'சாப்பிடுவதற்கு ஒரு மணி முன்னரும், பின்னரும் காபி, டீ பருக வேண்டாம்' - இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அட்வைஸ்!
இந்திய மக்கள் பால் கலந்த டீயை தவிர்ப்பது நல்லது என்றும் டீ, காபியை எப்போது எந்த அளவில் பருக வேண்டும் என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் புதிய வழிகாட்டி நெறிமுறைகளை வழங்கியுள்ளது.
“அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சு” என்கிற பழமொழியை நாம் கேட்டிருப்போம். டீ, காபி பிரியர்களுக்கு இது மிகவும் பொருந்தும் என்பதை உணர்த்தியுள்ளது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐஎம்சிஆர்) வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டி நெறிமுறை.
தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்துடன் (NIN) இணைந்து ஐஎம்சிஆர், இந்திய குடிமக்கள் ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தை பின்பற்ற வேண்டும் என்பதற்கான 17 புதிய உணவுக் கட்டுப்பாடு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அந்த நெறிமுறைகளானது உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடல் அளவில் சுறுசுறுப்பாக இருப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.
அதே போல, இந்த ஆராய்ச்சியில் அதிக அளவில் கஃபேன் (Caffeine) பானங்களான பால் டீ, மற்றும் காபி பருகுவதைப் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கூடவே கூடாது...
உணவு சாப்பிட்ட உடனேயோ, முன்னரோ அதற்கு பின்னரோ டீ, காபி பருகுவதைத் தவிர்ப்பது நல்லது என்று ஐஎம்சிஆர் வெளியிட்டுள்ள வழிகாட்டி நெறிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னரும் சாப்பிட்ட ஒரு மணி நேரத்திற்கு பின்னரும் காபி, டீ பருகுவதை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவ கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.
டீ மற்றும் காபியில் இருக்கும் காஃப்பின் (Caffeine) மத்திய நரம்பு மண்டலத்தை தூண்டுவது மட்டுமின்றி, உடலியல் சார்பையும் தூண்டும் என ஐசிஎம்ஆர் அதன் ஆய்வில் குறிப்பிட்டுள்ளது.
150 மில்லி லிட்டர் வடிகட்டப்பட்ட காபியில் 80-120 மில்லி கிராம் காஃப்பினும், அதே அளவு இன்ஸ்டன்ட் காபியில் 60-65 மில்லி கிராம் காஃப்பினும், 150 மில்லி லிட்டர் டீயில் 30-65 மில்லி கிராம் காஃப்பின் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. அதாவது, ஒருநாளைக்கு ஒருவர் 300 மில்லி கிராம் காஃப்பினை எடுத்துக்கொள்வதே ஆரோக்கியமானது என ஐஎம்சிஆர் தெரிவித்துள்ளது.
ரத்த சோகை ஏற்படும்
கஃப்பின் பானங்களில் உள்ள டான்னின்ஸ் (tannins) என்ற வேதிப்பொருள், உடலில் உள்ள இரும்புச்சத்தை அதிகமாக உருஞ்சும். டான்னின்ஸ் வயிற்றில் இரும்புச்சத்து இருக்கமாக்கி, உடல் இரும்புச்சத்து எடுத்துக்கொள்வதை கடினமாக்கும். இது உடலில் இரும்புச்சத்து குறைப்பாட்டை ஏற்படுத்துவதால், அனீமியா போன்ற நோய்கள் தாக்கவும் வாய்ப்புள்ளது. அதிக அளவில் காபி குடிப்பது அதிக ரத்த அழுத்தம் ஏற்படும் என்றும் இதய நோய்க்கான வாய்ப்பை அதிகரிக்கும் எனவும் ஐஎம்சிஆர் தெரிவித்துள்ளது.
எப்படி பருகலாம்?
தேநீரை பால் சேர்க்காமல் பருகுவதால் பல பலன்கள் உள்ளதாக அறிக்கை கூறுகிறது. பால் சேர்க்காமல் தேநீர் பருகுவதால், ரத்த ஓட்டம் சீராவதோடு இதய நோய், வயிற்றுப் புற்றுநோய் ஆகியவற்றின் வாய்ப்பை குறைக்கும் எனவும் ஐசிஎம்ஆர் அதன் புதிய வழிகாட்டுதலில் தெரிவித்துள்ளது.
மேலும், பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், மாமிசங்கள், கடல் உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளும்படியும், எண்ணெய், சர்க்கரை, உப்பு ஆகியவற்றை குறைவாக எடுத்துக்கொள்ளும்படியும் தெரிவித்துள்ளது.