சமூக புறக்கணிப்புகளை புறந்தள்ளி சிகரத்தைத் தொட்ட 5 தலித் தொழில் முனைவோர்!

28 CLAPS
0

ஒரு சிறிய புள்ளியில் துவங்கி மிகப்பெரிய அளவில் வெற்றியடைந்தவர்களின் வாழ்க்கை நம் அனைவரையுமே கவரும். இந்தியாவில் ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையே இருக்கும் பிரச்சனை பணம் சார்ந்தது மட்டுமல்ல. பொருளாதார ரீதியிலான முன்னேற்றத்தில் சாதி பெரும் பங்கு வகிக்கிறது.

இந்தியாவின் பில்லியனர்களில் ஐம்பது சதவீதத்திற்கும் மேற்பட்டோர் இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் 1.5 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும் பாரம்பரியமாக வணிகத்தில் ஈடுபட்டிருப்பவர்களான பனியா, பார்சி, சிந்தி போன்ற பிரிவினராகவே இருப்பார்கள். இந்தியாவின் பில்லியனர்களில் அடுத்த இடத்தைப் பிடித்திருப்பவர்கள் பிராமணர்கள் மற்றும் சத்ரியர்கள். இந்தியாவின் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் 16.5 சதவீதம் பங்களிக்கும் தலித் சமூகத்தில் இதுவரை பில்லியனர்கள் யாரும் உருவாகவில்லை.


image

சாதி அடிப்படையில் மக்களை சமூகத்திலிருந்து ஒதுக்கிவைக்கும் பிரச்சனை இன்றளவும் நிலவுகிறது...

தலித்களின் நிலை மெல்ல மெல்ல முன்னேறி வருவதாக புள்ளியியல் தெரிவித்தாலும் சமூக புறக்கணிப்பு தொடர்ந்துகொண்டு தான் உள்ளது. இந்திய கிராமப்புறங்களில் 44.8 சதவீதத்திற்கும் அதிகமான பழங்குடியினரும் (ST) 33.8 சதவீதத்திற்கும் அதிகமான ஆதிதிராவிடர் (SC) பிரிவினரும் தொடர்ந்து வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்ந்து வருவதாக 2014-ம் ஆண்டின் அரசாங்க அறிக்கை தெரிவிக்கிறது.

மத்தியப் பிரதேசத்தின் 88 சதவீத மாநில பள்ளிகளில் தலித் குழந்தைகளுக்கு எதிரான பாகுபாடு நிலவுவதாகவும் ஐந்தில் நான்கு பள்ளிகளில் தலித் குழந்தைகளுக்கு மதிய உணவு மறுக்கடுவதாகவும் 2014-ம் ஆண்டு நடத்தபட்ட ஒரு தனிப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது. கர்நாடகாவிலுள்ள மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து படிப்பை இடைநிறுத்தம் செய்யும் மாணவர்களில் பாதி பேர் தலித் மாணவர்கள் என அங்கு நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வு தெரிவிக்கிறது.

இந்திய அரசியலமைப்பின் பிரிவு 17-ன் கீழ் ஒவ்வொரு குடிமகனுக்கும் அடிப்படை உரிமைகள் வழங்கப்படவேண்டும் என்பதன் ஒரு பகுதியாக தீண்டாமை ஒழிக்கப்பட்டது. தலித் சமூகத்தைச் சேர்ந்த டாக்டர் பிஆர் அம்பேத்கர் அவர்களின் முயற்சியால் தலித் சமூகத்தின் சமூக மற்றும் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கான இட ஒதுக்கீடு முறை உள்ளிட்ட நடவடிக்கைகள் அரசியலமைப்புச் சட்டத்தில் இணைக்கப்பட்டது. 


image

தொழில்முனைவில் தலித் மக்களின் அபார வளர்ச்சி

பல அரசியல் விவாதங்களில் இட ஒதுக்கீடு முறை முக்கிய தலைப்பாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. பொதுத் துறையில் வாய்ப்புகள் குறைவாக இருந்த காரணத்தால் இட ஒதுக்கீடு முறை திறம்பட பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து பென்சில்வேனியா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு கேள்வியெழுப்பியது. 1990-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு இடையேயான தலித் மக்களின் பொருளாதார நிலை இந்த ஆய்வின் வாயிலாக ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டது. இதில் மக்கள் தொகை அடிப்படையில் மிகப்பெரிய மாநிலமான உத்திரப்பிரதேசத்தின் கிழக்குப் பகுதியில் தலித் மக்கள் அரசாங்கப் பணியில் இணைவது 7.2 சதவீதத்தில் இருந்து 6.8 சதவீதமாக குறைந்திருந்தது. அதே சமயம் மேற்கு உத்திரப்பிரதேசத்தில் 5 சதவீதத்திலிருந்து 7.3 சதவீதமாக உயர்ந்திருந்தது.

