கொரோனா ஊரடங்கால் தொழிலை மாற்றிய இளைஞர்: வெற்றி நடை போடும் MADRAS BASKET
கொரோனா ஊரடங்கால், டிராவல்ஸ் தொழில் நடத்த முடியாததால், ஆன்லைனில் காய்கனிகள், மளிகைப் பொருள்கள் விற்பனை செய்து, ஓரே வருடத்தில் சென்னையில் ஏராளமான வாடிக்கையாளர்களைப் பெற்று நம்பர் 1 என்ற இலக்கை நோக்கிப் பயணிக்கிறார் கார்த்திக்.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் வித்தியாசமாக யோசித்து, சூழ்நிலைக்கேற்றவாறு தனது தொழிலை மாற்றி, டிராவல்ஸ் தொழிலில் இருந்து, ஆன்லைனில் காய்கனிகள், மளிகைப் பொருள்கள் விற்பனை செய்து, ஓரே வருடத்தில் சென்னையில் ஏராளமான வாடிக்கையாளர்களைப் பெற்று தொழில்முனைவில் பயணிக்கிறார் பொறியியல் பட்டதாரியான கார்த்திக்.
சென்னையைச் சேர்ந்தஇவர். கொரோனா பெருந்தொற்றால் தான் கடந்த 11 ஆண்டுகளாக மேற்கொண்டு வந்த டிராவல்ஸ் தொழிலை விடுத்து, தற்போது தனது மனைவி ராஜகுமாரியுடன் இணைந்து ‘மெட்ராஸ் பேஸ்கட்’ என்ற பெயரில் ஆன்லைனில் காய்கனிகள், மளிகை உள்ளிட்ட பொருள்களை சென்னை முழுவதும் டோர் டெலிவரி செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார்.
கார்த்திக்கிடம் அவரது புதுத் தொழில் குறித்த அனுபவங்கள் மற்றும் அவரது வெற்றிப் பயணம் குறித்து நாம் கேட்டபோது, நான் 2009ல் பொறியியல் முடித்தவுடன் நேரடியாக டிராவல்ஸ் தொழிலில் இறங்கிவிட்டேன். நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. அப்போதுதான் 2020 மார்ச் மாதம் அரசு கொரோனாவால் ஊரடங்கை அறிவித்தது. இதனால் எனது டிராவல்ஸ் தொழில் முழுவதுமாக படுத்துவிட்டது. இதனால் என்ன செய்வது என யோசித்தேன்.
”சின்னதாக தமிழ்மார்ட் என்ற பெயரில் வெப்சைட் தொடங்கி முகக்கவசம், கையுறை, சானிடைசர் போன்றவற்றை விற்பனை செய்யத் தொடங்கினேன். ஆனால் இது சீசன் பிசினஸ். நிரந்தரமில்லை. கொரோனா பெருந்தொற்று முடிந்தவுடன் வியாபாரம் நடக்காது என புரிந்தது. நிரந்தர வருமானம் வரும் வகையில் என்ன தொழில் செய்யலாம் என தீவிரமாக யோசித்தேன்.”
தன்னம்பிக்கையை கைவிடாது தொடர்ந்து யோசித்த கார்த்திக், இரு மாதங்களில் வெப்சைட் உருவாக்குவது குறித்து கற்றுக் கொண்டுள்ளார். மேலும், இரு கல்வி நிறுவனங்கள், இ-காமர்ஸ் உள்பட 6 பேருக்கு மிகக் குறைந்த விலையில் வெப்சைட் உருவாக்கிக் கொடுத்துள்ளார். அந்த காலகட்டத்திலேயே டிஜிட்டல் மார்க்கெட்டிங் தொழில்நுட்பங்களையும் கற்றுத் தேர்ந்துள்ளார். இதில் தனக்குத் துணையாக ஓர் நபரை பணியமர்த்திக் கொண்டு இத்தொழிலில் ஈடுபட்டுள்ளார். ஆனால் இதுவும் நிரந்தர வருவாய் அளிக்கும் தொழில் அல்ல என்று தோன்றவே,
ஜூலை 1, 2020 முதல் ஓர் வாடகை வாகனத்தை ஏற்பாடு செய்து, வீதி வீதியாக காய்கனிகளை விற்பனை செய்யத் தொடங்கியுள்ளார். இதுதான் அவரது மெட்ராஸ் பேஸ்கட்டுக்குத் தொடக்கப் புள்ளியாக அமைந்துள்ளது.
