவர்களின் குடும்பம் முன்னேற்றம் அடைந்தது என்ற நிலையை உருவாக்குவதே இந்த ஆண்டின் இலக்கு என்கிறார் செல்லத்துரை.
இதன் முதற்கட்டமாக ஜனவரி முதல் மாதம் தலா 100 பெண்களுக்கு பொருளாதார முன்னேற்றத்திற்கான பயிற்சிகளை அளித்து வருகிறோம். மற்றவர்களின் வாழ்க்கை முன்னேற்றம் அடைய வேண்டும் என்று பாடுபடும் போது அதன் மூலம் நாமும் வாழ்கிறோம், வளர்ச்சி பெறுகிறோம் என்பதை அனுபவ ரீதியாக புரிந்து கொண்டுள்ளதாக பெருமைப்படுகிறார் அவர்.