எழுத்தாளர் சோ.தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது...
கோவில்பட்டி அருகே உள்ள உருளைக்குடி எனும் ஊரைச் சேர்ந்த இவர், பஞ்சாலை தொழிலாளியாக வாழ்க்கையை தொடங்கி, ஒரு எழுத்தாளராக உருமாறி இன்று சாகித்ய அகாடமி விருதை பெற்றுள்ளது தமிழர்களை பெருமைப்பட வைத்துள்ளது.
யதார்த்தம் சார்ந்த கதைகள் மூலம் கிராம மக்கள் வாழ்வை பதிவு செய்து வரும் எழுத்தாளர் சோ.தர்மனுக்கு, 2019ம் ஆண்டு ’சாகித்ய அகாடமி விருது’ வழங்கப்பட்டுள்ளது. அவர் எழுதிய ’சூல்’ என்ற நாவலுக்காக இந்த விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்திய மொழிகளில் சிறந்த படைப்புகளுக்காக சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டு வருகிறது. 2019ம் ஆண்டுக்கான சாகித்யா அகாடமி விருது பெறுபவர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழில் எழுத்தாளர் சோ.தர்மன் விருது பெற தேர்வு செய்யப்பட்டுள்ளார். சூல் நாவலுக்காக இந்த விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தின் கோவில்பட்டி அருகே உள்ள உருளைக்குடி எனும் ஊரைச் சேர்ந்தவர் சோ.தர்மன். 1952ம் ஆம் ஆண்டு பிறந்தவர். இவரது இயர் பெயர், சோ.தர்மராஜ். பஞ்சாலை தொழிலாளியாக வேலை பார்த்தவர், கடந்த 1980’கள் முதல் சிறுகதைகள், நாவல்கள் எழுதி வருகிறார்.
சோ.தர்மனின் முதல் சிறுகதை தொகுப்பு 1992ல் வெளியானது. அதன் பிறகு முதல் நாவலான ’தூர்வை’ வெளியானது. மேலும் கூகை மற்றும் சூல் ஆகிய நாவல்களையும் எழுதியுள்ளார். சோகவனம், வனக்குமாரன் ஆகிய சிறுகதை தொகுப்புகளும் வெளியாகியுள்ளன.
தற்போது ’சூல்’ என்ற நாவலுக்கு சாகித்ய அகாடமி விருந்து கிடைத்துள்ளது. சூல் நாவல், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உருளைக்குடி, மன்னர் காலத்து அரண்மனை அமைப்பிலிருந்து நவீன கால அரசாங்க அமைப்பாக மாறிய பரிமாற்றத்தை விவரிக்கிறது.
கண்மாய் வரண்டு போனது குறியீடாக அமைந்து விவரிக்கப்படும் நாவல் என இந்த நாவல் விமர்சகர்களால் பாராட்டப்படுகிறது. இவ்விருது பெற்றது பற்றி,
“சாகித்ய அகாடமி விருது அறிவித்து மத்திய அரசு அங்கீகாரம் தந்தது மிகப்பெரிய மகிழ்ச்சி. நான் நடிகன் அல்ல, நான் ஒரு எழுத்தாளன்; நான் சூரியகாந்தி போல் அல்லாமல் மூலிகை போல் இருப்பேன்,” என்று தெரிவித்துள்ளார் சோ.தர்மன்.
சோ.தர்மன் ஏற்கனவே தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை விருது உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார்.
சாகித்யா அகாடமி விருது பெறும் சோ.தர்மனுக்கு, எழுத்தாளர்கள், இலக்கிய உலக பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சமூக ஊடகங்களில் வாசர்களும் மகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தொகுப்பு: சைபர்சிம்மன்