4 நாட்கள் மட்டும் வீதிவீதியாக விற்பனை செய்தேன். இதுவும் தற்காலிக வேலைதான். கொரோனா பெருந்தொற்று காலம் முடிந்தால் யாரும் வாங்க மாட்டார்கள். எனவே இதே காய்கனிகளை மக்களின் வீடுகளுக்கே டோர் டெலிவரியாக செய்தால் என்ன எனத் தோன்றியது. இதையடுத்து,
“எனது உதவியாளரும் இணைந்து ’மெட்ராஸ் பேஸ்கட்’ வெப்சைட்டைத் தொடங்கினோம். ஆம் ஜூலை 6ஆம் தேதி காலையில் நூற்றுக்கணக்கான பொருட்களை உள்ளீடு செய்து, பேக்கிங்க்கு 3 பெண்கள், டெலிவரிக்கு 2 பேர் என பணியமர்த்தி, 36 மணி நேரத்தில் இயங்கத் தொடங்கினோம். முதல் நாளே எங்களுக்கு 16 ஆர்டர்கள் வந்தது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது,” என்கிறார் கார்த்திக்.
வாடிக்கையாளர்கள் கடைக்குச் சென்று காய்கனிகள் வாங்கினால் எப்படி பார்த்துப்பார்த்து வாங்குவார்களோ அதேபோல அவர்களுக்குக் கொடுக்கவேண்டும் என்ற எண்ணத்தில் நல்ல தரமான காய்கனிகளை வாங்கி, அழகாக பேக்கிங் செய்து டோர் டோலிவரி செய்து வருகின்றனர்.
இதற்காக மட்டும் 7 விதமான பேக்கிங் முறைகளை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் வாடிக்கையாளர்களுக்கு அலைச்சலும், நேரமும் மிச்சமாகிறது. அதேபோல ஏதேனும் பொருள்களில் குறைபாடு இருந்தாலோ, சேதமடைந்திருந்தாலோ மாற்றுப் பொருள்களை வழங்குகின்றனர். அல்லது பணத்தை திருப்பியளிக்கின்றனர்.
இவர்களிடம் கேஸ் ஆன் டெலிவரி எனும் பொருளை பெற்றுக் கொண்டு பணம் செலுத்தும் முறை மற்றும் கிரிடிட் கார்டு மூலம் பணம் செலுத்தும் முறையும் உள்ளது. மேலும், வெப்சைட்டில் சென்று ஆர்டர் செய்ய இயலாதவர்கள் வாட்ஸ்அப் மூலமும் ஆர்டர் செய்தால் பொருள்களை வீடுகளுக்கு டோர்டெலிவரி செய்கின்றனர்.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் மட்டும் குறைந்தபட்சம் ரூ. 499க்காவது ஆர்டர் செய்பவர்களுக்கு மட்டுமே டோர்டெலிவரி செய்து வந்தோம். நிலைமை சகஜமானது இந்தத் தொகையை குறைத்து ரூ.399க்கு குறைந்தபட்சம் காய்கனிகளை ஆர்டர் செய்யலாம் என மாற்றவுள்ளோம்.
மேலும், பெரும்பாலும் அனைத்து இ-காமர்ஸ் நிறுவனங்களும் அரை கிலோ, 1 கிலோ அளவுகளில் மட்டுமே காய்கனிகளை விற்கும்போது, நாங்கள் மட்டும் மிகக் குறைந்த அளவாக கால் கிலோ அளவில் கூட காய்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறோம். இருவர் மட்டுமே உள்ள குடும்பத்துக்கு ஓவ்வொரு காயும் கால் கிலோ மட்டுமே போதுமானதுதானே. நிறையத் தேவைப்படாது. அப்போதுதான் அவர்களும் அவ்வப்போது புதிதாக காய்கனிகளை வாங்கி பிரஷ்ஷாக சாப்பிட முடியும் என்பதால் மிகக் குறைந்த அளவாக இதனை வைத்துள்ளோம்.
மெட்ராஸ் பேஸ்கட் தொடங்கிய முதல் மாதம் மட்டும் ரூ. 2 லட்சம் வரை செலவானது. அடுத்த மாதம் ரூ. 3 லட்சம் என குடோன் அட்வான்ஸ், டெலிவரி வாகனங்கள் வாங்கியது என செலவாகியது. இதுவே என் முதலீடாகும். கோயம்பேடு மார்க்கெட்டை மூடி திருமழிசைக்கு கொண்டு சென்றதால் நாங்கள் காய்கனிகளை நேரடியாக அங்கேயே சென்று விவசாயிகளிடம் இருந்து பெற்று வருவோம். இதனால் எங்களுக்கு சரியான விலையில் தரமான காய்கனிகள் கிடைக்கின்றது என்கிறார் கார்த்திக்.
