தேசிய நல்லாசிரியர் விருது: தமிழகத்தில் இருந்து தேர்வான ஒரே ஆசிரியை!
தேசிய நல்லாசிரியர் விருதுக்கு கோயமுத்தூரைச் சேர்ந்த ஆசிரியை ஸதி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.தமிழகம் சார்பில் பரிந்துரைக்கப்பட்ட 6 பேரில் ஸதி மட்டுமே நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகியுள்ளார்.
மறைந்த இந்தியக் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்ர் 5-ம் தேதி, தேசிய ஆசிரியர்கள் தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, தேசிய அளவில் சிறப்பாக செயல்படும் ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு விருது வழங்கி கௌரவித்து வருகிறது. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசுகள், அந்தந்த மாநிலங்களில் நல்லாசிரியர் பட்டியலை உருவாக்கி மத்திய அரசுக்கு பரிந்துரை செய்கின்றன. அதில், தகுதிக்குரியவர்களை தேர்வு செய்து மத்திய அரசு விருதுகளை அறிவிக்கும். இவர்களுக்கு ஆசிரியர் தினமான செப்டம்பர் 5-தேதி தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் குடியரசு தலைவர் விருதுகளை வழங்குவார்.
ஆனால் வழக்கத்திற்கு மாறாக இந்தாண்டு நல்லாசிரியர் தேர்வில் பல கடும் விதிமுறைகளைக் கொண்டு வந்தது மத்திய அரசு. அதன்படி, மாநில அரசுகள் நல்லாசிரியர்கள் தேர்வு பட்டியலை அனுப்பத் தேவையில்லை. அதற்கு மாறாக சம்பந்தப்பட்ட ஆசிரியர்களே நேரடியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் அவர்களது விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இதில் தேர்ச்சி பெறும் ஆசிரியர்கள், விருதுக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் இந்த ஆண்டு தேசிய ஆசிரியர் விருதுக்காக தமிழகத்தில் இருந்து விண்ணப்பித்த ஆசிரியர்களில் 6 பேர் மட்டுமே நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக, அந்த ஆறு ஆசிரியர்களில் ஒருவர் மட்டுமே நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் கோவை அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை ஸதி ஆவார்.
ஸதி தற்போது கோவை மாவட்டம் மதுக்கரை ஒன்றியம் மலுமிச்சம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
ஆசிரியை ஸதியின் பூர்வீகம் கோத்தனூர். கல்விப் பணியில் இருந்த அப்பாவின் ஆசையைத் தொடர்ந்து ஸதியும், 1995ம் ஆண்டு டிஆர்பி (ஆசிரியர் தகுதித் தேர்வு) எழுதி, சின்னமநாயக்கன்பாளையாம் கிராம அரசுத் தொடக்கப்பள்ளியில் ஆசிரியை ஆனார். அதன் தொடர்ச்சியாக சில பள்ளிகளுக்கு இடமாற்றம் பெற்ற இவர், கடந்த 2009ம் ஆண்டு தலைமை ஆசிரியையாக பதவி உயர்வு பெற்றார். பின்னர் 2012ம் ஆண்டு மலுமிச்சம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு மாற்றலானார்.
இப்பள்ளிக்கு அவர் வந்தபோது, 146 மாணவ, மாணவிகள் மட்டுமே அங்கு படித்து வந்துள்ளனர். பின்னர் ஸதியின் தீவிர முயற்சியால் இந்த எண்ணிக்கை தற்போது 270 ஆக உயர்ந்துள்ளது.
இதற்காக வீடு வீடாகச் சென்று குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பும்படி கோரியுள்ளார் ஸதி. மாணவ, மாணவியருக்கு அரசு வழங்கும் உதவிகள், சலுகைகள் குறித்தும், படிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் பேசி, அப்பகுதி மக்களிடையே விழிப்புணர்வை அவர் ஏற்படுத்தியுள்ளார்.
அதோடு பள்ளிக்கு தேவையான கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகளை பெறுவதற்காக அக்கம்பக்கத்தில் உள்ள நிறுவனங்களின் உதவியை நாடி, அதில் வெற்றியும் பெற்றுள்ளார் ஸதி. எல்.என்.டி நிறுவனம் 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதுக் கட்டடங்களை இப்பள்ளிக்கு கட்டிக் கொடுத்துள்ளது. டேப்லெட் பயன்பாட்டுடன், ஸ்மார்ட் கிளாஸ் வசதி மற்றும் இரண்டு ஆசிரியர்களுக்கு ஊதியம் உட்பட ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான உதவிகளையும் செய்து கொடுத்துள்ளனர்.
இது தவிர `மெஷர் கட்டிங்' என்ற நிறுவனம், சுகாதாரமான குடிநீர் வசதி, கணினி பயிற்சி வசதிகளை அமைத்துத் தந்துள்ளனர். வி.கே.சி நிறுவனத்தினர், ஒவ்வோர் ஆண்டும் மாணவர்கள் எல்லோருக்கும் புது ஷூ, பெல்ட், டை, ஐடி கார்டு கொடுத்து உதவுகிறார்கள். ஸதியின் முயற்சியால் கிடைத்த இந்த உதவிகளால், சில ஆண்டுகளிலேயே இப்பள்ளியின் கட்டமைப்பு வசதிகள் மேம்பட்டன.
மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் விதமாக, நகரங்களுக்கு இணையாக கிராமப்புற மாணவர்களின் கல்வித் திறனும் மேம்பட வேண்டும் என வகுப்பறைகளில் பல அதிரடி மாற்றங்களை அவர் கொண்டு வந்துள்ளார்.
இதற்கென கரும்பலகைகளுக்கு மாற்றாக பச்சை போர்டு வகுப்பறைகளில் பொருத்தப்பட்டுள்ளது. அதோடு, புரொஜக்டர் மற்றும் டேப்லெட் மூலம் மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகிறது. யோகா, கராத்தே, இசைப் பயிற்சி, விளையாட்டுப் பயிற்சி உட்பட பல பயிற்சிகள் கொடுக்கப்படுகிறது. பல போட்டிகளில் கலந்து கொண்டு மாணவர்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார்கள். தனியார் பள்ளிகளுக்கு இணையான இந்த வசதிகளால் மலுமிச்சம்பட்டி மக்கள் தங்கள் பிள்ளைகளை இப்பள்ளியில் சேர்க்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பள்ளிக்கூட நலன் மட்டுமின்றி, ஊர் நலனிலும் ஸதி கொண்டிருந்த அக்கறையே இன்று அவர் தேசிய நல்லாசிரியர் விருது பெறக் காரணமாக அமைந்துள்ளது. எந்தவொரு விசயத்தையும் மாணவர்கள் மூலம் எளிதாக ஊர் மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும் என நம்பியுள்ளார் ஸதி. அதன்படி, மலுமிச்சம்பட்டி ஊராட்சியை ‘திறந்தவெளி மலம்கழிப்பிடமற்ற ஊராட்சி’ ஆக மாற்ற தனது மாணவர்கள் மூலம் அவர் முயற்சித்துள்ளார்.
“எங்கள் பகுதி பொதுமக்கள் திறந்த வெளியில் மலம் கழிப்பதை தடுப்பதற்காக பள்ளியில் சிறந்த 6 மாணவ- மாணவிகளை தேர்வு செய்து ‘குட்டி கமாண்டோ’ என்ற அமைப்பை உருவாக்கினேன். இவர்களது பணி தினமும் காலையில் ஊருக்குள் உலா வருவது. அப்போது யாரேனும் திறந்தவெளியில் மலம் கழித்தால் இவர்கள் விசில் சத்தம் எழுப்புவார்கள். மீறிக் கழிப்பவர்களிடம், `பொதுக்கழிப்பிட வசதி அல்லது தனிக்கழிப்பிட வசதியைப் பயன்படுத்துங்க. இல்லையெனில் உடல்நலப் பாதிப்புகள் ஏற்படும்'னு சொல்வாங்க.”
இந்த குட்டி கமாண்டோவின் முயற்சியால் இங்கு திறந்த வெளியில் மலம் கழிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்தது. இந்தத் திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்து, பிளாஸ்டிக் பை பயன்பாடில்லா கிராமம் என்ற முயற்சியை மேற்கொண்டிருக்கிறோம், எனப் பெருமிதத்துடன் கூறுகிறார் ஸதி.
ஸதியின் இந்த முயற்சியை கௌரவிக்கும் விதமாக இந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று மாவட்ட ஆட்சியர் அவருக்கும், சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கும் விருது வழங்கி பாராட்டினார். இது மட்டுமின்றி கடந்த 2016ம் ஆண்டு கோவையில் சிறந்த பள்ளியாக ஆட்சியர் விருது பெற்ற ஸதி, 2017ல் தமிழகத்தில் சிறந்த பள்ளி என டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்றார்.
பள்ளியின் மாணவ, மாணாவியர் எண்ணிக்கையை உயர்த்துவது மட்டும் இவரது நோக்கமாக இருக்கவில்லை. மாறாக கல்வி அனைத்துக் குழந்தைகளுக்கும் சென்று சேர வேண்டும் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு உழைத்து வருகிறார். இதன்பலனாக, தற்போது இப்பள்ளியில் 28 மாற்றுத்திறனாளி மாணவர்கள் மற்றும் வெளிமாநில தொழிலாளர்களின் குழந்தைகள் 42 பேரும் படித்து வருகின்றனர்.
மாணவ-மாணவிகளின் கற்றல் திறனை மேம்படுத்தியதற்கு பரிசாக இந்த தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகி உள்ள ஸதி,
“விருது அறிவிப்பு தொடர்பாக அறிந்த மாணவ, மாணவிகள் போன் மூலமும், நேரிலும் எனக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். பள்ளி வளாகத்திலும் கைதட்டல் மூலம் தங்களது மகிழ்ச்சியை அவர்கள் வெளிப்படுத்தினர். அதுவே எனக்கு மிகப்பெரிய விருது,” என பெருமையுடன் கூறுகிறார்.
கடந்தாண்டு வரை தேசியளவில் 354 பேர் நல்லாசிரியர் விருதுக்காக தேர்வு செய்யப்பட்டு வந்தனர். தமிழகத்தைச் சேர்ந்த 22 ஆசியர்கள் கடந்தாண்டு வரை இந்த விருதை பெற்று வந்தனர். ஆனால் இந்த எண்ணிக்கை இம்முறை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தகவல்கள் உதவி: விகடன்