‘பெரும்பான்மையினர் நிலைப்பாட்டிற்கு பொருந்தாத எதையும் எழுத முடியாது எனில் படைப்புச் சுதந்திரம் எங்கே இருக்கிறது?’ - பெருமாள் முருகன்
எழுத்தாளர் பெருமாள் முருகனின் வாழ்வும், எழுத்தும் மகத்துவம் மற்றும் சர்ச்சைகள் நிறைந்ததாக இருக்கிறது. யுவர்ஸ்டோரி வீக்கெண்டரிடம், அவர் தனது நாவலின் புதிய ஆங்கில மொழிபெயர்ப்பு பற்றி உரையாடியதில் இருந்து இதோ.
2015ம் ஆண்டு மாதொருபாகன் நாவல் மற்றும் அதன் ஆங்கிலப் பதிப்பிற்கு பெரும் எதிர்ப்பு உண்டான போது, தமிழில் நன்கறியப்பட்ட எழுத்தாளரான பெருமாள் முருகன், எழுதுவதை நிறுத்திக்கொள்வதாக அறிவித்தார். இது குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில்,
“எழுத்தாளர் பெருமாள் முருகன், இறந்துவிட்டார். அவர் ஒன்றும் கடவுள் இல்லை. அவர் தன்னை புத்துயிர பெற வைக்கப்போவதும் இல்லை. அவருக்கு மறுபிறப்பில் நம்பிக்கை இல்லை. எளிமையான ஆசிரியரான அவர், இனி பெ.முருகனாக வாழ்வார். அவரை தனியே விட்டுவிடுங்கள்,” என எழுதினார்.
பெருமாள் முருகன் போன்ற அற்புதமான எழுத்தாளர் இப்படி அறிவிக்க நேர்ந்த அசாதாரண சூழலை புரிந்து கொள்ளலாம். அவரே சொல்வது போல,
“ஒருவர் சாதி பற்றி பேச முடியாது. மதம் பற்றி பேச முடியாது. மரபுகள் மற்றும் சமூகப் பழக்கங்களின் தன்மை பற்றி பேச முடியாது.”
இருப்பினும், சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கு ஆதரவாக தீர்ப்பளித்த பிறகு, பெருமாள் முருகன், கவிதை தொகுப்புடன் தனது இலக்கியப் பயணத்தை தொடர்ந்தார். ஒரு மகத்தான எழுத்தாளரின் திறமையையும், அவரது எழுத்துக்களின் தீவிர யதார்த்ததையும் உலகம் இழந்து விடவில்லை.
இந்த ஆண்டு, பெருமாள் முருகனின் நாவல், ‘கழிமுகம்’, ஆங்கிலத்தில் (Estuary), நந்தினி கிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. நகரச் சூழலில் அப்பா- மகன் இடையிலான சிக்கலான உறவை விவரிக்கும் இந்த நாவல், தனிமை இழையோடும் கதையில், நிச்சயமற்றத்தன்மை மற்றும் தடைகளையும் ஆய்வு செய்கிறது.
இந்த நாவல் உருவான விதம் பற்றி பெருமாள் முருகன் உரையாடினார். மொழிபெயர்ப்பாளர் நந்தினி கிருஷ்ணனும் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.
யுவர்ஸ்டோரி: இந்த நாவல் உருவான விதம் பற்றி கூறுங்களேன்?
பெருமாள் முருகன்: எந்த ஒரு படைப்புக்குமான விதை எங்கிருந்து வருகிறது, எப்படி விழுந்து, எப்படி மலர்கிறது என விவரிப்பது கடினம். ஒரு புத்தகத்தின் தோற்றம், ஒரு நதியின் தோற்றம் போன்றது. இந்த நாவலுக்கான விதை, நவீன வாழ்க்கை, எனது சக மனிதர்கள், என் வயது நண்பர்களின் பிரச்சனைகளை ஆகியவற்றை உற்று கவனித்ததால் உண்டாகியிருக்கலாம்.
இந்த நாவலை எனது மனதுக்குள் உருவாக்கத்துவங்கிய போது, எனக்கு முழு சுதந்திரம் அளித்துக்கொள்வேன் என்று கூறிக்கொண்டேன். அப்படித் தான் எழுதினேன். இறுதி வடிவம் என்பது சேர்த்தல், கழித்தல்களுக்கு உட்பட்டது. வாசகர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப வளைத்துக்கொள்ளும் வகையில் படைத்திருக்கிறேன்.