1991-ம் ஆண்டின் பொருளாதார தாராளமயமாக்கல் காரணமாக தலித்தின் நிலை உயர்ந்துள்ளது. தோற்றம், உண்ணும் விதம், பாரம்பரிய நுகர்வு முறை போன்றவை மேம்படுத்தப்பட்டதுடன் தலித் மக்கள் தொழில்முனைவில் அபார வளர்ச்சியடைந்துள்ளனர். கிழக்கு உத்திரப்பிரதேசத்தில் சுய தொழிலில் ஈடுபடும் தலித்தின் எண்ணிக்கை 4.2 சதவீதத்திலிருந்து 11 சதவீதமாக உயர்ந்திருந்தது. மேற்கு உத்திரப்பிரதேசத்தில் 9.3 சதவீதத்திலிருந்து 36.7 சதவீதமாக உயர்ந்திருந்தது. அதேபோல் உள்ளூரில் கட்டுமானம், தையல் மாஸ்டர், ஓட்டுநர் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும் தலித் மக்களின் எண்ணிக்கையும் கிழக்குப் பகுதியில் 14 சதவீதத்திலிருந்து 37 சதவீதமாகவும் மேற்கில் 9.3 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாகவும் உயர்ந்திருந்தது.

ஆய்வின் பின்னணியில் இருந்தவர்களில் ஒருவரான தலித் ஆர்வலர் மற்றும் ஆய்வாளரான சந்திர பான் பிரசாத் நியூயார்க் டைம்ஸ் நேர்காணலில் தெரிவிக்கையில்,

\"இது தலித்களுக்காக பொன்னான நேரம். புதிய சந்தைப் பொருளாதாரம் காரணமாக சமூக சந்தைக்கு பதிலாக பொருட்களுக்கான சந்தை உருவாகியுள்ளது. சந்தை பொருளாதாரத்தில் தலித்கள் தங்களுக்கான இடத்தை பிடிக்கலாம். சாதி சார்ந்த சமூகத்திலிருந்து வர்க்கம் சார்ந்த சமூகமாக இந்தியா மாறி வருகிறது. இதில் உங்கள் வங்கிக் கணக்கு செழிப்பாக இருந்தால் நீங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவீர்கள்.”

தாங்கள் சந்தித்த அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு மிகப்பெரிய தொழில் முனைவோராக உருவான ஐந்து தலித் தொழில்முனைவோரின் வாழ்க்கை இங்கு தொகுக்கப்பட்டுள்ளது. முன்னாளில் சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்படாத இந்த தொழில்முனைவோர் பொருளாதார மற்றும் சமூக ஒடுக்குமுறைகளை எதிர்த்துப் போராடி பல மில்லியன் டாலர் வணிகத்தை உருவாக்கியுள்ளனர்.

1. பகவான் கவாய் – கட்டுமானத் தொழிலாளியாக இருந்து துபாயில் சிஇஓ-வாக வளர்ச்சியடைந்தவர்.


image

பகவான் கவாய் துபாயைச் சேர்ந்த சௌரப் எனர்ஜி டிஎம்சிசி நிறுவனத்தின் சிஇஓ மற்றும் தலைவர். இந்நிறுவனம் பெட்ரோலியம் பொருட்கள் மற்றும் பெட்ரோ கெமிக்கல்களை விநியோகம் செய்கிறது. அத்துடன் வானூர்தி பிரிவில் ஆலோசனைகளையும் சேவைகளையும் வழங்குகிறது. பகவான் குடிசைப் பகுதி ஒன்றில் குடியேறுவதற்கு முன்பு தனது அம்மாவுடனும் உடன்பிறந்தோருடனும் சேர்ந்து கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தார். இவரது குடும்பம் மஹாராஷ்டிராவின் குடிசைப் பகுதிகளிலிருந்து மும்பைக்கும் குடிபெயர்ந்து சென்றது. பகவானை படிக்கவைப்பதற்காக அனைவரும் கடினமாக உழைத்தனர்.

