பிறந்த குழந்தைகளை அன்போடு அணைக்கும் kiddiehug: துணி டயப்பர் தயாரிக்கும் மாம்ப்ரூனர்!

பிறந்த குழந்தைகளை அன்போடு அணைக்கும் kiddiehug: துணி டயப்பர் தயாரிக்கும் மாம்ப்ரூனர்!

Monday January 21, 2019,

4 min Read

ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட பிரச்சனை வரும்பொழுது அதற்குத் தீர்வைத் தருபவர்கள் அல்லது நிறுவனங்களைத் தேடி அலையவே நம்மில் பலர் செய்வோம். ஆனால் திருமணம் முடிந்து தாயான திவ்யா, தன் குழந்தைக்கு பயன்படுத்த சந்தையில் பிளாஸ்டிக், மற்றும் ரசாயனம் சேர்க்கப்பட்ட டயப்பர்கள் மட்டுமே இருந்த நிலையில், அதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு, குழந்தையின் சரும, உடல் பாதிப்பைப் பற்றி எண்ணி, தானே அதற்கு மாற்றாத் தயாரிக்க முடிவெடுத்து தொழில்முனைவில் இறங்கியுள்ளார்.

எஞ்சினியரிங்கில் முதுகலைப் பட்டம் பெற்று, பொறியியல் துறையில் துணை பேராசிரியராக இருந்த திவ்யா, இன்று குழந்தைகளுக்கு பயன்படுத்தும் துணி டயப்பர்களை தயாரிக்கும் ‘KiddieHug’ நிறுவனம் நடத்துகிறார். திருமணம் முடிந்து தொழில்முனைவர் ஆனது பற்றி கேட்டப்போது,

“என்னுடைய புகுந்த வீட்டினர் முதல் தலைமுறை தொழில்முனைவோர். இதுதவிர வேறு தொழில் பின்னணி எதுவும் இல்லை. ஸ்டார்ட் அப்பின் துவக்கநிலையில் ஏற்படும் சிக்கல்கள் குறித்த புரிதல் அவர்களிடம் இருந்ததால் உதவியாக இருந்தது,” என்றார் திவ்யா.

அவர்களது அனுபவம் மற்றும் உதவியோடு ஆரம்பக்கட்ட பணிகளை முன்னெடுத்துள்ளார் திவ்யா.

KiddieHug பிறந்த கதை

துணி டயப்பர்கள் தயாரிக்க முடிவு செய்தது பற்றி பகிர்ந்த திவ்யா,

”தேவைதான் கண்டுபிடிப்புகளுக்கான அடிப்படை என்பார்கள். இது எனக்கு மிகச்சரியாக பொருந்தும். தாயான புதிதில் பயன்பாட்டிற்குப் பிறகு தூக்கியெறியக்கூடிய டயப்பர்களால் குழந்தையின் சருமத்தில் ஏற்படும் தடிப்புகள், சருமத்தில் மாறுதல், டயப்பர்களால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு போன்ற பிரச்சனைகளை எதிர்கொண்டேன். இத்தகைய டயப்பர்களில் பாதுகாப்பான மாற்று குறித்து ஆராயத் துவங்கினேன், என்கிறார்.

“அப்போது அமெரிக்காவில் இருக்கும் என்னுடைய நண்பர் ஒருவர் எனக்கு துணி டயப்பர்களை அறிமுகப்படுத்தினார். பின்னர் நான் முழுமையாக அவற்றையே பயன்படுத்தத் துவங்கினேன். ஒத்த சிந்தனையுடைய தாய்மார்களிடையே இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் விரும்பினேன். இதுவே என்னை தொழில்முனைவோராக, அதாவது ’மாம்ப்ரூனராக’ மாற்றியது.”

பெரும்பாலான பெற்றோருக்கு துணி டயப்பர் குறித்த விழிப்புணர்வும் புரிதலும் இல்லை. எனவே ஸ்டார்ட் அப் துவங்கவேண்டும் என்கிற திட்டமே தொடக்கத்தில் சவால் நிறைந்ததாக இருந்தது என்றார்.

