ஜப்பானிய மொழி கற்கும் அவுரங்காபாத் கிராமப் பள்ளி மாணவர்கள்!
மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவேண்டும் என்கிற நோக்கத்துடன் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாக மாவட்ட கல்வி அதிகாரியான சூரஜ் பிரசாத் ஜெய்ஸ்வால் தெரிவிக்கிறார்.
ஒருவர் கல்வியறியைப் பெற மொழி முக்கிய ஆயுதமாக விளங்குகிறது. ஒரு மொழியைக் கற்றறிவதன் மூலமாகவே அந்த மொழி பேசப்படும் சமூகத்தின் கலாச்சாரத்தைப் புரிந்துகொள்ள முடியும்.
அதேசமயம் ஒரு மொழியைக் கட்டாயமாகத் திணிப்பதைக் காட்டிலும் ஆர்வமாகக் கற்றுக் கொள்ளத் தொடங்கினால் எளிதாக மொழிப் புலமை பெறலாம் என்பதற்கு அவுரங்காபாத் பள்ளி ஒரு சிறந்த உதாரணம்.
அவுரங்காபாத்தில் இருந்து சுமார் 25 கி.மீட்டர் தொலைவில் உள்ள காடிவாத் என்கிற இடத்தில் உள்ள ஜில்லா பரிஷத் பள்ளி மாணவர்கள் 'ஜப்பானிய மொழி' கற்றுக்கொள்கின்றனர். சமூக வலைதளங்கள் மூலமாகவே மாணவர்களுக்கு இந்த மொழி கற்றுக்கொடுக்கப்படுகிறது.
மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவேண்டும் என்கிற நோக்கத்துடன் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாக மாவட்ட கல்வி அதிகாரியான சூரஜ் பிரசாத் ஜெய்ஸ்வால் ஏஎன்ஐ இடம் தெரிவித்துள்ளார்.
“இந்த முயற்சியின்கீழ் ஆன்லைனில் மொழி கற்றுக்கொடுக்கப்படும். பள்ளி ஆசிரியர்கள் பலரும் ஜப்பானிய மொழியைக் கற்றுக்கொண்டுள்ளனர். மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்க உதவவேண்டும் என்பதே இந்த முயற்சியின் நோக்கம். இந்த மாவட்டத்தில் உள்ள அஜந்தா, எல்லோரா குகைகளைப் பார்வையிட சுற்றுலாப் பயணிகள் பலர் வருகை தருவார்கள். ஜப்பானியர்கள் அதிகம் வருவார்கள். மாணவர்கள் ஜப்பானிய மொழியைத் தெரிந்துகொண்டால் சுற்றுலாp பயணிகளுக்கு வழிகாட்டிகளாக செயல்படலாம்,” என்றார்.
இந்தப் பள்ளியில் கடந்த ஆண்டு இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. நான்கு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களிடம் அவர்கள் கற்றுக்கொள்ள விரும்பும் ஏதேனும் ஒரு வெளிநாட்டு மொழியைத் தேர்வு செய்யுமாறு பள்ளி நிர்வாகம் கேட்டுக்கொண்டது.
இந்த மாணவர்களுக்கு ரோபோடிக்ஸ் மற்றும் தொழில்நுட்பத்தில் ஆர்வம் இருந்ததால் அனைவரும் ஒருமனதாக ஜப்பானிய மொழியைத் தேர்வு செய்தனர்.
“நாங்கள் ஜப்பானிய மொழியை ஆர்வமாகக் கற்றுக்கொள்கிறோம். முதல் லெவல் முடித்துவிட்டோம். இப்போது எங்களால் ஜப்பானியை மொழியில் பேச முடியும். ஜப்பான் நாட்டிற்குச் சென்று ரோபோடிக்ஸ் கற்றுக்கொள்ள விரும்புகிறேன்,” என்றார் எட்டாம் வகுப்பு மாணவி ஒருவர்.
“ஜப்பான் தொழில்நுட்பம் சார்ந்த நாடு. நான் அங்கு சென்று தொழில்நுட்பம் கற்றுக்கொண்டு இந்தியாவில் அவற்றை செயல்படுத்துவேன்,” என்றார் ஆறாம் வகுப்பு படிக்கும் அம்ரிதா ராஜேஷ்.
National Institute for Japanase Language and Linguistics பேராசிரியரான பிரசாந்த பர்தேஷி, கடந்த 25 ஆண்டுகளாக ஜப்பானில் வசிப்பவர். பள்ளியின் இந்த முயற்சி குறித்து தெரிந்துகொண்டதும் ஜப்பானிய மொழியைக் கற்றுக்கொடுக்கத் தீர்மானித்தார்.
“பர்தேஷி இந்த பிராஜெக்ட் குறித்த தகவல்களை என்னிடம் தொலைபேசி மூலம் பெற்றுக்கொண்டார். மராத்தி மற்றும் ஜப்பானிய மொழி புத்தகங்கள் ஆறு செட் அனுப்பி வைத்தார். இதில் ஜப்பானிய மொழி வார்த்தைகளுக்கு மராத்தியில் பொருள் கொண்ட அகராதி, மொழியாக்கம் செய்யப்பட்ட கதைப் புத்தகங்கள், இலக்கணம் போன்றவை இருந்தன,” என்று ஜில்லா பரிஷத் அதிகாரி ரமேஷ் தாகூர் 'பிடிஐ’ இடம் தெரிவித்துள்ளார்.
கட்டுரை: THINK CHANGE INDIA