பகவான் மீது குடும்பத்தினர் வைத்திருந்த நம்பிக்கையை அவர் காப்பாற்றினார். பத்தாம் வகுப்பில் 85 சதவீத மதிப்பெண் எடுத்தார். அரசாங்கத்தின் எண்ணெய் நிறுவனம் ஒன்றில் பணியில் சேர்ந்தார். ஆனால் சாதி சார்ந்த பாகுபாடுகளை அவர் சந்திக்க நேர்ந்தது. 1991-ம் ஆண்டு பணியைத் துறந்து பெஹரைன் சென்றார். அங்கு இஎன்ஓசி-யில் நான்காவது ஊழியராக சேர்ந்தார். இறுதியாக எண்ணெய் பிரிவில் பிரபலமான நபராக மாறினார். 2003-ம் ஆண்டு அரேபிய தொழிலதிபர்களுடன் பகவானும் இணைந்துகொள்ள இவர்களது சொந்தமான நிறுவனத்தை துவங்கினர். முதல் ஆண்டிலேயே 80 மில்லியன் டாலர் வருவாய் ஈட்டினர். அதிக தொழில்முனைவோருக்கு ஆதரவளிக்க 30 இளம் தலித் சாதனையாளர்களைக் கண்டறிந்து அவர்கள் மைத்ரேயா டெவலப்பர்ஸ் என்கிற அவரது மற்றொரு நிறுவனத்தின் வாயிலாக வெற்றிகரமான முதலீட்டாளர்காக மாற ஊக்குவித்து வருகிறார்.

2. கல்பனா சரோஜ் – சிறு வயதிலேயே திருமணம் செய்துவைக்கப்பட்டாலும் தடைகளை தகர்த்து 112 மில்லியன் டாலர் சிஇஓ-வாக மாறியுள்ளார். 


image

தொடர்ந்து பல துறைகளில் தொழில்முனைவில் ஈடுபட்டுள்ள தொழில்முனைவோரான கல்பனா சரோஜ் திரைப்பட தயாரிப்பு, ரியல் எஸ்டேட் போன்றவற்றில் ஈடுபட்டு தற்போது மும்பையைச் சேர்ந்த கமானி ட்யூப்ஸ் நிறுவனத்தின் தலைவராக உள்ளார். விதர்பா பகுதியின் கிராமத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கு மகளாகப் பிறந்தார். 12 வயதிலேயே இவருக்கு திருமணம் முடிக்கப்பட்டது. திருமணத்திற்குப் பிறகு மும்பையின் குடிசைப்பகுதியில் வசித்தார். அவரது கணவரின் குடும்பத்தினர் கல்பனாவை அடித்து துன்புறுத்தினர். கணவனை விட்டு அப்பாவுடன் சொந்த கிராமத்திற்கே வந்துவிட்டார். பல வகையில் சமூக புறக்கணிப்புகளை எதிர்கொள்ள நேர்ந்தது.

கல்பனா சற்றும் மனம் தளராமல் மும்பை திரும்பி தனது உறவினருடன் வசிக்கத் துவங்கினார். சிறிதளவு சேமிப்பைக் கொண்டும் சீட் நிதியைக் கொண்டும் ஒரு சிறிய ஃபர்னிச்சர் தொழில் துவங்கினார். இதுதான் அவரது தொழில்முனைவுப் பயணத்தின் துவக்கமாக அமைந்து இன்றளவும் தொடர்ந்து வருகிறது. 2001-ம் ஆண்டு கமானி ட்யூப்ஸ் நிறுவனத்தில் பொறுப்பேற்று அதை லாபகரமான நிறுவனமாக மாற்றினார். அவரது தனிப்பட்ட சொத்துகள் 112 பில்லியன் டாலராக மதிப்பிடப்படுகிறது.

3. ராஜா நாயக் – வீட்டை விட்டு ஓடிய இவர் 60 கோடி ரூபாய் மதிப்புள்ள வணிகத்தை உருவாக்கியுள்ளார்


image

ராஜா நாயக் தலித் குடும்பத்தில் பிறந்தவர். கர்நாடகாவின் தொலைதூர கிராமத்திலிருந்து இவரது பெற்றோர் பெங்களூருவிற்கு குடிபெயர்ந்தார். குடும்பத்தில் நான்கு பேர். அப்பாவின் வருமானம் மட்டுமே. அதுவும் நிலையற்றது என்பதால் வறுமையில் வாடினர். ராஜாவிற்கு 17 வயதிருக்கையில் அமிதாப் பச்சனின் திரைப்படம் ஒன்றைப் பார்த்து உந்துதல் ஏற்பட்டு ரியல் எஸ்டேட் துறையில் சிறப்பிக்கும் நம்பிக்கையுடன் வீட்டை விட்டு மும்பைக்கு சென்றுவிட்டார். அந்த முயற்சி பலனளிக்காத காரணத்தால் மனமுடைந்து வீடு திரும்பினார் ராஜா. இருந்தும் தொடர்ந்து முயற்சிக்கவேண்டும் என்கிற தைரியமும் அவருக்கு ஏற்பட்டது.