ஒரு பயனுள்ள சிறப்பான தயாரிப்பு இருந்தும் பெரும்பாலானோருக்கு இது குறித்த விழிப்புணர்வு இல்லை. எனவே சந்தையைச் சென்றடைந்து துணி டயப்பர்களின் முக்கியத்துவத்தையும் வசதியையும் பாதுகாப்பையும் மக்களிடையே எடுத்துரைப்பதில் சிக்கல்களைச் சந்தித்ததாக சொல்கிறார் திவ்யா. ஆனால் ஒருமுறை அவர்கள் முயற்சித்து பலனை அனுபவித்த உடன் தயக்கமின்றி எங்கள் தயாரிப்பை தொடர்ந்து பயன்படுத்தத் தொடங்கிவிடுகின்றனர்.

”என்னுடைய கணவர் அஷ்வின் சித்தார்த் எனக்கு தொழில் ஆலோசனை வழங்குவதோடு, நான் எடுக்கும் தீர்மானங்களை வழிநடத்துவது, தவறுகளை சுட்டிக்காட்டுவது என அனைத்து ஏற்ற இறங்கங்களிலும் உறுதுணையாக இருக்கிறார்,” என்றார் உற்சாகத்தோடு.

ஆரம்பத்தில் KiddieHug பல்வேறு ப்ராண்ட்களைக் கொண்ட ஒரு ஆன்லைன் ஸ்டோராக செயல்பட்டது. பல்வேறு சர்வதேச துணி டயப்பர் ப்ராண்ட்களை கையாண்டோம். இந்த செயல்பாடுகள் தற்போதைய சந்தை குறித்தும் அதில் விரிவடையவேண்டிய அவசியம் குறித்தும் ஆழ்ந்த அறிவை வழங்கியது. இந்திய தாய்மார்களின் உண்மையான தேவையை ஆராய்ந்து புரிந்துகொண்ட பிறகு சரியான வடிவமைப்பையும் தயாரிப்பிற்கு பயன்படுத்த பொருத்தமான பொருட்களின் வகையையும் தீர்மானித்தோம், என்று டயப்பர் தயாரிப்பின் தொடக்கம் குறித்து விளக்கினார்.

முதலில் மாதிரிகளை வாங்கி பரிசோதனை செய்தோம். எங்களது தேவைகளுக்கு ஏற்ப தயாரிப்பை உறுதி செய்துகொண்ட பிறகு மொத்த உற்பத்தியைத் துவங்கி ப்ராண்டை அறிமுகப்படுத்தினோம்.

குழந்தைக்குப் பாதுகாப்பான டயப்பரை பயன்படுத்தவேண்டும் என்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த டயப்பர்களை பயன்படுத்தவேண்டும் என்றும் விருப்பம்கொண்ட தாய்மார்களின் முதல் தேர்வாக எங்களது ப்ராண்ட் இருக்கவேண்டும் என்பதே எங்களது நோக்கம்.”

எங்களது டயப்பர் போன்றே பெயரும் வசதியாக இருக்கவேண்டும் என்று நினைத்தோம். டயப்பர் சௌகரியமான உணர்வை வழங்கும் விதத்தில் குழந்தையை அணைத்துக்கொள்வதால் KiddieHug என பெயரிட்டோம்.

குழு மற்றும் வளர்ச்சி

இருப்பு மேலாண்மை மற்றும் பேக்கேஜிங் பணிகளுக்கு இரண்டு நபர்கள் அடங்கிய ஒரு தனிப்பட்டக் குழு செயல்படுகிறது. அலுவலகப் பணிகளுக்கான குழுவில் மூன்று தாய்மார்கள் உள்ளனர். வாடிக்கையாளர்களுக்கு ஆதரவளிப்பதற்காக இவர்களை சமூக வலைதளம் வாயிலாக பணியில் அமர்த்தியுள்ளோம். இவர்கள் வீட்டில் இருந்து பணிகளை மேற்கொள்கின்றனர், என்றார் திவ்யா.

”குழந்தைகளுக்கான தயாரிப்பு என்பதால் அம்மாக்களே இதைச் சிறப்பாக ப்ரொமோட் செய்யமுடியும் என நம்புகிறோம். அவர்களும் வீட்டில் இருந்தே பணிபுரியலாம் என்பதால் அவர்களால் தங்களது குழந்தைகளையும் பராமரித்தவாறே எங்களுடன் பணிபுரியும் வாய்ப்பை வழங்குகிறோம்.”

எலக்ட்ரானிக்ஸ் எஞ்சினியர் ஆன தனக்கு துணி சார்ந்த துறையில் எந்தவித முன் அனுபவமும் இல்லை. சுயகற்றல் வாயிலாகவே அனுபவம் பெற்றதாக தெரிவித்தார். ஆர்வம் மற்றும் கடும் முயற்சியால் வடிவமைப்புப் பணியை கையில் எடுத்தேன். என் பணி வாழ்க்கையில் ஏற்பட்ட இந்த மிகப்பெரிய மாற்றத்தையே தனித்துவமான அம்சம் என்று குறிப்பிடுவேன், என்றார் திவ்யா.

