விவசாயிக்கு லாபம்; வாடிக்கையாளர்களுக்கு ஆரோக்கியம்: மாற்றம் தரும் bemarket!
வாடிக்கையாளர்களுக்கு ஆரோக்கியமான இயற்கைப் பொருட்களாக கொண்டு சேர்த்து, இடைத்தரகர்களின்றி விவசாயிக்கு நேரடி லாபத்தை கொடுக்கிறது மாற்றத்திற்கான நிறுவனம் BeMarket.
விவசாயம் பற்றியும் விவசாயி நலன் குறித்தும் நாம் எல்லோருமே இப்போதெல்லாம் பேசுகின்றோம். ஆனால் உண்மையில் அவர்களின் நலனில் அக்கறையுடன் செயல்படுகிறோமா என்றால் கேள்விக்குறியே.
நீண்ட காலமாக தனக்குள் இந்த கேள்வியை வைத்திருந்த விழுப்புரத்தை பூர்வீகமாகக் கொண்ட சக்திவேல் கோவிந்தராஜன், அதற்கான தீர்வையும் கொடுத்திருக்கிறார். சென்னையில் பிறந்து வளர்ந்திருந்தாலும் விவசாயக் குடும்பப் பின்னணியில் இருந்து வந்த பிசிஏ பட்டதாரியான இவர், 16 ஆண்டுகளாக ஈவென்ட் மேனேஜ்மெண்ட் அனுபவம் பெற்றிருக்கிறார்.
இரண்டு பெரிய நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பு, தொழில் அனுபவம் அனைத்தும் ஒன்று சேர்த்து bemarket மற்றும் Brownpost என்ற இரண்டு பிராண்டுகளை உருவாக்கி இருக்கிறார் சக்திவேல். இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு பார்சல்களை அனுப்பும் சேவையை செய்து வருகிறது பிரவுன் போஸ்ட்.
தான் உருவாக்கிய bemarket பிராண்ட் பற்றி யுவர் ஸ்டோரி தமிழிடம் பகிர்ந்து கொண்டார் அதன் நிறுவனர் மற்றும் சிஇஓ சக்திவேல்,
“விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்த எனக்கு விவசாயிகள் நலன் சார்ந்த ஒரு தொழிலை உருவாக்க வேண்டும் என்பது 10 ஆண்டு கனவு. இந்தக் கனவை நிறைவேற்றுவதற்காக 2 ஆண்டுகள் கடுமையாக உழைத்து bemarket என்ற பிராண்டை 2020 அக்டோபர் 18ல் சந்தையில் அறிமுகப்படுத்தினோம். விவசாயத்தை அனைவருமே போற்றுகிறோம் வியர்வை சிந்தித்து உழைப்பை உரமாக்கும் விவசாயிக்கு என்ன செய்கிறோம் என்று பார்த்தால் அவர்களைச் சென்றடையும் பலன் மிகக்குறைவே. விவசாயிகளுக்கான தளமாக bemarket இருக்க வேண்டும் என்று நினைத்தோம்.”
Be the Change, Farm to Home என்ற எங்களின் தாரக மந்திரம் அடிப்படையில் BeMarket-ல் கிடைக்கும் இயற்கைப் பொருட்களின் தரம் குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை. பொருட்கள் உருவாக்கும் விவசாயி செயற்கை நிறமூட்டிகள் பதப்படுத்தும் பொருட்கள் இன்றி முழு ஆரோக்கிய உணவுப் பொருள் உற்பத்தி செய்யப்படும் முறை என beMarket-இல் கிடைக்கும் பொருட்கள் அனைத்தின் முழு விவரம் மற்றும் அதன் உற்பத்தியாளரான விவசாயி குறித்த அனைத்து விவரங்களும் bemarketstore யூடியூப் சேனல் மற்றும் இணையதள பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இதனால் வாடிக்கையாளர்கள் தயக்கமின்றி எங்களின் இயற்கைப் பொருட்களை பயன்படுத்தலாம்,” என்கிறார் சக்திவேல்.
