புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவும் 5 மொழிகள் அறிந்த சுப்ரியா!
கேரளாவில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண உதவவும் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிய முன்வந்தார் சுப்ரியா.
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக மார்ச் மாதம் 24-ம் தேதி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது முதல் நோய்தொற்று பாதிப்புகளைக் கையாள்வதிலும் அதன் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கைக் கையாள்வதிலும் கேரளா முன்னோடியாக மாநிலமாக இருந்து வருகிறது.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணவும் இதுபோன்ற இக்கட்டான சூழலில் அவர்களுக்கு உதவவும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டது. கேரள மாநிலத்தில் உள்ள புலம்பெயர்ந்த சமூகத்தினரிடையே கொரோனா வைரஸ் பற்றிய தகவல்களைக் கொண்டு சேர்க்க 11 ஊழியர்களுக்கு தேசிய சுகாதார இயக்கம் (NHM) மூலம் பயிற்சியளிக்கப்பட்டது.
இவர்களில் ஒருவர்தான் சுப்ரியா தேப்நாத். இவர் பெங்காலி, அசாமி, ஒடியா, இந்தி, மலையாளம் ஆகிய ஐந்து இந்திய மொழிகளில் தேர்ச்சி பெற்றவர். இவர் கட்டுப்பாட்டு அறையில் தினமும் நூற்றுக்கணக்கான தொலைபேசி அழைப்புகளை ஏற்று பதிலளிக்கிறார்.
“புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது பணி குறித்தும் வீடு திரும்புவது குறித்தும் கவலையில் இருக்கின்றனர். கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு இது குறித்து பேசுவார்கள்,” என்று சுப்ரியா `தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ உடனான உரையாடலில் தெரிவித்தார்.
இந்தப் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மிகுந்த வேதனையிலும் கவலையிலும் இருக்கின்றனர். இவர்கள் கட்டுபாட்டு அறையின் எண்ணைத் தொடர்பு கொண்டு தங்களது பிரச்சனைகளைப் பற்றி பேசும்போது இவர்களது மொழிகளில் பதிலளிக்கக்கூடிய ஒருவர் பேசுவது அவர்களுக்கு சௌகரியமான உணர்வை ஏற்படுத்துகிறது.
நாட்டில் கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்டபோது சுப்ரியா ஒடிசா திரும்பவேண்டியிருந்தது. ஆனால் அவர் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவ விரும்பினார். அவர்களது தொலைபேசி அழைப்பை ஏற்று பதிலளிக்க நினைத்தார். இதற்காக தன்னார்வலராக இணைந்துகொள்ள தனது பயணத் திட்டத்தை மாற்றிக்கொண்டார்.
முகாம்களில் உணவு விநியோகிக்கப்படுவது குறித்தும் கொரோனா வைரஸில் இருந்து பாதுகாத்துக்கொள்ள மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்துமே இவர்கள் பெரும்பாலும் கேட்டுத் தெர்ந்துகொள்கின்றனர்.
“தற்போது இவர்கள் நிலைமையை புரிந்துகொண்டுள்ளனர். வாட்ஸ் அப் மெசேஜ் மூலம் அன்றாட நிலவரத்தை கேட்டறிகின்றனர்,” என்று `தி இந்து’ உடனான உரையாடலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐந்தாண்டுகளுக்கு முன்பு சுப்ரியா தனது கணவர் பிரசாந்த் குமாருடன் கேரளா வந்தடைந்தார். இருவரும் ஒடிசாவின் கேந்திரபரா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். மலையிதம்துருத் ஜிஎல்பி பள்ளியில் ஆசிரியராக பணியில் சேர்ந்தார். அதுமட்டுமின்றி புலம்பெயர்ந்தவர்களின் குழந்தைகளின் கல்வியை மேம்படுத்தும் நோக்குடன் செயல்படும் ரோஷ்னி திட்டத்தில் தன்னார்வலராக இணைந்துகொண்டார். சுப்ரியா, பிரசாந்த தம்பதிக்கு சுபாஷ்மிதா என்கிற நான்கு வயது மகள் உள்ளார்.
“நாங்கள் கேரளா வந்து சேர்ந்தபோது படிப்பின் மீது ஆர்வமும் சிறப்பான வாழ்க்கை கிடைக்கும் என்கிற நம்பிக்கையும் மட்டுமே உடன் இருந்தது,” என்றார் சுப்ரியா.
கட்டுரை: THINK CHANGE INDIA