விரிவாக்கம் மற்றும் தொழில் யுக்திகள்

புதிதாக பெற்றோராகி இருப்பவர்களையே இலக்காகக் கொண்டு செயல்படுகிறோம். புதிய தாய்மார்களை இலக்காகக் கொண்டு ஃபேஸ்புக்கில் விளம்பரப்படுத்துவோம். KiddieHug துணி டயப்பர் பயன்படுத்தும் தாய்மார்கள் அடங்கிய குழு ஒன்றும் உள்ளது. இந்த கான்செப்டை புதிய தாய்மார்கள் புரிந்துகொள்ள இது ஒரு சிறந்த தளமாக அமைகிறது.

”எங்களது தயாரிப்பை அறிமுகப்படுத்தி ஆறு மாதங்கள் ஆகிறது. இதுவரை 1,800-க்கும் அதிகமாக டயப்பர்களை விற்பனை செய்துள்ளோம். தற்போது வளர்ச்சியடையும் விதத்தினை அடிப்படையாகக் கொண்டு இந்த நிதியாண்டு கிட்டத்தட்ட 50 லட்ச ரூபாய் வருவாய் ஈட்டுவோம் என எதிர்பார்க்கிறோம்.”

எங்களது துணி டயப்பர் ஒன்றின் விலை 880 ரூபாய். பயன்பாட்டிற்கு பிறகு தூக்கியெறியக்கூடிய டயப்பர் ஒன்றின் விலை வெறும் 10 ரூபாய் மட்டுமே என்பதால் புதிதாக வாங்குபவர் ஒப்பீட்டளவில் ஒரு டயப்பரின் விலை அதிகமாக இருப்பதாக நினைப்பார்கள். துணி டயப்பர்களை பல ஆண்டுகள் பயன்படுத்தலாம் என்பதை பெரும்பாலானவர்கள் புரிந்துகொள்வதில்லை. சரியாக ஒப்பிட்டு புரிந்துகொண்டால் எங்களது டயாப்பர்களை மகிழ்ச்சியாக வாங்கிக்கொள்வார்கள்.

பயன்பாட்டிற்குப் பிறகு தூக்கியெறியக்கூடிய ஆயிரக்கணக்கான டயப்பர்கள் நிலத்தில் நிரப்பப்படுவதை தவிர்த்துள்ளது எங்களது தயாரிப்பு. ரசாயனம் கலந்த டயப்பர்களிலிருந்து குழந்தைகளுக்கு விடுதலையளித்துள்ளது. இதுவே எங்களது மிகப்பெரிய வெற்றி என கருதுகிறோம்.

இவர்களிடம் சானல் பார்ட்னர் ப்ரோக்ராம்கள் உள்ளது. இதில் தாய்மார்கள் வீட்டிலிருந்தே பணிபுரியலாம் என்பதால் அவர்களது நிலை மேம்படுவதோடு திவ்யாவின் தொழிலும் விற்பனையும் சிறப்பிக்கிறது.

“எங்களது தயாரிப்பு பணம் சார்ந்தும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையிலும் மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பயன்பாட்டிற்குப் பிறகு தூக்கியெறியக்கூடிய டயப்பர்களுடன் துணி டயப்பர்களை ஒப்பிட்டால், நீண்ட கால அடிப்படையில் துணி டயப்பர்களால் கணிசமான தொகையை சேமிக்கலாம்,” என்கிறார்.

இந்தியாவில் ஒன்றிரண்டு ஆண்டுகளாக செயல்பட்டு வரும் துணி டயப்பர் நிறுவனங்கள் உள்ளது. சந்தையும் சிறப்பாகவே உள்ளது. அதனால் புதுமையும் ஸ்மார்டான செயல்பாடும் ஒருவருக்கு சந்தையை உருவாக்கிக் கொடுக்கும் என்கிற நம்பிக்கை உள்ளது. வருங்காலத்தில் மாதவிலக்கு சமயத்தில் பயன்படுத்துவதற்கு துணி பேட்களை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாக சொல்கிறார் இந்த மாம்ப்ரூனர்.

ஃபேஸ்புக் பக்கம்: kiddiehug