யுவர்ஸ்டோரி: இந்த கதை அப்பா-மகன் சிக்கலான உறவு பற்றி பேசுகிறது. ஏதேனும் வகையில் நிஜ வாழ்க்கையின் உந்துதல் இருக்கிறதா?
பெ.மு: புனைக்கதைக்கான மூலப்பொருளை நிஜ வாழ்க்கை தான் தருகின்றது அல்லவா? இந்த நாவல், அசல் மற்றும் கற்பனை பாத்திரங்களைக் கொண்டது.
யுவர்ஸ்டோரி: மாறி வரும் சமூக அணுகுமுறைக்கு, தொழில்நுட்பங்கள், குறிப்பாக ஸ்மார்ட்போன் தான் காரணம் என விவரிக்கிறீர்கள். இது பற்றி உங்கள் தனிப்பட்ட கருத்து என்ன?
பெ.மு: இன்று தொழில்நுட்பம் தான் நம் வாழ்க்கையைத் தீர்மானித்து வடிவமைக்கிறது. இனி இப்படித் தான் இருக்கும்.
சமூக அணுகுமுறை தொடரபானதாக அல்லது நம்பிக்கை, மரபுகள் சார்ந்தவையாக இருந்தாலும் சரி, நம்முடைய வாழ்வின் புதுமையாக்கங்கள், மாற்றங்கள் தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்டுள்ளன. சாப்பாட்டை விட ஸ்மார்ட்போன் முக்கியமாகி இருப்பது, அது நம் வாழ்க்கையில் பெற்றிருக்கும் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.
யுவர்ஸ்டோரி: உங்கள் எழுத்துகளில் சாதி மேலாதிக்கத்தை எப்போதும் முக்கியமாக விவரிக்கிறீர்கள். உங்கள் மீதான இதன் தாக்கம் என்ன?
பெ.மு: சாதியை கொண்டு வராமல், சாமானிய மனிதர்களின் வாழ்க்கையைச் சொல்ல வேண்டும் என்பது தான் என் விருப்பம். ஆனால், ஒருவர் எங்கு பார்த்தாலும், சாதி, சாதி சார்ந்த மனநிலை இருக்கிறது. இதன் தாக்கத்தை தவிர்க்க முடியாது.
யுவர்ஸ்டோரி: நீங்கள் வளர்ந்த சூழல் எழுத்தாளராக உங்கள் மீது செலுத்திய தாக்கம் என்ன?
பெ.மு: என்னுள் ஒளிந்து கொண்டிருக்கும் எழுத்தாளர், என்னைச்சுற்றி நடக்கும் எல்லாவற்றை கவனித்து, எனக்குள் உள்வாங்கிக் கொள்ள தூண்டுதலாக இருந்தார். மற்றவர்களுக்கு சாதாரணமாக தோன்றுகின்ற விஷயங்களை, தினசரி நடக்கும் விஷயங்களின் நுட்பங்கள் எழுத்தாளர் கவனிப்பது முக்கியம். நான் வளர்ந்த நிலையில், இந்த அணுகுமுறையும் வளர்ந்து முதிர்ச்சி அடைந்திருக்கிறது.
யுவர்ஸ்டோரி: நீங்கள் ஒரு ஆசிரியராகவும் இருக்கிறீர்கள். இன்றைய இளைஞர்களின் எதிர்வினையை எப்படி பார்க்கிறீர்கள்?
பெ.மு: நான் பார்க்கும் மாணவர்கள், தினசரி வாழ்க்கையை எதிர்கொள்ளவே கஷ்டப்படுபவர்கள், அவர்களுக்கு சமூகப் பிரச்சனைகளில் ஆர்வம் இல்லை. வாழ்க்கையுடன் ஓடுவது தான் அவர்களுக்கு முக்கியம்.
யுவர்ஸ்டோரி: மொழிபெயர்ப்புகள் உங்கள் புத்தகங்கள் பரவலான வாசகர்களை அடைய எப்படி உதவியுள்ளன?