உணவே மருந்து என்பதனால் பாரம்பரிய தானியங்களில் இருந்து இன்ஸ்டன்ட் மிக்ஸ்களாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணக்கூடிய சிறுதானிய நூடுல்ஸ், தோசை மாவுகள் மற்றும் பீட்ரூட் மால்ட், எல்லா காலங்களிலும் கிடைக்கும் வகையில் பனங்கிழங்கு பொடி, பனம்பழ ஜூஸ் உள்பட பல ஆரோக்கியமான உணவுவகைகளை நாங்கள் விற்பனைக்கு கொடுக்கிறோம்.
எண்ணெய், நெய், தேன், சிறுதானியங்களைக் கொண்டு மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களான நூடுல்ஸ், பீட்ரூட் மால்ட், முருங்கைப்பொடி மற்றும் பிரண்டை சூப் வகைகள் என 250க்கும் மேற்பட்ட இயற்கைப் பொருட்கள் Bemarket-ல் கிடைக்கின்றன. ஒரு விவசாயியை வெறும் உற்பத்தியாளராக மட்டுமின்றி புதிய விஷயங்கள் பலவற்றை புகுத்தி இளம் தொழில்முனைவராகவும் மாற்றுகிறோம் என்று மகிழ்கிறார் சக்திவேல்.
காஷ்மீர் வால்நட், குங்குமப்பூவில் தொடங்கி, கடைக்கோடி எல்லையான கன்னியாகுமரியின் மார்த்தாண்டத்தில் இருந்து தேன், பனம்பழ ஜூஸ், சோப், சீயக்காய் பொடி என்று பாரம்பரியத்திற்கு திரும்பும் விதமான பொருட்களை மாநிலம் முழுவதும் தேடித்தேடிக் கொண்டு வந்த விற்பனைப் பட்டியலில் சேர்த்திருக்கிறோம். தொடக்கத்தில் ஆன்லைன் விற்பனையாக இருந்தது பின்னர் இந்த ஆண்டு ஏப்ரலில் நொளம்பூர் மற்றும் அண்ணாநகரில் பிரத்யேக bemarket ஸ்டோராக அமைக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் மாதாந்திரம் 50 வாடிக்கையாளர்கள் என்று தொடங்கிய இந்த ஆரோக்கியப் பொருட்கள் விற்பனைப் பயணம் இன்று 500 வாடிக்கையாளர்களை எட்டியுள்ளது. பெருந்தொற்று காலத்திற்குப் பிறகு இயற்கைப் பொருட்களுக்கான தேவை அதிகரித்திருக்கிறது, உலகம் முழுவதிலும் bemarketக்கென வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர், அவர்களின் வீடுகளுக்கே ஆரோக்கியத்தை கொண்டு சேர்க்கும் வேலையை நாங்கள் முழு திருப்தியோடு செய்கிறோம் என்கிறார் சக்திவேல்.
இடைத்தரகர்களின்றி நேரடியாக விவசாயியும், பொருட்களை உற்பத்தி செய்யும் சுய உதவிக்குழுக்களின் வாழ்வாதாரம் பெருகவும் நாங்கள் அவர்களுக்கு துணையாக நிற்கின்றோம். இடைத்தரகர்கள் இல்லாததால் விவசாயிக்கான லாபம் அதிகம் இருப்பதால் அவர்களின் வாழ்வாதாரத்திலும் மாற்றம் வருகிறது என்று பெருமைப்படுகிறார் அவர்.