பள்ளிப் படிப்பை இடையிலேயே நிறுத்திவிட்டு டி-ஷர்ட் விற்பனை செய்யத் துவங்கினார். அதன் பிறகு கோல்ஹாபுரி காலணிகளும் விற்பனை செய்யத் துவங்கினார். ஆபத்துகளை சந்திக்கவும் பல்வேறு துறைகளில் செயல்படவும் துணிவு இருந்ததால் இன்று சர்வதேச ஷிப்பிங் மற்றும் லாஜிஸ்டிக்ஸ், நெளிவான பெட்டிகள், பேக் செய்யப்பட்ட குடிநீர், ஆரோக்கியம், சியா அரிசி வகைகள் என பலதரப்பட்ட துறைகளில் செயல்பட்டு 60 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளார். தற்சமயம் தலித் இந்திய வர்த்தக மற்றும் தொழில் அமைப்பின் (DICCI) தலைவராக உள்ளார். சமூகத்தின் நலிந்த மற்றும் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்தவர்களுக்காக கலாநிகேதன் கல்வி மையத்தின் கீழ் பள்ளிகளும் கல்லூரிகளும் நடத்தி வருகிறார்.

4. ரதிபாய் மக்வனா – பண்ணைத் தொழிலாளியின் மகனாகப் பிறந்து 380 கோடி வணிகத்தை உருவாக்கியவர் 


image

ரதிபாய் மக்வனா அஹமதாபாத்தைச் சேர்ந்த ப்ளாஸ்டிக் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனமான குஜராத் பிக்கர்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராவார். ரதிபாயின் அப்பா ஒரு பண்ணை தொழிலாளியாக இருந்து நெசவுப் பணிக்கு பயன்படும் தோல் பிக்கர்களை (leather pickers) உருவாக்கத் துவங்கினார். குஜராத்தில் ஒரு சிறிய பள்ளிக்கு சென்றுகொண்டிருந்தபோது சாதி காரணமாக பாகுபாடுகளை சந்தித்துள்ளார். பதினெட்டு வயதானபோது கல்லூரிப் படிப்பை விட்டுவிட்டு அப்பாவின் தொழிலில் இணைந்தார்.

அப்பாவின் தொழில் ப்ளாஸ்டிக் வர்த்தகத்தில் ஈடுபட்டு விரிவடைய உதவினார். சில காலங்களுக்குப் பிறகு நிறுவனம் உகாண்டாவில் சர்க்கரை வர்த்தகத்தில் ஈடுபடவும் உதவினார். 56 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இவரது நிறுவனம் ஆண்டு வருவாயாக 380 கோடி ரூபாய் ஈட்டுகிறது. 3,500 ஊழியர்களை அஹமதாபாத் தொழிற்சாலையில் நியமித்துள்ளது. இதில் 2,000 பேர் தலித் மக்கள்.

5. அசோக் காதே – செருப்பு தைப்பவரின் மகனாக இருந்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான வணிகத்தை உருவாக்கியவர்


image

அசோக் காதே டிஏஎஸ் ஆஃப்ஷோர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர். இந்நிறுவனம் கடலை ஒட்டியுள்ள பகுதியில் எண்ணெய் கிணறு துளையிட பயன்படுத்தும் உபகரணம் தயாரித்தல் மற்றும் புதுப்பித்தல் பணியில் ஈடுபட்டுள்ளது. இவரது அப்பா மும்பையின் ஒரு மரத்தடியில் செருப்பு தைத்துக்கொண்டிருந்தார். அனைத்து தடைகளையும் தகர்த்து அசோக் தனது கிராமத்தில் பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரியில் சேர்ந்தார்.

அரசாங்கத்தால் இயங்கும் கப்பல் துறைமுகத்தில் பணிபுரியத் துவங்கினார். கடலை ஒட்டியுள்ள பகுதிகள் சார்ந்த பல்வேறு நடவடிக்கைகள், பராமரிப்புப் பணிகள் மற்றும் கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான திறன்களைப் பெற்று சொந்த நிறுவனத்தைத் துவங்கினார். 90-களில் எண்ணெய் சேவைத் துறையில் அதிகரித்த வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டு இந்தத் துறையில் செயல்படத் துவங்கினார். அசோக்கின் நிறுவனம் இன்று 4,500 ஊழியர்களுக்கு பணி வாய்ப்பை அளித்துள்ளது. இந்நிறுவனத்தின் ஆண்டு வருவாய் 500 கோடி ரூபாயாகும்.

ஆங்கில கட்டுரையாளர் : சௌரவ் ராய்