பெ.மு: மொழிபெயர்ப்பு எனது வாசகர்கள் எண்ணிக்கையை பலமடங்கு அதிகரிக்கச் செய்துள்ளது. என் படைப்பு இன்னொரு மொழிக்கு பயணித்து, அதன் மூலம் இன்னொரு உலகை அடையும் போது, அந்த மொழியின் வாசகர்கள் எளிதாக என் எழுத்தில் உலா வர முடியும். நான் உருவாக்கியுள்ள உலகங்கள், மொழி எனும் பாலம் மூலம் சுற்றுலாவை சாத்தியமாக்குகின்றன. இது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. அதைவிட முக்கியமாக மேலும் எழுதத் தூண்டுகிறது.
யுவர்ஸ்டோரி: இந்தியாவில் படைப்புச் சுதந்திரம் கட்டுப்படுத்தப்படுவதாக கருதுகிறீர்களா?
பெ.மு. ஆம்,
ஒருவர் சாதி பற்றி பேச முடியாது. மதம் பற்றி பேச முடியாது. மரபுகள் மற்றும் சமூகப் பழக்கங்களின் தன்மை பற்றி பேச முடியாது. பெரும்பான்மையினரின் நிலைப்பாட்டுடன் ஒத்துபோகாத எதைப்பற்றியும் பேச முடியாது என்றால், எங்கே படைப்புச் சுதந்திர வெளி இருக்கிறது? இந்த சூழலில், எந்த வகையான படைப்பாளிக்கும் இருப்பே ஒரு சவால் தான்.
நந்தினி கிருஷ்ணன்- மொழிபெயர்ப்பாளர் இந்த நாவலைப் பற்றி பகிரும்போது,
யுவர்ஸ்டோரி: நீங்கள் இரண்டு புத்தகங்களை எழுதியுள்ளீர்கள். மொழிபெயர்க்கும் எண்ணம் எப்படி வந்தது?
நந்தினி கிருஷ்ணன்: ஐந்து வயது முதல் எழுத்தாளராக வேண்டும் என விரும்பினேன். ஆனால் மூன்று வயது முதல் படித்துக்கொண்டிருக்கிறேன். எனது அபிமான எழுத்தாளர்களை மூல மொழியில் வாசிப்பதற்காக, கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக, மொழிகளைக் கற்பதில் கவனம் செலுத்தி வருகிறேன்.
மழலையர் வகுப்பில் தமிழ் பயின்றுள்ளேன். எப்போதுமே தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்க விரும்பியுள்ளேன். இதற்கு முன் நான் செய்துள்ள ஸ்பானிஷ்- ஆங்கில மொழி பெயர்ப்பை விட இது கடினமானது.
பெருமாள் முருகன் என்ற எழுத்தாளர், பெருமாள் முருகன் என்ற மனிதர், என இருவரையும் எனக்குப் பிடிக்கும் என்பது உதவியாக இருந்துள்ளது. கழிமுகம் கதை மிகவும் சிக்கலானது, நுட்பமானது. எனவே இது எனக்கு தனிப்பட்ட சவாலாகவும் அமைந்தது.
நானே எழுத்தாளர் என்பதால், மொழிபெயர்ப்பாளராவதில் இரண்டு சுவாரஸ்யமான அம்சங்கள் இருப்பதாக நினைக்கிறேன். என் பெயரை எப்போதும் புத்தக அட்டையில் பார்த்திருக்கிறேன். எனவே, வடிவமைப்புக்குத் தடையாக இருக்கும் என்றால், பெருமாள் முருகன் புத்தகத்தின் அட்டையில் என் பெயரை விட்டுவிடுவதில் எந்த சிக்கலும் இல்லை என்றேன். இது கூட்டு படைப்பு அல்ல. இரண்டாவதாக,
ஒருவரின் தன்முனைப்பு மங்கும் போது, எழுத்தாளரிடம் மதிப்பும், பொறுப்பும் ஏற்படுகிறது. எழுதியவருக்கு ஒவ்வொரு சொல்லும் எந்த அளவு முக்கியம் என உணர்ந்தேன். ஏனெனில் அவர்கள் காலாணியில் நான் சில மைல்கள் நடந்திருக்கிறேன்.
யுவர்ஸ்டோரி: கழிமுகம் மொழிப்பெயர்ப்பு பற்றி கூறுங்கள். தமிழின் நுட்பத்தை ஆங்கிலத்தில் கொண்டு வருவது கடினமாக இருந்ததா?