தொழில் மூலம் லாபம் பெற்று அதனை பகிர்ந்து கொடுக்காமல் நேரடியாக லாபத்தையே அவர்களுடன் பகிர்ந்து கொள்கிறார் சக்திவேல். bemarket-ல் வாங்கக் கூடிய ஒவ்வொரு பொருட்களில் இருந்தும் ரூ.1 CHEER என்ற அமைப்பின் மூலம் திருநங்கைகள் நலன் மற்றும் சமூதாயத்தில் பின்தங்கிய மாணவர்களின் கல்வித் தேவைகளுக்காக செலவிடப்படுகிறது.
அக்டோபர் முதல் மார்ச் வரையிலான அரையாண்டு காலத்தில் ரூ.30 லட்சம் வருவாய் பெற்றிருக்கும் bemarket ஏப்ரல் முதல் ஜுன் வரையிலான காலகட்டத்திலேயே இந்த லாபத்தை அடைந்துவிட்ட நிலையில் எதிர்காலத்தில் மாதத்திற்கு ரூ.1 கோடி வருவாய் இலக்காக வைத்து செயல்படத் தொடங்கி இருக்கிறது.
எதிர்காலத்தில் நாடு முழுவதிலும் 120 Bemarket ஸ்டோர்களை அமைக்கவும், மேலும் மாதத்திற்கு 5000 பேருக்கு பொருட்களை விற்பனை செய்யும் விதமாக வாடிக்கையாளர்களை விரிவுபடுத்தும் திட்டங்களையும் வைத்துள்ளோம்.
சொந்த சேமிப்பு மற்றும் இதர தொழில்கள் மூலம் கிடைத்த லாபம் என ரூ.1.5 கோடி முதலீட்டில் இந்நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டிற்குள் ரூ.100 கோடி வருமானம் ஈட்டும் நிறுவனமாக இதனை உருவாக்கும் நோக்கத்தில் உழைத்துக் கொண்டிருக்கிறார் சக்திவேல்.
எனினும் இந்த லாபத்தை அடைய முதலீடு போதவில்லை என்பதால் தற்போது வெளி முதலீடுகளை எதிர்பார்த்து சில நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார்.
நீண்ட காலமாக சக்திவேலுடன் இணைந்து பயணிக்கும் 16 பேர் கொண்ட குழுவாக செயல்பட்டு வரும் Bemarket-ல் டெலிவரிக்கென தனியாக ஆட்கள் வைத்து பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது. இயற்கைப் பொருட்கள் மட்டுமின்றி கால்நடை விவசாயிகளுடன் கைகோர்த்து வீடுகளுக்கே சென்று பால் விநியோகம் செய்யும் பணியையும் தற்போது சில இடங்களில் தொடங்கி இருக்கிறது Bemarket.
தொழில்முனைவு கனவு என்பது எனக்கு கல்லூரி முடித்த காலத்தில் இருந்தே இருந்து வந்தது. ஒரு தொழில் வடிவம் நீடித்த நாட்களுக்கு நிலைத்திருக்கும் என்று அறிந்து அந்த முறை பிடித்துப்போனால் அதைப் பற்றிய அடிப்படை விஷயங்களை முதலில் நன்கு படித்து தெரிந்து கொள்வதோடு பல்திறன் படைத்த என்னுடைய குழுவினர் பலகட்ட ஆய்வுகள் செய்து சேகரிக்கும் தகவல்கள் என அனைத்தும் ஒரு வெற்றிகரமான பிராண்டை உருவாக்க எனக்கு துணையாக இருக்கிறது என்கிறார் சக்திவேல்.
bemarket, Brown post மட்டுமின்றி FunZone, Dark entertainment, digital marketing company என 5 வெவ்வேறு பிராண்டுகளை உருவாக்கி வெற்றி கண்டிருக்கிறார் இவர். ஒவ்வொரு பிராண்டையும் 3 ஆண்டு இடைவெளியில் தொடங்கி ஒன்றின் லாபத்தில் மற்றொரு பிராண்ட் என்று உறுதியோடு தின்னமான தொழில் முனைவுப் பாதையை அமைத்திருக்கிறார் சக்திவேல்.