குறிப்பாக இவர்களது மெட்ராஸ் பேஸ்கட் பிரபலமாக விநாயகர் சதுர்த்தி உதவி புரிந்துள்ளது. ஆம், கார்த்திக் மெட்ராஸ் பேஸ்கட்டை தொடங்கிய 2 மாதங்களிலேயே விநாயகர் சதுர்த்தி வந்துள்ளது. ஆனால் கொரோனா பெருந்தொற்றால் மக்கள் வீதிக்கு வந்து பொருள்களை வாங்க அஞ்சிய காலம். எனவே,
“இவர்கள் விநாயகர் சதுரத்திக்குத் தேவையான மாவிலை, தோரணம், வாழை இலை, மாலை, ஆப்பிள், ஆரஞ்ச், நாவல்பழம் உள்பட 18 லிருந்து 20 பொருள்களை ஓர் காம்போவாக தயாரித்து மொத்தமாக பேக் செய்து, ரூ.499க்கு மக்களுக்கு டோர் டெலிவரி செய்துள்ளனர். அந்த 2 நாள்களில் மட்டும் சுமார் 450 ஆர்டர்களை டெலிவரி செய்துள்ளனர். மேலும், சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் மெட்ராஸ் பேஸ்கட் வெப்சைட்டுக்குள் வந்து சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.”
இவ்வாறு மிகக் குறுகிய காலகட்டத்தில் நிறைய வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளனர். இதேபோல ஆயுத பூஜைக்கு நூற்றுக்கும் மேல் ஆர்டர்களை டோர் டெலிவரி செய்துள்ளனர்.
கொரோனா தொற்று சற்று குறைந்திருந்ததால் ஆயுத பூஜைக்கு நூற்றுக்கும் மேற்பட்ட ஆர்டர்கள் மட்டுமே வந்திருந்தது. ஆனால் இதன் மூலம் நாங்கள் 1300க்கும் மேற்பட்ட நிரந்தர வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளோம். மாதமொன்றுக்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட ஆர்டர்கள் வருகின்றன.
கடந்த 1 வருடத்தில் மட்டும் 4000-க்கும் மேற்பட்ட ஆர்டர்களை எடுத்துள்ளோம். எங்கள் நிறுவனம் தொடங்கி ஓராண்டு மட்டுமே ஆவதால் இப்போதைக்கு எங்களுக்கு லாபமும் இல்லை நஷ்டமும் இல்லை என்ற நிலையில் உள்ளோம். எங்களின் மிகப் பெரிய வெற்றியே இவ்வளவு குறுகிய காலத்தில் இவ்வளவு வாடிக்கையாளர்களை சம்பாதித்ததுதான் என்கிறார் கார்த்திக்.
வாடிக்கையாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க இந்நிறுவனம் மளிகை உள்ளிட்ட பொருள்களையும் டோர் டெலிவரி செய்து வருகிறது. வெளியில் வாடிக்கையாளர்கள் கேட்ட பொருள்களை வாங்கி, வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வந்தமெட்ராஸ் பேஸ்கட் வாடிக்கையாளர்களின் நலனை பேண, தரமான பொருள்களை வழங்க வேண்டும் என்ற காரணத்துக்காக, தனியாக ஓர் மளிகைக் கடையைத் தொடங்கி, தங்களின் வாடிக்கையாளர்களுக்கு தங்கள் கடையில் இருந்தே தரமான பொருள்களை சரியான நேரத்தில் வழங்கி வருகின்றனர் என்பது கூடுதல் சிறப்பு.
எதிர்காலத்தில் வாடிக்கையாளர்கள் ஆண்ட்ராய்ட் ஆப், ஐஓஎஸ் ஆப் மூலமும் காய்கனிகள் மற்றும் மளிகைப் பொருள்களை ஆர்டர் செய்யும் வசதியை ஏற்படுத்த உள்ளோம். மேலும், வெப்சைட்டிலும் மளிகைப் பொருள்களை முழுவதுமாக ஏற்றி, மெருகேற்ற இருக்கிறோம் எனக் கூறும் கார்த்திக்கின் எதிர்காலத் திட்டமாவது,
நாளொன்றுக்கு சுமார் 100 வாடிக்கையாளர்களின் ஆர்டர்களை டெலிவரி செய்ய வேண்டும். இதையும் வரும் 2022 மார்ச்க்குள் முடித்து விடுவோம் என்கிறார்.
மேலும், எதிர்காலத்தில், சென்னையில் காய்கறி ஆன்லைன் டெலிவரியில் நம்பர் 1 இடத்தைப் பிடிப்பதுடன், எங்கள் குழுவை விரிவாக்கி, 2021 இறுதிக்குள் கோவையிலும் இதே போல வியாபாரத்தைத் தொடங்கி, தமிழ்நாடு மற்றும் தென்னிந்தியா முழுவதும் எங்கள் சேவையை விரிவாக்க வேண்டும் என்பதே எனது நீண்ட கால திட்டமாகும் என்கிறார் கார்த்திக்.