நந்தினி: இல்லை. புத்தகத்தின் என் தமிழ் ஆசிரியர்கள் உஷா சுப்பிரமணியன், சித்ரா ராகவன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளேன். தமிழ் மீது மிகுந்த ஆர்வமும், அர்ப்பணிப்பும் கொண்டிருந்தவர்கள் தங்கள் மாணவர்களிடமும் மொழிக்கான ஆர்வத்தை வளர்த்தனர்.
எழுதுவதும் படிப்பதும் உணர்வு சார்ந்தது. அவர்கள் பயிற்சியால், ஒவ்வொரு வார்த்தை, ஒவ்வொரு வரி, ஒவ்வொரு பத்தி, ஒவ்வொரு அத்தியாயத்தின் உணர்வை மொத்த புத்தகத்தின் தன்மையுடன் பொருத்துப்பார்த்து உணர்வது எனக்கு இயல்பாக வருகிறது. மொழிகளும் ஒன்றுக்கு ஒன்று பேசிக்கொள்ள முடிகிறது.
யுவர்ஸ்டோரி: மொழிபெயர்க்கும் போது பெருமாள் முருகனுடன் இணைந்து செயல்பட்டீர்களா?
நந்தினி: ஆம். ஆலோசனைகள் அல்லது அனுமதி தேவைப்பட்ட போதெல்லாம் அவர் உதவினார். அதைவிட முக்கியமாக அவரது எழுத்துக்களைப் படித்திருப்பதால் அவர் என் மனதுக்குள் இருந்தார்.
யுவர்ஸ்டோரி: மொழிபெயர்ப்பின் போது எதிர்கொண்ட சவால்கள் என்ன?
நந்தினி: பெருமாள் முருகன் எழுதிய வேறு எந்த நாவலையும் விட கழிமுகம் நாவல் சிக்கலானது. இன்று விற்பனையாகிக் கொண்டிருக்கும் இலக்கியங்களை விட மிகவும் நுட்பமானது. எல்லோரும் புனைக்கதையில் கூட பிரச்சாரம் செய்ய விரும்புகின்றனர்.
சாதி நல்லது. ஊழல் இன்னும் நல்லது. பாலியல் தாக்குதல், சர்வாதிகாரம், எல்லாம் ஏற்றது. இப்படி பட்டியல் போட்டு பார்ப்பது, வாசகர்கள் மற்றும் சர்வதேச நடுவர்களால் இந்த அளவுக்கு இதுவரை பின்பற்றப்பட்டதில்லை.
ஆனால் இந்த நாவலில் பெருமாள் முருகன் இதை மாற்றி, எழுதப்படும் பாத்திரத்திற்கு ஏற்ப எழுதியிருக்கிறார். கதையின் மைய பாத்திரமான குமாரசூரர் பற்றிய இடங்களில் எல்லாம் ஒருவித ஆயாசம் மற்றும் தட்டையான தன்மை இருக்கும். ஆனால், ஒரு கட்டத்தில் இது கவித்துவமாகி, தீர்கதரிசனமாகவும் ஆகும். இந்தப் புத்தகத்தை படிக்கும் இளம் வயதினர் என்னை இன்ஸ்டாகிராமில் டேக் செய்கின்றனர்.
அவர்கள் கழிமுகத்தின் சாரத்தை தவறவிட்டதாக நினைக்கிறேன். முதல் ஐம்பது பக்கங்களை கடப்பது கடினமாக இருந்தது பற்றி, பெற்றோர்- பிள்ளை மோதலை புரிந்து கொள்ள முடிவது பற்றி நீளமாக எழுதுகின்றனர்.
இது போன்ற புத்தகத்தின் சவால் அது தான். அறிவார்ந்த வாசகர், இந்த நாவலில் ஏ ஹவுஸ் பார் மிஸ்டர் பிஸ்வாஸ் அல்லது டெத் ஆப் ஏ சேல்ஸ்மேன் நாவல்களின் தன்மையை உணரலாம். மற்றவர்கள் இதைத் தவறவிடுவார்கள்.
நான் அறிவார்ந்த வாசகர்களுக்கு எழுதுவதால், ஒவ்வொரு வார்த்தையும், ஏகாந்தம் மற்றும் விலகல் இடையே ஊசலாடும், அவற்றின் தன்மையை அப்படியே மொழிபெயர்க்காமல், இன்னொரு மொழிக்கு கடத்த முயற்சித்துள்ளேன்.
ஆங்கில கட்டுரையாளர்: ரேகா பாலகிருஷ்ணன் | தமிழில்-சைபர்சிம்மன்